மொசாட் செய்த சாதனைகளில், என்னை மிகவும் கவர்ந்தது இந்த நிகழ்வு தான். சுவாரசியமான இந்த நிகழ்வை, வீடியோவில் கேட்டு, தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் பாருங்கள்.

உண்மையாக நடந்த நிகழ்வை, அப்படியே திரைப்படமாக எடுத்திருப்பார்கள். நேரமிருந்தால், இதையும் பாருங்கள். உண்மையிலேயே, மொசாட் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து அறியலாம். MISS பண்ணக்கூடாத படம் என்றே சொல்லலாம்

இப்போது 2024. இந்த நேரத்தில் கூட, தீவிரவாத தாக்குதல் என்றால் நாம் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் 1976ல், இஸ்ரேலுக்கு ஒரு தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. அதிலும் ஒரு Flight Hijacked செய்யப்படுகிறது. இஸ்ரேலில் சிறையில் இருக்கும் 40 தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கோரி, இந்த கடத்தல். ஆனால், உலகத்தையே ஆச்சரியப்படுத்திய ஒரு செயலை இஸ்ரேல் செய்தது. இஸ்ரேல் என்ற குட்டி நாட்டைப் பார்த்து மற்ற நாடுகள் வாயைப்பிளந்த தருணம் என்று கூட சொல்லலாம். ரொம்ப சுவாரசியமான நிகழ்வு, ஆனால் அத்தனை சுவாரசியமாக நான் எழுத முடியுமா என்பது தெரியவில்லை. முடிந்த வரை முயற்சிக்கிறேன்.

June 27, 1976

டெல் அவிவிலிருந்து, பாரீஸ் போகும் விமானம், இடையில் ஏதென்ஸ்ல் நின்று போகும். வழக்கம்போல அன்றும் விமானம் ஏதென்ஸ்க்கு போகிறது. ஏதென்ஸில் 58 பயணிகள் ஏறுகிறார்கள். அவர்களில் 4 பேர் தீவிரவாதிகள். 2 பேர் பாலஸ்தீன தீவிரவாதிகள் என்றும், 2 பேர் ஜெர்மனி தீவிரவாதிகள் என்றும் அறியப்படுகிறார்கள். ஏதென்ஸிலிருந்து பாரீஸ் போவதற்கு பதிலாக, கடத்தல் காரர்கள் பெங்காசிக்கு செல்கிறார்கள். விமானத்தை உகாண்டா வரை கடத்துவது அவர்கள் திட்டம். ஆனால் இடையில் எரிபொருள் இல்லாமல், விமானம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, பெங்காசிக்கு சென்று எரிபொருள் நிரப்புகிறார்கள். அங்கே இன்னும் 3 தீவிரவாதிகள் ஏறுகிறார்கள். அப்படி என்றால், இந்த பெங்காசியும் கடத்தலுக்கு உடந்தை. அதன்பின் உகாண்டா சென்றுவிடுகிறார்கள். உகாண்டா ஏர்போர்ட்டில், old terminal என்கிற buildingல், அனைவரையும் தங்க வைத்தார் உகாண்டா அதிபர் இடியமீன்.

June28,1976

அடுத்த நாள், கடத்தல்கார்ர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்கள். “மொத்தமாக, 53பேரை விடுவிக்க கோரிக்கை வைத்தார்கள். இல்லையென்றால், ஜூலை1ல் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கொன்று விடுவதாகக் கூறினர்”. அதில் 40பேர் இஸ்ரேல் சிறையிலும், 13பேர் பிற நாடுகளின் சிறையிலும் இருந்தார்கள். பிற நாடுகள், உடனடியாக அவர்களின் கோரிக்கையை மறுத்து விட்டது. ஆனால் இஸ்ரேல் மட்டும் கடைசி வரையிலும் மறுப்பு கூறவே இல்லை. ஏனெனில், “யூதர்கள்” என்பது சேர்ந்து வாழும் கூட்டணி. அதாவது, யூதன் என்று வந்துவிட்டால், அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி ஆகிவிடுவார்கள். ஒருவரைக் கூட கைவிடவேண்டும் என நினைக்காதவன் யூதன். அதை, ‘இனவெறி’ என கூறினால், இனவெறி தான். ‘பாசம் மிகுந்தவர்கள்’ என கூறினால், பாசமானவர்கள். ‘தீவிரவாதிகள்’ என கூறினால், தீவிரவாதிகள் தான். மொத்தத்தில், ‘தன் இனத்துக்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள்’.

இஸ்ரேலில் இருந்து செல்லும் விமானம் என்றாலும், அதில் இருக்கும் பயணிகள் எல்லாரும் இஸ்ரவேலர்கள் அல்ல. பிற நாட்டு பயணிகளும் இருந்தார்கள். எனவே உலக நாடுகளுக்குள் குழப்பம் வந்தது. மொசாட் உடனடியாக தன் வேலையை ஆரம்பித்தது. இந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிற Old Terminal, இஸ்ரேலிய கட்டுமான நிறுவனத்தால், கட்டப்பட்டது. எனவே, blueprint உடனடியாக மொசாட் மூலம் IDF(Israel Defence Force)க்கு கிடைத்தது.

அடுத்ததாக மொசாட் செய்தது, இடியமீனுக்கு நெருங்கிய நண்பர்களை தொடர்பு கொண்டு, அவர்களை இஸ்ரேலுக்காக பேச வைக்கும் முயற்சி. பெரும்பான்மையான நண்பர்கள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.  ஓய்வுபெற்ற IDF அதிகாரியான பருச் “புர்கா” பார்-லெவ், இடி அமீனை பல ஆண்டுகளாக அறிந்திருந்தார், அவர் தொலைபேசியில் பேச ஒத்துக்கொண்டார். அவர்தான் இடியமீனிடம், “பிற நாடுகள் இஸ்ரேலைக் கைவிட்டு விட்டது. இஸ்ரேல் கையறுபட்ட நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் நீட்டித்து வேண்டும். நீங்கள் செய்தது யாராலும் செய்ய முடியாத காரியம். இஸ்ரேலையே தடுமாற வைத்து விட்டீர்கள். உங்களை எதிர்த்து இஸ்ரேலால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், கொஞ்சம் மனமிறங்கி, இந்த கால அவகாசத்தை நீட்டித்து கொடுங்கள்” என்று கேட்டார். அவரது பேச்சில் மகிழ்ந்த அமீன், ஜூலை4ம் தேதி வரை அவகாசத்தை நீட்டிக் கொடுத்தார்.

தினமும் இரவில் இடிஅமீன், அந்த old Terminalக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம், பாலஸ்தீனர்கள் படும் பாட்டைப் பற்றி பேசி, அவர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இந்த இடியமீன், தனது சொந்த மக்களில் 5,00,000பேரைக் கொன்று, சர்வாதிகாரி என அழைக்கப்பட்டவர். எனவே இடியமீனை எதிர்த்து பேச எந்த நாடுகளும் முன்வரவில்லை. ஒரு பெரிய hallல் பிற நாட்டினரை தங்க வைத்தவர், அதனுள் குறுகிய அறையில் இஸ்ரவேலரை தங்க வைத்தார்.

June,30 1976

இஸ்ரேல் அல்லாத, வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் விடுவித்தார் இடியமீன். இதில் மொத்தம் 48பேர் விடுவிக்கப்பட்டனர். பொதுவாக இஸ்ரவேலர் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் நாட்டின் பாஸ்போர்ட் ஒன்று, இஸ்ரேலின் பாஸ்போர்ட் ஒன்று. (உலக நாடுகளில் இஸ்ரேலர் இன்றும் பரவி இருக்கின்றனர்) அதனால் மிகவும் கவனமாக, பெயர்களை வைத்தே பிரித்தார் இடியமீன். இஸ்ரேல் அல்லாதவனுடைய பெயர், அவனுடைய பெயரைப்போல இருந்தாலும், இஸ்ரேல் என்று முத்திரை குத்தினார். மற்றவர்களை மிகவும் பத்திரமாக, ஒரு விமானத்தில் பாரீஸ்க்கு அனுப்பிய வைத்தார் இடியமீன். இதுதான் இடியமீன் செய்த முட்டாள்தனம்.

மொசாடுக்கு உலகம் முழுவதும் கண்கள். அப்படி இருக்கையில், இத்தனை பேரை அங்கு தங்க வைத்தவர், இடையில் பலரை விடுதலை செய்தால், மொசாடுக்கு எவ்வளவு உபயோகமாக இருப்பார்கள். பாரீஸில் இறங்கி தங்கள் வீடுகளுக்கு போனவர்களின் வீட்டை தட்டினார்கள் மொசாடை சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாக மிகவும் துல்லியமான தகவல்களை திரட்டினார்கள்.

அதாவது, மொத்தம் எத்தனை தீவிரவாதிகள்? அவர்கள் கையில் இருந்த gun என்ன மாடல்? ஒவ்வொரு படமாக காண்பித்து, Gunன் மாடலை அறிந்து கொண்டார்கள். எப்பொழுது இடியமீன் வருவார்? அவர் வரும்போது எதில் வருவார்? என்ன உடையில் வருவார்? என்ன light எரியும்? அவருக்கு முன்னால் யார் வருவார்கள்? எந்த வண்டியில் வருவார்கள்? சரியாக எந்த நேரத்தில் வருவார்? தங்க வைக்கப்பட்டிருக்கிற இடம் என்ன? இஸ்ரேலர் எங்கு வைக்கப்பட்டுள்ளனர்? அவ்விடத்துக்கு எப்படி போக வேண்டும்? என பல தகவல்கள், 48பேரின் தனித்தனியான வாக்குமூலமாக மொசாடுக்கு கிடைத்தது. IDFயும் மொசாடும், எல்லா தகவல்களையும் இணைத்து, அதேபோல ஒரு செட்டப் ரெடி செய்தார்கள். அவர்களுடைய நல்ல நேரமா? அல்லது இடியமீனுடைய கெட்ட நேரமா? தெரியவில்லை (நிச்சயமாக கர்த்தருடைய கிருபையே.) அவர்கள் விடுவித்த 48பேரில், ஒருவர் இஸ்ரவேலர். அவருடைய பெற்றோர், அவருக்கு surname எதுவும் வைக்காததால், இடியமீன் அவரை இஸ்ரேலைச் சேர்ந்தவர் என கணிக்கவில்லை. இந்த முழு Operation Thunderboltலும் அந்த நபரின் பங்கு முக்கியமானது. (IDF மேஜர் முகி பெட்சர்பின்னர் ஒரு நேர்காணலில் மொசாட் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளை விரிவாக பேட்டி கண்டதாக குறிப்பிட்டார். இராணுவப் பின்புலம் மற்றும் “ஒரு தனி நினைவாற்றல்” கொண்ட ஒரு பிரெஞ்சு-யூதப் பயணி பணயக்கைதிகள் எடுத்துச் சென்ற ஆயுதங்களின் எண்ணிக்கை பற்றிய விரிவான தகவல்களை வழங்கியதாக அவர் கூறினார்)

இப்போது, அங்கிருக்கும் சூழலை அப்படியே செட்டப் செய்து விட்டார்கள். அந்த old Terminal buildingக்குள் 7 தீவிரவாதிகள் இருக்கிறார்கள். கட்டிடத்தை சுற்றி, 100 இராணுவ உகாண்டா வீரர்களை இடியமீன் வைத்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. இந்த இடத்தில் எந்த இராஜ தந்திரத்தையும் உபயோகிக்க முடியாது. அதிரடியாகத்தான் இறங்க வேண்டுமென இஸ்ரேல் முடிவெடுத்தது.

அந்த old terminalக்கு செல்ல வேண்டுமானால், ஒன்று விக்டோரியா ஏரி வழியாக உள்ளே சென்று கடத்தல்காரர்களை தாக்கி, கைதிகளை மீட்க வேண்டும். அதன்பின், மீண்டும் இஸ்ரேல் வருவதற்கு இடியமீனிடம்தான் கேட்க வேண்டிய இருக்கும். அது மிகவும் risk.

எனவே அதிரடியாக விமானத்தில் சென்று தாக்கி மக்களை மீட்கலாம் என முடிவெடுத்தனர். அங்கு சென்று மக்களை காப்பாற்றினாலும், திரும்ப வரும் வழியில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். எனவே கென்யாவிடம் மொசாட் பேசி, கென்யாவுக்கு சில உதவிகள் செய்வதாக வாக்கு கொடுத்து, கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி வாங்கி விட்டது.

மூன்று விமானங்களில் செல்ல வேண்டும். மூன்றும், அரபு நாடுகளின் வழியாக பறந்து செல்ல வேண்டும். ஒருவேளை அவர்களுடைய ரேடாரில் மாட்டிக்கொண்டால், சுட்டுத்தள்ளி விடுவார்கள். எனவே, மிகவும் தாழ்வாக ரேடாரில் சிக்காமல் பறக்க் வேண்டும். இது ஒரு சவால் இருந்தது. அடுத்ததாக இரவு நேரத்தில் விமானத்தை தரை இறக்க வேண்டும். ஒருவேளை அவர்களது விமான ஓடுதளத்தில், light இல்லையென்றால், விமானத்தை இறக்குவதில் சிக்கல் வரும். அதற்கும் வீரர்கள் பயிற்சி எடுத்தனர். முதல் விமானம், உகாண்டாவில் கடைசி விமானம் வரும் நேரத்தில் வந்து தரை இறங்கியது. அடுத்த இரண்டு விமானங்கள் வருவதற்கு முன், light off செய்து விடுவார்கள் என்பதால், முதல் விமானத்தில் வந்தவர்கள், விமான ஓடுதளத்தில் பீக்கன் விளக்குகளை போட்டு (beacon light) வைத்தார்கள். மொசாட் என்றால் சும்மாவா?

மூன்று விமானங்களில், முதல் விமானத்தில், ஜனாதிபதி இடி அமினின் வாகனம் போல தோற்றமளிக்கும் ஒரு கருப்பு மெர்சிடிஸ் கார் மற்றும் அமினின் மெர்சிடிஸ் உடன் வழக்கமாக செல்லும் லேண்ட் ரோவர்ஸ் ஆகியவை கொண்டு வரப்பட்டன. பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்ல அவற்றைப் பயன்படுத்த முடியும் என்று இஸ்ரேலியர்கள் நம்பினர். உகாண்டா வீரர்களின் உடையைக் கூட அவர்கள் போட்டிருந்தார்கள். ஆனாலும் மாட்டிக்கொண்டார்கள்.

C-130s தரையிறங்கியதும், இஸ்ரேலிய தாக்குதல் குழு உறுப்பினர்கள் அமீனைப் போலவே டெர்மினல் கட்டிடத்திற்கு வாகனங்களை ஓட்டிச் சென்றனர். உகாண்டா வீரர்கள் அவர்களுக்கு வணக்கம் சொல்கின்றனர். அவர்கள் முனையத்தை நெருங்கியதும், இடி அமீன் சமீபத்தில் வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை வாங்கியிருப்பதை அறிந்த இரண்டு உகாண்டா காவலர்கள், வாகனங்களை நிறுத்த உத்தரவிட்டனர். அதுவரை சைலன்ஸர் உபயோகித்து சுட்டவர்கள், தற்போது வெளிப்படையாக சுட ஆரம்பிக்க, சண்டை ஆரம்பித்தது. சத்தம் கேட்டு உள்ளே இருக்கும் தீவிரவாதிகள், பணையக்கைதிகளை சுட்டு விடக்கூடாது என்பதற்காக, இரண்டாவது விமானத்தில் வந்தவர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து, இஸ்ரேலரை கீழே படுக்க சொல்லி, தீவிரவாதிகளை சுட ஆரம்பித்தனர். அதற்குள் மூன்றாவது விமானத்தில் வந்தவர்கள், உகாண்டா தங்கள் விமானங்களை தாக்க கூடாது என்பதற்காக, உகாண்டாவின் போர் விமானங்களை எரித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அங்கு மீட்பு நடைபெற்றது. ஆனால், இந்த operationக்கு தலைமையாக இருந்த யோனத்தான் நெதன்யாகு என்பவர் கொல்லப்பட்டார். அதோடு, இஸ்ரேலிய வீரர்கள் உள்ளே வரும்போது, அவர்களை greet செய்ய ஆர்வக்கோளாறில் எழுந்து நின்ற, இஸ்ரேலிய வாலிபன் ஒருவன் கொல்லப்பட்டான். ஒரு பெண், உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவர்களை உகாண்டா மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். இஸ்ரேல் வீரர்கள் இப்படி வந்து மீட்டுக் கொண்டு போன கோபத்தில், இடியமீன், அப்பெண்ணை சுட்டுக் கொன்றார். 10 வருடங்கள் கழித்தே அப்பெண்ணின் உடலைப் புதைத்த இடத்திலிருந்து, அவரின் எச்சங்களை எடுத்து இஸ்ரேலுக்கு கொண்டு வந்தனர்.

இந்த operationல், ஒவ்வொரு பயணி ஏறும்போதும், உங்களுடைய உறவினர் எல்லாரும் வந்து விட்டார்களா என செக் செய்யுங்கள் என தனித்தனியாக கேட்டு ஏற்றியுள்ளார்கள், அந்த அவசரத்திலும் கூட, ஒருவரையாவது விட்டு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்கள். இதுதான் யூதர்கள். தங்கள் இனத்துக்காக எதையும் செய்வார்கள். ஒரு யூதனாயிருந்தாலும், அவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு இறங்கி செயல்படுவார்கள். பின்னர் கென்யாவுக்கு சென்று எரிபொருள் நிரப்பி, தங்கள் தேசத்துக்கு திரும்பினார்கள்.

இந்த பிரச்சனை இஸ்ரேலோடு முடியவில்லை. கென்யா உதவி செய்ததால், கோபத்தில் கென்யா நாட்டினர் உகாண்டாவில் இருந்தவர்கள் சுமார் 100 பேரை கொன்று போட்டார் இடியமீன். 1976ல் தீவிரவாத அச்சுறுத்தலில், அவர்கள் எல்லைக்கே சென்று தங்கள் மக்களை மீட்டு வந்து, தங்கள் பெருமையைக் காட்டினார்கள் இஸ்ரேல் தேசத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *