நாம் ஏற்கனவே எல்லா பண்டிகைகளையும் பற்றி அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு பண்டிகையையும் இஸ்ரவேலர் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம். இன்று பஸ்கா பண்டிகை பற்றிய பதிவை பார்க்கலாம்.
ஒரு சின்ன குடும்பம் (யாக்கோபின் குடும்பம்), ஒரு பெரிய நாடாக மாற ஆரம்பித்த இடம், முதல் பஸ்காவில் தான். 70பேர் ஆண்களாக எகிப்துக்கு சென்றவர்கள், 6,00,000பேர் ஆண்களாக ஒரு தேசமாக திரும்பி வந்தது தான் பஸ்கா. 7 நாட்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பஸ்கா என்கிற வார்த்தை முதன்முதலாக வேதத்தில் யாத் 12-11ல் உள்ளது.
11 அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
யாத்திரகாமம் 12 – 11
நாம் ஏற்கனவே பார்த்தபடி, தேவன் ஆரம்பித்த புது காலண்டரில் முதல் மாதம் 14ம் தேதி பண்டிகை கொண்டாடச் சொல்கிறார். 14ம்தேதி ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் தெளிக்கச் சொன்னார். அந்த இரத்தம் தடவப்பட்டு இருந்தால், அங்கே சாவு இல்லை. இர்த்தம் தடவப்படாத எகிப்தியர் வீட்டில், தலைப்பிள்ளை சாவு நடந்தது. வெளியே எல்லா வீட்டிலும் மரணஓலம் கேட்கிறது. இஸ்ரவேலர் வீட்டிலோ, (ஓருவேளை மனதுக்குள் பயமிருந்தாலும்) அங்கு மீட்பு நடந்து கொண்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலரை, எகிப்திலிருந்து மீட்க ஆட்டுக்குட்டி தேவைப்பட்டது. அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தமும் தேவைப்பட்டது. புதிய ஏற்பாட்டில், நமக்காக தேவ ஆட்டுக்குட்டியான இயேசு, பஸ்கா பண்டிகை அன்று, சிலுவையில் அடிக்கப்பட்டு இரத்தத்தை சிந்தினார். அந்த இரத்தம், இன்றும் நமக்கான மீட்பைக் கொடுக்கிறது.
கிறிஸ்தவர்கள் பஸ்கா கொண்டாடலாமா என்பது பற்றி நாம் சிந்திக்க அவசியமேயில்லை. அது தேவன் யூதர்களுக்கு கொடுத்த பண்டிகை. எனவே இஸ்ரவேலர் கொண்டாடுகின்றனர். ஆனால் அந்த நாட்களில் தான், நமக்கும் ஈஸ்டர் என்கிற உயிர்த்தெழுந்த திரு நாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் சந்தோஷமாக நாம் நமது பஸ்கா பண்டிகையை கொண்டாடலாம். இயேசுவை நினைவுகூறும்படி கொண்டாடலாம்.
லூக்கா 22:19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
இஸ்ரவேலர் கொண்டாடும் விதம்
புளித்த மாவை நீக்க வேண்டும் (Fun Game)
பஸ்கா பண்டிகையில், ஏழு நாட்களும் புளிப்பில்லா அப்பத்தை சாப்பிட வேண்டும் என்பதே தேவன் கொடுத்த கட்டளை. ஏழு நாட்கள் அவர்கள் புளிப்பில்லா அப்பத்தை சாப்பிட வேண்டும்.
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
யாத்திரகாமம் 12 -15
இஸ்ரவேலர்களின் சூப்பர் மார்க்கெட்டில் கூட, இந்த பஸ்கா பண்டிகையின்போது, சில பகுதியை ஸ்கிரீன் போட்டு மறைத்து வைப்பார்கள். ஒரு தேசமே இணைந்து கொண்டாடும் பண்டிகை இது.
1 கொரிந்தியர் 5- 6,7,8
6 நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
மாற்கு 8:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
மத்தேயு 16:12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
நம்மையும் கூட பழைய புளித்த மாவை, நம்மை விட்டு நீக்கிபோடும்படி பவுல் கூறியிருக்கிறார். நாம் நீக்க வேண்டிய புளித்தமா என்பது, நம்முடைய துர்க்குணம், பொல்லாப்பு, மற்றும் நாம் கேட்கிற கள்ள உபதேசங்கள். இவற்றை விட்டு நாமும் நீங்க வேண்டியது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமானது.
பஸ்காவுக்கு முந்தைய நாள் ஒரு வேடிக்கையான விளையாட்டு இஸ்ரவேலர் விளையாடுவதை பழக்கமாக்கி உள்ளனர். புளித்த அப்பத்தை வீடுகளில் ஒளித்து வைத்து, candle வைத்து வீடு முழுவதும் தேடி எடுக்கச் சொல்வர். பெடிகட் சாமெட்ஸ் (Bedikat Chametz) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், விளக்கின் வெளிச்சத்தில், புளித்த அப்பத்தை தேடி எடுத்து, அதை நெருப்பில் போட்டு எரிப்பர். சிலர், குட்டி பேப்பரில், குறிப்பு கொடுத்து தேடி எடுக்கச் சொல்வர்(Treasure and hunt).
அவர்கள், சிறு பிள்ளைகளும் புளித்த அப்பம் இப்பண்டிகை நாட்களில் புசிக்ககூடாது என்பதை அறிய வேண்டும் என்பதற்காக விளையாடுகின்றனர். ஆனால் Messianic Jews எனப்படும், இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள், இந்த விளையாட்டில், தங்கள் பிள்ளைகளுக்கு சில காரியங்களை கற்றுக்கொடுக்கின்றனர். அது நமக்கும் உபயோகமாக இருக்கும். எதற்காக இந்த விளையாட்டு என்றால், நம்மால் தனியாக, சுயமாக பாவத்தை(புளித்த அப்பத்தை) நீக்க முடியாது. நமக்கு பரலோகத்திலிருந்து பிதாவின் உதவி தேவை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புளித்த அப்பத்தை நீக்குவது போல, உலகத்தின் வெளிச்சமாகிய இயேசுவால் மட்டும் தான் நமக்குள் காணப்படுகிற புளித்த அப்பமாகிய பாவத்தை நீக்க முடியும்.
Retelling Exodus Story (கதை சொல்லும் நேரம்)
யாத்திரகாமம் 12: 24-27
24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்
ஒவ்வொரு வருடமும், பஸ்கா பண்டிகையின் போது, இஸ்ரவேலர்கள் தங்கள் முன்னோரின் பாடுகளையும், விடுதலையையும், தேவன் அவர்களை அற்புதமாக வழி நடத்தியதையும், வாசித்து அதைபற்றி தியானிப்பார்கள். மேசியானிக் யூதர்கள், பஸ்கா ஆட்டுக்குட்டியாக இயேசு பலியானதையும், உயித்தெழுந்ததையும் பற்றி குடும்பமாக அமர்ந்து தியானிப்பார்கள். இந்த சரித்திர நிகழ்வுகள், எந்த பிரச்சனை வந்தாலும், தேவன் ஜனங்களுக்காக, இயற்கைக்கு அப்பாற்பட்ட, பெரிய காரியங்களைச் செய்வார் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது.
Afikomen (Interesting Tradition)
Sedar plateல் பஸ்கா விருந்து சாப்பிடுவார்கள். அந்த தட்டின் கீழே, மூன்று புளிப்பில்லாத அப்பம் எனப்படும் மட்சா (Matzah) வைப்பார்கள். இந்த மட்சாக்களை துணிகளில் சுற்றி வைத்திருப்பர். கீழ்க்கண்ட வசனத்தை நினைவு கூற அப்படி செய்கிறார்கள். 3 அப்பத்தில், நடுவிலிருக்கும்(அதாவது இரண்டாவது அப்பத்தை) அப்பத்தை எடுத்து, அதை பிய்த்து, சிறியதாக இருக்கும் பகுதியை அதே இடத்தில் திரும்ப வைத்து, பெரியதாக இருக்கும் பாதியை, தனியாக வைத்து, அதை விருந்து முடித்தவுடன் சாப்பிடுவார்கள்.
யாத்திரகாமம் 12-34 பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
இது இஸ்ரவேலருக்கு ஒரு பாரம்பரியமான காரியம். ஆனால் மேசியானிக் யூதர்கள் இதைப்பற்றி விளக்குகின்றனர். யூதர்கள் மூன்று அப்பம் என்பதை, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு அடையாளமாக சொல்கின்றனர். மேசியானிக் யூதர்கள் 3 அப்பத்தை, தேவனின் திரித்துவத்துக்கு அடையாளமாக்குகின்றனர். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், யூதர்கள் ஈசாக்குக்கு அடையாளமாக வைத்திருக்கும், நடு அப்பம், மேசியானிக் யூதர்கள் இயேசுவுக்கு அடையாளமாக வைத்திருப்பர். ஈசாக்கு, ஆபிரகாமின் மகனாக, தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவர். இதேபோல தேவ குமாரனாகிய இயேசு, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஈசாக்குக்கும் இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமை இங்கே அழகாக காட்டப்படும்.
நடு அப்பத்தை பாதியாக பிய்த்து, அதை அனைவரும் சாப்பிடுவர். அவர்களுக்கு தெரியுமோ இல்லையோ, தேவ குமாரனாகிய ஜீவ அப்பத்தை அவர்கள் அன்று சாப்பிடுகின்றனர்.
செடார் விருந்து
பொதுவாக நன்றாக கவனித்து பார்த்தால், தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த பண்டிகைகளில் கூறிய கட்டளையே, சாப்பிட்டு மகிழ்ச்சியாயிருங்கள் என்பதே. பஸ்காவில் சாப்பிட தேவன் ஒரு சில காரியம் கூறியிருப்பார். அதைவைத்து, இன்னாட்களில் செடார் பிளேட் என்றே விற்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை.
திராட்சை ரசம்
திராட்சைரசம் என்பது இயேசு சிந்திய இரத்தத்தின் அடையாளம் என்பது நமக்கு தெரியும். பொதுவாக 4 glass திராட்சைரசம் வைத்திருப்பர். யாத்திராகமம் 6; 6,7ல் தேவன் இஸ்ரவேலருக்கு செய்வேன் என்று கூறிய 4 காரியங்கள், 4 ஆசிர்வாதங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள், அதற்கு அடையாளமாக 4 Glass Wine.
Karpas (வளரும் கீரை)
பஸ்கா பண்டிகை என்பது அறுப்பு கால ஆரம்பத்தில் கொண்டாடப்படும் என்றும், சரியான அறுப்பு 50 நாட்கள் கழித்து வரும் பெந்தெகோஸ்தே பண்டிகையின் போது இருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். வசந்த காலத்தின் ஆரம்பத்தில், பயிர் வளர்வது, ஜீவனை(Life) குறிக்கும். அந்த கொத்தமல்லி வகையான செடியை, உப்பு தண்ணீரில் இருமுறை முக்கி(dip) சாப்பிடுவர். எங்கள் சரித்திரத்தில் எல்லாம் இனிமையானது கிடையாது. கசப்பான அனுபவங்கள் எங்கள் முன்னோருக்கு உண்டு என்பதை நினைவுகூற இப்படி சாப்பிடுவார்கள். உப்புத்தண்ணீர் என்பது, எகிப்தில் முன்னோர் வடித்த கண்ணீரைக் குறிக்கும்.
Beitzah (Half Boiled Egg)
Half Boiled Egg என்பது மறுபிறப்பு அல்லது புதுப்பித்தலை அடையாளப்படுத்துகிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க போராடுவது போல, எகிப்திலிருந்து வெளியேற போராடிய முன்னோர்களின் தருணங்கள் நினைவுகூற, முட்டை சாப்பிடுகிறார்கள்.
தேவன் அவர்களை கசப்பான கீரை சாப்பிட சொன்னார் என்பது ஒரு காரணம். தங்கள் முன்னோர்கள் எகிப்தில் அடைந்த கசப்பான அனுபவத்தை நினைவுகூறும்படி இப்பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
பஸ்கா பலியை சாப்பிட வேண்டும் என்பதற்காக தேவன் கூறியது. இது நமது பஸ்கா பலியாகிய இயேசுவைக் குறிக்கிறது.
Charoset (Mixture)
Apple, Nuts, Wine, Honey, Spices எல்லாம் கலந்து, ஒரு மிக்சர் வைத்திருப்பார்கள். எகிப்தின் கசப்பான காலத்தில், செங்கல் சூளையில் சாந்து(Mortar) குலைத்ததை நினைத்து பார்த்து, இப்பொழுது தேவன் நம்மை எவ்வளவு இனிமையாக வைத்திருக்கிறார் என்று உண்ர்ந்து நன்றி சொல்ல சாப்பிடுவர்.
இங்கே புளிப்பில்லா அப்பம் என்பது, பாவமில்லாத வாழ்வை குறிக்கிறது. Candle என்பது, வெளிச்சமாகிய இயேசுவைக் குறிக்கிறது என்பது நாம் அறிந்ததே.
எலியாவுக்காக கதவு
பண்டிகையின் முடிவில், யூதர்கள் ஒரு Glass wine மட்டும் table மீது ஊற்றி வைத்து விட்டு, கதவைத் திறக்கும்படி, சிறுபிள்ளையை அனுப்பி வைப்பர். மல்கியா 4-5ல் எலியா வந்து மேசியாவுக்காக வழியை ஆயத்தம் செய்வார் என்று சொல்லியிருக்கிற படியால், எலியாவுக்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் இயேசுவை ஏற்றுக்கொண்ட மேசியானிக் யூதர்களும், வருகைக்காக காத்திருக்கிறபடியால், கடைசியில் வரப்போகிற 2 தீர்க்கதரிசிகள் மோசேயும் எலியாவும் வரவேண்டும் என்று காத்துருக்கின்றனர். எது எப்படியோ? இரு குழுவினரும் ஒரே ஆளாகிய எலியாவுக்காக காத்திருக்கின்றனர்.
நாம் எல்லாரும் அறிந்தபடி, எகிப்தில் மட்டும் அல்ல, பின் அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம் என்று பல ராஜ்யத்தில் அடிக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். ஆனாலும் 5784 வருடங்களாக இந்த பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். எவ்வளவோ நாடுகளில், அடிமைகளாக இருந்தாலும், தங்கள் தெய்வத்தையும், வழிபாடையும் அவர்கள் மறக்கவில்லை. அதனால்தான் அவர்கள் கர்த்தருடைய சொந்த ஜனங்களாக இருக்கிறார்கள். ஒரு யூதனால் மட்டுமே இவ்வளவு வைராக்கியமாக இருக்க முடியும். நாமும், தேவன் நமக்கு கொடுத்த பெரிதான இரட்சிப்பை கொண்டாடலாம்.
Leave a Reply