பெந்தெகோஸ்தே பண்டிகை – Part 2
மூன்று பண்டிகைக்கு தேவன் நேரில் வரச் சொன்னார் என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் அந்த மூன்று பண்டிகையும், மூன்று அனுபவங்களைக் குறிக்கும் என்பதையும் பார்த்தோம். முதலாவது எகிப்தை விட்டு வெளியே வந்த அனுபவம். அதைத்தான் பஸ்கா என்று கொண்டாடுகிறார்கள். நமக்கும், அது பாவத்திலிருந்து வெளியே வருகிற அனுபவம். பாவத்திலிருந்து வந்தபின்பு Red Sea Cross பண்ணும் வரை, பார்வோன் பின் தொடர்வான். சிலர் உள்ளே போவார்கள், சிலர் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். அடுத்து வனாந்திரம் தான். வனாந்திரத்தில், வெறும் மண் தான் இருக்கும், உணவு இருக்காது. ஆனால் இஸ்ரவேலருக்கு வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டது. நம் வாழ்விலும் இப்படி ஒரு தருணம் வரும். வனாந்திரமான வாழ்க்கை, நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரும்போது, வானத்தை நோக்கி பார்க்க வேண்டும். அந்நேரத்தில் இரண்டு வகையாக மக்கள் மாறி விடுவர். ஒரு கூட்டத்தார், “நான் தேவனிடம் வந்து விட்டேன். அவர் பார்த்துக் கொள்வார்” என்று பிரச்சனைகளுக்கு மத்தியில் விசுவாச ஜீவியம் நடத்துவர். இன்னொரு கூட்டத்தாரோ, “நான் தேவனிடம் நெருங்கி என்ன பயன்? எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே” என்று சொல்லி, மறுதலித்து போய் விடுவர். நாம் எந்த கூட்டத்தில் இருக்கிறோம் என்பது முக்கியம். இதெல்லாம் கடந்தால் தான் இரண்டாவது அனுபவத்துக்குள் வர முடியும். தேவனே சீனாய் மலைக்கு வந்து, பேசிய அனுபவம்.
இதெல்லாம் கடந்த பின்னர்தான் இஸ்ரவேலருக்கு சீனாய் மலை அனுபவம். சீனாய் மலையில் மக்களிடம் பேச, தேவன் இறங்கி வந்தார். பெந்தெகோஸ்தே நாளில் மக்களிடம் ஆவியானவர் இறங்கி வந்தார். தேவன் சீனாய் மலைக்கு இறங்கி வந்து பேசினார், என்ன பேசினார்? அவர் இஸ்ரவேலர் நடுவில் தங்கியிருக்க விரும்பினார். அநேக நேரங்களில் நாம் தேவனை, “நீர் கடவுள். அங்கேயே இரும்” என்று நம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் தூக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவரோ, நம் நடுவில் வசிக்க விரும்புகிறார். பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் வந்தார்? என்ன செய்தார்? நம்மை ஆலயமாக மாற்றி விட்டார். நமக்குள் நிரந்தரமாக வசிக்கிறார். ஏன் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று முந்திய பதிவில் பார்த்தோம். ஏன் ஆவியானவர் கொடுக்கப்பட்டார்?
1. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.அப்போஸ்தலர் 1-8
உலகம் முழுவதும் சாட்சியாயிருப்பதற்கு ஆவியானவர் தேவை.
2.உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. யோவான் 4-23
உண்மையாய் தொழுதுகொள்ள ஆவியானவர் தேவை
3.1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்திலுள்ள ஆவிக்குரிய வரங்களை பெற்றுக்கொள்ள ஆவியானவர் தேவை.
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; ஏசாயா 61 – 1
அபிஷேகம் பெற்றுக்கொள்ள ஆவியானவர் தேவை.
இப்படி எத்தனையோ காரியங்கள் இருக்கிறது, ஆவியானவர் கற்றுக் கொடுப்பதற்கு. இந்த பெந்தெகோஸ்தே அனுபவம்(HolySpirit) என்பது, சபை(Church), அபிஷேகம்(Anointing), 9 வரங்கள்(9 Gifts), 5 வகையான ஊழியர்கள்(5 fold ministry) என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அடுத்த மூன்றாவது ஒரு அனுபவம் வரப்போகிறது. அதுதான் சுக்கோத் அனுபவம். அக்கினி ஞானஸ்நான அனுபவம். கடைசி கால அபிஷேக அனுபவம். எழுப்புதல் அனுபவம். அந்த கடைசி கால அபிஷேக அனுபவம் நோக்கி ஊழியர்கள் பயணம் செய்கின்றனர்.
ஒவ்வொரு அனுபவமும் ஒரு அப்டேட் தான். இரட்சிப்பின் updated version, அபிஷேகம், வரம். அதாவது பெந்தெகோஸ்தே அனுபவம். அநேகர், அன்னிய பாஷை உண்டா? அபிஷேகம் உண்டா? என்று அங்கேயே பின்வாங்கி விடுகின்றனர். ஆனால் அதற்கும் அடுத்த update கடைசி கால எழுப்புதல் அபிஷேகத்துக்குள் நாம் நுழைந்து விட்டோம். இன்னும் அன்னியபாஷை குழப்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் நாம் சீனாய் மலை அனுபவத்துக்குள்ளேயே இன்னும் வரவே இல்லை என்று அர்த்தம். பின் எப்போது சீயோன் அனுபவத்துக்குச் செல்வது? இரட்சிப்பு இல்லாமல், அபிஷேகம் பெற முடியாது. அபிஷேக அனுபவம் இல்லாமல், கடைசி கால அபிஷேகம் பெற்றுக் கொள்ள முடியாது. இரட்சிப்பின் அப்டேட் அபிஷேகம், அபிஷேகத்தின் அப்டேட் கடைசி கால எழுப்புதல்.
அநேக பெரியவர்கள் செய்யும் தவறு, கடைசி கால சந்ததி, கடைசி கால அபிஷேகம், எழுப்புதல் என்பது வாலிபர்களுக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. எழுப்புதல் என்பது, மூன்றாவது அனுபவம். அது எந்த வயதினருக்கும் வரலாம். எனவே இது நமக்கு இல்லை என்று இருந்து விடாதீர்கள். மோசே 80 வயதில் தான் ஊழியம் ஆரம்பித்தார். இப்பொழுதும் நமக்கு காலம் இருக்கிறது. சீயோன் மலை அனுபவம் நம் மேல் வர காத்திருப்போம்.
சீனாய் மலை, சீயோன் மலை அனுபவம் பற்றி கீழ்க்கண்ட வசனங்களில் பார்க்கலாம். நாம் சீயோன் அனுபவத்துக்கு சொந்தமானவர்கள். பழைய பரிசுத்தவானக்ளுக்கு கிடைக்காத பாக்கியம் நமக்கு உள்ளது. வேதத்தை எவ்வளவு தியானிக்கிறோமோ, அவ்வளவு தெரிந்து கொள்ளலாம்.
18 அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
19 எக்காள முழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.
20 ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
21 மோசேயும்: நான் மிகவும் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
22 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
23 பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்
எபிரேயர் 12
21ம் வசனம் வரை சீனாய் மலை அனுபவம். பின்னர் சீயோன் மலை, அதைப்பற்றி, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.
பெந்தெகோஸ்தே பண்டிகையை யூதர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்?
- Counting the Omer
பஸ்காவிலிருந்து பெந்தெகோஸ்தே வரை உள்ள நாட்கள் 50 நாட்கள் என்று பார்த்தோம் அல்லவா! அந்த நாட்களை ஒவ்வொன்றாக கணக்கிடுவதற்கு, Counting the Omer என்று அழைக்கிறார்கள். இஸ்ரவேலரின் நாள் மாலை 6 மணிக்கு தான் ஆரம்பிக்கும் என்று, முதல் பதிவில் படித்தோம். இந்த ஓமரை கணக்கிட ஆரம்பிப்பதும் மாலை 6 மணிக்கு தான். ஓமர் என்பது வேதத்தில் உள்ள ஒரு அளவீடு(measurement). எப்பாவில் பத்தில் ஒரு பங்கு தான் ஓமர். வேத காலத்தில், ஒரு ஓமர் பார்லி பயிர், தினமும் ஆலயத்துக்கு எடுத்து வைத்து, பெந்தெகோஸ்தே நாளின்போது, அதை அசைவாட்டும் காணிக்கையாக படைப்பார்கள்.
இன்றைய நாட்களில் ஒரு மனப்பாட ஆசீர்வாதத்தை தினமும் கூறி நாட்களை எண்ணுவர்.
Blessed are you, Lord our God, King of the Universe, who has sanctified Us with His commandments and commanded Us to count the Omer.
இந்த ஆசீர்வாதத்தை கூறி, அடுத்த வாக்கியமாக, நாட்களையும் வாரங்களையும் கணக்கிடுவர்.
முதல் நாளில் – Today is the One day of the Omer
எட்டாவது நாளில் – Today is eight days, which is One week and One day of the Omer.
பக்திமயமான யூதர்கள், இந்த 50 நாட்களில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். கிபி132ல் பிளேக் மற்றும் ரோமர்களால் யூதர்கள் மொத்தமாக துரத்தப்பட்டதை எண்ணி, அந்த நாட்களை துக்க நாட்களாக ஆசரிப்பர்.
- Bikkurim
தேவாலயம் (Holy Temple) இருந்த காலத்தில், ஆலயத்துக்கு முதற்கனி கொண்டு வந்தார்கள். இப்பொழுது ஆலயம் இல்லை என்பதால், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், Bikkurim Bringing Ceremony ஆரம்பித்தார்கள். ஒரு கூடை நிறைய பழம் வைத்துக்கொண்டு, நடனம் ஆடி, பாடல் பாடி, ஊர்வலம் போவார்கள்.
- Give Offering to the Lord
Tamil Easy Reading Version
உபாகமம் 16-16 “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும்.எனவே இந்த நாட்களில், சிறப்பான காணிக்கையை, ஆலயத்துக்கு அல்லது உதவி தேவைப்படுபவர்களுக்கு, கொடுப்பார்கள்.
- Give a Wave Offering
இரண்டு அப்பம் என்பது, 2 கற்பலகை அல்லது, 2 ஏற்பாடைக் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்பது, பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை) குறிக்கிறது. இப்பொழுது இரண்டு அப்பங்களை வீட்டின் தலைவர் எடுத்து, குடும்பத்துக்கான அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டுவர். இது கர்த்தர் எங்களை போஷிக்கிறார் என்று உலகுக்கு அவர்கள் வெளிப்படுத்துவதைப் போல உள்ளது.
- Bless the Poor
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். லேவியராகமம் 23-22பெந்தெகோஸ்தே பண்டிகையைப் பற்றி பேசும்போது தேவன் இந்த வார்த்தைகளைக் கூறினார். எனவே இந்த நாட்களில் ஏழைகளுக்கு உதவுவதை ஒரு பாரம்பரியமாக வைத்துள்ளனர்.
- Read the Book of Ruth
மேலே கூறிய அதே வசனத்தின் படி, போவாஸ் ரூத்துக்கு செய்ததால், இந்த நாட்களில் ரூத் புத்தகம் அதிகமாக தியானிக்கப்படுகிறது. மேலும் ரூத் என்கிற புறஜாதி பெண், இஸ்ரவேலில் சேர்க்கப்பட்டது போல, பெந்தெகோஸ்தே நாளில் புறஜாதிகளாகிய நாமும் கிறிஸ்துவண்டை சேர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்து, இப்புத்தகத்தை அதிகமாக தியானிப்பர். அப்படி தியானிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?
உபாகமம் 23:3
அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.An Ammonite or Moabite shall not enter into the congregation of the LORD; even to their tenth generation shall they not enter into the congregation of the LORD for ever:
மோவாபியர் மற்றும் அம்மோனியர் பத்து தலைமுறை வரை உள்ளே வரக்கூடாது என்று தேவன் கூறினார். யார் இவர்கள்?
ஆதியாகமம்36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
தங்கள் தகப்பன் மூலம் குழந்தை பெற்றதால், தேவன் அவர்களை பத்து தலைமுறைக்கு தள்ளி வைத்தார். ஆச்சரியம் என்ன என்றால், ஆபிரகாமிலிருந்து போவாஸ் 11வது தலைமுறை. எனவே லோத்துக்கும் அது 11வது தலைமுறை. 10 தலைமுறை முடிந்து சாபத்தை போக்குபவளாய் உள்ளே நுழைந்தவள் தான் ரூத். அதேபோல போவாஸ் பற்றி தியானித்தால், போவாஸ் இயேசுவுக்கு முன்னோடி. புறஜாதிகளை சேர்த்துக் கொண்டவன். இப்படி ஒவ்வொரு காரியங்களையும் அவர்கள் தியானிப்பர்.
- Eat Dairy Food
தேவன் இஸ்ரவேலரை, பாலும் தேனும் ஓடும் தேசத்துக்கு கூட்டி வந்தார். அதை நினைவுகூறும் விதமாக பால் உணவுகளை உண்ணுவர். மேலும் இப்பண்டிகை ஓய்வு நாளில் வருவதால், ஓய்வு நாள் விதிக்காக, அவர்கள் பால் பொருட்களை(Cheese, Cake, Casseroles) மட்டும் சாப்பிடுவர்.
ஐந்தாவது பண்டிகை பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
Leave a Reply