லேவி 23ல் தேவன் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் 3 பண்டிகைகள் பஸ்கா, புளிப்பில்லாத அப்ப பண்டிகை, முதற்கனி பண்டிகை முதல் மாதத்தில் அடுத்தடுத்த நாட்கள் வரும். பின் 50வது நாள் நான்காவது பண்டிகையான பெந்தெகோஸ்தே பண்டிகை வரும், என்று 4 பண்டிகைகள் குறித்து ஏற்கனவே படித்து விட்டோம். இன்று 5வது பண்டிகையான எக்காள பண்டிகை குறித்து பார்க்க இருக்கிறோம்.

நாம் இந்த website ஆரம்பித்ததும்  முதலில் போட்ட பதிவு, Rosh Hashannah தான். செப்டம்பர் 16 அன்று, “இன்று இஸ்ரேலில் ஏழாவது மாதம் முதல் தேதி. இன்று தான் New Year கொண்டாடுகிறார்கள். செப்டம்பர் 15 அன்று எபிரேய காலண்டரில் தேதி 29 Elul, 5783. செப்டம்பர் 16 அன்று தேதி, 1 Tisheri 5784. அடுத்த வருடமாக மாறுவது ஏழாம் மாதத்தில் தான்” என்று பார்த்தோம். தேவன் ஒரு காலண்டர் ஆரம்பித்தார். அதை வைத்து தான் இந்த வருட கணக்கு இருக்கும் என்றும் பார்த்தோம். சரியாகச் சொல்ல வேண்டுமானால், வேத காலண்டரை ஒட்டி தயாரிக்கப்பட்ட எபிரேய காலண்டர் என்று கூறலாம். ஏனெனில் இதில் கிட்டத்தட்ட 300 வருடங்கள் மறைந்து உள்ளதாக வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்த எபிரேய காலண்டரை மையமாக வைத்தே, 2023 செப்டம்பர் 18க்குள் இரகசிய வருகை இருக்கும் என்று கணித்த ஒரு கூட்டம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. Eden TV- Bible Review என்கிற YouTube channelல் Sis. Mala James (USA), Evg. John Paul (USA) என்று playlist இருக்கும். இவர்கள் இருவரும் தமிழர்கள் தான். ஆனால் இயேசு செப்டம்பர் 18க்குள் வந்துவிடுவார் என்று அடித்துக் கூறினார்கள். காரணம் இந்த எக்காள பண்டிகை மற்றும் சில calculations. இப்படி நாம் செய்யக்கூடாது என்பதற்காகத் தான் தேவன், வேத காலண்டரில் சில வருடங்களை மறைந்து போக வைத்துள்ளார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த பண்டிகைகள் பற்றி படிக்க எனக்கு எப்படி ஆர்வம் வந்தது? 7வது மாதத்தில் 5,6,7வது பண்டிகைகள் வரும். 7வது மாதம் முதல் தேதி, எக்காள பண்டிகை, 7வது மாதம் 10ம் தேதி பாவ நிவிர்த்தி நாள், 7வது மாதம் 15-22 வரை கூடாரப்பண்டிகை. இந்த மூன்று பண்டிகைகளையும் Most Holy Festival என்று கூறுகிறார்கள். பாவ நிவிர்த்தி நாளான 10ம் தேதிக்கு முந்தின 40 நாட்கள், அதாவது 6வது மாதம் முதல் தேதியிலிருந்து, 7வது மாதம் 10ம் தேதி வரை உள்ள 40 நாட்களை Teshuvah என்று கூறுகிறார்கள். இந்த 40 நாட்களை மனந்திரும்புதலின் நாட்கள் என்று கருதுகிறார்கள். Teshuvah பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம். 40 நாட்கள் உபவாசம் இருப்பார்கள், தங்கள் ஆத்துமாவை ஒடுக்குவார்கள். அல்லது, கடைசி 10 நாட்களான, 7வது மாதம் முதல் தேதியிலிருந்து 10ம் தேதி வரை Days of Awe – பரவசத்தின் நாட்கள் என்று கூறி, அந்நாட்களில் தங்களை ஒடுக்கி ஆண்டவரிடம் கெஞ்சுவார்கள்.

Teshuvah என்றால் Repentance. மனந்திரும்ப கொடுக்கப்பட்ட கடைசி நாட்கள் இவை என்று நினைத்து, உபவாசம் இருப்பார்கள். ஒருமுறை, இந்த உபவாச நாட்களின் போது, ஒரு ஜெபத்தில் நான் இணைந்திருந்தேன். “இந்த நாட்களில் தேவனின் கிரியைகள் அளவில்லாமல் இருக்கும்” என்று அவர் சொன்னார். என்னால் சில அபிஷேகங்களை உணர முடிந்தாலும், ’எந்த நாளில் ஜெபம் செய்தாலும் இது நடக்கும், இந்த Teshuvah days தான் இதற்கு காரணம் என்பதை ஏற்க முடியாது’ என்று என் இதயத்தைக் கடினப்படுத்தி வைத்திருந்தேன்.

தற்செயலாக DGS அவர்களின் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஆவிக்குரிய 9 வரங்களும் வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்ததாகவும், ஒரு முறை இயேசுவை நேரில் பார்த்ததாகவும், தனது சாட்சியைக் கூறினார். “10-10-1962ல் இயேசுவை என் கண்கள் கண்டது”   என்று அவர் கூறும்போது, ஒருவேளை  இது 7வது மாதமாக இருக்குமோ என்று மனதில் தோன்றவும் Googleல் தேடினேன். 7வது மாதம் 12ம் தேதி. அப்பொழுது தான் High Holy Days முடிந்திருக்கும் இஸ்ரவேலருக்கு. ஆச்சரியமாக இருந்தது இது எனக்கு.

என்னுடைய பிறந்த நாள் எப்பொழுது என்று மீண்டும் Googleன் உதவியை நாடினேன். திகைத்து போய் நின்றேன்.   அது 7வது மாதம் முதல் நாள். ஆம் நான் பிறந்த பொழுது இஸ்ரேலில் எக்காள பண்டிகை. எல்லா வருடமும் என் பிறந்த நாள் Rosh hashannah கிடையாது. நான் பிறந்த அந்த வருடத்தில், அன்றைய தினம் Rosh Hashannah. இஸ்ரேல் New Year. New Beginning என்று அவர்கள் கொண்டாடுவார்கள்.

நான் படித்த Rosh Hashannah இப்போது என்னோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தோன்றியது. இந்த நாளில் பிறந்ததால் நான் சிறப்பானவள் என்று கிடையாது. இந்த நாளில் பிறந்தால் தான், அதற்காகயாவது வேத பண்டிகைகள் பற்றி தியானித்து படிப்பாள்  என்று தேவன் நினைத்திருப்பார் போல. அதுவும் உண்மை ஆகிவிட்டது. நான் ஒவ்வொரு பண்டிகை பற்றியும் படிக்க என் பிறந்த நாளும் ஒரு காரணம். இந்த பண்டிகைகள் யூதர்களுக்கு கொடுத்த பண்டிகை தான். நாம் அதை கொண்டாட எந்த அவசியமும் இல்லை. ஆனாலும், பண்டிகைகளின் நிழல் காரியங்களை புரிந்து கொள்வது நல்லது.

எக்காள பண்டிகையை எபிரேயத்தில், Yom Teruah என்றும் கூறுகிறார்கள். எல்லா பண்டிகைகளையும் விட இப்பண்டிகை வித்தியாசமானது. மற்ற எல்லா பண்டிகையும் இஸ்ரவேலர் இயேசு காலத்துக்கு முன்பிருந்தே கொண்டாடும் போது, அதற்கு பின்னால் ஒரு வரலாறு இருந்தது. பஸ்கா என்பது எகிப்திலிருந்து வெளியே வந்த அனுபவம், 50வது நாள் பண்டிகை, சீனாய் மலை அனுபவம், கூடாரப்பண்டிகை வனாந்திரத்தில் கூடாரத்தில் வாழ்ந்ததை நினைவுகூரும் பண்டிகை. ஆனால் இந்த எக்காள பண்டிகை என்பது, மறைக்கப்பட்ட பண்டிகை. எந்த அனுபவமும் இதற்கு முன் நடந்தது இல்லை. Just, எல்லாரும் சபை கூடி வரவேண்டும், எக்காளம் ஊத வேண்டும். இதுதான் கட்டளை.

பெந்தெகோஸ்தே நாள் முடிந்து நீண்ட இடைவெளிக்கு பின், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது 3வது மாதம் 6ம் நாள் பெந்தெகோஸ்தே முடிந்து, பின்னர் 7வது மாதம் 1ம் தேதி Rosh HAshannah கொண்டாடப்படுகிறது.  பஸ்கா பண்டிகையில், இயேசு மரித்தார். புளிப்பில்லா அப்ப பண்டிகையில், பாவமில்லாத அவர் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார். முதற்கனி பண்டிகையில், அவர் முதற்பலனாக உயிர்த்தெழுந்தார். பெந்தெகோஸ்தே பண்டிகையில், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். எக்காள பண்டிகை, இயேசு இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே அருளப்பட்டு விட்டார், இரண்டாம் வருகை இனி தான் வரப்போகிறது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீர்க்கதரிசனமாக நாம் இருக்கிறோம். எக்காளம் ஊதப்படும், இயேசு எப்போது வேண்டுமானாலும் வரலாம், காலம் வெகு சமீபமாக உள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் 4வது 5வது பண்டிகைக்கு இடையிலேயே இருக்கிறோம். முடிவு நெருங்கி விட்டது என்பதை உணர்ந்து  ஆயத்தப்படுவோம்! பிறரை ஆயத்தப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *