Day – 12 (12- டிசம்பர், 2023)
தெய்வீக பாதுகாப்பிற்காக நன்றி
தேவன் நம்மை எவ்வளவோ கிருபையாக, அருமையாக பாதுகாத்து வருகிறார். அதற்காக நன்றி சொல்வது நமது கடமை. இந்த 2023 முழுவதும், கிருபையாக பாதுகாத்து வந்தார் அல்லவா! நம் பிள்ளைகளை, நம் குடும்பத்தாரை தேவன் தான் பாதுகாத்தார் என்பது நிச்சயம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
ஒரு மனிதன் கர்த்தரை ஏற்றுக் கொண்டான் என்றாலே அவன், மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்துவிட்டான். அப்போதே தெய்வீக பாதுகாப்பிற்குள் வந்து விட்டான். நாமும் இரட்சிக்கப்பட்டவர்கள். எனவே நாமும் தெய்வீக பாதுகாப்பிற்குள்தான் இருக்கிறோம். இந்த நிச்சயம் நமக்கு வேண்டும். நாம் தெய்வீக பாதுகாப்பிற்குள் இருக்கிறோம் என்பதற்காக, அவர் protection நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நாம் நன்றி சொல்லலாமே.
7.கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
8.கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்
சங்கீதம் 121
மேற்கண்ட வசனத்தை, தேவன் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். எல்லா தீமைக்கும் விலக்கி காப்பார்(The LORD shall preserve you from all evil). தீமை வந்தபின்பு விலக்குவேன் என்று சொல்லவில்லை. தீமை வருவதற்கு முன்னரே விலக்கி காப்பார் என்று கூறி இருக்கிறார். அப்படியானால் நமக்கு தெரியாமல், அனேக தீமைகளுக்கு நம்மை விலக்கி காத்திருப்பார் அல்லவா! நன்றி சொல்வோம். நம் ஆத்துமாவைக் காப்பற்றுவார் என்று கூறி இருக்கிறார். நாம் அறியாத நேரங்களில், சோர்ந்து போயிருந்த நம் ஆத்துமாவைத் தேற்றி இருப்பார் அல்லவா! சோர்வில் இருந்தபோது, திடீரென நம் உள்ளத்தில் ஒரு சமாதானம் வந்தது அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.
போக்கையும் வரத்தையும் காப்பார். நம்மில் அனேகர் இதை உணர்ந்து இருப்போம். அனேக ஆபத்துகளில் தேவன் அதிசயமாக காப்பாற்றி இருப்பார். ஒருமுறை, எங்கள் சபையில் ஒரு சகோதரி சாட்சி சொன்னார்கள், அவர்கள் கணவர் பேருந்தில் பயணம் செய்யும்போது, அவரது இருக்கையை வேறொருவர் மாற்றிக்கொண்டு, அவரை வேறொரு இருக்கையில் அமர வைத்தார்காளாம். ஆனால் சற்று நேரத்தில், பேருந்து விபத்துக்குள்ளாகி, அவரது இருக்கையில் அமர்ந்து இருந்து சகோதரருக்கு அடிபட்டதாம். ஆனால், ஜெபிக்கிற இந்த சகோதரியின் கணவருக்கு ஒரு சிறிய அடி கூட இல்லை என்றார்கள். எவ்வளவு அற்புதமான தேவன் அல்லவா!
ஒருவேளை நாம் பயணிக்கும்போது, நமக்கும் விபத்து நடந்திருக்கலாம், ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருப்பது அவர் கிருபை அல்லவா! பெரிய விபத்திலிருந்து நம்மை அறியாமலே தேவன் தடுத்திருப்பாரே. நன்றி சொல்லலாம். இப்போது, மிக்ஜாம் புயல் வந்தது, அனேக தேவபிள்ளைகள் கஷ்டப்பட்டார்கள். ஏன் என்று நாம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒன்று தெரியும், அவர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படாமல் தேவன் காப்பாற்றி இருப்பார். அதற்காக நன்றி சொல்லலாம். ஏனெனில் தேவ பாதுகாப்பு நம்மோடு இருக்கிறதல்லவா!
இந்த வாக்குத்தத்த வசனம் இஸ்ரவேலருக்கானதாக இருக்கலாம். ஆனால் உண்மையான விசுவாசிகள் எல்லாருக்கும் பொதுவானது இந்த வாக்குத்தத்தம். நமக்கான வாக்குத்தத்தம் இது. நாம் பிறப்பதற்கு முன்பே நமக்கென தெய்வீக திட்டம் வைத்திருந்தார். பிறந்ததும், நமக்கென தேவதூதர்களைக் கொடுத்து பாதுகாத்து வைக்கிறார். இன்று வரை நம்மை பாதுகாக்கிறார். நாம் அவரை விட்டு விலகி போயிருந்தாலும், அவரை மறந்து போயிருந்தாலும், இன்று வரை அவரது பாதுகாப்பிற்குள் இருக்கிறோம். அதற்காக நன்றி சொல்வது நம் கடமை. இன்று வரை நான் தெய்வீக பாதுகாப்பிற்குள் இருப்பதற்காக நன்றி இயேசப்பா!
Leave a Reply