விசுவாச அறிக்கை
நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே!
அநேக சபைகளில் விசுவாச அறிக்கை (விசுவாச பிரமாணம் அல்ல) சொல்வது இப்பொழுது வழக்கமாகி விட்டது. விசுவாச அறிக்கை என்றால், ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு, அதையே வாயால் அறிக்கை பண்ணுவது. இது கிட்டத்தட்ட நாம் அனைவருமே செய்வோம். ஒரு வாக்குத்தத்த வசனம் பிடித்துக்கொண்டு அதையே வைத்து ஜெபித்து இருப்போம், ஜெயம் பெற்றும் இருப்போம், நம் அனைவருக்கும் அந்த அனுபவம் உண்டு. நம்முடைய விசுவாசம் என்ன என்பதை, வெளிப்படையாக வாயைத் திறந்து சொல்வதே விசுவாச அறிக்கை. “விசுவாச அறிக்கை மனிதனால் எழுதப்பட்டது. வேதத்துக்கு புறம்பானது” என்று சிலர் சொல்லுவர். நம்முடைய விசுவாசத்தை வேதத்தின் அடிப்படையில் சொல்வதே விசுவாச அறிக்கை.
முகநூல் நண்பர் ஒருவர், தன்னுடைய பலவீனங்களை சொல்லி ஜெபிக்க சொன்னார். விசேஷமாக அவருக்காக இந்த விசுவாச அறிக்கையை பதிவிட விரும்புகிறேன். அதற்கு முன்பாக விசுவாச அறிக்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மத்தேயு 6:7
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.Tamil Indian Revised Version
அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.Tamil Easy Reading Version
“நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.Thiru Viviliam
மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.மேற்கண்ட வசனத்தின்படி, ஜெபம் பண்ணும் போது என்ன வார்த்தை உபயோகிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஜெபம் பண்ணும் போது மாத்திரம் அல்ல, தனித்து இருக்கும் போதுகூட, நம் விசுவாசத்தை, வார்த்தைகளாக நாம் அறிக்கையிட வேண்டும். அப்படி செய்வது, முதலாவது நமக்குள் இருக்கிற, “முடியாது” என்ற எண்ணத்தை மாற்றும். பின்பு அதே காரியம் நம் வாழ்வில் நடக்கச் செய்யும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேவன் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாம் பேசும் வார்த்தைகள், நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை வெளியே காட்டுகிறது.
நம் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. நம் வார்த்தைகள் நமக்கு பெரிய ஆசீர்வாதத்தை கொண்டு வரக்கூடியது. அதே சமயம், நம் வார்த்தைகள் நமக்கு சாபத்தையும் கொண்டு வரும். எனவே நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
நம் வார்த்தைகளால் உறவை காக்கவும் முடியும், உறவை அழிக்கவும் முடியும். வெறுப்பின் வார்த்தைகள் சண்டையைக் கொண்டு வரும், அன்பின் வார்த்தைகளோ உறவைக் காக்கும். எனவே நாம் பேசும் வார்த்தைகளில் தான் எல்லாம் இருக்கிறது. சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தை நான் டாக்டராக வேண்டும் என்று உள்ளான மனதிலிருந்து பேசியிருந்தால், நிச்சயம் டாக்டராக மாறி இருக்கும். ஒரு வார்த்தையை அடிக்கடி நாம் பேசும்போது, அது நமக்குள் பதிந்து, நிச்சயமாக நடக்கும் என்கிற நம்பிக்கையை தரும்.
நீதிமொழிகள் 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.Tamil Easy Reading Version
மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.Thiru Viviliam
வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.தேவன் நமக்கு 2 காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்து இருக்கிறார். “நாம் அதிகமாக கேட்க வேண்டும், குறைவாக பேச வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. நாம் பேசுவதால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது, ஆனால் கேட்பதால் அனேக காரியங்களை கற்றுக் கொள்ளலாம். எனவே வேதத்தை அதிகமாக தியானிக்க வேண்டும், வேத பாடங்களை அதிகமாக கேட்க வேண்டும்” என்று அதிகமாக கேட்டிருப்போம். உண்மைதான். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில், நாம் அதிகமாக வாயினால் அறிக்கை செய்ய வேண்டும். உலகப்பிரகாரமாக, நாம் குறைவாக பேச வேண்டும், ஆனால் ஆவிக்குரிய காரியங்களை அதிகமாக பேசினால் தான் ஆசிர்வாதம்.
சிறிய வயதில் வேடிக்கையாக கேள்விப்பட்ட ஒரு காரியம். “Examல் Fail ஆகிவிடுவேன் என்று சொல்லக்கூடாது, தூதர்கள் ‘ஆமென்’ போட்டு விட்டால் அப்படியே நடந்து விடும்.” இதை வைத்து கல்லூரி நாட்களில் கூட அப்படி பேச பயப்பட்ட நாட்கள் உண்டு. இப்பொழுது நினைக்கும் பொழுது, நான் பேசாமல் இருந்தது சரியே. ஆனால், நான் எண்ணிக்கொண்ட காரணம் தான் தவறு என்பது புரிந்தது.
தேவன் நமக்கு நம் நாவில் அதிகாரம் தந்து இருக்கிறார். அதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் நம்மால் எல்லாக் காரியத்திலேயும் ஜெயிக்க முடியும். நம் வெற்றி நம் தோல்வி நம் நாவில் தான் இருக்கிறது. நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம், தேவன் மீது உள்ள நம் விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும். தினம்தோறும் வசனங்களை அறிக்கையிட பழக வேண்டும்.
நமது ஜெபங்களில் அதிக வசனங்கள் இருந்தால், அது வல்லமையான ஜெபமாக இருக்கும். ஜெபம் என்பது அப்பாவிடம் பேசுவது தான். நாம் உரிமையாக, “நீங்கள் இப்படி சொல்லி இருக்கின்றீர்களே, அதை செய்யுங்க” என்று நாம் கேட்கலாம். அதற்கு தான் வசனங்கள் தெரிந்து இருக்க வேண்டும். இயேசுவை சாத்தான் சோதிக்கும்போது, இயேசு வசனத்தாலே பதில் கொடுத்தார். அவர் அவ்வளவு கற்று வைத்திருந்தார். நமக்கும் அவ்வளவு வசனங்கள் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு மனிதனால், ஒரு நிமிடத்திற்குள் நிறைய வார்த்தைகள் பேச முடியும். ஆனால் நாம் என்ன பேசுகிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கை இருக்கிறது. எரிகோ கோட்டையை பிடிக்க போகும் போது, தேவன் ஏழு நாட்களும், ஏன் எதுவும் பேசாமல், இஸ்ரவேலரை நடந்து போகச் சொன்னார்? ஒரு நிமிடம் போதும், அத்தனை இலட்ச மக்களும், அவிசுவாசமாக பேசி இருப்பர். “இவ்வளவு பெரிய கோட்டை! நம்மால் எப்படி பிடிக்க முடியும்? சும்மா சுத்திக்கொண்டு போவதால் என்ன நடக்கப் போகிறது? இந்த கோட்டைக்குள்ளே வீடு எல்லாம் இருக்கிறது பாரேன்! இதை எல்லாம் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.” இப்படி எவ்வளவோ காரியங்கள் பேசி இருக்கலாம். அதனால்தான் தேவன் அவர்களை பேசக் கூடாது என்று சொல்லி விட்டார். அவிசுவாசமான காரியங்கள் நம் வாயில் வந்தால், அந்த பிரச்சனையில் சாத்தான் சிங்காசனம் போட்டு அமர்ந்து விடுவான். எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சில இடங்களில் இந்த பிரச்சனை பெரியது என்று சொல்லி, problem பெரியதாகவும், நம் தேவன் வல்லமை இல்லாதவராகவும் போல நடந்து கொள்கிறோம். எப்பொழுது எல்லாம் நம் வாயால் negative காரியங்கள் பேசுகிறோமோ, அப்பொழுது எல்லாம், தேவனை மட்டுப்படுத்தி விட்டு சாத்தானுக்கு மகிமை செலுத்துகிறோம். எனவே நம் பேச்சில் கவனம் தேவை.
அன்று ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் செல்லும்போது, ஆபிரகாமுக்கு தெரியாது என்ன நடக்கும் என்று. ஆனாலும், தேவன் வாக்கு பண்ணியிருக்கிறார், எனவே என் மகனை பலியிட்டாலும், ஏதோ ஒன்று நடக்கும் என்று விசுவாசித்தார். அதனால்தான் நாங்கள் திரும்பி வருவோம் என்று அறிக்கையிட்டார். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு ஜீவன் உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.
12 வருடங்கள் பெரும்பாடுள்ள ஸ்திரீ, அவருடைய வஸ்திரத்தை தொட்டால் சுகமாவேன் என்று அறிக்கை இடுகிறாள். அவள் எத்தனை முறை அதை சொல்லி பார்த்து இருப்பாள். நிச்சயமாக அடிக்கடி தனக்குள் சொல்லி இருப்பாள். அதனால்தான் அவளுக்குள் அப்படி ஒரு விசுவாசம் இருந்தது. அவளுடைய அறிக்கையின்படி பெற்றுக் கொண்டாள்.
தாவீது, ஒரு விசுவாச வீரன். என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் வாய்க்கும் தப்புவித்த தேவன், கோலியாத்தை முறியடிக்க வைப்பார் என்பதை உணர்ந்து, அதை அறிக்கையிடுகிறார். வெற்றியை பெற்றுக் கொண்டார். ஆர்மியே பயந்து நடுங்கும் இடத்தில், ‘இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்’ என்று அறிக்கை இட்டார் தாவீது. “இதுவரை தப்புவித்தவர், இனிமேலும் தப்புவிப்பார்” என்று நாம் தினமும் அறிக்கையிட வேண்டும். வெறும் உதட்டில் இருந்து விசுவாச அறிக்கை வந்தால், அது வேஸ்ட். உள்ளத்தில் இருந்து அறிக்கையிட வேண்டும்.
கிறிஸ்து சிலுவையில் ஜெயம் எடுத்து விட்டார். இப்பொழுது மரணமும் ஜீவனும் நம் நாவில் தான் இருக்கிறது. நாம் எவ்வளவு நல்ல விசுவாச வார்த்தைகள் பேசுகிறோமோ, அவ்வளவு வெற்றி நமக்கு வரும். நம் சுகத்துக்காக, பொருளாதாரத்துக்காக, குடும்பத்துக்காக என்று ஒவ்வொன்றிற்கும் தனியாக அறிக்கை வெளியிட போகிறோம். உங்களுக்கு சமயம் வாய்த்தால், தினமும் அறிக்கையிட்டு ஜெயம் பெறுங்கள்.
Leave a Reply