அபிகாயில் – Abigail

வேதபகுதி: 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் இருக்கிறது

கதை பின்புலம்: சவுலுக்கு பயந்து தாவீது வனாந்திரத்துக்கு சென்றார். அவருடன் 600 பேர் யுத்த மனுஷர் வனாந்திரத்தில் இருந்தனர். அப்போது, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில், நாபால், ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க வந்த செய்தியை அறிந்தார் தாவீது. ஏற்கனவே தாவீது, நாபாலின் மந்தை மேய்ப்பர்கள், தாவீது இருந்த கர்மேலில் இருக்கும்போது, அவர்களை வருத்தப்படுத்தாமல் நல்ல முறையில் நடந்து கொண்டார். நாபால் செல்வ செழிப்பானவர் என்பதை அறிந்திருந்ததால், தன்னுடன் இருக்கும் அனைவருக்கும் சாப்பிட ஏதேனும் கொடுக்கும்படி ஆட்களை அனுப்பினார் தாவீது. ஆனால் நாபாலோ, நான் ஏன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். கோபமடைந்த தாவீதோ, நாபாலையும், அவன் வீட்டாரையும், அவன் வீட்டில் உள்ள நாயைக் கூட கொன்று விடுவோம் என தன்னுடன் இருந்தவர்களிடம் கூறி கிளம்ப ஆயத்தமாகிறார்கள்.  இந்த காரியங்களை அறிந்த நாபாலின் மனைவி, தனியே அவர்கள் 400 பேருக்கும் உணவு கொண்டு வந்து, தாவீதிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஆனாலும் 10 நாட்களுக்குள் நாபால் மரித்து விடுகிறார், பின்னர் இந்த அபிகாயிலை தாவீதே திருமணம் செய்து விட்டார்.

யார் இந்த அபிகாயில்?

அபிகாயில் என்பதற்கு :My Father is Delighted” என்பது அர்த்தம். அதாவது, என் தகப்பன் சந்தோஷப்படுகிறார் அல்லது என் தகப்பன் மகிழ்ச்சி அடைகிறார் என்பது அர்த்தம்.

1 சாமுவேல் 25:3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

வேதம் அபிகாயிலைக் குறித்து, அவள் மகா புத்திசாலி என்றும், ரூபவதி என்றும் சொல்கிறது. அதே வேளையில், அவளது புருஷனை மோசமாக வர்ணிக்கிறது. வேதத்தில் ஒரு மனுஷனை மிகவும் மோசமானவனாக காட்டுகிறது யாரையெனில், இந்த நாபாலைத்தான். நாபாலுக்கு, அபிகாயிலைக் காட்டிலும் நல்ல மனைவியாக கிடைக்கவே முடியாது. அதேபோல, அபிகாயிலுக்கு, நாபாலைக் காட்டிலும் மோசமானவன் ஒருவன் கிடைக்க முடியாது. எதிரெதிர் துருவங்களில் முதன்மையானவர்கள் இவர்கள்.

சில வேத அறிஞர்கள் சொல்வது, ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற காலம் என்பது, ஒரு கொண்டாட்டத்தின் காலம். அப்போது அவர்கள், வாரி வழங்குவதும் விருந்து கொடுத்து உபசரிப்பதும் அவர்கள் வழக்கம். அதனால்தான், தாவீது உரிமையாக தங்களை போஷிக்கும்படி கேட்டார். மற்றபடி தாவீது இப்படி பிச்சை எடுத்து சாப்பிடுபவர் அல்ல.

  1. உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

இந்த வசனத்தை நன்றாக கூர்ந்து பார்த்தால், தாவீது மிகவும் மரியாதையாக, வார்த்தைகளை தேடிப்பிடித்து கூறி இருப்பார். அதிலும் உம்முடைய குமாரனாகிய தாவீது என்று கடைசியாக சொல்வதால், ஒருவேளை நாபால் வயதானவராகக் கூட இருக்கலாம். ஆனால் நாபால் முரடன் என்பதால், தாவீதை மதிக்காமல் அவமானப்படுத்தி விட்டார்.

அபிகாயிலின் குணங்கள்:

  1. எளிதில் பழகக்கூடியவள்:

ஒரு வேலைக்காரன் அபிகாயிலிடம் வந்து, “தாவீதுக்கு நம் எஜமான் இப்படி எல்லாம் பேசி விட்டார்” என்று கூறுகிறான். ஆந்த வேலைக்காரனுக்கு தெரியும், “நாபாலிடம் என்ன சொன்னாலும் அது வேலைக்காகாது. ஆனால் அபிகாயிலிடம் சொன்னால், நம் வார்த்தைகளைக் காது கொடுத்து கேட்பார். பின்னர் செய்ய வேண்டியதை செய்வார்” என்று அறிந்து அவளிடம் வந்து கூறுகிறான்.

  1. விரைவாக சிந்திப்பவள் (Quick Thinking)

வேலைக்காரன் கூறியதைக் கேட்டதும், “இந்த மனிதன் இப்படி பண்ணி விட்டாரே” என கணவனைக் குறை சொல்லவில்லை. இனி என்ன ஆகுமோ என பயப்படவில்லை. விரைவாக சிந்தித்து, சரியான முடிவை எடுத்தாள் அபிகாயில்.

  1. தாழ்மையானவள்:

அபிகாயில், 600 பேருக்கு சாப்பாடு கொண்டு செல்கிறார். ஒரு செல்வ சீமானின் மனைவி. அவள் கொண்டு செல்லும் சாப்பாடின் அளவு, அவளது வசதியைக் காட்டும். ஆனால் இதைஎல்லாம் அவள் எண்ணவில்லை. ஆபத்தை தவிர்க்க என்ன செய்வது என்பதைப் பற்றி மட்டுமே அவள் மனம் சிந்தித்தது.

  1. தைரியமானவள்:

தாவீதுடன் அந்த வனாந்திரத்தில் தங்கி இருந்தவர்கள் 600 பேர். அத்தனை பேரும் யுத்த புருஷர். அதில் 400 பேர் நாபலை எதிர்த்து யுத்தம் செய்ய புறப்பட்டார்கள். நாபால் செய்த அவமானத்தில், தாவீது உச்ச கட்ட கோபத்தில் இருக்கிறார். 600 வாள் பிடிக்கும் ஆண்களை சமாளிக்க வந்து, ஒரு பெண். அத்தனை பேரின் கோபத்தையும் அடக்கியவள் இந்த பெண் தான்.

  1. கர்த்தருக்கு கீழ்ப்படிபவள்:

கணவனின் முடிவுக்கு எதிராக ஒரு பெண் செயல்படுகிறாள். அதுவும் கணவனுக்கு தெரியாமல் செய்கிறாள். காணவனுடைய தலைமையை அவள் எடுத்துக்கொண்டாள் என்பது இதன் அர்த்தமா? இல்லை. இந்த இடத்தில், கணவனுக்கு கீழ்ப்படியவா? அல்லது கர்த்தருக்கு கீழ்ப்படியவா என்பதை யோசித்து முடிவு எடுத்தாள் அபிகாயில்.

  1. அபிகாயிலின் பேச்சு ஞானம்:
  • அபிகாயிலின் பணிவு

23 முதல் 25 வசனங்களைப் படிக்கும்போது, தாவீதிடம் வந்தவள், முகங்குப்புற விழுந்து, பணிந்து, அவன் பாதத்தில் விழுந்தாள் என வேதம் சொல்கிறது. ஒரு எஜமாட்டி அவள். தன் வேலைக்காரருடன் அங்கே வந்திருக்கிறாள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பணிவுடன் செயல்பட்டாள் அபிகாயில்.

  • தாவீதுக்கு சரியான அறிவுரை கூறினாள்:

26.இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

தாவீது கோபத்தில் தவறான முடிவு எடுக்கும்போது, அவனுக்கு சரியான அறிவுரை கூறுகிறாள் அபிகாயில்.

  • தேவ வாக்குதத்தங்களை ஞாபகப்படுத்துகிறாள்:

30. கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,

உம்மை இஸ்ரேலுக்கு ராஜாவாக நியமிக்க தேவன் கொடுத்த வாக்கை எண்ணிப் பாரும். நீர் பழி வாங்கி, அதன் மூலம் உமக்கு தேவையற்ற துன்பம் வர வேண்டாம் என கூறுகிறாள்.

  • எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதை அறிந்திருந்தாள்:

ஓரு பெரிய ஆபத்து வர இருந்தது. எப்படியோ பேசி, காலில் விழுந்து, பரிசுகள் கொடுத்து, அதை தடுத்து நிறுத்தி களைப்பாக வீட்டுக்கு வருகிறாள் அபிகாயில்.

  1. அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

வீட்டில் ராஜ விருந்து நடந்து கொண்டிருந்தது. எந்த கணவன் செய்த தவறுக்காக இன்னொரு ஆணின் காலில் விழுந்தாளோ, அதே கணவன் இங்கு குடித்து வெறித்து இருக்கிறான். யாருக்காக இருந்தாலும் அந்த இடத்தில் கோபம் வரத்தான் செய்யும். ஆனால் அபிகாயிலோ, அதைக் கண்டுகொள்ளாமல், அந்த இராத்திரியில் எதுவும் பேசவில்லை.

காலையில் அவன் எழுந்ததும், நடந்ததைக் கூறுகிறாள். அடித்து விடுவான் அந்த முரடன், அல்லது வார்த்தையினால் காயப்படுத்துவான் என்பது அபிகாயிலுக்கு தெரியும். ஆனாலும், தன் கணவனிடம் மறைக்காமல் நடந்ததை சொல்கிறாள்.

இரவில் அவன் குடித்து வெறித்திருக்கும்போது, எதுவும் சொல்லவில்லை. காலையில் அவனிடம் சொல்கிறாள். எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்ற ஞானம் அபிகாயிலுக்கு இருந்தது. ஆனால் அவளே எதிர்பாராமல், நாபால் கல்லாகிப் போனான்.

அபிகாயில்- தாவீதின் திருமணம் மகிழ்ச்சியாக இருந்ததா?

பலமுறை நாம் இந்த பகுதியை வாசிக்கும்போது, நாபால் இறந்து போய் விட்டான். அடுத்து, அபிகாயில் தாவீதை திருமணம் செய்து, சந்தோஷமாக வாந்தாள் என்று நினைத்து, கடந்து விடுவோம். உண்மையில் சந்தோஷமாக இருந்திருப்பாளா?

முதலாவது அபிகாயில் அவனுடைய முதல் மனைவி அல்ல. ஏற்கனவே சவுலின் குமாரத்தியாகிய மீகாளை திருமணம் செய்து, பின்னர் அவள், தாவீதுடைய நண்பனின் மனைவி ஆகி விட்டாள். அடுத்து முதல் மனைவியாக அறியப்பட்டவள் அகினோவாம். அபிகாயில் இரண்டாம் மனைவி.

தன் கணவன் இறந்த அதிர்ச்சியில் இருந்த அபிகாயில், தாவீது கேட்டவுடனே, அவசரத்தில் ஒரு முடிவு எடுத்து திருமணம் செய்தாள். அதேபோல தாவீதும், மீகாளின் துரோகத்தால் காயப்பட்ட இதயத்துடன், அபிகாயிலை திருமணம் செய்தார். அப்போது தாவீது அரசன் ஆகவில்லை. எனவே நாடோடியாக அங்குமிங்கும் அலையவேண்டிய சூழ்நிலை. அதுபோக, பகைவர்கள் சிறைபிடித்து சென்றார்கள்.

1 சாமுவேல் 30:5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

இப்படி இரு காயப்பட்ட இதயங்கள் திருமணம் செய்து, நிலையில்லாத வாழ்வை வாழ்ந்தனர். அதுபோக அபிகாயிலின் மகன் அடுத்த ராஜா ஆகவில்லை. பத்சேபாளின் மகன் சாமுவேல் தான் அடுத்த ராஜா ஆனார். முக்கியமில்லாத ஒருத்தியாகத்தான் அபிகாயிலின் வாழ்க்கை இருந்தது.

அபிகாயிலிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

அபிகாயில், நாபாலிடம் அன்று இரவு பேசாமல், அடுத்த நாள் காலையில் பேசினாள். நாம் கோபத்தில் இருக்கும்போது, வாய் தவறி வார்த்தைகளை விடக்கூடாது என்பதை கற்றுக்கொடுக்கிறாள். சோகமாக இருக்கும்போது, சட்டென்று வாழ்வின் அடுத்த கட்ட முடிவை எடுப்பது தவறு என்பதையும் அபிகாயில் கற்றுக் கொடுக்கிறாள். 600 ஆண்கள் எதிர்த்தாலும், ஒரு பெண் நினைத்தால், அவள் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதற்கு அபிகாயில் ஒரு எடுத்துக்காட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *