Day – 10 (10- டிசம்பர், 2023)

தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர்

செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம்.

வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால், காலையில் எழுந்து வீட்டையும் நிர்வகித்து, வேலைக்கும் செல்லும் போது, எவ்வளவு கஷ்டப்படுவீர்கள்? ஆனால் தற்கொலை எண்ணம் வரவில்லையே. வேலை பார்க்கும் இடத்தில் எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும், முன்னேறிச்செல்ல தேவன் பெலன் கொடுத்தாரே! நன்றி சொல்வோம்.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை. நமக்கு அப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கை அமையவில்லை. கர்த்தர் நேர்த்தியாக நடத்துகிறாரே.  நன்றி சொல்வோம்.

நீட் தேர்வுக்காக எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நாம் எதிர்பார்த்த எல்லாம் கிடைத்து விட்டதா? நமக்கு பிடித்த வேலை தான் செய்கிறோமா? ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

இப்போது எல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கே மன அழுத்தமாம். நமக்கு மன அழுத்தம் என்றால் என்ன என்று, உண்மையாகவே தெரியுமா என்றால், சந்தேகமே. அதற்காக நம் வாழ்வில் கவலையே இல்லையா? உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டவர்களை விட நம் வாழ்வில் அதிக பிரச்சனை இருக்கும். பின் ஏன் நமக்கு அந்த எண்ணம் வரவில்லை. நம்முடன் இருப்பவர் பரிசுத்த ஆவியானவர் அல்லவா! இந்த வருடம் முழுவதும், எப்படியோ நம்மை தேற்றி விட்டார் அல்லவா! நன்றி சொல்வோம்.

திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று தற்கொலையாம். நமக்கு ஈஸியாக வரன் கிடைத்ததா? திருமணம் எதிர்பார்த்தபடி நடந்ததா? எதிர் பார்த்த மாப்பிள்ளை கிடைத்தாரா? அல்லது எதிர்பார்த்த மனைவி அமைந்தாரா? ஆனால் இன்றும் தேவனை விசுவாசிக்கிறோம் அல்லவா! குடும்ப வாழ்வு இன்னும் அமையா விட்டாலும், அவரை விசுவாசிக்கிறோம், சரியான குடும்ப வாழ்வு அமையாமல் பிரச்சனைகளை சந்தித்தாலும், இன்னும் அவரை விசுவாசிக்கிறோமே. நல்ல குடும்ப வாழ்வு அமைந்து, பிரச்சனையே இல்லை என்றாலும் அவரை விசுவாசிக்கிறோம். அதற்காக நன்றி சொல்வோம்.

எத்தனையோ கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்தி படிக்கிறோம். ஒருமுறை, ஒரு நர்சிங் மாணவி தற்கொலை கடிதத்தில், “என் காதுக்குள் நீ செத்து போ, இல்லையென்றால் உன் வீட்டினரை கொன்று விடுவேன் என்கிற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அம்மா அப்பா நல்லா இருங்க” என்று எழுதி இருந்தார். எவ்வளவு பரிதாபம் அல்லவா! சில ஆவிகள், மக்களை தற்கொலைக்கு தூண்டுவதற்காக சுற்றித் திரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால், தேவன் அவைகளிடமிருந்து நம்மை வேலியடைத்து பாதுகாத்தாரே. அதற்காக நன்றி சொல்வோம்.

எவ்வளவோ காரணங்களுக்காக தற்கொலை செய்கின்றனர். அவர்கள் காரணங்களை விட, நம் வீட்டில் பிரச்சனை பெரிதாக உள்ளது. ஆனால் இம்மட்டும் தற்கொலையின் ஆவிகள், தற்கொலை சிந்தைகள் நம்மை தொடாதவாறு கர்த்தர் பாதுகாத்தார். அதற்காக நன்றி சொல்வோம் இன்றைய நாளில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *