வேதாகம பண்டிகைகள் (மேலோட்டம்)

Bible Festivals – Outline

நாம் ஒவ்வொரு பண்டிகையையும் குறித்து விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக ஒவ்வொரு பண்டிகையையும் பற்றிய மேலோட்டத்தை இப்பதிவில் காணலாம். நாம் இஸ்ரவேலரின் பண்டிகையைக் கொண்டாட அவசியம் இல்லை என்றாலும், அதைப் பற்றிய அறிவு அவசியமாக இருக்கிறது. அவைகள், ‘படைப்பிலிருந்து தேவன் ஒவ்வொரு காரியத்தையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்து இருக்கிறார்’ என்பதை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஆதாம் பாவத்தில் விழுந்தாலும் அவனை மீட்பதற்காக தேவன் “மீட்பின் திட்டத்தை” (Redemption Plan) எப்படி செயல்படுத்தி இருக்கிறார் என்பதை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

புறஜாதிகளுடைய பண்டிகை கொண்டாடுவது தேவனுக்கு பிரியமல்ல. கிறிஸ்தவர்களின் பண்டிகை என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தேவ நாமம் மகிமைக்காக நாம் கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடலாம் என்பதை இரண்டாம் பதிவில் பார்த்தோம். அப்படியானால், யூதர்களுடைய பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடலாமா? அநேக வருடங்களாக மேல்நாட்டிலுள்ளவர்களும், தற்போது தமிழ் கிறிஸ்தவர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஒருசாரார், ‘நாம் ஆபிரகாமின் சந்ததி, ஆவிக்குரிய இஸ்ரவேலர், இயேசு உலகில் வாழ்ந்த நாட்களில் யூதர்களின் பண்டிகை கொண்டாடினார், அப்போஸ்தலர் யூதர்களின் பண்டிகை கொண்டாடினார்கள், எனவே நாமும் கொண்டாட வேண்டும்’ என்றும், மற்றொரு சாரார், ‘நமக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, எனவே கொண்டாடத் தேவையில்லை’ என்றும் கூறுகின்றனர்.  உண்மையில் நாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாம் யூதர்கள் அல்ல. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பண்டிகைகளை யூதர்களுக்குக் கொடுத்தவரே கர்த்தர். ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் பின்னாக நிழலாக ஒரு காரியம் கிறிஸ்துவைப் பற்றி இருக்கிறது. அதை தனித்தனியாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக மேலோட்டமாக (outline) ஏழு பண்டிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

பண்டிகைகள்

பவுல் தெளிவாக எழுதியிருக்கிறார், பண்டிகை என்பது கிறிஸ்துவைப் பற்றியது என்றும், அவைகள் நடந்து முடிந்ததன் அடையாளமல்ல, வருங்காரியத்தின் அடையாளம் என்றும் கூறுகிறார். எனவே யூதர்களின் பண்டிகைகள் மிகவும் முக்கியமானவைகள். Old Testament & New Testament என்பதற்கு, பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று கூறுவது சரியான மொழிபெயர்ப்பு அல்ல, முந்தின உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை என்பதே சரியான மொழியாக்கம்.  முந்தைய உடன்படிக்கை என்பது, பிந்தைய உடன்படிக்கையாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

மொத்தம் ஏழு பண்டிகைகள் இருக்கிறதில், ஐந்து பண்டிகைகளில் அன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று தேவன் கூறினார். ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறது. முக்கியமாக மோசே மொத்தம் ஏழு முறை மலையில் ஏறிச் சென்று தேவனுடன் இருந்தார் என்று வேதவல்லுனர்கள் மற்றும் யூத ரபீக்கள் கூறுகின்றனர்.

ஓய்வு

ஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்தார் என்பது போல, ஏழாம் நாளில் யூதர்களுக்கும் ஓய்வு. யூதர்களுக்கு மாத்திரமல்ல, அவர்கள் நிலங்கள், விலங்குகளுக்கும் ஓய்வு என்று தேவன் கூறியிருப்பதால், எல்லா படைப்புகளுக்கும் ஓய்வு என்று தெரிந்து கொள்ளலாம். தேவன் 7 பண்டிகைகள் தருவதற்கு முன்னர் முதலாவது ஓய்வு நாளைத் தான் கொண்டாடச் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் இஸ்ரவேலைப் பற்றி ஒரு செய்தி படித்தேன், “காலம் மாறி விட்டது, இன்னும் ஓய்வு நாளில் இதைச் செய்யக்கூடாது என்கிற சட்டம் மாறவில்லை என்று இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்”. ஓய்வு நாளை ஆசரிக்கலாமா? என்பது நமக்கு முக்கியம் இல்லை. ஆனால், ஓய்வு நாளில் நாம் எவ்வளவு நேரம் அவருக்காக செலவிடுகிறோம் என்பது முக்கியம்.

யூதர்களை பண்டிகை கொண்டாடச் சொல்லி, கர்த்தரே அவர்களுக்கு 7 பண்டிகைகளை நியமித்துக் கொடுக்கிறார். லேவியராகமம் 23ம் அதிகாரம் முழுவதும், கர்த்தர் கொண்டாடச் சொல்லிய, ஏழு பண்டிகைகளைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

  1. பஸ்கா பண்டிகை
  2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை
  3. முதற்கனி பண்டிகை
  4. அறுவடை பண்டிகை
  5. எக்காள பண்டிகை
  6. பாவநிவிர்த்தி பண்டிகை
  7. கூடாரப் பண்டிகை

ஏழு பண்டிகைகள் தேவன் இஸ்ரவேலருக்கு கொண்டாடும்படி கொடுத்தது. அதனோடு இன்னும் இரண்டு பண்டிகைகள்  சேர்த்து கொண்டாடுகின்றனர். எஸ்தர் புத்தகத்தில் உள்ள பூரிம் பண்டிகையும், தேவாலய பிரதிஷ்டை பண்டிகையான ஹனுக்கா பண்டிகையும் சேர்த்து 9 பண்டிகைகள் கொண்டாடுகின்றனர்.

வேதத்தில் அநேக இடத்தில், பஸ்கா பண்டிகை, அறுவடை பண்டிகை(வாரங்களின் பண்டிகை) மற்றும் கூடாரப் பண்டிகைக்கு, யூத ஆண்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எருசலேம் தேவாலயத்துக்கு வரவேண்டும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். எனவே இந்த மூன்று பண்டிகைகளும், மிகவும் முக்கியமான பண்டிகைகள் ஆகும். (ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். எகிப்தில் இருந்து கானான் வரும்வரை, இஸ்ரவேலர் என்னவெல்லாம் செய்தார்களோ, அதெல்லாம் நமக்கு தீர்க்கதரிசனம்.)

முதல் நான்கு பண்டிகைகள், முதல் மாதத்தில் தொடங்கி, ஐம்பது நாட்களுக்குள் இருக்கும். மீதமுள்ள மூன்று பண்டிகைகள், ஏழாம் மாதத்தில் முதல் இருபத்திரண்டு நாட்களுக்குள் இருக்கும். முதல் நான்கு பண்டிகைகளுக்கும், மீதமுள்ள மூன்று பண்டிகைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கிறது. இவையெல்லாம் ஆழமாகப் படிக்கும்போது நமக்கு புரியும்.

முன்மாரி பின்மாரி

வேதத்தில் அநேக இடங்களில் முன்மாரி பின்மாரி என்று வாசித்திருப்போம். முன்மாரி பின்மாரி பற்றி பிரபல ஆராய்ச்சியாளர் Dr.Suresh Ramachandran அவர்களின் கருத்தை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். இஸ்ரவேல் தேசத்தில் மட்டும் காணப்படும் ஒரு சிறப்பு, பல ஆராய்ச்சியாளர்கள் பலமுறை முயன்று கண்டுபிடிக்க முடியாத ஒரு காரியம், முன்மாரி, பின்மாரி. இஸ்ரவேலரின் முதல் மாதம், நமது ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கும். அப்போது ஒரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மழை பெய்யும். இந்த மழை நீரானது, கீழிறங்காமல், மலைப்பகுதியில் மேல்புறம் தங்கியிருக்கும். விவசாயிகள் அங்கே பயிரிடுவார்கள். இரண்டு மாதங்கள் கழித்து, தண்ணீர் கீழிறங்கி, மலையின் நடுப்பகுதிக்கு வரும், விவசாயிகள் நடுப்பகுதியில் பயிரிடுவார்கள். மேற்பகுதி காய்ந்து மண் நிறமாகக் காணப்படும். அதாவது ஏப்ரலில் மழை பெய்யும். மே மாதத்தில் மேல்புறம் பச்சைபசேல் என்று காணப்படும். ஜீன் மாதத்தில் மேல்புறம் காய்ந்தும், நடுப்பகுதியில் பச்சைபசேல் என்றும் காணப்படும். பின்னர் அடுத்த 2 மாதங்கள், மேல்பகுதியும் நடுப்பகுதியும் காய்ந்து, மலையின் அடிப்பகுதி பச்சைப் பசேல் என்று இருக்கும். முன்மாரி பெய்து ஆறு மாதங்கள் கழித்து பின்மாரி பெய்யும். திரும்ப மேல்பகுதி பச்சைபசேல் என்று மாறும். இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கும். தண்ணீர் அதிகளவு இல்லாத தேசத்தில் இத்தகைய விந்தை விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளது. வேதத்தில்,

தேவன் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசம், வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம். அதனால்தான் இவ்வளவு ஆசிர்வாதம். முன்மாரி பெய்யும் நாட்களில் 4 பண்டிகையும், பின்மாரி பெய்யும் நாட்களில் 3 பண்டிகையும் கொடுத்திருக்கிறார். அதாவது முதல் மாதத்தில் மூன்று பண்டிகை, மூன்றாவது மாதத்தில் நான்காவது பண்டிகை, ஏழாவது மாதத்தில் மீதமுள்ள மூன்று பண்டிகைகள்.

 யூதர்களுக்கு கர்த்தர் கொடுத்த பண்டிகைகள், வருங்காரியத்தின் நிழல் என்பதால், நான்கு பண்டிகைக்கான காரியங்கள் நடந்து முடிந்துவிட்டன. மீதமுள்ள மூன்று பண்டிகைகளுக்காக காத்திருக்கிறோம். ஒரு சுவாரஸ்யமான விஷயம், ஏழாம் மாதத்தின் முதல் தேதியையே இஸ்ரவேலர் புதுவருடமாக கொண்டாடுவர். யூதர்களுக்கு முதல் மாதம்‌ முதல் தேதி New year கிடையாது. ஏழாம் மாதம் முதல் தேதி தான் புதிய வருடம் ஆரம்பிக்கும்.

யூதர்கள் வித்யாசமானவர்கள். யூதர்களின் நாள், சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். அவர்களின் முதல் உணவு, இரவு உணவு தான். அதாவது இரவு 12 மணி என்பது நமக்கு அடுத்த நாளாக மாறும் அல்லவா! அதேபோல, மாலை ஆறு மணி என்பது யூதர்களுக்கு அடுத்த நாள். எந்த ஒரு பண்டிகையும், மாலை ஆறு மணிக்கு தான் ஆரம்பிக்கும்.

பஸ்கா பண்டிகை – Passover (Pesach)

 

இஸ்ரவேலர் ஒரு வயதான (one year old) ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுத்து, அதை அடித்து, அதின் இரத்தத்தை வாசல் நிலைகால்கள் இரண்டிலும் போட வேண்டும். மேலிருந்து கீழாக, மற்றும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் என்று, அவர்கள் இரத்தத்தை பூசிய கைஅசைவு, சிலுவை அடையாளத்தை குறிக்கும். அன்று இஸ்ரவேலருக்கு, சங்காரத்தூதனிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் எதுவும் செய்ய வேண்டாம். இரத்தத்தை பார்த்தால், சங்காரத்தூதன் கடந்து போய் விடுவான். அவர்கள் பூசிய ஆட்டுக்குட்டியின் இரத்தம், மக்களை அழிவிலிருந்து காப்பாற்றியது. அதேபோல, இயேசு சிந்திய இரத்தம், நம்மை நம்முடைய பாவ வாழ்க்கையில் இருந்து மீட்டு இரட்சிக்கிறது.

பஸ்கா:

இஸ்ரவேலர் – எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வந்ததை நினைவுகூறும் நாள்.

இயேசு – பஸ்கா அன்று மரித்து பஸ்கா பலியாக மாறினார்.

நான் – பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இரட்சிப்புக்குள்ளாக வரும் அனுபவம்.

புளிப்பில்லாத அப்ப பண்டிகை – Unleavened Bread

யாத்திரகாமம் 12: 14-20 வசனங்களில், புளிப்பில்லாத அப்பம் ஏழு நாள் சாப்பிட வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். வேதத்தில் புளிப்பு என்பது பாவத்தைக் குறிக்கும். பாவமில்லாத இயேசு கிறிஸ்து, நமக்காக பலியாகி, கல்லறையில் அடைபட்ட நிகழ்வை எடுத்துக் காட்டுகிறது.

இஸ்ரவேலர் – பிசைந்த மா புளிக்கும் முன் எகிப்தை விட்டு வெளியேறினர்.

இயேசு – பாவமில்லாதவராய் அடக்கம் பண்ணப்பட்டார்.

நான் – நானும் பாவத்துக்கு செத்து கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட்டேன்.

முதற்கனி பண்டிகை – Firstfruit Festival

முதற்கனி பண்டிகை என்ற இந்தப் பண்டிகையில், ஆசாரியர் கையில் ஒரு கதிர்கட்டைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவர் அதை கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டுவார். அதாவது இந்துக்கள் ஆரத்தி எடுப்பது போல, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டுவார். இதுதான் முதற்கனி பண்டிகை. முதற்கனி பண்டிகையில், வாரங்களின் பண்டிகைக்கான தொடக்கம் ஆரம்பிக்கும். அதாவது, ஓய்வு நாளுக்கு மறு நாள் முதற்கனி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய காலகட்டத்தில் ஓய்வுநாள் என்பது சனிக்கிழமை. எனவே ஓய்வுநாளுக்கு மறுநாள், வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிலிருந்து 50 நாட்கள் கழித்து அறுவடை பண்டிகை கொண்டாடப்படும். 50 (Fifty) என்பதை நாம் ஐம்பது என்று கூறுவதைப்போல, கிரேக்கத்தில்,  “pentekoste”. 50வது நாள் என்பதை தான் பெந்தெகோஸ்தே நாள் என்று கூறினார்கள்.

முதற்கனி பண்டிகையில், வளர்ந்திருக்கிற, ஆனால் அறுப்புக்கு தயாராகாத பயிரை அசைவாட்ட, ஆசாரியனிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்கள் பயிர் ரெடியாவதற்கு முன்னரே தங்கள் பயிர் நன்றாக விளையும் என்று விசுவாசத்தோடு ஆண்டவருக்கு நன்றி சொல்வார்கள்.50 நாட்கள் கழித்து பயிர் விளைந்தவுடன், அறுவடை பண்டிகை.

இயேசுவும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, வாரத்தின் முதல் நாள் காலையில் Sunday உயிர்த்தெழுந்து, ஆத்தும அறுவடையின் முதற்பலனாக, உயிர்த்தெழுந்த சரீரத்துடன் பரலோகத்துக்கு சென்று,  அவரே பிரதான ஆசாரியராக தனது இரத்தத்தை பரலோகத்தின் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் தெளித்து, நமக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தடுப்புச் சுவரை உடைத்துப் போட்டார்.

இஸ்ரவேலர் – கதிர்கட்டு கொண்டு வந்து கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பண்டிகை.

இயேசு – உயிர்த்தெழுந்த நாள்.

நான் – பிரிவினை நீங்கி தேவனோடு ஐக்கியப் பட்டு விட்டேன். அவரோடு கூட என்னை எழுப்பி, புது சிருஷ்டியாக்கி விட்டார்.

அறுவடை பண்டிகை (Shavuout)

முதற்கனி பண்டிகையில், கதிர் கட்டை கொண்டு வருவது போல், அன்றிலிருந்து சரியாக 50வது நாள், இரண்டு அப்பஙகளைச் செய்து, அதனுடன் சில பலிகளையும் கொண்டு வர தேவன் கூறியிருக்கிறார் (லேவியராகமம் 23: 15-22). ஏன் இந்த ஐம்பதாவது நாள் பண்டிகை? அன்று இஸ்ரவேலருக்கு ஏதேனும் நடந்ததா என்று தேடிப் பார்த்தால், யாத் 12ம் அதிகாரத்தில் முதல் மாதம் 14ம் தேதி அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறினர். அப்படியே சீனாய் மலை வந்து சேர்ந்தது யாத் 19-1ன் படி, மூன்றாவது மாதம் முதல் நாள். மூன்றாம் நாளைக்கு ஆயத்தமாய் இருங்கள் (யாத் 19-11) ன் படி, மூன்றாவது நாள் என்பது, மூன்றாம் மாதம் நான்காம் தேதி. பழைய எபிரேய காலண்டரில் ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள். எனவே முதல் மாதத்தில் மீதி 16நாள், இரண்டாம் மாதம் 30 நாட்கள், மூன்றாவது மாதத்தில் 4 நாட்கள் என்று, அன்றையதினம் ஐம்பதாவது நாளைக் குறிக்கிறது.  அந்த ஐம்பதாவது நாளில் கர்த்தர் இஸ்ரவேலரைச் சந்திக்க சீனாய் மலைக்கு வந்து சேர்ந்தார் (யாத் 19:18-20).  அந்த நாளை நினைவு கூறுவதற்காக ஐம்பதாவது நாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தபின் ஐம்பதாவது நாளாகிய பெந்தெகோஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். ஐம்பதாம் நாள் என்பதன் கிரேக்கப்பதம் தான் பெந்தெகோஸ்தே நாள்.  

சீனாய் மலையில் அன்று மூவாயிரம் பேர் செத்துப்போனார்கள். பெந்தெகோஸ்தே நாளில் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

இஸ்ரவேலர் – சீனாய் மலை அனுபவம்

இயேசு – பெந்தெகோஸ்தே நாள் அனுபவம்

நான் – அபிஷேகம் பெற்ற அனுபவம்

எக்காள பண்டிகை – Trumpets (Rosh Hashannah)

ஏழாம் மாதம் முதல் தேதி எக்காள பண்டிகை ஆசரிக்குமாறு தேவன் கூறினார். லேவியராகமம் 23ம் அதிகாரத்தில் கொண்டாடச் சொன்ன தேவன், எண்ணாகமம் 10ல் தான், மோசேயை பூரிகை என்கிற எக்காளம்‌ செய்யச்சொல்லி, பூரிகைகள் ஊதும்போது, மக்கள் கூடி வரவேண்டும் என்று கூறுகிறார். பின்னால் நடக்கப்போவதைக் குறித்து முன்னரே பண்டிகை கொண்டாடச் சொல்லி விட்டார்.

இஸ்ரவேலர் – பூரிகைகள் ஊதும்போது மக்கள் ஒன்றாக கூடி வந்ததை நினைவுகூறும் பண்டிகை

நான் – இன்னும் பெந்தெகோஸ்தே என்னும் அறுவடையின் காலத்தில் தான் இருக்கிறோம். எக்காளம் வானில் தொனிக்கும் போது, நாம் அனைவரும் மறுரூபமாகி வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவோம். இரகசிய வருகையைக் குறிக்கிறது.

பாவநிவிர்த்தி பண்டிகை Day of Atonement (Yom kippur)

இஸ்ரவேலர் – அநேக முறை பாவத்தில் விழுந்து, மீண்டும் தேவனண்டை வந்ததை நினைவுகூறும் பண்டிகை. பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லும் நாள்.

நான் – நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது

கூடாரப் பண்டிகை Festival of Booth (Sukkot)

கடைசி‌ பண்டிகை கூடாரப் பண்டிகை. ஏழு நாட்கள் இஸ்ரவேலர் கூடாரம் கட்டி அதில் இருப்பர். சந்தோஷமாக சாப்பிடுவதும், வனாந்தரத்தில் முன்னோர்கள் கூடாரத்தில் வாழ்ந்ததை நினைவுகூறுவதும் தான் இந்தப் பண்டிகை.

நான் – ஆண்டவருடன்‌ நித்திய நித்தியமாக வாழப்போவதைக் குறிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *