Day – 4 (04- டிசம்பர், 2023)

பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி

இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம். என்ன இவ்வளவு மோசமாக இந்த வருடம் ஆரம்பிக்கிறதே என்று கலங்கிய நாட்களும் உண்டு. தேவன் எங்களை நடத்தினார். இம்மட்டும் இருக்க பெலன் கொடுத்தார். ஊழியத்தை தந்தார். தேவனுக்கு நன்றி சொல்வது நம் கடமை.

இந்த வருடத்தில், தேவன் எவ்வளவோ அற்புதம் செய்திருப்பார். மரணத்தின் விளிம்பில் இருந்து பாதுகாத்து இருப்பார். பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருந்த அற்புதம் நடந்திருக்கும். யோசித்து நன்றி சொல்லலாம். நாம் பாவி என்பதால் மட்டும்  பெலவீனம் வரவில்லை, பிசாசினால் மட்டும் பெலவீனம் வரவில்லை, தேவனுடைய மகிமை வெளிப்படும்படிக்கு கூட பெலவீனம் வந்திருக்கலாம். இப்போது என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய மகிமை வெளிப்படும்படிக்கு, நாம் சாட்சி சொல்ல வேண்டும். ஏதோ பெரிய கூட்டத்தில் மட்டும் அல்ல, அருகிலிருக்கும் நண்பர்களுக்கு சொன்னால் கூட, தேவ நாமம் மகிமைப்படும்.

எத்தனையோ காய்ச்சல்கள் வந்தன. இளம் மருத்துவரே காய்ச்சலில் உயிரிழந்தாரே. நமக்கு, நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எத்தனையோ முறை சளி, காய்ச்சல் வந்ததே. ஆனால் இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

இந்த வருடத்தில், எவ்வளவோ மருத்துவர்களிடம் சென்றிருக்கலாம். முறையான சிகிச்சை நமக்கு கிடைத்தது. அதே சமயத்தில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு என்று எத்தனை செய்திகள் கேட்டிருப்போம். நாம் எவ்வளவோ மருந்துகள் சாப்பிட்டிருப்போம். சுகம் கிடைத்தது. அதே சமயத்தில், காலாவதியான மருந்து சாப்பிட்டதால் பலி என்று எத்தனை செய்தி கேட்டோம். நாம் இன்று நலமுடன் இருக்கிறோமே. ஒருவேளை இன்றும் நமக்கு பலவீனம் இருக்கலாம். இன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கலாம். ஆனால் இதை வாசிக்கிற அளவு பலன் இருக்கிறதே. இதுவே பெரிய கிருபை அல்லவா! நன்றி சொல்லலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *