Day – 5 (05- டிசம்பர், 2023)
குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி
இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
என்றாவது ஒரு நாள், இன்று சாப்பிடவே வழி இல்லை என்று திகைத்து நின்று இருக்கிறோமா? இல்லையே. கர்த்தர் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுத்து போஷித்துக் கொண்டு இருக்கிறார் அல்லவா. நமக்கு கடன் இருக்கலாம், பாரங்கள் இருக்கலாம். அது தேவசித்தம் அல்ல என்றாலும் கர்த்தர் இன்று வரை நம்மை கைவிடவில்லையே. நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு பூகம்பத்தில், எல்லாம் மாறியது. பல கட்டிடங்களுக்கு சொந்தக்காரர், நடுத்தெருவுக்கு வந்தார். எல்லாம் இழந்தார். நமக்கு அப்படி இல்லையே! நம் தேவன் நம்மை ஆசீர்வதிக்க மட்டும்தான் விரும்புகிறார். ஒருவேளை இன்று கஷ்டத்தில் இருந்தால் கூட, நம்மை அவர் போஷித்த விதத்தை எண்ணிப்பார்த்து நன்றி சொல்வது நம் கடமை. ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து, நமக்கு நிறைவை கொடுத்ததற்காக நன்றி சொல்வோம்.
தெரு ஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்தால், நாம் தங்குவதற்கு, வாடகை வீடு என்றாலும் சிறு வீடு உள்ளதே என்று நன்றி சொல்லலாம். சைக்கிள் கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள், நமக்கு சைக்கிள் இருக்கிறது, அல்லது பைக் இருக்கிறது, அல்லது கார் இருக்கிறது. நன்றி சொல்லலாமே. உடுத்த நல்ல ஆடை இருக்கிறது. காலில் போட செருப்பு, ஷூ இருக்கிறது. இன்னும் யோசித்தால் எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாம். நம்மிடம் இருப்பதற்காக நன்றி சொல்வோம் இல்லாதவைகளை பற்றிய கவலையை மறப்போம்.
இன்று (04-12-23) புயல் மழையில், எத்தனையோ தேவ பிள்ளைகளின் வீட்டில் தண்ணீர் வந்தது. ஆனால் கர்த்தர் கைவிடவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அதிசயமாக நடத்தினார். நன்றி சொல்லலாமே. கர்த்தர் கைவிட மாட்டார் என்று விசுவாசிக்கிற தேவபிள்ளைகளுக்கு, சூழ் நிலை சாதகமாக இல்லை என்றாலும், கைவிட மாட்டார்.
இயேசு சிலுவையில் மரித்தது, நம் வியாதி, தரித்திரம், பாவம், சாபம் எல்லாவற்றையும் மாற்றுவதற்கு தான். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இல்லாததை எண்ணி கவலைப்படுவதை விட, இருப்பதை நினைத்து கர்த்தரை துதிக்கலாமே.
Leave a Reply