Day – 6 (06- டிசம்பர், 2023)
விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி
இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம்.
நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த வருடம் முழுவதும் கர்த்தர் பாதுகாத்தார். நன்றி சொல்லலாமா? சென்னையில், பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்ற குழந்தை, பள்ளியில் வைத்தே, பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி உயிரிழந்ததை செய்தியில் பார்த்து இருப்போம். அந்த குழந்தை பாவி, நாம் நீதிமான்களா? இல்லையே. ஆனாலும் கூட, கர்த்தர் நம் பிள்ளைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரே. எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்.
பெண்களோ, ஆண்களோ, அனுதினமும் வேலைக்கு சென்று வரும் சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும், நாம் நடந்து செல்லும்போது, பைக்கில் காரில் செல்லும்போது பாதுகாத்தாரே. சென்னையில், ரோட்டில் பெருக்கி கொண்டிருந்த மாநகராட்சி பெண்ணை, ஒரு கார் இடித்து, அவர் மேலேறி, அந்த இடத்திலேயே அந்த பெண் மரித்தாரே. எவ்வளவு கொடுமை அல்லவா! இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோம். நாம் ஒன்றும் நல்ல ஓட்டுனர் அல்ல. ஆனால் இன்று உயிரோடு இருந்து, இதை படித்துக் கொண்டிருக்கிறோமே. நன்றி சொல்வோம்.
வீட்டிலிருக்கும்போது கூட பாதுகாப்பு கிடையாது. திடீரென தீ விபத்து, சிலிண்டர் வெடிப்பு என்று எவ்வளவோ விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நலமுடன் இருக்கிறோம். மின்சாரம் பாய்ந்து சாவு என்று வாசிக்கிறோம். நாம் எவ்வளவு மின் உபகரணங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். தூங்கி எழுந்து, பால் பாக்கெட் எடுக்க ஃப்ரிட்ஜ் திறந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. நாமும் தினமும் அதேதான் செய்து கொண்டு இருக்கிறோம். கர்த்தர் நம்மை காத்தாரே. திடீரென திருடர் வீட்டில் நுழைந்து கொலை கொள்ளை நடக்கிறது. கர்த்தர் இன்றும் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். தேவனுக்கு நன்றி சொல்லலாமா?
ஒருமுறை ஒரு செய்திதாளில் வந்த செய்தியைப் படித்தேன். நாக்ர்கோவிலில், தினமும் அதிகாலை ஜெபிக்கும் தாய், அன்றும் வழக்கம் போல பிரார்த்தனை செய்வதற்காக 3 மணிக்கு எழுந்த போது, வீடு முழுவதும் மின்கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்து இருந்துள்ளது. எப்படியோ வீட்டின் மற்றவர்கள் வெளியே வந்துவிட, அவரின் மகன் மட்டும் தனியே ஒரு ரூமில் மாட்டி விட்டான். வெளியே வர வேண்டுமானால், கரும்புகையில் சிக்கிவிடுவான், எனவே அந்த மகனின் அறையின் சுவரை ட்ரில் செய்து, சுவரில் துளையிட்டு மகனை வெளியே காப்பாற்றினார்கள்.
அந்த தாய் 3 மணிக்கு எழவில்லை என்றால், எல்லாரும் மரித்திருப்பர். ஆனால் அந்த குடும்பமே தாயின் ஜெபத்தால் பாதுகாக்கப்பட்டது. ஒருவிசை சிந்தித்து பார்ப்போம், நாம் தினமும் தவறாமல் ஜெபிக்கிறோமா? ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோம். கிருபை என்றால் என்ன என்பது, நம் வாழ்க்கையை யோசித்தாலே புரிந்து விடும். நன்றி சொல்வோம், தேவன் விபத்திலிருந்து காத்தார் என்பதற்காக. நமக்கு தெரியாமல், நம்மை பல இடங்களில் தேவன் காப்பாற்றி இருப்பார். அதற்காகவும் சேர்த்து நன்றி சொல்வோம்.
Leave a Reply