Day – 9 (09- டிசம்பர், 2023)

அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி

இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம்.

நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை மன்னிப்பது எளிதான காரியம் அல்ல. அப்படியே நாம் ஒருவரை மன்னித்தாலும், நம் உயிர் இருக்குமளவும், அந்த நபரை, அவர் செய்த காரியத்தைச் சொல்லி குத்திக் கிழிப்போம். உன்னை மன்னித்ததே என் பெருந்தன்மை என்று நம்மையும் அறியாமல், நம் மனதுள் பதிய வைத்திருப்போம். ஏனென்றால் நாம் மனிதர்கள்தான். ஈஸியாக மறக்க முடியாதுதான். ஆனால் இயேசு அப்படிப்பட்டவர் அல்ல, அவர் தேவ குமாரன். நம் பாவத்தை மன்னிக்க வந்தவர். நாம் அவரை ஏற்றுக்கொண்ட போதே பழைய பாவங்களை மன்னித்து விட்டார். அதை நாம் மனதுள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

ஒருமுறை கவுன்சிலிங் எடுக்கிற ஒரு மன நல ஆலோசகர் பேட்டியை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு 4 வயது குழந்தையின் தந்தை, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை ஆபாச படம் பார்க்கிறார், அதிலிருந்து வெளியே வருவதற்காக கவுன்சிலிங் வந்தார் என்று அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அது ஒரு அடிமைத்தனம்.  நாமும் ஏதோ ஒரு காரியத்துக்கு அடிமையாக இருக்கலாம். ஒருவேளை நம் அடிமைத்தனம், டிவி பார்ப்பதாக இருக்கலாம், ஒருவேளை செல்போன் பார்ப்பதாக இருக்கலாம், சோசியல் மீடியாவாக இருக்கலாம், தூக்கமாக இருக்கலாம், சாப்பாடாக இருக்கலாம், வெட்டிப்பேச்சாக இருக்கலாம், புறம் பேசுதலாக இருக்கலாம், ஏதோ ஒரு காரியம் நம்மையும் அடிமையாக வைத்திருக்கலாம்.

ஆனால் யோசித்துப் பாருங்கள், அதிகமாக Facebook பார்க்கிறேன், இனி அதைப் பார்ப்பதை குறைக்க வேண்டும், அதிகமாக Youtube பார்க்கிறேன், குறைக்க வேண்டும் என்று நாமாகவே யாரும் கூறாமல், எத்தனை நாட்கள் தீர்மானம் எடுத்திருப்போம்? அது எப்படி உணர்வு வந்தது? பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்ததால் தானே! அப்படியானால், நாம் எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றவர்கள்! நாம் பாவியாகவே இருந்தாலும், ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கிறார் என்பதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

இந்த வருடத்தில், நமக்கு எதிராக தூக்கத்தை வைத்தே, கர்த்தரின் சித்தத்தை தடை செய்யும்படி சாத்தான் ஏதோ ஒன்றை வைத்திருப்பான். அல்லது போனை வைத்தே நம்மை அடிமையாக்கும்படி பெரிய திட்டம் போட்டு இருந்திருப்பான். ஆனால் நமக்கே தெரியாமல், அதை அனைத்தையும் கர்த்தர் உடைத்துப் போட்டார். (காணாததை விசுவாசிப்பது தான் கிறிஸ்தவ வாழ்க்கை) அதனால்தான் அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களைச் செய்கிறவர். எப்பொழுது எல்லாம் நாம் உணர்வு பெற்று, இனி இந்த காரியம் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ, பின்னால் ஆவிக்குரிய காரணம் இருக்கும், கர்த்தர் செயல்பட்டிருப்பார், சாத்தான் திட்டம் நொறுங்கி போயிருக்கும்.

அதற்கு பின்னரும் நாம் தவறி இருப்போம், அதே காரியம் செய்திருப்போம், ஆனால் அது பிரச்சனை இல்லை. அன்று சாத்தானுடைய பெரிய திட்டத்தை உடைத்துப் போட்டார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். நம் தேவன் வெறும் ஒருநாள் மட்டும் செயல்படுகிற தேவன் அல்ல, எனவே நிச்சயமாக நாம் விடுவிக்கப்பட வேண்டிய காரியத்திலிருந்து நிரந்தர விடுதலை பெற கர்த்தர் உதவுவார். நீர் என்னை விடுவிப்பதற்காக நன்றி என்று மனதார சொல்லலாமே!

இயேசு அவருடைய இரத்தத்தால் நம்மைக் கழுவி, நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். பரிசுத்த ஆவியானவர், நமக்குள் உணர்வைக் கொடுத்ததற்காக நன்றி சொல்வோம். சாத்தானுடைய திட்டங்களை நமக்கு தெரியாமலேயே, தேவன் உடைத்து போட்டதற்காக நன்றி சொல்வோம். நம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததற்காக நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *