திருமணத்துக்கு பிறகு ஆபாச படம் – 2

(வாழ்க்கை துணையின் அடிமைத்தனம்)

திருமணமானவர்களுக்குத்தான் இப்பதிவு… எனக்கல்ல என நினைக்கும் வாலிபர்களே,

ஆபாச படத்துக்கு அடிமையானவர்களுக்கு தான் இப்பதிவு… எனக்கல்ல என்று நினைப்பவர்களே,

முன்னொரு காலத்தில் அடிமையாக இருந்தேன்… அதிலிருந்து வெளிவந்து விட்டேன் என நினைக்கும் நட்புகளே,

சில உளவியல் பிரச்சனைகளையும், திருமணத்துக்கு பின்னர் வரும் பிரச்சனைகளையும் மேலோட்டமாக பதிவிட்டிருக்கிறேன். தயவுசெய்து படித்து உங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஏற்கனவே, உங்கள் வாழ்க்கைத்துணை ஆபாசபடத்துக்கு அடிமையாக இருந்தால் “தவறு உங்களுடையது அல்ல” என்று பார்த்தோம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கைத்துணை இப்பொழுது பெரிய சுமையை சுமந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரால், திருமண உறவுக்கு முக்கியமானதாக இருக்கும் வெளிப்படைத்தன்மையோடு இருக்க முடியவில்லை. அதனால் மட்டுமே உங்களோடு அவரால் நெருக்கமாக இருக்க முடியவில்லை. அவரது சுமையை இறக்கி வைக்க, உங்கள் உதவி அவருக்கு தேவை.

ஆபாசபட அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கிறவருக்கு, ஒருவர் ஈஸியாக, “உங்கள் கண்களோடு உடன்படிக்கை செய்யுங்கள்” என்று அறிவுரை கூறலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல. இதிலிருந்து வெளிவருவதற்கு, அதாவது விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு, சில மாதங்கள் ஆகலாம்; அல்லது வருடங்கள் ஆகலாம். ஏனெனில் இதன் பின்னாக இருந்து செயல்படுவது சில வலுவான ஆவிகள்.

பல நேரத்தில் மனைவிகள் தங்களைத் தாங்களே குறை சொல்லிக் கொள்வார்கள். “அவருடைய expectations என்னால் கொடுக்க முடியவில்லை. அவரை என்னால் திருப்தி செய்ய முடியவில்லை. அதனால்தான் அவர் Porn addictionக்கு போய்விட்டார். அவரது இந்த நிலைக்கு காரணம் நான் தான்” இப்படி அநேகர் நினைப்பார்கள். அதற்கு காரணம் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு, தாம்பத்திய வாழ்வை விட, அப்பெண்ணுக்கு குழந்தைகள் முக்கியமானவர்களாகி விடுவர். ஆனால் ஆண்களுக்கு அப்படி அல்ல. அதனாலேயே, பெண்கள் தங்களை தாங்களே குறை கூறிக் கொள்வர். ஆனால் உண்மை அதுவல்ல.

உங்கள் வாழ்க்கைத்துணை 40 வயதுக்கு கீழ்ப்பட்டவர் என்றால், நிச்சயமாக உங்கள் திருமணத்துக்கு முன்பேயே அவர் ஆபாச படத்தின் அடிமை ஆகியிருப்பார். ஏனெனில் அப்போதே மொபைல் போன் வந்து விட்டது. ஒருவேளை உங்கள் வாழ்க்கைத்துணை 40 வயதுக்கு மேலானவர் என்றாலும், உங்கள் திருமணத்துக்கு முன்பாகவே, பல புத்தகங்கள், கவர்ச்சி படங்கள், சினிமாக்கள் மூலமாக தனிமையில் கனவில் மிதந்தவராக இருந்திருப்பார். எது எப்படியாயினும், உங்கள் திருமணத்துக்கு முன்பேயே அவர் ஆபாச படத்தின் அடிமைத்தனம் என்னும் பாவத்தின் வாசலை மிகவும் பெரிதாக திறந்து வைத்து விட்டார். இப்போது அவர் கையிலிருக்கும் மொபைல்போன், அந்தக் கதவை மிகவும் அகலமாக திறந்து விட்டது.

ஆண்கள் தான் பிரச்சனையா? பெண்கள் அப்படி கிடையாதா? எல்லா பெண்களுமே தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாமல்தான் கணவனிடமிருந்து விலகுகிறார்களா? இல்லவே இல்லை. சில பெண்களும் ஆபாச படத்தின் மீதான மோகத்தில், கணவனை தன்னருகில் விடுவது இல்லை என்பதும் உண்மையே.

இப்போது என்ன பிரச்சனை தெரியுமா? ஆபாசபடத்தில் சிக்கிய ஒரு ஆண், பல பெண்களின் வீடியோக்களைப் பார்த்து, அதை அவருடைய மூளையில் ஏற்றி விட்டார். எனவே அந்த வீடியோக்களைப் பார்த்தே, தன் இச்சையை தீர்த்துக்கொள்வார். அப்படி பழக்கப்பட்ட அவரது மூளையால், ஒரே ஒரு பெண்ணிடம் திருப்தி அடைய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அதாவது, தன் அருகில் உயிருள்ள ஜடமாக இருக்கும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது.

நக்கீரன் என்ற YouTube channelல், Detective ஆக இருக்கும் சில பெண்களிடம், ஏதாவது case பற்றி இன்டர்வியூ எடுப்பார்கள். அதில் டிடெக்டிவ் யாஸ்மின் என்பவர், தன்னிடம் வந்த ஒரு கேஸ் பற்றி விவரித்தார். ஒரு பெண் அவரிடம் வந்து, “என் கணவனுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா” என்று விசாரிக்கும்படி கூறினார். முக்கிய காரணம் என்னவென்றால், தன்னோடு அவர் 3 மாதங்கள் உறவில் ஈடுபடவில்லை என்று கூறினார். யாஸ்மினுடைய டீமும், அடுத்த 3 மாதங்கள் அவரை விடாமல் பின்தொடர்கிறார்கள். அவரை குற்றப்படுத்த முடியவில்லை. அவர் Mr.Perfect ஆக இருக்கிறார். வேலை, வேலை முடிந்தால் வீடு, என்று இருக்கிறார். அதோடு வேலை பார்க்கும் இடத்திலும் எந்த தொடர்பும் இல்லை. குழம்பிய யாஸ்மின், கடைசியில் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டு, “உங்கள் கணவரின் Browsing Historyஐ check செய்து பாருங்கள்” என்று கூற, செக் செய்த மனைவி அதிர்ந்து போனார். அந்த கணவர், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை, ரெகுலராக ஆபாசபடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதன்பின் அந்த கணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கும்போது, “விளையாட்டாக பார்க்க ஆரம்பித்தேன். தற்போது என்னால், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. என்னை என்னால் கட்டுப்படுத்தவே முடியாமல், பார்த்து விடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அருமையான வாலிபர்களே, நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தாலும் கூட பரவாயில்லை. இந்த பாவத்தில், இப்போது நீங்கள் சிக்கிக் கொண்டால், உங்கள் குடும்ப வாழ்வில் நிச்சயம் பிரச்சனைகள் வரும். உங்களுக்கான தீர்வைத் தேடுங்கள். அதிலிருந்து வெளிவர ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே.

எந்த உழைப்பும் இல்லாமல், ஈஸியாக ஒருவர் இன்பம் அடையும்போது, அதற்கு பின் மனைவி மீது அந்த பிடிப்பு வராது. (இவ்விடத்தில், உழைப்பு என்பது மனைவியை திருப்திபடுத்துவதை கூறுகிறது.) ஒரு போன் போதும். பல பெண்களைப் பார்த்து, தங்கள் இச்சையை அவரால் தீர்க்க முடியும். அதேதான் பெண்களுக்கும்… ஒரு போனில், பல வீடியோக்கள் மூலம் தங்களை திருப்தி செய்ய முயற்சிப்பார்கள். அது கிடைக்காமல் போகும்போது, அதுவே வேறொரு நபரின் மீது ஈர்ப்பாக மாறி, பல கள்ளக்காதல் உருவாகிறது.

வாலிப வயதில், விளையாட்டாகத்தான் ஆரம்பிப்போம். ஆனால் அது நமக்கு கண்ணி ஆகிவிடும் என்பதை தெரியாமல், செய்து விடுவோம். ஆபாச படம் என்பது போதை மருந்து போன்றது. ஒருமுறை அதை சுவைத்து விட்டால், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

“நான் சும்மா விளையாட்டாக, அல்லது டைம்பாஸ்க்காக Porn video பார்க்கிறேன். நான் ஒன்றும் அதற்கு அடிமையல்ல” என்று நினைப்பவர்களே, இது உங்களுக்கானது. நீங்கள் வாலிபராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் முடித்தவராக இருந்தாலும் சரி. உங்களால் உங்கள் துணையை திருப்திபடுத்தவே முடியாது. உங்களுக்கு தேவை என்ன தெரியுமா? ஒரு செக்ஸ் டால் போதும். உங்கள் தேவையை (இச்சையை) தீர்க்க தேவைப்படும் ஒரு டால் தான் உங்கள் துணை.

நான் இப்படி எழுதியதற்காக மன்னித்து விடுங்கள். ஆனால் இது தான் உண்மை. வெறும் இச்சையை தீர்க்க கணவரை தேடுகிறீர்கள், ஆனால் அவருடன் தாம்பத்தியத்தை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் தாம்பத்திய உணர்வு (mood) உங்களுக்கு வருவதற்கு, உங்கள் கணவரின் அருகாமை உங்களுக்கு தேவையில்லை. ஒரு போன் மட்டும் போதும்.

இதேபோல்தான் கணவர்களுக்கும். ஒரு பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் தேவைப்படும் முன்விளையாட்டுகள் எதையும் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை. உங்களுக்கு தாம்பத்திய உணர்வு வரும்போது, உங்கள் விந்துவை வெளியேற்ற அவள் தேவைப்படுகிறாள். உங்கள் வெளியேற்றம் முடிந்ததும் நீங்கள் தூங்கி விடுவீர்கள். உங்கள் மனைவிக்கோ, அப்போது தான் கொஞ்சமாக அந்த உணர்வு வரத் தொடங்கும். இங்கேதான் திருமண தாம்பத்ய உறவில் பிரச்சனைகள் வரத் தொடங்குகின்றன. உங்கள் மனைவி ஒரு செக்ஸ் டால் அல்ல என்பதை நீங்கள் உணராவிட்டால், உங்கள் மனைவி தாம்பத்யம் மீது மொத்த வெறுப்பையும் கொட்டி, ஒரு நாளும் உங்களை அனுமதிக்க மாட்டார். இது ஒரு சீரியஸான பிரச்சனை என்பது புரிகிறதா?

இப்போது சொல்ல வருவது என்னவென்றால், உங்கள் வாழ்க்கைதுணையை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்கள் கணவர், அல்லது மனைவி porn addictedஆக இருந்தால், அவருக்காக ஜெபியுங்கள். இன்னும் அதிகமாக அவரை நேசியுங்கள். அவர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். இது அவருடைய தவறு அல்ல. பின்னாலிருந்து ஆவிகள் செயல்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். அந்த ஆவியை மொத்தமாக துரத்தவேண்டும் என்பதை மனதில் பதிய வையுங்கள். தொடர்ந்து இதைப்பற்றி பார்க்கலாம். ஏற்கனவே Pastor.Vlad அனுபவங்கள் பற்றி படித்தோம். அடுத்த பதிவில், திருமணத்துக்கு பிறகு இப்பாவத்திலிருந்து வெளிவந்த வேறொரு ஊழியரின் அனுபவத்தை தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *