நோவா

தேவன் மனுக்குலத்தை மீட்பதற்காக ஒரு திட்டத்தைக் கொடுத்தார். பெண்ணிடம் இருந்து பிறக்கும் பிள்ளை, சாத்தானை ஜெயிக்கும் என்பதே அந்த திட்டம். சாத்தான் அந்த திட்டத்துக்கு எதிராக போராடி, முதலில் பரிசுத்த வித்து இருந்த ஆபேலைக் கொன்றான். பின்னர், வித்து யாரிடம் இருக்கிறது என்பது தெரியாததால் முழு மனிதகுலத்தையும் அசுத்தமாக்க முடிவு செய்து, தேவ புத்திரர்களை மனுஷ குமாரத்திகளுடன் கலக்க விட்டான். நோவா காலம் வரை இந்த பரிசுத்த வித்து மறைந்து இருந்தது.

ஆதாமுக்கு அனேக பிள்ளைகள் பிறந்ததால், சேத் வைத்திருக்கும் பரிசுத்த வித்து, சாத்தானுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சேத் பிறந்த பின்னர் தான் மனிதர்கள் தேவனை தொழுது கொள்ள ஆரம்பித்து இருப்பர். யாரேத வரை மறைக்கப்பட்டது, ஏனோக்கு காலத்தில் கொஞ்சம் வெளிப்பட்டது. நாம் அனைவரும் அறிந்தபடி ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தவர். அவரது மகன் மெத்தூசலா. இந்த மெத்தூசலா இறந்த வருடத்தை கணக்கிட்டுப் பார்த்தால், மிகச்சரியாக வெள்ளம் வந்த வருடம் தான் அவர் இறந்துள்ளார்.. அவ்வளவு வருடங்கள் வாழ்ந்த மெத்துசலா, தன் தந்தை ஏனோக்கிடம் கேட்டு அறிந்த காரியங்களை, தன் பேரனாகிய நோவாவுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார். அதனால் தான் நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்ற நிலைக்கு வந்தார் நோவா.

நோவாவுக்கு 500 வயதாகும் போது சேம், காம், யாப்பேத் என்பவர்கள் பிறந்தார்கள். நோவாவுக்கு 600 வயதாகும்போது மழை அழிவு வந்தது. நோவாவுக்கு 600 வயது என்பது, (600+1056=1656). எனவே அழிவு வந்த வருடம் என்பது 1656. மெத்தூசலா இறந்த வருடம் 1656.  

மெத்தூசலா என்ற பெயரின் அர்த்தம்,

 “When he dies, judgment.” - "அவர் இறக்கும் போது, ​​தீர்ப்பு."
“When he is dead, it shall be sent” - "அவர் இறந்தவுடன், அது அனுப்பப்படும்"

 “Man of the dart” or “…javelin” – “மேன் ஆஃப் தி டார்ட்” அல்லது “…ஈட்டி”

ஏனோக்கின் மகன் மெத்தூசலா. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தவர். அவர் தனது மகனுக்கு வைத்த பெயரே ஒரு தீர்க்கதரிசன பெயர் தான். அதேபோல மெத்தூசலா இறந்ததும் வெள்ளம் வந்து ஒரு பெரிய அழிவு வந்தது. இந்த அட்டவணையில் மகன் பிறந்த வருடம் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதாம் 930ஆவது வருடம் இறந்தார் என்பதால், அவர் நோவாவின் தகப்பனாகிய லாமேக்கு வரை உயிரோடு இருந்திருக்கிறார். ஆதாம் தன் பேர பிள்ளைகளைக் கூப்பிட்டு, முதலில் இருந்த ஏதேன் தோட்டம், தேவனோடு இருந்து உறவு பற்றியெல்லாம் பேசுவாராம், அதனால்தான் ஏனோக்கு அதன்பால் ஈர்க்கப்பட்டு தேவனோடு உறவாட ஆரம்பித்தார் என்று யூதர்கள் கருதுகிறார்கள்.

இந்த பரிசுத்த வித்து மறைத்து வைக்கப்பட்டு, நோவா வரை வந்து விட்டது. அனேக இராட்சதர்கள் பிறந்து, மக்கள் கறைபட்டாலும், நோவாவின் குடும்பத்தில் வித்து காக்கப்பட்டு வந்தது தேவனின் திட்டம்.

37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

மத்தேயு 24:37,38,39

இந்த நோவாவின் காலத்தை இரண்டாம் வருகைக்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். அப்படி நோவாவின் காலத்தில் என்னதான் நடந்தது? நோவாவுக்கு 500 வயதாகும்போது, தேவன் நோவாவை கொப்பேர் மரத்தால் பேழையை உண்டாக்கச் சொன்னார். நோவாவுக்கு 600 வயதாகும் போது ஜலப்பிரளயம் பூமியின் மேல் வந்தது. இந்த நூறு வருடங்களில், நோவா பேழையையும் செய்தார். மக்களுக்கு நீதியையும் பிரசங்கித்தார்.

20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

1 பேதுரு 3:20

5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

2 பேதுரு 2:5

நோவா பேழையை செய்து கொண்டிருந்த அந்த நாட்களிலே, நீதியைக் குறித்தும் பிரசங்கித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றும்கூட அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் உண்மையான ஊழியர்கள் பாவம் செய்யாதே… இதோ ஆண்டவர் வாசற்படியில் நிற்கிறார் என்று கத்திக்கொண்டு இருக்க, கிறிஸ்தவர்களாக பிறந்த பலர், இன்னுமா இந்த கதையை சொல்லிகிட்டு இருக்கீங்க என்று கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் கூட, மரணத்துக்கு பின் உள்ள நித்திய வாழ்வு, ஆண்டவரின் ராஜ்யத்தை மறந்து, இம்மைக்காக மட்டும் ஆண்டவரைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். நோவா காலத்தில் நடந்தது போல, இப்போதும் உணர்வில்லாத ஜனங்களாகத் தான் இருக்கின்றனர்.

40 நாட்கள் நோவா காலத்தில் மழை பெய்தது என்று ஈசியாக சொல்லிவிடுகிறோம். ஆனால் நோவா, அந்த விலங்குகள் பறவைகள் மற்றும் தன் குடும்பம் எல்லாவற்றையும் சேர்த்து, பேழையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் இருந்திருக்கிறார். அந்த ஒரு வருடமும் அவர்கள் சாப்பிடுவதற்கு தேவையான அனைத்தையும் அவர் சேர்த்து வைத்திருக்க வேண்டும் என்பது தேவனின் கட்டளை. இதுவரை மழையையே பார்த்திராத நோவா தேவன் கூறிய வார்த்தைக்கு, அப்படியே கீழ்ப்படிந்து இருக்கிறார் என்பது ஆச்சரியமே.

20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.

21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.

ஆதியாகமம் 6:21

நோவா பேழைக்குள் சென்று, கர்த்தர் கதவை அடைத்ததும் உடனே மழை வரவில்லை. அதன்பின் ஏழு நாட்கள் கழித்து தான் மழை பெய்தது. அந்த நேரத்தில் கூட, ஊர்மக்களின் கிண்டலுக்கு ஆளாகி இருப்பார் நோவா.

அறிவியல் அறிஞர்கள் கிபி 1900 வரை, வேதத்துக்கு புறம்பானவர்கள், 300 முழ நீளம் 50 முழ அகலம் 30 முதல் உயரத்துக்கு உள்ள ஒரு பேழையால் தண்ணீரில் மிதக்க முடியாது அது சரிந்து விடும். என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். 1900க்கு பிறகு அதே அளவுள்ள ஒரு பேழை செய்து தண்ணீரில் மிதக்க விட்டு பார்த்தனர். பின்னர் கிட்டத்தட்ட ஒரு பத்தாயிரம் வகையான விலங்குகள் பறவைகள் நோவாவுடன் பேழைக்குள் இருந்திருக்கும் என்று சொல்லி, அதற்கான எடைக்குரிய பொருளை அந்தப் பேழைக்குள் வைத்தும் மிதக்க விட்டுப் பார்த்தனர். ஆனால் பேழை சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. எனவே இது ஒரு கட்டுக்கதை. நோவாவின் கதை உண்மையில் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவாக கூறிவிட்டனர். ஆனால் வேதத்தில் கூறியிருந்தது என்ன? பேழை வெட்டாந்தரையில் நிற்கவைக்கப்பட்டு இருந்தது. முதலாவது மகா ஆழத்தின் ஊற்றுக்கண்கள் எல்லாம் திறவுண்டன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன. கீழே இருந்து ஒரு ஃபோர்ஸாக தண்ணீர் வரும்போது, அந்தப் பேழை விழாமல் மிதக்க ஆரம்பித்தது. அறிவியலின்படி பின்னர் இதை நிரூபித்து பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள், அந்த காலத்தில் உள்ள அறிவியலை நினைத்து.

நோவா மீண்டும் பயிரிடுகிறவனாகி திராட்சைத் தோட்டத்தை நாட்டினான்.. நாம எல்லாரும் நினைக்கிறபடி நோவா கிடு கிடு தாத்தாவாக எல்லாம் இருந்திருக்கமாட்டார். ஏனென்றால் நோவா வாழ்ந்த காலத்தில், சூரிய ஒளி நேரடியாக பூமிக்கு வராது. ஆகாய விரிவிலே ஒரு படலம் முழுவதும் தண்ணீர் படலமாக இருந்தது. அதுதான் நோவாவின் நாட்களில் வெள்ளமாக பூமியின் மீது வந்தது. எனவே அந்தப் படலத்தை மீறி சூரியனுடைய வெப்பம் பூமிக்கு வராது. எப்போதுமே பூமி குளிர்ச்சியாக இருக்கும் சூரியனுடைய கதிர்கள் மனிதனை தாக்காததினால், மனிதர்களின் தோல் சுருக்கம் எல்லாம் அப்பொழுது இருந்திருக்காது. எனவே 600 வயதானாலும் நோவா வாலிபனாகத் தான் இருந்திருப்பார். அதேபோல்தான் நொதித்தல், புளித்தல் என்ற நிகழ்வுகள் வெள்ளத்துக்கு முன் இருந்திருக்காது. இன்றைக்கு வைத்திருக்கிற திராட்சை ரசத்தை, நோவா அடுத்த நாள் எடுத்து குடித்தாலும் அது ஒன்றும் செய்யாது. ஆனால் வெள்ளத்துக்குப் பின் சூரிய ஒளி நேரடியாக பூமியின் மீது பரவ ஆரம்பித்தது. அதுபோக அநேக பிணங்கள் இருந்ததால் பாக்டீரியாக்கள் பூமியில் இருந்தது. இதனால் பல நுண்ணுயிர்கள் வளர ஆரம்பித்தது, அதேபோல புளித்தல் நொதித்தல் என்ற நிகழ்வுகளும் நடந்தன. நோவா எப்போதும் போல முந்தைய நாள் திராட்சை ரசத்தை அடுத்த நாள் குடித்தார். அவருக்குத் தெரியாது, அந்த திராட்சை ரசம் புளித்து இப்பொழுது மதுவாக மாறி இருக்கும் என்று.

நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தவர். அவ்வளவு நெருக்கமான அவர் அறியாமல் செய்த பிழை, பழைய திராட்சைரசத்தை எடுத்துக் குடித்து வெறித்தது. அப்போது காம், தகப்பனுடைய நிர்வாணத்தைப் பார்த்ததால், நோவா காமின் மகன் கானானுக்கு சாபம் கொடுத்தார். தேவன் இனி பூமியை சபிக்க கூடாது என்று ஒரு புது உலகத்தை ஆரம்பித்திருந்த நிலையில், நோவா சபித்து விட்டார். எபிரேய மொழிப்படி, தகப்பனுடைய நிர்வாணத்தைப் பார்ப்பது, என்பது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது என்று வேதவல்லுநர்கள் கூறுகிறார்கள். (அதாவது தமிழில் அவளுடன் படுத்தான் என்றால், அவளுடன் உடலுறவு கொண்டான் என்ற அர்த்தத்தைக் கொடுப்பது போல) அதனால் தான் நோவா சபித்திருக்கிறார். பூமியின் மீது மீண்டும் சாபம் வந்துவிட்டது.

25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.

27 யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

ஆதியாகமம் 9:27

நோவா தன் பிள்ளைகளுக்கு கொடுத்த ஆசீர்வாதம் மேற்கண்ட மூன்று வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சேமுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று மகிமைப்படுத்தி இருக்கிறார், அந்த சேமுடைய வம்சத்தில் தான் ஆபிரகாம் வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, தாவீது, பின்னர் இயேசு கிறிஸ்து அனைவரும் வந்தது சேமுடைய வம்சத்தில் தான்

இன்னும் இஸ்ரேல் என்ற தேசமோ, இஸ்ரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமோ உருவாகவில்லை. அவர்களின் மூதாதையரின் வரலாறு முதல் மனிதனில் தொடங்கி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *