|

Day 243 (31-08-2025)

Scripture Portion: Ezekiel 16-17

எசேக்கியேல் 16

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
3கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
4உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
5உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
6நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
7உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.
8நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து,, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கைபண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
9நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,
10சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,
11உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
12உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.
13இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.
14உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
16உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச்சோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
17நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
18உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
19நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
21நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
22நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
23ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர,
24நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
25நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
26சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.
27ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக்குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
28நீ திருப்தியடையாததினால் அசீரியபுத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
29நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
30வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
31சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
32தன் புருஷனுக்குப்பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
33எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
34இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின்செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
35ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
36கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
37இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
38விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
39உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
40உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
41உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
42இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
43நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.
44இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
45நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
46உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.
47ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
48நீயும் உன் குமாரத்திகளும் செய்ததுபோல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
49இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
50அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
51நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன் பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
52இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
53நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.
54அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
55உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
56உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம்பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
57அதற்குமுன் உன் கெர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
58உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
59கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.
60ஆகிலும் உன் இளவயதில் உன்னோடேபண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
61அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
62உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய்.
63நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 17

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும்கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
4அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்திலே வைத்தது;
5தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.
6அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
7அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது.
8கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
9இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.
10இதோ, நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின் பேரில் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போகுமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
11பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
12இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக் கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,
13அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,
14ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன் உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக்கொண்டுபோனானே.
15இவன் அவனுக்கு விரோதமாய்க் கலகஞ்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன் ஸ்தானாதிபதிகளை எகிப்துக்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ?
16தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவனண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டுசொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
17அவன் அநேகம் ஜனங்களை நாசம்பண்ணும்படி அணைபோட்டு, கொத்தளங்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய சேனையோடும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக யுத்தத்தில் உதவமாட்டான்.
18இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.
19அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
20அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப்பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.
21அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.
22 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன்.
23இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
24அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தார் என்று சொல் என்றார்.

Similar Posts

  • இஸ்ரேல்-15 (சவுல் முதல் ராஜா)

    சவுல் முதல் ராஜா முதல் ராஜா சவுல் பற்றி பார்க்க இருக்கிறோம். கர்த்தர் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு கொடுப்பதற்கு முன்பே, பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று மோசேயிடம் கூறி இருப்பார். ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும் என்று, கர்த்தர் ஏற்கனவே மோசே மூலமாக வழிகாட்டியிருப்பார். 14.உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு…

  • |

    Day 334 (30-11-2025)

    Scripture Portion: 1 Corinthians 5-8 1 கொரிந்தியர் 5 1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, 4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், 5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே…

  • |

    Day 73 (14-03-2025)

    Scripture Portion: Deuteronomy 8-10 உபாகமம் 8 1நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. 2உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி,…

  • |

    Day 93 (03-04-2025)

    Scripture Portion: Judges 10-12 நியாயாதிபதிகள் 10 1அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைதேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். 2அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான். 3அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். 4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத்…

  • |

    Day 136 (16-05-2025)

    Scripture Portion: Psalm 3-4, 12-13,28,55 சங்கீதம் 3 (தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்) 1கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 2தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா). 3ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 4நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா). 5நான் படுத்து நித்திரை செய்தேன்;…

  • |

    Day 187 (06-07-2025)

    Scripture Portion: 2 kings 14, 2Chronicles 25 2 இராஜாக்கள் 14 1இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான். 2அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள். 3அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான். 4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *