|

Day 292 (19-10-2025)

Scripture Portion: Matthew 15, Mark 7

மத்தேயு 15

1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
2உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
5நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
6உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
7மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
9மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
10பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
21பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
22அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.
25அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
26அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

மாற்கு 7

1எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
2அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.
3ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.
4கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.
5அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும்,
7மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.
9பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.
10எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
11நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
12அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
13நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேகக் காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.
15மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்,
16கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
17அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
18அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
19அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.
20மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
24பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.
25அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
26அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
27இயேசு அவளை நோக்கி: முந்திப்பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
28அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
29அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
30அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
31மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
32அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
33அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
34வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
35உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
36அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,
37எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

Similar Posts

  • |

    Day 120 (30-04-2025)

    Scripture Portion: Psalm 102-104 சங்கீதம் 102 (துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி, கர்த்தரிடத்தில் தன் வியாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்) 1கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. 2என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். 3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. 4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்….

  • |

    Day 223 (11-08-2025)

    Scripture Portion: Jeremiah 14-17 எரேமியா 14 1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 2யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது. 3அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 4தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால்…

  • |

    Day 343 (09-12-2025)

    Scripture Portion: Romans 8-10 ரோமர் 8 1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5அன்றியும்…

  • |

    Day 219 (07-08-2025)

    Scripture Portion: Jeremiah 1-3 எரேமியா 1 1பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்: 2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. 3அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. 4கர்த்தருடைய வார்த்தை எனக்கு…

  • |

    விடுதலை – 6 Daniel M Ross விடுதலையின் அனுபவம்

    நாம் Daniel M Ross என்பவர் எப்படி Porn Addictionல் இருந்து வெளியே வந்தார் என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வியாழன் மதியம் 10 மாத குழந்தையின் அழுகையை control செய்ய திணறிய Daniel M Ross, தன் குடும்பத்தாரிடம் ஆத்திரமாக கத்தினார். ஆனால் அப்படி அவர் கோபப்பட்டதன் காரணம், 2 நாட்கள் முன்பு, செவ்வாய் அன்று அவர் பார்த்த ஆபாசபடம் என்பதை உணர்ந்தார். பொதுவாகவே அவர் ஆபாசபடம் பார்த்து முடிந்ததும், தனக்குள் ஒரு காற்று போல,…

  • |

    Day 242 (30-08-2025)

    Scripture Portion: Ezekiel 13-15 எசேக்கியேல் 13 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! 4இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள், 5நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *