Daniel M.Ross அனுபவம்
Porn Addiction என்பது, தனிமையில் நம்மோடு போராடும் சிங்கம். அதற்காக தேவனிடம் நாம் ஜெபிப்பதோடு நிறுத்தி விடாமல், நாமும் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என முதல் பதிவில் பார்த்தோம். பாஸ்டர்.விளாட் என்பவர், உக்ரைனில் பிறந்து, 12 வயதில் அமெரிக்காவுக்கு குடியேறி, டீன் ஏஜில் porn addictionல் சிக்கி, அதிலிருந்து வெளிவர போராடி, என்னவெல்லாம் செய்து மீண்டு வந்தார் என இரண்டாம் பதிவில் பார்த்தோம். Porn addictionல் சிக்கியவர்கள், திருமணத்துக்கு பிறகு அதிலிருந்து வெளிவந்து விடுவோம் என நினைப்பார்கள். ஆனால் அப்படி திருமணம் செய்வதன் காரணமாக pornல் இருந்து மீண்டு வர முடியாது என்பதை மூன்றாம் பதிவில் பார்த்தோம். Porn addictionல் நம் துணை சிக்கியிருந்தால், நாம் அவரை திருப்தி படுத்தவில்லை என்பது பொருளல்ல. நம்மால்தான் அவர் இந்த பாவத்தில் சிக்கி விட்டார் என்பதும் உண்மையல்ல. நம்மை சந்திப்பதற்கு முன்பாகவே அவர் ஆபாசபடம் என்னும் வாசலை பெரிதாக திறந்து வைத்து விட்டார் என்பதை நான்காம் பதிவில் பார்த்தோம்.
இந்த தலைப்பில் எழுத உந்தப்பட்ட பிறகு, எப்படி எழுதுவது என திகைத்து நின்றபோது, கர்த்தர் என்னை அருமையாக வழிநடத்தினார். கொரோனா விடுமுறையில் அமேசான் கிண்டிலில், இலவச புத்தகங்கள் டவுன்லொட் செய்து படித்தேன். அதில் அநேக கிறிஸ்தவ புத்தகங்களும் பதிவிறக்கம் செய்து வைத்தேன். மூன்று வருடங்களாக அந்த பக்கமே போகாத நான், இந்த தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது, தற்செயலாக அமேசான் கிண்டிலுக்கு சென்றேன். அதில் Quit Porn என்ற புத்தகத்தை ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருப்பதைப் பார்த்து திகைத்தேன். Daniel M.Ross என்பவர் தனது அனுபவத்தை அதில் பதிவிட்டிருந்தார். அதைப்பற்றி இரு பதிவுகளில் பார்க்கலாம். இந்த பாவத்தைப் பற்றிய ஒரு தெளிவு (understanding) நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவுகள்.
இந்த Daniel M.Ross என்பவர், Los Angels, Californiaவில் இருப்பவர். இவர் தன் வாழ்க்கையில், pornக்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் போராடி, எப்படி அதிலிருந்து வெளிவந்தார் என்பதை, ஒரு குட்டி புத்தகமாக எழுதி, முடிந்தவரையில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் அவருடைய வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
எந்த மனிதனாக இருந்தாலும், மன அழுத்தம் என்பதை நிச்சயமாக அனுபவித்திருப்பான். பள்ளி, கல்லூரி படிப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும். வேலை மன அழுத்தத்தைக் கொடுக்கும். திருமண வாழ்வு மன அழுத்தத்தைக் கொடுக்கும். இப்படி பல காரணங்கள் இருக்கும். அதிலிருந்து வெளிவர நாம் எதைக் கையிலெடுக்கிறோம் என்பது முக்கியம். Daniel M.Ross தனது மன அழுத்தத்திலிருந்து வெளிவர தெரிந்து கொண்டது, Porn வீடியோக்கள் பார்ப்பது.
Daniel M.Ross ஒரு எழுத்தாளர். அது ஒரு வியாழக்கிழமை. பொது நூலகத்துக்காக நிறைய காரியங்கள் எழுதவேண்டி இருந்தது. மதியம் 1 மணி. இப்போது எழுதலாம் என்று அவர் மனதில் நினைத்திருக்கும்போது, திடீரென அவரது 10 மாத பெண் குழந்தை வீறிட்டு அழுகிறாள். அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்ததால், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றார் Daniel M.Ross. ஆனால் குழந்தை அழுகிறது. அமைதிப்படுத்த தன்னால் ஆனமட்டும் முயன்றார். அது தோல்வியில் முடிந்தது. குழந்தை இன்னும் அதிகமாக கத்தவே, அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்பார்கள் என்று மீண்டும் வீட்டுக்குள் வந்தார். இப்போது வேகமாக வந்த மனைவி, அவர் கையிலிருந்து பிள்ளையைத் தூக்கினார். உடனடியாக பிள்ளையின் அழுகை நின்று விட்டது. இப்போது Daniel M.Rossக்கு சரியான கோபம். மிகவும் டென்ஷனாகி விட்டார். குழந்தை தன்னை அவமரியாதை செய்வதாக உணர்ந்தார். எனவே மனைவியிடம் கத்தினார். குடும்பத்திடம் கத்தினார். மிகவும் ஆத்திரமடைந்து விட்டார். அவர் தன் கட்டுப்பாட்டை இழந்தார். எழுதுவதற்கான மூட் அவருக்கு போய் விட்டது. அவரது வேலை அன்றைக்கு நடக்கவே இல்லை.
இதிலென்ன இருக்கிறது? எல்லாருடைய வீட்டிலும் இது நடக்கும் என சொல்கிறீர்களா? அது தவறு. இதன் பின்னாலிருப்பது ஒரு ஆவி என்கிறார் Daniel M.Ross. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. ஆனால் அவர் கதவை திறந்தது இரு நாட்களுக்கு முன்னர்.
செவ்வாய் மதியம், தனது காரில் அமர்ந்த Daniel M.Ross, வேலைப்பளுவால் வந்த மன அழுத்தத்தில் இருந்தார். அவர் எழுத வேண்டிய நேரத்தை மன அழுத்தம் எடுத்துக்கொண்டது. அவரால் எழுத முடியவில்லை. பணமில்லாமல் வெகு சோர்வாக இருக்கிறார். ஏறக்குறைய மிக பரிதாபமான சூழலில் இருக்கிறார். கடைசியில், அந்த செவ்வாய் மதியம், தனது காரில், சில வீடியோக்கள் பார்த்து, சுய இன்பம் செய்துள்ளார் Daniel M.Ross. இதைத்தான் தமிழில் சிற்றின்பம் என சொல்வர். மிக மிகச் சிறிய காலத்துக்கு மட்டுமே இன்பம் கொடுக்கும்.
Daniel M.Ross, எப்போதுமே வீடியோக்கள் பார்த்து, தனது விந்தை வெளியேற்றும்போது, ஒரு வித்தியாசமான உணர்வை அடைவாராம். அந்த உணர்வை விளக்கி சொல்வது கடினம் என்கிறார் Daniel M.Ross. அதாவது, அவர் விந்து வெளியேறியதும், ஒரு காற்று (evil force) அவருக்குள் நுழைவதை உணர்வாராம். ஒவ்வொரு முறையும் இந்த உணர்வு அவருக்கு வரும். கண்களுக்கு நடுவே நெற்றியில், ஒரு துளை வழியாக, ஒரு காற்று உள்ளே நுழைவதை அவரால் உணர முடியும் என்கிறார். நிச்சயமாக அப்போது தலைவலி எல்லாம் வராது. ஆனால் தனக்குள் ஒரு Force உள்நுழைவதை அவரால் உணர முடிந்தது. அதாவது, இப்போது அவர் அடைந்த சிற்றின்பத்தால், ஒரு கதவை திறந்தார் அல்லவா! அந்தக் கதவின் வழியாக, வெறும் இச்சையின் ஆவி மட்டுமல்ல, அதனோடு சேர்த்து பல ஆவிகள் உள்ளே நுழைந்தன.
எடுத்துக்காட்டாக, ஒரு மாலின்(mall) கதவை திறந்து வைத்தால், அதனுள்ளே, யாரெல்லாம் செல்வார்கள்? 100 ரூபாய் பொருள் வாங்குபவரும் செல்வார். லட்ச ரூபாய் பொருள் வாங்குபவரும் செல்வார். சும்மா சுற்றிப் பார்க்க போனவரும் செல்வார். அந்தக்கதவின் வழியாக அனைத்து தரப்பட்ட மக்களும் உள்ளே செல்லலாம் அல்லவா? இதே கதைதான் அசுத்த ஆவிகளுக்கும்.
நான் இச்சை என்ற பாவத்தை செய்து, ஒரு கதவைத் திறந்தால், அக்கதவின் வழியாக இச்சை, அசுத்தம், விபச்சாரம், காமவிகாரம், கோபம், வெறுப்பு, கசப்பு, எரிச்சல் என்று பல பிசாசுகள் உள்ளே நுழையலாம்.
செவ்வாய் மதியம் Daniel M.Ross ஆபாசபடம் பார்த்து, கதவைத் திறந்ததால், கோபம், எரிச்சல் போன்ற பிசாசுகள் உள்ளே வந்துவிட்டன. இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த அந்த பிசாசுகள், வியாழன் மதியம் செயல்படத் துவங்கி விட்டன. இந்த chain (சுழற்சி) அப்படியே நிற்காது. இச்சையின் மூலம் எப்படி கோபம் எரிச்சல் போன்ற பிசாசுகள் உள்ளே வந்ததோ, அதேபோன்று தற்போது கோபத்தின் மூலம் இன்னும் அனேக பிசாசுக்கு கதவைத் திறந்து விட்டார் Daniel M.Ross.
Then Jesus demanded, ‘What is your name?’ And he replied, ‘My name is Legion, because there are many of us inside this man.’ Mark 5:9
மாற்கு 5:9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான்.
இயேசு வாழ்ந்த காலத்தில், பிசாசு பிடித்திருந்த ஒரு மனிதனிடம் உன் பேர் என்ன என்று கேட்டார். அதற்கு அது “நாங்கள் அனேகராயிருக்கிறபடியால், எங்கள் பேர் லேகியோன் என்றது. ரோம படையில், லேகியோன் என்பது ஒரு படையினரின் பெயர். அதில் 6100 படைவீரர்களும் 726 குதிரை வீரர்களும் இருப்பர். அந்த மனிதனுக்குள் எத்தனை பிசாசுகள் இருந்தன என்பது துல்லியமாக தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட 6000 பிசாசுகள் உள்ளே இருந்தன. அந்த 6000ம் இப்படி ஏதோ கதவுகள் திறந்திருக்கும்போது உள்ளே நுழைந்தவை தான். இந்த சம்பவத்தை வாசிக்கும்போது, எப்படி 6000 பேய் ஒரு மனிதனுக்குள் இருக்க முடியும்? அவன் ஏதோ கொடூரமாக இருப்பான் போல என நான் நினைத்த நாட்களுண்டு. ஆனால் இதைக் கற்றுக் கொள்ளும்போது, சாதாரணமாக நமக்குள்ளேயே கோபம், எரிச்சல், பொறாமை, சோம்பேறித்தனம், பெருமை, வெறுப்பு, கசப்பு, மூர்க்கம் என எவ்வளவு அசுத்த ஆவிகள் இருக்கின்றன என நினைத்து பார்த்தேன்.
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
Tamil Easy Reading Version நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள அரசர்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம்.
எனவேதான் இயேசு, நம் போராட்டம் இந்த பூமியில் உள்ளவர்களோடு அல்ல. அது அசுத்த ஆவிகளோடு என கூறி இருக்கிறார். இந்த போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியும். ஏனெனில் இயேசு சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார். Daniel M.Ross என்ன செய்தார்? Pastor.Vlad மற்றும் Daniel M.Ross என்ன செய்தார்கள்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

Leave a Reply