Porn Addiction பற்றிய சில பதிவுகளைப் பார்த்தோம். இப்போது அதிலிருந்து வெளிவருவது எப்படி என்பதை ஒரு சில பதிவுகளில், பார்க்க இருக்கிறோம். அதனோடு முக்கியமான சில சத்தியங்களை பார்க்க இருக்கிறோம். “கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலை உண்டு” என்பதைப் போல, “சத்தியத்தையும் அறிவீர்கள்… சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற வசனமும் உள்ளது. சில சத்தியங்களை புரிந்து கொண்டால், இதிலிருந்து சுலபமாக வெளிவரலாம். கர்த்தர்தாமே நம்மை சரியான சத்தியத்துக்குள் நடத்துவாராக.
ஏற்கனவே இரு ஊழியர்களின் வாழ்க்கையைப் பார்த்தோம். அதிலிருந்து கற்றுக்கொண்ட சில காரியங்களை விரிவாகப் பார்க்கலாம்.
- நம்பத்தக்கவரிடம் சொல்லுங்கள்
நான் போய் சுலபமாக ஒருவரிடம் போய், என் விடுதலையைப்பற்றி சொல்லி விடுமளவுக்கு, Porn Addiction என்பது சாதாரண விஷயமல்ல. “ஒரு கொலை செய்து விட்டேன். என் சூழ்நிலை அப்படி செய்ய வைத்தது” என்று நான் சொல்லும்போது, என்னை ஈஸியாக ஏற்றுக்கொள்வார்கள். வீடுகளில் ஏற்பார்களோ, இல்லையோ, சமுதாயம் ஏற்கிறதோ இல்லையோ, ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு இடம் எனக்கென இருக்கும். இதே, நான் போய் மற்றவர்களிடம், “Porn addiction ஆகி விட்டேன். என் சூழ்நிலை அப்படி” என்று சொன்னால் போதும். சமுதாயத்தில் என்னை ஏற்றுக்கொண்டது போலத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கண்கள் எப்பொழுதும் என்னை சந்தேகமாகவே பார்க்கும். என்னிடம் குழந்தைகளை வர விட மாட்டார்கள். ஒருவேளை கொலை செய்வதை விட, Porn பார்ப்பது அவ்வளவு தவறோ?
“So, இப்படி இருக்கையில், நான் எப்படி ஒருவரிடம் போய் என்னை வெளிப்படுத்த முடியும்? நான் சொல்லி விட்டால், என்னை அற்பபுழுவைப் போல பார்ப்பார்களே” என யோசிக்கிறீர்களா? நிச்சயமாக உங்கள் எண்ணம் சரியே. வேதம் இதைப்பற்றி என்ன சொல்கிறது?
யாக்கோபு 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
Tamil Easy Reading Version நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும்.
வேதம் நம் தவறுகளை இன்னொருவரிடம் சொல்லி, ஜெபிக்க சொல்லி இருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். சும்மா பார்ப்பவர்களிடம் சொல்லி விடக்கூடாது. நாம் சொல்லுகிற நபர், நமக்காக பாரத்தோடு ஜெபிப்பவராக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர் புறம் பேசுபவராக இருந்துவிடக் கூடாது என்பது. நாம் சொல்லுவதை அப்படியே வெளியே சொல்பவராக இருந்தால், அவரிடம் சொல்வது நமக்குத்தான் பிரச்சனை.
ஒருவேளை, சபையின் போதகர் நல்ல Deliverance அபிஷேகம் உள்ளவராக இருந்தால், அவரிடம் சொல்லலாம். மற்றபடி, ரொம்பவே யோசித்து யாருடைய ஜெப உதவியைப் பெற வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். ஆன்லைனில் நிறைய ஊழியங்கள், ஜெப விண்ணப்பம், ஜெப லிங்க், மெயில் என பல வசதிகள் வைத்துள்ளனர். ஒருவேளை, அவர்கள் ஊழியத்தின் மூலம் தொடப்பட்டால், அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். நம்பிக்கையானவர்கள் தான் ஜெப பங்காளராக நிச்சயமாக தேவை.
- தேவையற்றதை அகற்றுங்கள்:
2 கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
Tamil Easy Reading Version எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.
நமக்கு விடுதலை தேவை என்றால், நாம் சில காரியங்களை செய்ய வேண்டும். நம்மை பாவத்தில் விழத்தள்ளக்கூடிய ஏதேனும் காரியங்கள் இருந்தால், அதை நாம் தான் அகற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக, Vlad தனது மொபைலில் Instagram Accountஐ டெலீட் செய்தார். Daniel M Ross தனது போனிலிருந்து Dating App, Chatsல் இருந்து வெளிவந்தார். நம்மை அடிமையாக்கும் விஷயம் என்ன என்பது, நம்மால் யோசிக்க முடியும். இன்று நமக்கு என்ன காரியம் உள்ளது என சிந்திப்போம். ஒரு வேளை, Apps, Movies, Music, Video Games, Books, Pictures, Social media Profiles என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, Facebook எடுத்துக்கொள்ளலாம். நாம் அதை ஓப்பன் செய்தவுடன், மேலே story என்று பலர் வைக்கும் போட்டோவைப் பார்க்கலாம். அதில் பலர் ஆபாசமாக கூட story வைப்பர். அதை கண்டுகொள்ளாமல் செல்வதை விட, அவர்கள் storyஐ, mute செய்து வைப்பது நல்லது. இப்போதைக்கு அந்த படங்களால் நாம் விழவில்லை என்றாலும், ஏதோ ஒருநாள் நம்மை தடுமாற வைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, தேவையற்ற செயலிகள் இருந்தால் uninstall செய்யுங்கள். தேவையற்ற பாடங்கள், வீடியோக்கள், பாடல்களை டெலீட் செய்யுங்கள். எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்து, நம்மிடம் உள்ள தேவையற்றவைகளை அகற்ற வேண்டும். அது பிற்காலத்தில் நமக்கு கண்ணியாக இருக்கலாம்.
- மனநிலையில் புதுமை
முதலில் நமக்கான ஜெப பங்காளரை ஞானமாக தெரிந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக, நம்மிடம் என்ன தேவையற்ற காரியங்கள் இருக்கின்றனோ, அதை டெலீட் செய்ய வேண்டும். இப்போது மூன்றாவது, ஆனால் மிகவும் முக்கியமானது, நம் மனநிலையில் புதுமையைக் கொண்டு வர வேண்டும்.
2 கொரிந்தியர் 10:5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
Thiru Viviliam கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம்.
We destroy every proud obstacle that keeps people from knowing God. We capture their rebellious thoughts and teach them to obey Christ.
மனதின் எண்ணங்களை, கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பொதுவாக உலகப்பிரகாரமாக சில காரியங்கள் சொல்வார்கள். நீ ஒரு காரியத்தை நினைத்துக்கொண்டு அதை focus செய்தால், அதைப் பெற்றுக் கொள்வாய் என்று. ஆம், அது சரிதான். ஆனால் சில சமயங்களில், நமது focus, சாத்தான் கூறும் பொய்களுக்கு நேராக சென்றுவிடுகிறது.
Porn பார்க்க கூடாது என நினைக்கிறோம். ஆனால், நம்மைக் கட்டுப்படுத்த முடியாமல், பார்த்து விடுகிறோம். தவறு செய்து விட்டோம். அந்த கொஞ்ச நேரம் நமக்கு கிடைத்த இன்பம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அந்த பாவம் செய்து முடித்த பின்னர் நமக்குள் வரும் குற்ற உணர்ச்சிக்கு என்ன சொல்வது?
கண்டிப்பாக எல்லாருக்குள்ளும் பாவம் செய்து முடித்த பின்னர், இந்த எண்ணம் வரத்தான் செய்யும், “ஐயோ, நான் பாவம் செய்கிறேன். என்னால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. இனி நான் எப்படி வெளியே வருவது? ஆண்டவர் என்னை மன்னிப்பாரா? இனி நான் ஆலய காரியத்தில் எப்படி பங்கு பெறுவது? நான் போய், ஆலயத்தில் communion எடுக்க முடியுமா? அபாத்திரமாய் எடுத்தால், செத்து போயிடுவேனே…” இப்படி பல எண்ணங்கள் நமக்குள் வரும். இதன் பெயர் குற்ற மனசாட்சி (condemnation). ஆனால் என்ன தெரியுமா? இதற்கு இன்னொரு பெயர் தான் “சாத்தான் சொல்லும் பொய்கள்”.
குற்ற மனசாட்சி அல்லது குற்ற உணர்ச்சி இவை எல்லாமே சாத்தான் சொல்லும் பொய் என்றால், நான் தவறாக சொல்கிறேன். உண்மையில் குற்ற உணர்வு நல்லது. “நான் என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேன்” என உள்ளத்தில் குத்தப்பட்டால், அது நல்லது. அதுதான் என் மனந்திரும்புதலின் ஆரம்ப புள்ளியாக இருக்கும். ஆனால் அதற்காக, “தேவன் என்னைக் கைவிட்டு விடுவார்… எனக்கும் தேவனுக்கும் இடையில் பெரிய இடைவெளி வந்து விட்டது… நான் பாவம் செய்ததால் தேவன் என்னைக் தண்டிக்க போகிறார்” இப்படியெல்லாம் நமக்குள் தோன்றினால், அது சாத்தான் சொல்லும் பொய் தான்.
ஒன்றை யோசிக்கலாமா? எதற்காக பரலோகம் போக வேண்டும் என யோசியுங்கள்…. நம்மில் அநேகருக்கு தோன்றக்கூடிய ஒன்று, “நரகம் பற்றிய பயம். பாவம் செய்தால் நரகம், so நான் பாவம் செய்யாமலிருந்து பரலோகத்துக்கு போய் விடுகிறேன்.” ஒருவேளை உங்களுக்கு இப்படி தோன்றாமலிருக்கலாம். ஆனால் நான் நிறைய நாட்கள் நினைத்தது உண்டு. “நரகத்தில் அக்கினியில் இருக்க வேண்டும்… புழு பாம்பு இருக்கும்… சாத்தான் நம்மை வேதனைப் படுத்துவான். அதற்கு பதிலாக பூமியில் நல்ல வாழ்க்கை வாழ்ந்து பரலோகத்துக்கு போய் விடலாம். பரலோகத்தில் அழுகை இருக்காது. சந்தோஷம் மட்டும்தான் இருக்கும். நிம்மதியாக இருக்கலாம்” இப்படித்தான் நினைத்தேன்.
ஆனால், என் டீன் வயதில், நான் ஒருநாளும் நினைத்தது இல்லை, “பரலோகத்தில் என் தேவனோடு இருக்கப் போகிறேன். அவர் முகத்தைப் பார்க்கப் போகிறேன். என் மகளே என என்னை அவர் அழைக்கப் போகிறார். என்னை நேசித்தவரை பார்க்க போகிறேன். எனக்காக, என் பாவத்துக்காக உயிரைக் கொடுத்தவரை பார்க்கப் போகிறேன்” இதெல்லாம் என் சிந்தையில் வந்தது இல்லை.
உண்மையில் நம் தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நாம் சொன்னாலும், நாம் அதை உணர்ந்தாலும், அவர் மீது நாம் அவ்வளவு காதல் வைத்திருக்கிறோமா என கேட்டால், சந்தேகமே. “பிசாசுக்காக உருவாக்கப்பட்ட நரகம்” என இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால் நாமோ, நரகத்தில், பிசாசு நம்மை தண்டிப்பான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு பேதைகள் அல்லவா நாம்! நமது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதாவது நம் Mind setஐ மாற்ற வேண்டும்.
“நீ ஒரு பாவி. ஒரு முறை, இரு முறை அல்ல… பலமுறை தவறி விட்டாய். உனக்கு மன்னிப்பே கிடையாது” என்ற எண்ணம் நம் மனதில் வந்தால், என் mindset தவறாக இருக்கிறது, நான் சாத்தானின் பொய்களை நம்பிக்கொண்டு இருக்கிறேன். சரி, என் mindsetஐ நான் எப்படி மாற்ற வேண்டும்?
பிசாசுக்கு வல்லமை இருக்கிறதா? தேவனுக்கு வல்லமை இருக்கிறதா? தேவன் பெரியவரா? பிசாசு பெரியவனா? அடிக்கடி இதை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ரோமர் 6ம் அதிகாரத்தை தனியே அமர்ந்து நன்றாக வாசியுங்கள். கர்த்தருடைய வெளிச்சம் கிடைக்கும். கர்த்தர் ஏன் நியாயப்பிரமாணம் கொடுத்தார். நியாயப்பிரமாணத்தில், 10 கற்பனைகளும், 613 கட்டளைகளும் உள்ளன. இதெல்லாம் பாவம் என நியாயப்பிரமாணத்தில் தேவன் எழுதிக் கொடுத்தார். சரி, இஸ்ரேலுக்கு இதெல்லாம் பாவம் என்பது நியாயப்பிரமாணம் பார்த்து தெரியும் என வைத்துக்கொள்வோம். அந்த வேத காலத்தில் வாழ்ந்த இந்தியனுக்கு நியாயப்பிரமாணம் தெரியாதே… ஆனால் அவனுக்கு எப்படி இதெல்லாம் பாவம் என்பது தெரிந்தது? ஒவ்வொருவரின் மனசாட்சியே, இது பாவம்… இது பாவமல்ல என்பதைக் கூறியது. அப்படியானால் இஸ்ரேலுக்கு மட்டும் தேவன் ஏன் இதெல்லாம் பாவம் என பெரிய லிஸ்ட் கொடுத்தார்?
ஒரு கூட்ட ஜனத்தை பிரித்தெடுத்து, அவர்கள் மூலம் உலகை இரட்சிக்க விரும்பினார் தேவன். அதனால்தான் இஸ்ரேலுக்கு, இதெல்லாம் பாவம். பாவம் செய்தவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டு என்று சொன்னதும் அல்லாமல், இந்த பலிகளின் மூலம் பாவத்தை நிவிர்த்தி செய்யலாம் என்றும் சொன்னார். நாம் ஏற்கனவே பண்டிகைகள் பற்றிய பதிவில், பலிகளை நன்றாகவே பார்த்து விட்டோம். So, இஸ்ரவேலருக்கு, பாவம் செய்தால் பலி செலுத்தி, தேவனோடு ஒப்புரவாகி, நித்திய ஜீவனைப் பெற முடியும் என்று கூறினார்.
இன்று நமக்கு, இயேசுவே நமக்கான பலியாக மாறி, உன் பாவம் மன்னிக்கப்பட்டது என்று சொல்லி விட்டார். நான் இன்று கொலை செய்திருந்தாலும், தேவன் 2000 வருடம் முன்னேயே அதை சிலுவையில் சுமந்து விட்டார். நான் porn addicted, mobile addicted, game addicted, social media addicted இப்படி என்ன பாவம் செய்தாலும், 2000 வருடத்துக்கு முன்பே, அவர் அதை சுமந்து என்னை மன்னித்து விட்டார். என் பொய், பெருமை, மேட்டிமை எல்லாவற்றையும் அவர் சுமந்து விட்டார்.
இப்போது பிரச்சனை என்ன தெரியுமா? வேத காலத்தில், இஸ்ரவேலன், குற்ற நிவாரண பலி செலுத்தி, தன் பாவம் மன்னிக்கப்பட்டது என அந்த பரிகாரத்தை ஏற்றுக்கொண்டான். ஆனால் இன்று நானோ, “எனக்கான பரிகாரம் 2000 வருடம் முன்னேயே செலுத்தப்பட்டு விட்டது” என்பதை அறிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறேன். என்னைப் பார்த்து ஒருவர், “நீ ஒரு பாவி, தேவன் உன்னை நேசிக்கிறார்” என்று கூறினால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் ஒருவர் என்னிடம் வந்து, “நீ ஒரு நீதிமான்” எனக்கூறினால், நான் அவரை கள்ள ஊழியராக்கி விடுவேன். இதுதான் நம் தவறான mindset.
இப்போது ஒரு குழப்பம் வரலாம். “அவர் 2000 வருடம் முன்பே, என் பாவத்தை மன்னித்தால், நான் ஏன் இன்னும் பாவம் செய்கிறேன்? பாவத்தின் வல்லமையை என்னால் உணர முடிகிறதே. பாவத்துக்கு இன்றும் வல்லமை இருக்கிறது” என்று யோசிக்கிறீர்களா?
“(அவருடன்) மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப் பட்டிருக்கிறானே”
“For one who has died has been set free from sin” ரோமர் 6-7
பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு இருக்கிறான் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். இப்போ நான் பாவத்திலிருந்து free ஆகிவிட்டேன். பாவத்துக்கு அடிமை கிடையாது என்றால்,இனி பாவம் செய்ய மாட்டேன் என்பது அர்த்தமல்ல. அப்படி என்றால், “நான் பாவம் செய்யனும்னா செய்யலாம், செய்யக்கூடாதுனு நினைத்தால் செய்யாமல் இருக்கலாம். Choice என்கிட்ட இருக்குது.” இதுதான் அந்த வசனத்தின் அர்த்தம். ஆம், தேர்ந்தெடுப்பது என்னிடம் தான் இருக்கிறது. இதைப்பற்றி இன்னும் ஆழமாக வரும் பதிவுகளில் பார்க்கலாம். நான் பாவம் செய்வதால், தேவனுக்கு தூரமானவன் அல்ல என்பதை மனதில் வையுங்கள். நான் தப்பு செய்தாலும், செய்யா விட்டாலும் நான் அவருடைய பிள்ளை தான். இதை மட்டும் மனதில் வையுங்கள். தொடர்ந்து ஆவியானவரின் உதவியோடு தியானிப்போம்.
Leave a Reply