எனக்கு விடுதலை தேவை… Accept it

Porn Addictionல் இருந்து வெளிவருவதைப் பற்றி பார்த்துக்கொண்டிருந்தோம். முதலாவது, நம்பிக்கையான ஜெப-பங்காளர் இருந்தால், அவரோடு இணைந்து ஜெபிக்கலாம். இரண்டாவதாக, நம்மை தவற வைக்கும் காரணிகள் (போட்டோ, வீடியோ, movies, social media….) எது என கண்டறிந்து, அதை அகற்ற வேண்டும். மூன்றாவதாக, நம் மனநிலையில் மாற்றம் வேண்டும்.பாவம் செய்தபின்பு, நம் மனசாட்சியில் குத்தப்பட்டு விடுதலைக்காக ஏங்கினால் அது நல்லது. ஆனால் குற்ற மனசாட்சியில் உழன்று, சாத்தான் சொல்லும் பொய்களை நம்பக்கூடாது. (நான் பாவம் செய்து விட்டேன்… இனி மன்னிப்பே கிடையாது. எனக்கும் தேவனுக்கும் இடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது போன்ற இப்படிப்பட்ட பொய்களை நம்பவே கூடாது) இன்னும் ஆழமாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இன்றைக்கு நான்காவது காரியம், எனக்கு விடுதலை தேவை என்பதை நான் accept செய்ய வேண்டும். சில நேரங்களில், சிலர் நினைப்பார்கள், “நான் pornக்கு அடிமை எல்லாம் கிடையாது. சும்மா பார்க்கிறேன். அவ்வளவுதான். நான் யாரையும் துன்பப்படுத்துவதில்லை. நான் ஒன்றும் காமக்கொடூரன் இல்லை. பெரிய தவறு எதுவும் செய்யவில்லை” என்று தன்னையே ஏமாற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலர், “நான் வருடத்துக்கு ஒருமுறை பார்க்கிறேன். அதுவும் பாவம் செய்து முடித்தவுடனேயே ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். அவ்வளவுதான். எத்தனை வாலிபரின் விடுதலைக்காக நான் ஜெபிக்கிறேன் தெரியுமா?” என கூறுவார்கள். அன்பு சகோதரனே, சகோதரியே இது உங்களுக்குத் தான். முதலில் உங்களுக்கு ஒரு விடுதலை தேவை என்பதை உணருங்கள். உங்களிடம் இருந்து அந்த அசுத்த ஆவியை துரத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை உணருங்கள்.

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது? அதாவது, மொபைலில் அல்லது டிவியில், ஏதேனும் ஒரு பாடல், அல்லது ஆராதனை நடக்கும்போது, தேவ பிரசன்னத்தை உணர்ந்து இருக்கிறீர்களா? எடுத்துக்காட்டாக, “ஜெபிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம். எத்தனையோ அற்புதங்கள் அங்கு நடைபெறுகிறது. ஆனால் எங்கேயும் ஊழியர் நேரடியாகச் செல்லவில்லை. ஆன்லைனில் அற்புதம் நடக்கிறது. இதேபோல, நம் ஒவ்வொருவருக்கும் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சில பாடல், அல்லது ஜெபங்களில், தேவ பிரசன்னத்தை உணரக்கூடிய அனுபவம் வந்திருக்கும். அது எப்படி அந்த ஊழியரின் சுகமாக்கும் அபிஷேகம் நம் வீடு வரை வருகிறது? ஒரு டிவியின் மூலமாக, அந்த அபிஷேகம் நம் வீட்டினுள் வர முடியுமா? இல்லை என நம் யாராலும் மறுக்க முடியாது. நாம் எல்லாருமே அதை உணர்ந்திருப்போம். இன்னும் சொல்லப்போனால், நாம் தான் ஆன்லைன் ஆராதனையை ஸ்டார்ட் செய்துவைத்த சந்ததி. நம்மால் மறுக்கவே முடியாது.

இப்போது டிவி சீரியல் அல்லது, movies எடுத்துக்கொள்ளலாம். அந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் முன்பே, ஒரு பூஜை பண்ணுவார்கள், இந்த படம் 100 நாட்கள் ஓட வேண்டும், அல்லது இந்த சீரியல் மெகா சீரியலாக ஓட வேண்டுமென. அவர்கள் பூஜை பண்ணும்போது, அந்த படத்துக்கு பின்னால் சில அசுத்த ஆவிகள் செயல்பட துவங்கும். எப்போது, நம் வீட்டில் அந்த சீரியல் உள்ளே நுழைகிறதோ, அப்போது அந்த அசுத்த ஆவிகளின் செயல்பாடும் ஆரம்பிக்கும். ஒரு டிவியின் மூலம் ஒரு ஊழியரின் அபிஷேகம் எப்படி கடத்தப்படுகிறதோ, அப்படித்தான் டிவியின் மூலம், அசுத்த ஆவியின் வல்லமையும் உள்ளே வர முடியும். இதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா உங்களால்?

இப்போது அடுத்த விஷயம் பேசலாம். ஒரு சீரியலின் மூலம் அசுத்த ஆவியால் உள்ளே நுழைய முடியும் என்றால், ஆபாச படத்தின் மூலமாகவும் சில ஆவிகளால் உள்ளே நுழைய முடியுமல்லவா! இச்சை, அசுத்தம், காமவிகாரம், வேசித்தன ஆவி, விபச்சார ஆவி என அத்தனை ஆவிகளும், ஒரு சிறிய வீடியோ மூலமாக, நமக்குள் வர முடியும். நாம் எதையும் உணராமல், ஒரு ஐந்து நிமிடம் தவறியதன் விளைவு, நமக்குள், நம்மை அறியாமலேயே அத்தனை அசுத்தங்களையும் உள்ளே விட்டு விடுவோம்.

நீதிமொழிகள் 5:22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

Tamil Easy Reading Version கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும்.

ஒருவனுக்கு விடுதலை தேவை என்றால், முதலாவது பாவக்கட்டிலிருந்து அவன் விடுதலை பெற வேண்டும். பாவக்கட்டு பயங்கரமானது. அசுத்த ஆவிகள் நம்மைக் கட்டி வைத்து விடும். நாம் செய்யும் பாவங்கள், நம் குடும்பத்தையும் பாதிக்கும் வல்லமை உடையது. நாம் மறைவாய் செய்யும் ஒவ்வொரு பாவமும், நம் முழு குடும்பத்தையும் தாக்கும் வல்லமை உடையது.

இரண்டு உண்மைச் சம்பவங்களை பகிர விரும்புகிறேன். ஒரு சகோதரி, ஆவிக்குரிய சபைக்கு செல்லும் வாலிப சகோதரி. இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்ற சகோதரி. அவளுக்கு திடீரென மார்பக புற்றுநோய். அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “ஏன் எனக்கு இப்படி?” என அழுதாள். அவளது சபையின் பாஸ்டர் வந்து ஜெபித்தார். அவர் விடுவிக்கும் அபிஷேகம் பெற்றவர் என்பதால், அவர் ஜெபிக்கும்போது, உள்ளிருந்த அசுத்தஆவி பேசத்தொடங்கியதாம். “இவள் வெளிப்புறம் மட்டுமே பரிசுத்தமாக இருப்பாள். உள்ளே அசுத்தம் தான் இருக்கிறது. தினமும் இரவு, ஆபாச படங்களைப் பார்க்காமல், இவளால் தூங்க முடியாது. இவள் அதைப் பார்க்கும்போது, நான் அவள் கண்கள் வழியே உள்நுழைந்து, கேன்சரைக் கொடுத்து விட்டேன்” என்றதாம். பின்னர் ஜெபித்து, சகோதரி விடுதலையைப் பெற்றுக்கொண்டாள். பாருங்கள், அந்த அசுத்த ஆவி, பாவக்கட்டில் மகளைக் கட்டி, அதன் மூலம் நோயையும் கொடுத்து, அவள் ஜீவனை திருடப் பார்த்தது.

ஒரு பாஸ்டர் வல்லமையாக ஊழியம் செய்கிறார். திடீரென அவர் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. எவ்வளவோ மருந்துகள் எடுத்தும், நாளுக்கு நாள் நிலமை மோசமாகத்தான் போனது. பாஸ்டரின் மகனுடைய லேப்டாப்பில் பிரச்சனை என்று, ஒரு விசுவாசி அதை சரிசெய்ய முயன்றபோது, உள்ளே அவ்வளவு ஆபாசபாடங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாராம். அதன் பின்னர், பாஸ்டர் தன் மகனிடம் பேசி, அவன் தன்னால் விட முடியவில்லை என்று கதறி அழ, அவனுடைய விடுதலைக்காக ஜெபித்து இருக்கிறார். அதன்பின், அவன் தன் லேப்டாப்பிலுள்ள அத்தனை ஆபாச படங்களையும் டெலீட் செய்யவும், அடுத்த சில நாட்களில், பாஸ்டரின் மனைவி சரியாகி விட்டாராம். அந்த மகனுடைய பாவம், அவனுக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கே கட்டாக மாறி விட்டது.

இங்கு கவனியுங்கள். முதல் சம்பவத்தின் சகோதரி, இரண்டாவது சம்பவத்தின் சகோதரன், இருவருமே இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றவர்கள். சத்துருவால் யாரை வேண்டுமானாலும், பாவத்தில் விழ வைக்க முடியும். நம் தேவனால், எப்பேற்பட்ட பாவத்தில் இருப்பவரானாலும், சுத்திகரிக்க முடியும்.

“நான் ஏதோ ஆர்வத்தில் ஒரு நாள் பார்த்தேன். அவ்வளவுதான். ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நான் விடுதலை பெற்று விட்டேன்” என நீங்கள் கூறினால், நல்லது. உங்கள் விசுவாசம் உண்மையிலேயே, அசுத்த ஆவிகளை துரத்தி விட்டிருக்கும். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. ஒருவேளை, அந்த ஆவிகள், நமக்குள் இருந்து கொண்டு, சில மாதங்கள் செயல்படாமலிருந்து, சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது என்ன செய்வது?

மிக மிக சுலபமானதுதான். எனக்கு விடுதலை தேவை என்பதை accept செய்து, இயேசு என்ற பெயரைக்கொண்டு, அவர் நமக்கு கொடுத்த அதிகாரத்தில், அந்த ஆவிகளை துரத்திவிடலாம். வேதம் என்ன சொல்கிறது?

யோவான் 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன்.

நான் ஆபாச படங்களுக்கு, ஆபாச கதைகளுக்கு அடிமையாக இருந்தால், எனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என வேதம் சொல்கிறது. அதன் அர்த்தம், “நான் முழுமையாக வேறொருவனுடைய controlல் இருக்கிறேன். நான் என்ன பார்க்க வேண்டுமென அவன் தீர்மானிக்கிறான். என்ன வாசிக்க வேண்டுமென அவன் தீர்மானிக்கிறான். என் நேரத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென அவன் தீர்மானிக்கிறான்” ஆனால், நல்ல செய்தி என்ன என்றால், அந்த எதிராளியிடமிருந்து தப்பும் நேரம் வந்துவிட்டது. “ஆம்… ஆவிகளின் பிடியில் சிக்கி அடிமையாக இருக்கிறேன்தான். ஆனால் எனக்கு ஒரு விடுதலை உண்டு. என் நம்பிக்கை இயேசு. எனக்கு விடுதலையை தர அவர் காத்துக்கொண்டு இருக்கிறார். இப்போதே என் விடுதலையை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” இதை மனதில் பதிய வையுங்கள். கர்த்தர் பூரண விடுதலை தருவார்.

நீங்கள் தொடர்ந்து சிந்திக்க ஒரு பகுதி:

பவுலின் பிரசங்கங்கள் கிருபை பற்றி அதிகமாக இருக்கும். அதுவும் ரோமர் நிருபத்தை மீண்டும் மீண்டும் வாசித்தால், நியாயப்பிரமாணம், கிருபை பற்றி அதிகமாக புரிந்து கொள்ளலாம். பாவத்துக்கான பலி இயேசு. ஒரு மனுஷனுடைய (ஆதாம்) மீறுதலால், பாவம் உலகத்துக்கு வந்தது… ஒரு மனுஷனுடைய (இயேசு) கீழ்ப்படிதலால், அனேகர் நீதிமானாக்கப்பட்டோம்… இப்படி பல சத்தியங்கள் கூறியிருப்பார்.

ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இப்போது பேதுரு என்ன கூறியிருக்கிறார் பார்க்கலாம்,

20.கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

21.அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

2பேதுரு 2

யோவான் அப்போஸ்தலர் என்ன கூறியிருக்கிறார்,

8.பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

9.தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்

1 யோவான் 3

பாவத்துக்கான பரிகாரம் 2000 வருடங்களுக்கு முன்பேயே இயேசு செய்து விட்டார். அதை accept செய்ய வேண்டும். இது உண்மைதான். ஆனால், அதற்காக, அதை granted ஆக எடுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் துணிகரமாக பாவம் செய்யக்கூடாது. சத்தியத்தை அறிந்த பின்னர், துணிகரமாக பாவம் செய்யக்கூடாது. பேதுரு, யோவான் சொல்லிய வசனங்களை தியானியுங்கள். மேலும் பார்க்கலாம் தொடர்ச்சியான பதிவுகளில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *