தாவீது – பத்சேபாள்
சவுலுக்கு அடுத்து அரசாண்ட தாவீதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நிறைய பேருக்கு, தாவீது என்றாலே நினைவுக்கு வருவது, பத்சேபாள் தான். முதலாவது, இன்று பத்சேபாள் பற்றி பார்த்து விட்டு, பின்னர் தாவீதைப் பற்றி படிக்கலாம்.
வேதத்தில் 1 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது. பொதுவாக, மக்களாட்சி என்றால், பிரதமர் அவர் இடத்திலிருக்க, வீரர்கள் போருக்கு செல்வார்கள். தாவீது செய்ததுஅரசாட்சி. யுத்தத்துக்கு அரசன் செல்ல வேண்டும். ஆனால் தாவீதோ, மற்றவர்களை யுத்தத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, சாயங்காலம் வரை படுத்து தூங்கி, பின்னர் உப்பரிகையில் சும்மா உலாவிக்கொண்டு இருக்கிறார்.
சாயங்கால நேரத்தில், பத்சேபாள் குளித்துக்கொண்டு இருக்கிறாள். ஏன் வீட்டில் குளிக்காமல் வெளியே குளிக்க வர வேண்டும்? என்று அனேகர் சொல்வார்கள். இது ஒரு குளிக்கும் சடங்கு. லேவியராகமம் 15ம் அதிகாரத்தை வாசித்தால், ஒரு பெண்ணுக்கு, மாதவிடாய் வந்தால், அது முடிந்த பிறகு, 7 நாட்கள் அவள் விலகியிருக்க வேண்டும் எனவும், ஏழாவது நாள் அந்த குளத்துக்கு சென்று தன் வஸ்திரங்களை தோய்த்து, தண்ணீரில் முழுகி எந்திரிக்க வேண்டும். இது யூதர்களுடைய சடங்கு. இன்னும் சொல்லப்போனால், மோசேக்கு கொடுத்த நியாயப்பிரமாணம் இது. குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு குழந்தை பெற்றவர்களுக்கு, மருத்துவர்கள் சொல்வது, “பீரியட்ஸ் வந்த முதல் நாளிலிருந்து கணக்கிட்டு, 12 முதல் 18 நாளுக்குள் இணைந்தால், கரு உருவாகும் வாய்ப்பு அதிகம்”. அதே அறிவியல்தான் தேவனும் யூதர்களுக்கு கொடுத்தார். வேத காலத்தில், பீரியட்ஸ் முடிந்து பின்னர் 7 நாட்கள் கழித்து, அவர்கள் குளத்தில் மூழ்கி தங்களை சுத்திகரிக்க வேண்டும். ஒருவேளை அதற்கு பின்னர் அவர்கள் இணைந்தால் கரு உருவாகும் வாய்ப்பு அதிகம்.
பத்சேபாள் அங்கே குளிக்க வந்த காரணமும் அதுதான். அவளும் கூட தன் சுத்திகரிப்புக்காக அங்கே வந்திருந்தார். ஆனால் தாவீது அவளை பார்த்ததும் யார் என்று கேட்கிறார்.
2 சாமுவேல் 11:3 அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.
Tamil Easy Reading Version உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் மகளாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.
தாவீதுக்கு அவள் கணவரின் பெயரும், அப்பாவின் பெயரும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தாவீது அவளை அழைத்து அனுப்பி, அவளோடு சயனித்தார். இஸ்ரவேலில், எத்தனையோ போர் வீரர்கள் இருப்பார்கள். தாவீதுக்கு, ஒவ்வொருவரையும் எப்படி தெரியும்? எனவே உரியாவையும் அறிந்திருக்க அவசியமில்லை என்று நினைத்துக்கொள்வோம். உண்மையில் பத்சேபாளின் குடும்பத்தை தாவீது அறிந்திருந்தாரா?
தாவீதின் ஆரம்ப காலத்தில், 1 சாமுவேல் 22ம் அதிகாரத்தில், தாவீது சவுலுக்கு பயந்து அதுல்லாம் என்னும் குகையில் ஒளிந்து இருக்கிறார். அப்போது, கடன் வாங்கி ஓடி வந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று, ஒரு 400 பேர் தாவீதினிடம் வந்து, அவனை தலைவன் ஆக்கினார்கள். தாவீதுக்கு இருந்து பராக்கிரம சாலிகள் என்று 2 சாமுவேல் 23ம் அதிகாரத்தில் 37பேரின் பெயர்கள் இருக்கிறது. இவர்கள் அதுல்லாம் குகையில் தாவீதோடிருந்தவர்கள். தாவீதின் கஷ்டத்திலும், இன்பத்திலும் கூட இருந்தவர்கள். அவர்கள் மூலம்தான் தாவீது பெரிய அரசாங்கம் ஸ்தாபித்தார்.
34.மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.
35.ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.
2 சாமுவேல் 23
12.அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
2 சாமுவேல் 15 – 12
மேற்கண்ட வசனத்தில் படித்தால், தாவீதின் வெற்றிக்கு துணை நின்ற, 37 பராக்கிரம சாலிகளில் தான், பத்சேபாளின் அப்பா எலியாம் இருக்கிறார், அதோடு பத்சேபாளின் கணவருமாகிய ஏத்தியனாகிய உரியாவும் இருக்கிறார். ஆக, பத்சேபாளின் குடும்பம் என்பது, தாவீதுக்காக உயிரைக் கொடுக்க தயங்காதவர்கள். அதோடு பத்சேபாளின் தாத்தா(எலியாமின் அப்பா) தாவீதுக்கு ஆலோசனை சொல்பவர். அப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்று தெரிந்துகொண்டாலும், அதற்கு பின்னரும் அவளை அழைத்தனுப்பி, அவளோடு சயனிக்கிறார். அப்படி பார்த்தால், தாவீது நன்றி மறந்தவர் ஆகிவிட்டார்.
சவுலின் மகளையும் சேர்த்தால், பத்சேபாளுக்கு முன்பாகவே தாவீதுக்கு 7 மனைவிகள்(2 சாமுவேல் 3: 2-5) மற்றும் 10 மறுமனையாட்டிகள்(2 சாமு 15-16). அத்தனை பேர் இருந்தாலும், தாவீது ஒரு சாதாரண பெண் வாழ்வில் நுழைந்து, அவள் கணவனைக் கொன்று, மிகப்பெரிய பாவம் செய்து விட்டார். அதனால்தான் கர்த்தருக்கு இந்த விசயத்தில் தாவீதின் மீது வருத்தம்.
I இராஜாக்கள் 15:5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
பத்சேபாளின் பக்கம்:
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினாள்
தனக்கு மாதவிடாய் முடிந்ததும், தன்னை சுத்திகரிக்க, குளிக்க சென்றிருந்தாள் பத்சேபாள். சடங்குகளை சரியாக நிறைவேற்றுபவளாய் இருந்திருக்கிறாள். சிலர், பத்சேபாளை ஏதோ வேசித்தனம் செய்ததுபோல பேசுவார்கள். ஆனால், பத்சேபாள் குளிக்க சென்றது, சடங்கு நிறைவேற்ற மட்டுமே. பத்சேபாள், தாவீது அழைக்கும்போது, ‘வர முடியாது’ என்று சொல்ல முடியாது. எனவே தான் வந்தாள். உண்மையில் தாவீது தான் அவளைக் கற்பழித்தார்.
கணவனின் மரணம்
தான் கர்ப்பமாகி விட்டதே, பத்சேபாளுக்கு மிகப்பெரிய சோதனை. அதே வேளையில், அடுத்த சோதனையாக, கணவனின் மரண செய்தி வருகிறது. தன் கணவன் இறந்து விட்டான். அதிலேயே மனம் நொறுங்கி போயிருப்பாள். அதற்கு காரணம் தாவீதுதான் என்பது, பத்சேபாளுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது வேறு வழி இல்லை. தாவீது அழைக்கும்போது, எட்டாவது மனைவியாக போனாள்.
பிள்ளையின் மரணம்
கணவன் மரணத்திலிருந்து வெளியே வந்தால், அடுத்த தண்டனை பிள்ளை மரணம். வேதத்தில் தாவீது அந்த பிள்ளைக்காக உபவாசித்து ஜெபித்தது உள்ளது. அதே நேரம், பிள்ளையின் தாய்க்கு அது எவ்வளவு மன வேதனையாக இருந்திருக்கும்? பாவம் செய்த தாவீதுக்கு அது தண்டனை, ஆனால் பத்சேபாளுக்கு அது தோல்வி அல்லவா! பத்சேபாளின் சூழ்நிலையை யோசிக்கலாம். எப்ரோனில் 7 வருஷமும், மொத்த இஸ்ரேலில் 33 வருஷமும் ஆக, 40 வருசம் அரசனாக இருந்தார் தாவீது. பத்சேபாளை திருமணம் செய்யும் முன்பே, 6 மனைவிகள், அவர்கள் மூலம் 6 ராஜ குமாரர்கள்(2 சாமுவேல் 3: 2-5). அம்னோன், அப்சலோம், அதோனியா என்பவர்களைப் பற்றி வேதத்தில் படிப்போம். இத்தனை பேர் இருக்கும்போது, தாவீது பத்சேபாளை கூட்டி வருவது, அவர் மனைவிகளுக்கு, ராஜகுமாரர்களுக்கு பிடிக்காது. அதோடு பத்சேபாளின் குழந்தை இறந்ததும், அவளை வருத்தப்படுத்தி பேசியிருப்பர். எல்லா ஏளனங்களையும் தாங்கியவள் தான் பத்சேபாள்.
கர்த்தர் கொடுத்த பரிசு
அரசராகும் பிள்ளை
தேவன் பத்சேபாளுக்கு கொடுத்த முதல் பரிசு சாலமோன். வேறு எவ்வளவோ ஞானமுள்ள பிள்ளைகள் தாவீதுக்கு இருந்தாலும், சாலமோன் என்ற பத்சேபாளின் மகன் தான் ராஜாவானான். அதோடு, வேத அறிஞர்கள் கூறுவது என்ன என்றால், சாலமோன் ராஜாவாகும்போது, அவருக்கு அவ்வளவு ஞானம் கிடையாது. ஆனால், தாவீது ஏற்கனவே, “தேவன் கொடுக்கும் ஞானம் வேண்டும்” என்று போதித்திருந்ததால், தேவனிடம் ஞானம் கேட்டு, உலகின் மகா பெரிய ஞானி ஆகிவிட்டார். பத்சேபாளின் பிள்ளை அரசன் ஆகிவிட்டார்.
பரிசுத்த வித்து
நாம் ஏற்கனவே பரிசுத்த வித்துவைப்பற்றி அவ்வப்போது பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, தாவீதிடமிருந்து பத்சேபாள் மூலமாக இயேசு வரை வந்தது என்பது, பத்சேபாளுக்கு தேவன் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு. இந்த பரிசுத்த வித்துவில், சுவாரஸ்யமான விஷயம் உண்டு. மத்தேயு 1ம் அதிகாரத்தில் உள்ள அட்டவணைக்கும், லூக்கா 3ம் அதிகாரத்தில் உள்ள அட்டவணைக்கும், பெயர்களில் வித்தியாசம் இருக்கும் அல்லவா! அதில் மிகவும் அழகான விஷயம் மறைந்திருக்கும்.
1 ஆபிரகாம் 2 ஈசாக்கு 3 யாக்கோபு 4 யூதா 5 பாரேஸ் 6 எஸ்ரோம் 7 ஆராம் 8 அமினதாப் 9 நகசோன் 10 சல்மோன் 11 போவாஸ் 12 ஓபேத் 13 ஈசாய் 14 தாவீது 15 சாலமோன் 16 ரெகோபெயாம் 17 அபியா 18 ஆசா 19 யோசபாத் 20 யோராம் 21 உசியா 22 யோதாம் 23 ஆகாஸ் 24 எசேக்கியா 25 மனாசே 26 ஆமோன் 27 யோசியா 28 எகோனியா 29 சலாத்தியேல் 30 சொரொபாபேல் 31 அபியூத் 32 எலியாக்கீம் 33 ஆசோர் 34 சாதோக் 35 ஆகீம் 36 எலியூத் 37 எலெயாசார் 38 மாத்தான் 39 யாக்கோபு 40 யோசேப்பு 41 இயேசு
1 ஆபிரகாம் 2 ஈசாக்கு 3 யாக்கோபு 4 யூதா 5 பாரேஸ் 6 எஸ்ரோம் 7 ஆராம் 8 அமினதாப் 9 நகசோன் 10 சல்மோன் 11 போவாஸ் 12 ஓபேத் 13 ஈசாய் 14 தாவீது 15 நாத்தான் 16 மாத்தாத்தா 17 மயினான் 18 மெலெயா 19 எலியாக்கீம் 20 யோனான் 21 யோசேப்பு 22 யூதா 23 சிமியோன் 24 லேவி 25 மாத்தாத் 26 யோரீம் 27 எலியேசர் 28 யோசே 29 ஏர் 30 எல்மோதாம் 31 கோசாம் 32 அத்தி 33 மெல்கி 34 நேரி 35 சலாத்தியேல் 36 செருபாபேல் 37 ரேசா 38 யோவன்னா 39 யூதா 40 யோசேப்பு 41 சேமெய் 42 மத்தத்தியா 43 மாகாத் 44 நங்காய் 45 எஸ்லி 46 நாகூம் 47 ஆமோஸ் 48 மத்தத்தியா 49 யோசேப்பு 50 யன்னா 51 மெல்கி 52 லேவி 53 மாத்தாத் 54 ஏலி 55 யோசேப்பு 56 இயேசு இரண்டு அட்டவணைகளிலும் பார்த்தால், 14ம் பெயர் தாவீது வரை பெயர்கள் ஒரே போல இருக்கும். அதற்கு பிறகு பெயர்கள் மாறி இருக்கும். இயேசுவின் அப்பா யோசேப்பு என்பது இரு அட்டவணைகளிலும் சரியாக இருக்கும். அந்த யோசேப்பின் அப்பா பெயர், மத்தேயுவில் யாக்கோபு என்றும், லூக்காவில் ஏலி என்றும் இருக்கும். அதாவது இயேசுவின் தாத்தாவின் பெயரே மாறி இருக்கும். அப்படியானால், இந்த அட்டவணை பொய்யா? குழப்பமானதா? இல்லை.
அந்த வேத காலங்களில், பெண்களுக்கு பெரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. இயேசுவின் தாயாகிய மரியாள் வீட்டுக்கு ஒரே பெண். எந்த வீட்டில், ஆண் வாரிசு இல்லாமல், பெண் மட்டும் இருக்கிறாளோ, அந்த பெண்ணின் தகப்பனுக்கு மதிப்பு கிடையாது. அந்த பெண்ணின் தகப்பன், திருமணத்துக்கு முன்பு, தனக்கு மருமகனாக வரப்போகிறவனை தத்தெடுக்க வேண்டும். இது யூத கலாச்சாரம். அதனால்தான் மரியாள், யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டவள் என்று வேதம் கூறுகிறது. அதாவது, மரியாளின் தகப்பனாகிய ஏலி, தனது மருமகனாக வரப்போகிறவனாகிய யோசேப்பை தத்தெடுத்து இருந்தார். அதனால்தான் பெயர்பட்டியலில், ஏலிக்கு அடுத்து அவரது மகனாக யோசேப்பு இருக்கிறார். எனவே, மத்தேயு 1ம் அதிகாரத்தில் வருவது, இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பின் வம்ச வரலாறு. லூக்கா 3ம் அதிகாரத்தில் வருவது, இயேசுவின் தாயாகிய மரியாளின் வம்ச வரலாறு.
“யோசேப்பு தானே தாவீதின் சந்ததி. இயேசுவுக்கும் யோசேப்புக்கும் சம்பந்தமே இல்லையே! மரியாள் மூலம்தானே உலகுக்கு வந்தார்! இயேசு எப்படி யோசேப்பின் சந்ததியில் வர முடியும்?” என்று நான் யோசித்ததுண்டு. (தேவையற்ற சந்தேகம் தான்) அதற்கான பதில், இந்த காரியங்களைக் கற்றுக்கொண்ட பின்னர் புரிந்தது. மரியாளும் தாவீதின் சந்ததிதான் என்று.
யோசேப்பின் சந்ததி, தாவீதுக்கு பின்னர் சாலமோன் மூலம் தொடர்ந்துள்ளது. மரியாளின் சந்ததி, தாவீதுக்கு பின்னர் நாத்தானின் மூலம் தொடர்ந்துள்ளது என்பது அட்டவணைகளின் மூலம் புரிகிறது. இந்த நாத்தான், சாலமோன் என்பவர்கள் யார்?
II சாமுவேல் 5:14 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
I நாளாகமம் 3:5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்
NLT: The sons born to David in Jerusalem included Shammua, Shobab, Nathan, and Solomon. Their mother was Bathsheba, the daughter of Ammiel.
In this verse we have the form Bathshua for the familiar name Bathsheba, i.e. בַת־שׁוַּע for בַת־שֶׁבַע, in which latter word שֶׁבַע is a shorter form of שְׁבוּעָה.
ஆக, சாலமோன், நாத்தான் ஆகிய இருவருமே, தாவீது பத்சேபாளுக்கு பிறந்தவர்கள். எவ்வளவு அழகான பாக்கியம் அல்லவா! இயேசுவின் பெற்றோராகிய யோசேப்பு- மரியாள் இருவருமே, பல தலைமுறைகளுக்கு முன், தாவீது-பத்சேபாளின் குழந்தைகள். அவ்வளவு அருமையான பாக்கியம் பத்சேபாளுக்கு கிடைத்தது. இயேசு நம்மை ராஜாவாகவும், ஆசாரியராகவும் ஆக்கி விட்டார் என்று சொல்கிறோம் அல்லவா! ராஜா என்பது, சாலமோனின் வித்து வழியாகவும், ஆசாரியர் என்னும் பரிசுத்தம் நாத்தானின் வித்து வழியாகவும் வந்தது.
இன்னொரு அழகான விஷயம், மத்தேயு 1ம் அதிகாரத்தில் வரும் பெயர் பட்டியலில் இருக்கிறது.
மத்தேயு 1 -17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
இங்கு, தாவீது வரை 14 தலைமுறை, பாபிலோன் சிறைப்படுவது வரை 14 தலைமுறை, கிறிஸ்து வரை 14 தலைமுறை என்று கூறப்பட்டிருக்கும். நன்றாக பார்த்தால், கடைசியில் கிறிஸ்து வரை 13 தலைமுறை தான் இருக்கும். 14வது தலைமுறை நாம்தான். We are 14th Generation, J Generation என்று கூறுவது, இதை தான். நாம் தான் அந்த 14வது தலைமுறை. யாரெல்லாம் இயேசுவை ஏற்றுக்கொள்கிறோமோ, அவர்கள் 14வது தலைமுறை. கடைசியாக இயேசு, ……( நம் பெயர்) பெற்றார், என்று அந்த இடத்தில் நம் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு அவரது பிள்ளை என்ற அதிகாரம் கிடைத்திருப்பது, வெறும் வாயளவில் இல்லை. வேதத்தில் நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அதேபோல, கிறிஸ்து மூலமாக, நாமும், ராஜாக்களும் ஆசாரியர்களுமானோம். இது நாம் கொண்டாட வேண்டிய விஷயம். தாவீது ராஜாவைப்பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இஸ்ரேல்-16 (பத்சேபாள்)
3 responses to “இஸ்ரேல்-16 (பத்சேபாள்)”
-
Very useful message.. better than me
-
Very useful message..
-
Thank you so much brother
-
Leave a Reply