தாவீது – 6

தாவீதும் சீயோனும்(எருசலேம்)

யோசுவா காலத்தில் இஸ்ரவேலர் அனேக இடங்களைப் பிடித்தாலும், ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்த, அத்தனை இடமும் பிடிக்கவில்லை. காலேபுக்கு, தேவன் எபிரோனை வாக்கு பண்ணியதால், காலேப் தன்னுடைய 85ஆவது வயதில் போய், எபிரோனை சுதந்தரித்துக் கொண்டார். யோசுவா, காலேப் காலத்துக்கு பின்னர், கிட்டத்தட்ட 450 வருடங்கள் நியாயாதிபதிகள் காலம் முடிந்து, பின்னர் சவுல் காலமும் முடிந்து, இப்போது தாவீதின் காலம் வந்து விட்டது.

தாவீது, எபூசியர் பட்டணம் பிடித்து, அதற்கு எருசலேம் என்று பேரிட்டார். அப்போது தான் எருசலேம் வேதத்தில் வருகிறதா? தாவீது தான் முதன் முதலாக எருசலேமை பிடித்தாரா என்றால் இல்லை என்பதே பதில்.  யோசுவா ஏற்கனவே எருசலேமின் ராஜாவைப் பிடித்து கொன்று போட்டார் என்று வேதத்தில் பார்க்கலாம். ஆனால், அந்த ஜனங்களை அவர்களால் விரட்ட முடியவில்லை.

அதற்கு பின்னர் தாவீதின் காலத்தில், எபூசியரை தோற்கடித்து, அந்த பட்டணத்தை இஸ்ரவேலரின் அடையாளமாக மாற்றுகிறார் தாவீது.

ரொம்ப அழகான வசனம் இது. தாவீதை நோக்கி, எங்கள் குருடர் சப்பாணியே போதும் உன்னை துரத்துவதற்கு என்று எபூசியர் சொல்கிறார்கள். ஆனாலும் தாவீது கோட்டையை பிடித்தாராம். எப்படி பிடித்தார் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை. ஒரே வசனத்தில் முக்கியமான பட்டணத்தின் வரலாறை முடித்து விட்டார். 18ம் நூற்றாண்டு வரையுமே, இந்த வசனத்தை மக்கள் நம்ப கடினமாக இருந்ததாம். நம்மைப் பொறுத்தவரையில், நாம் இந்தியாவில் இருக்கிறோம். நமக்கு இஸ்ரேலின் நில அமைப்பு தெரியாது. நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். ஆனால் அதை தெரிந்தவர்களால் நம்ப முடியாமல் இருந்தது.

காரணம், மேற்கண்ட படத்தில் இருப்பது தான் சீயோன் கோட்டை. எபூசியர், ஒரு மலையின் மேல் கோட்டை கட்டிக்கொண்டு, மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். அந்த கோட்டையின் மேலே, எப்போதுமே காவல்காரர்கள் இருப்பார்கள். ஒருவன் அந்த பட்டணத்துக்குள் போக வேண்டும் என்றாலே, மலையில் ஏறித்தான் போக முடியும். ஆனால் அதற்குள் மேலிருந்து அம்பு எய்தால், அவ்வளவுதான். அனைவரும் மரிப்பது நிச்சயம்.

கண் தெரியாத ஒருவன், மேலிருந்து அம்பு எய்தால் கூட போதும். மரணம் நிச்சயம். ஏனெனில் அது மலையின் மேல் உள்ள பட்டணம். அதனால்தான் எபூசியர்கள் தாவீதை, அவ்வளவு கேவலமாக பேசினார்கள்.

பின் எப்படி தாவீது வெற்றி கண்டார்? 1867ம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான, சார்லஸ் வாரன் என்பவர், ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்தார். அதாவது, எபூசியர் இருந்த எருசலேமுக்கு தண்ணீர் செல்லும் பாதையாக இருக்கும் என்று அனுமானித்தவர், அந்த பாதையில் இறங்கி நடக்க தொடங்குகிறார். முதலில் ஒரு சுரங்க பாதை, பின்னர் கிடை மட்டமான சுரங்க பாதையில் வந்தவர், பின் ஒரு செங்குத்தான பாதையை பார்க்கிறார். செங்குத்து தண்டு என்றழைக்கப்படும் Warren’s Shaft 13 மீட்டர் ஆழமானது. ஆனால் அதில் ஏறக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தோன்றியதால், ஒவ்வொரு கல்லின் மீதும் கால் வைத்து ஏறுகிறார். பின் சுரங்கப் பாதையின் முடிவில், அது எருசலேமுக்குள் வருவதைக் கண்டறிந்தார். தாவீது எப்படி எருசலேமை பிடித்திருக்க முடியும் என்ற, ஆராய்ச்சியாளரின் கேள்விக்கு துல்லியமான பதில் கிடைத்தது.

எப்படி பிடித்தார்?

தாவீது, தன் படைக்கு ஒரு ஆஃபர் கொடுக்கிறார். யார் முந்தி போய் முறியடிப்பீர்களோ, அவர்கள் என் படைக்கு தளபதி என்றார். இந்த யோவாப் என்பவன், அந்த சுரங்கத்தின் வழியாக நுழைந்து, நேரடியாக, எருசலேம் நகரத்துக்குள் சென்று, அங்கிருந்து வந்து நகரத்தின் வாயிலை திறந்து விட்டு, ராஜாவை உள்ளே அழைத்தான். எபூசியர் எதிர்பாராமல் இருந்ததால், தாவீதின் படை ஈஸியாக வெற்றி பெற்றது. கீழ்க்கண்ட வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=XXHiXuPw7zM

நாம் கடந்த பதிவில், உண்மையில் இராட்சதர் இருந்தார்களா? என்று வேதத்தின் அடிப்படையில் பார்த்தோம். இந்த சுரங்கத்தின் கற்களைப் பார்த்தாலே, இராட்சதர் அந்த காலங்களில் வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம்.  

தாவீது தான், எல்லா இராட்சதரையும் அழித்து, பூமியை சுத்தப்படுத்தியவர் என்று பார்த்தோம். இந்த எபேசு பட்டணமான எருசலேமும், இராட்சதர்களின் பட்டணம்தான். தாவீது அவர்களை துரத்தி விட்டு, அவருக்கு அங்கே ஒரு அரமனை கட்டினார். அதனால் அந்த இடத்துக்கு, தாவீதின் நகரம் என்றும் பேர் வந்தது. 

வேதத்தில் எருசலேம்

  1. மெல்கிசெதேக்கு

இந்த வசனத்தில் சாலேமின் ராஜா என்று சொல்லப்படுவது, எருசலேமின் ராஜா என்று சொல்கிறார்கள்.

இந்த சாலேம் என்னும் இடம், பழைய கானானிய பட்டணம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில், மெல்கிசேதேக்கு தொழுது கொண்ட இடங்கள் என்று, தொல்பொருள் ஆய்வாளர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே இவர் எருசலேமில் ராஜாவாக இருந்தவர் என்பது உண்மை.

  • ஆபிரகாம்

ஆபிரகாம், ஒரு இடத்தை தேடி அலைந்தான் (The Place). அதுதான் எருசலேம் என்று யூதர்கள் நம்புவதாக நாம் முதல் பதிவில் பார்த்தோம். ஆதியாகமம் 22ல் ஈசாக்கை பலி செலுத்த ஆபிரகாம் சென்ற இடம் மோரியா மலை என்பது, இந்த எருசலேமில் தான் உள்ளது.

  • தாவீது

தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான் என்று பார்த்தோம் அல்லவா. அது இந்த எருசலேம் தான்.

தாவீது உடன்படிக்கை பெட்டியைக் கொண்டு வந்து சீயோனில் வைத்தார் என்று பார்த்தோம் அல்லவா! அதுவும் இதே எருசலேம் தான்.

தாவீது தனக்காக அரமனை கட்டி, தாவீதின் நகரம் என்று பேரிட்டது கூட, இந்த எருசலேமுக்கு தான்.

  • சாலமோன்

சாலமோன் ஆலயம் கட்டியது இதே எருசலேம். அதுவும் ஈசாக்கை பலி கொடுக்க சென்ற அதே இடம் என்று வேத ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

  • பாபிலோன் சாம்ராஜ்யம்

பாபிலோனியர் வந்து, தேவாலயத்தை சுட்டெரித்து, நகரத்தை அழித்து போட்டதும் இதே எருசலேம் தான்.

  • எஸ்றா, நெகேமியா

 எஸ்றா நெகேமியா பட்டணத்தை பழுது பார்த்தது இதே நகரத்தை தான்.

  • இயேசு

இயேசு நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தது இதே எருசலேமில்.

  • பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட மேல்வீடு இருக்கும் அறை எருசலேமில் தான் உள்ளது.

  • இரண்டாம் வருகை

இயேசு மீண்டும் வந்து, ஆட்சி செய்யப்போவது எருசலேமில் இருந்து தான்.

இப்படி பல விஷயங்களில் தொடர்புடைய எருசலேமை, யூதர்களுக்கு சொந்தமாக்கியது தாவீது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *