தாவீது -4 (உடன்படிக்கை பெட்டியின் பயணம்-2)

தேவன் வாசம் பண்ணிய உடன்படிக்கை பெட்டி, எங்கெல்லாம் பயணம் செய்தது என்பதைப் பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மோசே, தேவன் தெரிந்து கொண்ட ஸ்தலத்தில், ஆசரிப்பு கூடாரத்தை வைக்க வேண்டும் என்று கூறினார், ஆனால் எந்த இடம் என்று கூறவில்லை. யோசுவாவும் சபையின் மூப்பரும் இணைந்து சீலோ என்னும் இடத்தில் ஆசரிப்பு கூடாரத்தின், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பெட்டியை வைத்தார்கள். யோசுவாவுக்கு அடுத்து 450 வருட நியாயாதிபதிகள் காலத்திலும் ஆசரிப்பு கூடாரம் அங்கே தான் இருந்தது. சாமுவேல் காலத்தில், ஒருமுறை பெலிஸ்தர் யுத்தத்துக்கு வந்தார்கள். 4000 இஸ்ரவேலர் மரித்து விட்டதால், தங்கள் முன்னோர் உடன்படிக்கை பெட்டியை தூக்கி சென்றபோது, எந்த யுத்தத்திலும் தோற்கவில்லை என்பதை நினைவுகூர்ந்து, பெட்டியை ஆசரிப்பு கூடாரத்தை விட்டு வெளியே எடுத்து சென்று விட்டார்கள். ஆனால் அந்த நாளில், 30,000பேர் இறந்து விட்டார்கள். அதோடுகூட, பெலிஸ்தர் பெட்டியை எடுத்து போய் விட்டார்கள்.

பெலிஸ்தர் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் தேசத்திலுள்ள, அஸ்தோத் என்னும் இடத்தில், தாகோன் என்னும் அவர்கள் கடவுளின் கோவிலில் வைத்தார்கள். பெட்டிக்கு முன் தாகோன் கீழே விழுந்து, கை, தலை உடைந்து கிடந்ததால், பெட்டியை காத் என்னும் ஊருக்கு அனுப்பினார்கள். அங்கு பெலிஸ்தருக்கு மூலவியாதி வந்து அனேகர் செத்துப்போனதால், பெட்டியை எக்ரோன் என்னும் ஊருக்கு அனுப்பினார்கள். ஆனால் எக்ரோன் ஊரார், பெட்டியை ஊருக்குள் விடாததால் இஸ்ரவேலுக்கே திரும்பி அனுப்பினார்கள். பெட்டி இஸ்ரவேலின் பெத்ஷிமேஸ்க்கு வந்து விட்டது. அங்குள்ள மக்கள், பெட்டியை திறந்து பார்த்ததால் , இஸ்ரவேலர் 50,000 பேர் இறந்துவிட்டனர். எனவே பெட்டியை கீரியாத் யாரீமுக்கு அனுப்பி, அங்கு அபினதாப் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அபினதாப் வீட்டில் பெட்டி 20 வருடம் இருந்தது. முதல் முயற்சியாக பெட்டியை எடுக்க ஒரு நாள் உபவாசம் போட்டனர், ஆனால் அதற்குள் பெலிஸ்தர் யுத்தத்துக்கு வந்ததால், அந்த முயற்சி தடைபட்டது.

சாமுவேல் அங்கு தீர்க்கதரிசியாக இருந்தபோது 20 வருடம் பெட்டி இல்லாமல், ஆசரிப்பு கூடாரம் சீலோவில் இருந்தது. மிக அழகான விஷயம் என்னவென்றால், கர்த்தர் ஆசரிப்புகூடாரத்தை விட்டு போகும்போது, தன் மக்களை அப்படியே விட்டுப்போகாமல், அங்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்பி விட்டுத்தான் சென்றார். அப்போது கூட, இஸ்ரவேலரை தேவன் கைவிடவில்லை.   அடுத்து சவுல் ராஜாவாக இருந்த 40 வருடமும் பெட்டி அபினதாப் வீட்டில்தான் இருந்தது.

இஸ்ரவேலரின் இரண்டாம் முயற்சி

சவுலுக்கு பின்னர் தாவீது ராஜாவாக மாறுகிறார். தாவீது மொத்தம் 40 வருடங்கள் ஆட்சி செய்கிறார். அதில், முதல் 7 வருடங்கள் எப்ரோனில் ஆட்சி செய்கிறார். அதன் பின்னர், எபூசியர் வாசம் பண்ணுகிற சீயோன் கோட்டை என்னும் இடத்தை தாவீது பிடிக்கிறார்.(அடுத்த பதிவில் பார்க்கலாம்) முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவாகிறார். இப்போது தாவீதுக்கு உடன்படிக்கை பெட்டியை திரும்பி எடுத்து வரவேண்டும் என்று ஆசை.

கிட்டத்தட்ட 67 வருடங்கள் கழித்து, தாவீதுக்கு ஒரு வாஞ்சை. உடன்படிக்கை பெட்டியை திரும்ப கொண்டுவர வேண்டுமென்று. அவர் இப்போது இரண்டாவது முறையாக முயற்சி செய்கிறார். அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகிறார். ஆனால், வரும் வழியில் பெட்டி கீழே விழ பார்க்கவும், ஊசா என்பவன், வேகமாக அதைப் பிடிக்கிறார். ஊசா யார்? எந்த அபினதாப் வீட்டில், கர்த்தருடைய பெட்டி இருந்ததோ, அந்த அபினதாபின் பேரன். பொதுவாக, ஒருவருடைய பேரனைக்கூட, வேதத்தில் குமாரன் என்றுதான் போட்டிருப்பர். உண்மையில் அபினதாபின் பேரன் தான் ஊசா. ஊசா பிறந்ததிலிருந்து பெட்டி அங்குதான் இருந்தது. பெட்டி வீட்டுக்குள் இருக்கும்வரையில் ஊசாவுக்கு எதுவும் ஆகவில்லை. வெளியே வந்தபோது, பெட்டி விழக்கூடாது என்று பிடித்த ஊசா இறந்து போகிறார். இப்போது நமக்கு, இயேசுவின் இரத்தம் இருக்கிறது. அதனால் பாவம் செய்தாலும் துணிகரமாக ஆலயத்துக்கு செல்கிறோம். பழைய ஏற்பாட்டு காலத்தில், பலி செலுத்தவேண்டி இருந்தது. இங்கு இரத்தம் எதுவும் இல்லாமல், பெட்டியை தொட்டார் ஊசா. அதனால் மரணம் வந்தது.

தேவன் ஊசாவை அடித்தார், அவன் செத்து போனான். நிறைய கீத வாத்தியங்கள், ஆடல் பாடலோடு வந்த தாவீது அதிர்ச்சி அடைந்து விட்டார். தாவீது சிறு வயதிலிருந்தே பக்தி வைராக்கியம் உள்ளவர். தேவன் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். ஆனால் அவருக்கே பயம் வந்து விட்டது.

தாவீது பெட்டியை தன்னிடமாக வைக்க பயந்து, அருகிலிருந்த ஓபேத் ஏதோமின் வீட்டில் போய் வைத்துவிட்டார்.

இஸ்ரவேலரின் மூன்றாம் முயற்சி

ஓபேத் ஏதோமின் வீட்டில் வைத்தாலும், தாவீது கவனித்துக்கொண்டே இருக்கிறார். மூன்று மாதத்தில், கர்த்தர் அவன் வீட்டை மட்டுமல்ல, வீட்டாரை மட்டுமல்ல, அவனுக்குண்டான் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிறார்.

மகிழ்ச்சியோடு, தாவீதின் நகரத்துக்கு கொண்டு வருகிறார் தாவீது. தாவீதின் நகரம் என்பது சீயோன் கோட்டை. எப்படி கொண்டு வந்தார் தாவீது?

ஆம், தேவன் மீது அளவற்ற அன்பு கொண்ட தாவீது, யோசித்து கண்டுபிடித்து விட்டார். தான் எந்த உயிர்சேதமும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமானால், பலி செலுத்துவது அவசியம் என்று. சரி அப்படி எத்தனை பலி செலுத்தி இருப்பார் தாவீது?

இந்த வசனத்தை படிக்கும்போது, “ஏதோ, பலி செலுத்தி இருப்பார் போல” என்று ஈசியாக வாசித்து, கடந்து போய் விடுகிறோம். முதலில், தப்படி என்றால் எவ்வளவு அளவு என்று பார்ப்போம். இந்த படத்தில், ஒரு மனிதன் 6 பொம்மைகளை கடந்து செல்லும் தூரம்தான் 6 தப்படி. 6 தப்படிக்கு ஒன்று என்று பலி செலுத்த முடியுமா? பிராக்டிகலாக பார்த்தால், இது முடியாதது போலத்தான் இருக்கும். ஆனால் வேதத்தில் கூற்ப்பட்டிருக்கிறதே.

ஓபேத்- ஏதோமின் வீட்டிலிருந்து எருசலேமுக்கு, 12 முதல் 15 கிலோமீட்டர் என்று கூறுகிறார்கள். ஏறக்குறைய 30,000 அடிகள் இருக்கலாம். 6 தப்படிக்கு ஒரு பலி என்றால், 5000 பலி செலுத்தியிருக்க வேண்டும். ஒரு பலிக்கு, மாடு ஆடு என்று வைத்துக்கொண்டால், 10,000 பலி. இது உண்மையில் நடக்க சாத்தியமில்லை என்று பலர் நினைப்பர்.

தாவீதுக்கு பிறகு, சாலமோன் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்யும்போது, இவ்வளவு பலி கொடுக்கிறார். 1,20,000 ஆடு பலி கொடுத்தார் என்றால், 10000 பலி என்பது சாத்தியம் தானே. அந்த 15 கிமீ தூரத்தை அவர்கள் கடக்க பல மணி நேரம் ஆகியிருக்கும் என்பது உண்மையே.

இவ்வளவு பலி செலுத்தி, பெட்டியைக்கொண்டு வரும்போதே, தாவீது அவ்வளவு ஆடிப்பாடினார் என்றால், பலி செலுத்த தேவையே இல்லாத நாம், எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். நம் value நமக்கு தெரியவில்லை என்பதே உண்மை.

தாவீது எங்கே வைத்தார்?

ஆசரிப்புக்கூடாரத்தை யோசுவா காலத்தில், சீலோ என்னும் இடத்தில் வைத்தார்கள். உடன்படிக்கைபெட்டி, அங்கிருந்து பெலிஸ்தர் தேசத்துக்கு போய், அங்கிருந்து அபினதாப் வீட்டுக்கு வந்து, அங்கிருந்து ஓபேத் ஏதோமின் வீட்டுக்கு வந்து, அங்கிருந்து தாவீது எடுத்து வருகிறார். நியாயமானபடி பார்த்தால், உடன்படிக்கை பெட்டி மீண்டும் சீலோவுக்கு செல்ல வேண்டும். தாவீது எங்கே எடுத்து வந்தார்?

தாவீது சீயோன் கோட்டை என்னும் எபூசியரின் பட்டணத்தை பிடித்தார் அல்லவா! அதுதான் தாவீதின் நகரம், அதுதான் எருசலேம். பெட்டியை தாவீது எருசலேமில் கொண்டுவந்து வைக்கிறார். பெட்டி எங்கே இருக்க வேண்டும்? ஆசரிப்பு கூடாரத்தில், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்க வேண்டும். தாவீது எங்கே வைத்தார்?

லேவி வம்சத்தில், பெட்டியை தூக்கி வருபவன் பார்த்தால் கூட, சாவு என்று தேவன் கூறி இருந்தார். இன்றைக்கு பெட்டியை தாவீது என்னும் யூதா வம்சத்தில் உள்ளவர் எங்கே வைக்கிறார்? தாவீது, ஒரு கூடாரம் போட்டு, அதற்குள் கொண்டுபோய் வைக்கிறார். 1 நாளாகமம் 15,16ல் தாவீது கூடாரம் போட்டு, அதற்கென் லேவியரை ஏற்படுத்தி, கூடாரத்தின் நடுவில் பெட்டியை வைத்து, தினமும் காலையும், மாலையும் பலி செலுத்தியது கூறப்பட்டிருக்கும். மிக நேர்த்தியாக ஆராதனை நியமித்திருப்பார்.

வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்றிருந்த ஆசரிப்பு கூடாரத்தை விட்டு, தாவீதின் கூடாரம் வெறும் மகா பரிசுத்த ஸ்தலம் மட்டும் என்றானது. அடுத்ததாக சாலமோன் கூட, ஆசரிப்பு கூடார அமைப்பில் தான், அப்படியே ஆலயத்தைக் கட்டினார். ஆனால், தாவீது கட்டிய கூடாரம் வித்தியாசமானது.

நாம் வேதத்தில் கர்த்தர் சீயோனில் இருந்து…. என்று பல வசனம் வாசித்து இருப்போம். அந்த சீயோனுக்கு கர்த்தரைக் கூட்டி சென்றது தாவீது. தேவன் 67 வருடங்கள் ஆசரிப்பு கூடாரத்தில் இல்லாமல், வனாந்திரத்தில் இருந்தார் என்பார்கள். ஆனால் அதையே, 67 வருடமாக, தாவீது என்னும் ஒருவன் வருவதற்காக தேவன் காத்துக்கொண்டு இருந்தார் என்றும் சொல்லலாம். தாவீது எழுதிய சங்கீதங்கள் எல்லாம், இந்த கூடாரத்துக்கு அருகில் இருந்து தான் எழுதியுள்ளார்.

முதல் ஆலயம் சாலமோன் கட்டியது. இரண்டாம் ஆலயம் செருபாபேல் கட்டியது. மூன்றாவது ஆலயம் இப்போது கட்ட தயாராகி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் முன்பாக, மோசே கட்டிய ஆசரிப்பு கூடாரம் இருந்தது. ஆனால் தேவனோ, சாலமோன் கட்டிய ஆலயத்தை திரும்பி எடுப்பிப்பேன் என்று சொல்லவில்லை, மோசேயின் ஆசரிப்பு கூடாரத்தை திரும்ப எடுப்பிப்பேன் என்று சொல்லவில்லை. தாவீதின் கூடாரத்தை தான் திரும்பி எடுப்பிப்பேன் என்கிறார்.

தாவீது, கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக்கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தேவன் “நீ கட்ட வேண்டாம். உன் மகன் கட்டுவான்” என்றார். உண்மையான காரணம் என்ன என்றால், தாவீது தினமும் அந்த கூடாரத்தில் வந்து தேவனிடம் பேசுவார். ஆனால் ஆலயத்துக்குள் சென்றால், வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும்   பிரதான ஆசாரியன் மட்டுமே உள்ளே செல்ல முடியும். தேவன் தாவீது உடனான உறவை விரும்பினார். எவ்வளவு அற்புதமான செயல் அல்லவா இது.

விழுந்து போன தாவீதின் கூடாரம் திரும்ப கட்டப்படுவது என்பது, கடைசி கால எழுப்புதலைக் குறிக்கிறது. நாம் பண்டிகைகளில் பார்த்தபடி, கடைசி கால அபிஷேகம், சுக்கோத் அனுபவம் என்று பார்த்தோம் அல்லவா. அது தாவீதின் கூடாரம்.

 பண்டிகைகளில், மூன்று பண்டிகைக்கு ஆலயத்துக்கு தவறாமல் வரவேண்டும் என்று தேவன் சொன்னார் என்பதைப் பார்த்தோம். பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் 3 பண்டிகைகள் அவை. பஸ்கா என்பது வெளிப்பிரகாரத்தையும், பெந்தெகோஸ்தே என்பது பரிசுத்த ஸ்தலத்தையும், சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை என்பது மகா பரிசுத்த ஸ்தலத்தையும் குறிக்கும்.

தாவீது பற்றி, மேலும் சில விஷயங்கள் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *