எக்காள பண்டிகை (Teshuvah)

தேவன் வேதத்தில் கொண்டாடச்சொல்லிய 7 பண்டிகைகள் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். லேவி 23ல் மொத்தம் 7 பண்டிகைகள் கொண்டாடச் சொல்லி இருப்பார். அதில் 3 பண்டிகைகளுக்கு, யூத ஆண்கள் எங்கிருந்தாலும் எருசலேமுக்கு வரச் சொல்லியிருப்பார். அந்த 3 பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை. பஸ்கா என்பது, நாம் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தைக் குறிக்கிறது. பெந்தெகோஸ்தே என்பது, சீயோன் அனுபவம், பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டதைக் குறிக்கிறது. கூடாரப் பண்டிகை என்பது, எழுப்புதல், கடைசி கால அபிஷேகம், Joy anointing, Third Pentecost என்று பல பெயர்களில் சொல்லப்படுகிறது. நாம் மூன்றாம் அனுபவத்தைக் காணப் போகிற விசேஷித்த தலைமுறை.

7 பண்டிகைகளில், முதல் 3 பண்டிகை முதல் மாதத்திலும், நான்காவது பண்டிகை மூன்றாவது மாதத்திலும், கடைசி மூன்று பண்டிகைகள் ஏழாவது மாதத்திலும் கொண்டாடச் சொல்லி இருப்பார் தேவன். அதில், ஐந்தாவது பண்டிகை, எக்காளப் பண்டிகை. ஏழாவது மாதம் முதல் நாள் எக்காளப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இஸ்ரேலர் அன்று தான், தங்கள் புது வருட பண்டிகையையும் கொண்டாடுகிறார்கள். ஆறு மாதம் முடித்து ஏழாவது மாதத்தில்தான் அவர்களுக்கு வருடம் மாறும். செப்டம்பர் 15,2023 அன்று எபிரேய காலண்டரில் தேதி 29 Elul, 5783. செப்டம்பர் 16,2023 அன்று தேதி, 1 Tisheri 5784. இந்த ஏழாவது மாதம் முதல் தேதி New Beginning புதிய ஆரம்பம் நடக்கும் என்று கருதுகிறார்கள்.

வேதத்திலுள்ள எல்லா எண்களும் முக்கியமானவை என்றாலும், ஏழு என்ற எண், மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 7 என்பது, Number of Perfection, Completion. அதாவது பரிபூரணத்தைக் குறிக்கிறது. தேவன் 6 நாளில் படைப்பை படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார், எனவே ஏழாம் நாள் முக்கியமானது. தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார். எனவே ஏழு என்பது, பரிசுத்தமான நாள். கடன் வாங்கியிருந்தால், ஏழு வருடங்களுக்குள் செலுத்தவில்லை என்றால், மன்னிக்க சொல்வார். ஏழாம் வருடத்தில் அடிமைக்கு விடுதலை சொல்வார். நிலங்கள் கூட பயிரிடக்கூடாது என்று சொல்வார். 7 ஏழு வருடங்கள், அதாவது 49 வருடம் கழித்து 50வது வருடம் ஜூபிலி, விடுதலை என்று சொல்வார். சகோதரனை 7 எழுபது முறை மன்னிக்க சொல்வார். இப்படி 7 என்பது, யூதர்களுக்கு ஒரு ஆவிக்குரிய எண்ணாகவே இருக்கிறது. அதேபோல்தான் ஏழாவது மாதத்தில் மூன்று பண்டிகை. தேவன் கொண்டாடச்சொல்லிய பண்டிகைகள் ஏழாம் மாதத்துடன் முடிகிறது. அடுத்த பண்டிகை கொண்டாட வேண்டுமானால், திரும்ப முதலாம் மாதம் 14ம் தேதி தான். எனவே ஏழாம் மாதம் என்பது சிறப்பான மாதம் யூதர்களுக்கு. ஏழாம் மாதம் முதல் தேதி ஐந்தாவது பண்டிகையான எக்காள பண்டிகை. ஏழாம் மாதம் பத்தாம் தேதி ஆறாவது பண்டிகையான பாவ நிவிர்த்தி நாள். 15 முதல் 22ம் தேதி வரை கூடாரப்பண்டிகை.

ஏழாம் மாதம் முதல் நாள், இஸ்ரேல் எப்படி இருக்கும் தெரியுமா? ஆங்காங்கே திராட்சை செடியில் பழங்கள் பழுத்து தொங்கும், மாதுளைகள் சிவப்பாக, கொத்து கொத்தாக செடியில் பழுத்திருக்கும். காலைப் பொழுதில் குளிர்ந்த காற்று வீசும், ஒரு சிறப்பான சீசன் இது. அந்நேரத்தில் 100 எக்காளங்கள் சேர்ந்து தொனிக்கும் ஒலி எவ்விடத்திலும் கேட்கும். மிகவும் அழகான இந்த நேரத்தில், யார் யார் காதில் எல்லாம் எக்காள தொனி கேட்கிறதோ, அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மனம் திரும்ப இது தான் கடைசி வாய்ப்பு, Final Call என்று ஒவ்வொருவருடைய இதயத்தையும் தட்டி எழுப்பும். Spiritual Awakening க்கு தேசத்தை தட்டி எழுப்பும். எக்காள சத்தம் உச்சத்தை தொட்டு முடிவடையும். மக்கள் எல்லாருடைய இதயத்தையும் தட்டி எழுப்பும் ஒலி அது.

ஏற்கனவே பார்த்தபடி, எல்லா பண்டிகைக்கும் பின்னால் ஒரு History இருக்கும். ஆனால் எக்காளபண்டிகைக்கு மட்டும், எதுவும் வரலாறு கிடையாது. “சந்தோஷமாக கொண்டாடு, சத்தமாக கொண்டாடு” அவ்வளவு தான் தேவன் சொன்னது. எக்காள பண்டிகை என்றால், Yom Teruah or Feast of Trumpets. புது வருட பண்டிகை என்றால், Rosh Hashannah. Yom Teruah என்பதற்கு, Day of Shouting / Raising a Noise என்று அர்த்தம். Rosh Hashannah என்பதற்கு, Head of the Year என்று அர்த்தம்.

இந்த பண்டிகைகளை ஏழாம் மாதத்தில் கொண்டாட, ஆறாம் மாதம் முதல் தேதியிலிருந்தே கொண்டாட ஆரம்பித்து விடுவர். ஆறாவது பண்டிகையான பாவ நிவிர்த்தி நாள் இஸ்ரேலருக்கு முக்கியமான நாள். வருடத்துக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லும் பண்டிகை தான் அது. அப்பண்டிகைக்கான ஆயத்தம் தான் 40 நாட்களுக்கு முன்பாகவே, ஆறாம் மாதம் முதல் தேதியிலிருந்தே ஆரம்பிக்கும். இந்த 40 நாட்களையுமே Teshuvah என்று அழைக்கிறார்கள்.  Teshuvah என்றால், Repentance. மனம்திரும்புதலின் நாட்கள்.

யூதர்களின் நம்பிக்கையின்படி, இந்த 40 நாட்களில் heaven doors எல்லாம் open ஆகியிருக்கும். New Destiny release ஆகும். ஆவிக்குரிய வாழ்வில் அடுத்த levelக்கு செல்லும் நேரம். இந்த நாட்கள், தேவன் புதிய ஆரம்பத்தைக் கொடுப்பதற்காக தெரிந்தெடுத்த காலம், புதிய சீசன் உருவாகும் காலம், தேவனோடு connected ஆகும் நாட்கள். அப்படி இந்த நாளை விசேஷித்த நாட்களாக நினைப்பதற்கு என்ன நடந்திருக்கும்?

எகிப்திலிருந்து சீனாய் மலை வரை உள்ள கால அளவீடு என்று ஒரு பதிவு போட்டிருந்தோம் அல்லவா! (https://rhematamil.org/timeline-egypt-to-sinai) அதில் தெளிவாகப் போட்டிருக்கிறோம். மோசே முதலாவதாக சீனாய் மலைக்கு சென்று 40 நாட்கள் இருந்து 2 கற்பலகை வாங்கி வந்தார். மக்கள் பொன் கன்று குட்டி செய்து, அதை வழிபட ஆரம்பித்ததால், கோபத்தில் அதை உடைத்துப் போட்டார். பின்னர் இரண்டாம் முறை, மன்னிப்பு கேட்பதற்காக மோசே மலைக்கு சென்று, நாற்பது நாட்கள் இருந்ததாகவும், அந்த 40 நாட்களில் தேவன் இஸ்ரவேலர் மீது கோபமாக இருந்ததாகவும், நீ அழைத்து வந்த உன் ஜனம் என்று மோசேயிடம் தேவன் இஸ்ரவேலரைக் கூறி விட்டதாகவும், மோசே தோல்வியடைந்தவராக திரும்பி வந்ததாகவும் பார்த்தோம். மோசே திரும்பி வந்த பின்னர், தேவனே initiate செய்து மூன்றாவது முறை மலைக்கு அழைக்கிறார். ஆறாவது மாதம் முதல் தேதியிலிருந்து, ஏழாவது மாதம் 10ம் தேதி வரை மலையில் இருந்தார். இந்த முறை மோசே போனது, மோசேயின் சொந்த முயற்சி அல்ல, தேவன் மன்னிக்கவில்லை என்று, தோல்வியடைந்திருந்த மோசேயை, தேவனே திரும்ப அழைக்கிறார். தேவன் ஆரம்பித்த நாட்கள் இது. இதுவரை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் செய்த உடன்படிக்கைக்காக ஜனங்களை வழி நடத்தினார். ஆனால் இப்போது, இஸ்ரவேலர் என்று ஒரு கூட்ட ஜனத்துக்காக உடன்படிக்கை கொடுக்கிறார். புதிய உடன்படிக்கை கிடைத்த நாட்கள் அது. இஸ்ரவேலருக்கு மிகவும் முக்கியமான, விசேஷமான நாட்கள் அவை.

10. அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

யாத்திராகமம் 34-10

ஆகவே தான் இந்த நாட்களை இஸ்ரவேலர் விசேஷமாக கொண்டாடுகிறார்கள். இது தேவன் ஆரம்பித்த நாட்கள். புதிய ஆரம்பம் நடக்கும் நாட்கள் என்று கருதுகிறார்கள். அடுத்த வருடத்தில் (அது அவர்களுக்கு வருட பிறப்பு) அவர்களுக்கு தவறாக ஏதேனும் நியமிக்கப்பட்டிருந்தால்கூட. தன் விதியை மாற்றும் நாட்கள் இது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் 40 நாட்களும் தங்கள் ஆத்துமாவை தாழ்த்தி ஜெபிப்பார்கள்.

Teshuvah நாட்களின் அழகு (Beauty) என்னவென்றால், நாம் எத்தனை முறை விழுந்தோம் என்பது முக்கியமில்லை. நமக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை இருக்கிறது, அது நமக்கு இன்னும் ஒரு  வாய்ப்பு (opportunity) இருக்கிறது என்பதே. இதுவே நமக்கும் தேவையானது. Shame என்பதற்கும் Guilt என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

Shame – நான் ஒரு தவறானவன்

Guilt – நான் தவறான ஒன்றை செய்து விட்டேன்

 நமக்கு குற்ற உணர்வு இருப்பது தவறல்ல, ஆனால் இன்னும் ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கிறது என்பதை மறக்க கூடாது. ஒருவேளை இஸ்ரவேலருக்கு இன்னொரு வாய்ப்பு, Teshuvah நாட்களில் உள்ளது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் நமக்கு அடுத்த வாய்ப்பு, இந்த வினாடியிலேயே இருக்கிறது.  நம் தேவனை நாம் சரியாக புரிந்து கொள்வது அவசியம்.

Teshuvahவில் செய்ய வேண்டிய காரியங்கள்,

  1. நம் பாவத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்
  2. இனி செய்ய மாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும்
  3. யாரை காயப்படுத்தினோமோ, (தேவன் அல்லது மனிதன்), மன்னிப்பு கேட்க வேண்டும்
  4. தேவன் மன்னித்து விட்டார் என்பதை accept செய்ய வேண்டும்.

நம்மிடம் உள்ள ஒரு குறை என்ன தெரியுமா? மூன்று வரை செய்வோம். ஆனால் தேவன் என்னை மன்னித்து விட்டார் என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம். நான் பாவி நான் பாவி என்று தான் கடைசி வரை சொல்லிக் கொண்டு இருப்போம். இஸ்ரவேலர், அந்த 40 நாட்களில் மட்டும் தான் தேவனோடு நெருங்க முடியும் என்று நினைத்து, அந்த நாட்களில் மன்னிப்பு கேட்டு, தேவன் மன்னித்து விட்டார் என்று சந்தோஷமாக சென்று விடுகிறார்கள். ஆனால் நமக்கு எல்லா நாளும் மன்னிப்பு கிடைக்கும் என்பது அறிந்தும், கடைசி வரை நான் பாவி பாவி என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தேவன் என்னை மன்னித்து விட்டார், நான் நீதிமான் ஆகிவிட்டேன் என்பதை நம் மனதில் ஏற்றுக்கொள்வோம்.

Yom Teruah என்பது எக்காள பண்டிகை என்பது போல, Rosh Hashannah என்பது புதுவருட பண்டிகை. அந்த நாளில் இஸ்ரவேலர்கள், ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிடுவர். வருகிற வருடம், தங்களுக்கு இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி சாப்பிடுகிறார்கள். தங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படும் நாள் இது என்று நம்புகிறார்கள். Happy New Year என்பதை Shana Tova என்று கூறுவார்கள்.

Rosh Hashannah Anthem என்று ஒரு பாடலையே வைத்திருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கேட்டு ரசிக்கலாம்.

https://youtu.be/vCYRM7KYJY4?si=i9d0b-avSKVkoSti

எக்காள பண்டிகையை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *