எனக்கு வேதத்தில் சில காரியங்களை ஆராய்ந்து படிக்க பிடிக்கும். சில மாதங்களுக்கு முன்பு, யோவான் சுவிசேஷம் படித்துக் கொண்டிருந்தேன். யோவான் புத்தகத்தில் 7, I am Statement, 7 அற்புதங்கள் இருக்கிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், அதை Note செய்து கொண்டே வந்தேன். அப்போது, இயேசு உயிர்த்தெழுந்தது 8வது அற்புதமாகவும், பின்னர் பெரிய 153 மீன்கள் பிடித்தது 9வது அற்புதமாகவும் இருந்து. (நிறைய நேரங்களில் இப்படித்தான் என் நேரத்தை வீணாக்குவது போல எனக்கு தோன்றும்.) ஒருவேளை இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், 153 மீன் என்பதால், அதைக்கூட அப்போது அவர் மனிதன் இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தது 8வது தானே என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தளங்களில், பேதுரு கடலில் நடந்தது அற்புதம் அல்ல என்றும், இயேசுவின் உயிர்த்தெழுதல் 7வது அற்புதம் என்றும் படித்தேன். அதன் பின்னர் நிறைய படிக்கும்போதுதான் தெளிவான ஒரு விளக்கம் கிடைத்தது. 7 அற்புதங்கள் இயேசுவின் அற்புதங்கள் பழைய உடன்படிக்கையில் இருக்கிறது. எட்டாவது அற்புதமான இயேசுவின் உயிர்த்தெழுதல் புதிய உடன்படிக்கையை ஆரம்பிக்கிறது. இப்படி கொஞ்சம் விளக்கம் கிடைத்தது.
வேதத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கும். உதாரணமாக 7 என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். அதுபோல தான் இந்த 8 என்ற எண்ணும். 8 என்பது New Beginning புதிய ஆரம்பத்தைக் குறிக்கிறது. இயேசு எப்பொழுது உயிர்த்தெழுந்தார்? வாரத்தின் முதல் நாளில். அதாவது 7 நாட்கள் கழித்து, எட்டாம் நாளில் உயிர்த்தெழுந்தார். 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா! இப்போது யோவான் சுவிசேஷத்தில், 8 வது அற்புதம் இயேசுவின் உயிர்த்தெழுதல். அதாவது புதிய உடன்படிக்கை ஆரம்பிக்கிறது. பலி எல்லாம் முடிந்து, நமக்கான ஒரே பலி செலுத்தப்பட்டு விட்டது. எனவே 8 என்பது புதிய ஆரம்பம் தானே. அடுத்ததாக, தேவன் இந்த உலகத்தை 7 நாளில் படைத்தார் என்பதை அறிவோம். நாம் இப்பொழுது தேவனுடைய 7வது நாளில் இருக்கிறோம். அடுத்ததாக இந்த பூமி அழிந்து, புதிய பூமி உருவாகும்போது, தேவனுடைய எட்டாவது நாள் ஆரம்பிக்கும். நான் உங்களுக்காக வாசஸ்தலத்தை உருவாக்க போகிறேன் என்று இயேசு சொல்லியிருந்தார் அல்லவா! அது எட்டாம் நாளின் படைப்பு. அப்படியானால், 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா!
தேவன் சூரியனை சந்திரனை எல்லாம் நான்காவது நாளிலே உருவாக்கினார். ஒரு நாளில், சூரியன் உதித்தால் நமக்கு நாள் ஆரம்பிக்கிறது. அதேபோல, இஸ்ரவேலர் போல, லூனார் காலண்டர் உபயோகிப்பவர்களுக்கு, சந்திரன் தோன்றினால் நாள் ஆரம்பிக்கிறது என்று பார்த்திருக்கிறோம். இங்கே நான்காவது நாள்தான் சூரியன் படைக்கிறார் என்றால், அதற்கு முன் எப்படி 3 நாள் முடிந்திருக்கும்? நாள் என்பதை எப்படி கணக்கிட்டு இருப்பார்?
“தேவன் வெளிச்சம் படைத்தது முதல் நாளில். ஆனால் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் படைத்தது நான்காவது நாளில். எப்படி வெளிச்சம் வந்திருக்கும்? உன் பைபிள் தவறு” என்று சிலர் பதிவை வாசித்த பின்னர் தான், அட ஆமால.. என்று யோசிக்கவே செய்தேன் என் கல்லூரி நாட்களில். சிறு வயதிலிருந்தே நாம் வேதம் வாசித்தாலும், புரிந்து தெளிவாக படிக்கிறோமா? என்பது சந்தேகமே. அதன் பின்னர் தான் தெரிந்து கொண்டேன், முதல் 3 நாட்களில் பூமிக்கு வெளிச்சம் தந்தது கர்த்தருடைய மகிமையே. ஆதாம் இழந்து போன கர்த்தருடைய மகிமை அது. ஆதாம் கீழ்ப்படியாமையில் விழும்வரை, அந்த மகிமை பூமியில் இருந்தது.
இந்த ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில், முதல் வசனத்துக்கும் 2ம் வசனத்துக்கும் இடையே, ஒரு காலம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று, இரண்டாம் வருகை பற்றி பேசும், சகோ.ஏசுவடியான் அவர்களின் புத்தகத்திலும், சகோ.சாம் ஜெபத்துரை அவர்களின் புத்தகத்திலும் கூறப்பட்டிருந்தது. அதன் பின்னர்தான் creation பற்றி படிக்கும் போது, முதலாம் நாள், இரண்டாம் நாள் என்று தேவன் கூறியது, மனிதர்களுடைய நாட்கணக்கு அல்ல, தேவனுடைய நாள். 10,000 வருட படிமம் கிடைத்தது, பல லட்ச வருடத்துக்கு முந்தின டைனோசர் படிமம், என்றெல்லாம் ஆராய்ச்சியாளார்கள் கண்டுபிடிப்பது உண்மையாக இருக்கலாம். எபிரேயத்தில், முதலாம் நாள் ஆயிற்றென்று எழுதப்பட்டதன் இன்னொரு அர்த்தம், ஒரு சகாப்தம் ஆயிற்று என்பதாம். அதாவது, முதலாவது தேவன் ஒரு படைப்பை படைத்து அதை ரசித்து நல்லது என்று கண்டு, பின்னர் அடுத்த படைப்பை படைத்தார். அப்படி பார்த்தால், இப்போது நாம் ஏழாவது நாளில் இருக்கிறோம் என்பது உண்மை தானே! எட்டாவது நாள் என்பது, இனி வரும் புதிய பூமி. II பேதுரு 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். எனவே கர்த்தருக்கு ஒரு நாள் என்பது எத்தனை வருடங்கள் என்பதை கர்த்தரே அறிவார்.
இப்பொழுது ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், சுக்கோத் என்ற கூடாரப்பண்டிகையிலும், ஏழு நாட்கள் கூடாரத்துக்குள் இருக்க வேண்டும். எட்டாவது நாள் என்பது பரிசுத்தமான ஓய்வு நாள். அதில் சபை கூட வேண்டும் என்று தேவன் கூறினார். எட்டு என்பது புதிய பூமியைக் குறிக்கும். எனவே எட்டாம் நாள் பண்டிகை என்பது, இரகசிய வருகை முடிந்து, அந்தி கிறிஸ்து ஆட்சி 7 வருடம் முடிந்து, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி முடிந்து, அதன் பின்னர் ஆரம்பிக்கப்போகும் புதிய பூமியைக் குறிக்கும்.
13. நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து, 14. உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; 15. உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக. 16. வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
உபாகமம் 16
இந்த கூடாரப்பண்டிகையை பொறுத்தவரையில் தேவன் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளை, சந்தோஷமாயிருங்கள். சுக்கோத் பண்டிகையில் என்ன செய்ய வேண்டும், nothing but joy. லேவி 23-36ல் எட்டாம் நாள் சபை கூடும் பரிசுத்த நாள். அதில் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். எட்டாம் நாள், வேலை செய்ய வேண்டாம், சந்தோஷமாயிருக்க வேண்டும். அவ்வளவு தான்.
9. அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
16. பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். 17. அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை. 18. மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும். 19. இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
சகரியா 14
இந்த கூடாடப்பண்டிகை கர்த்தர் ராஜாவாயிருக்கும்போதும் நடக்கும் என்று, சகரியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். கூடாரப்பண்டிகை கொண்டாடவில்லை என்றால், அவர்களுக்கு தண்டனை வரும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பண்டிகை இது. இஸ்ரவேலர் இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Leave a Reply