Day – 1 (01- டிசம்பர், 2023)
உயிரோடு இருப்பதற்காக நன்றி
இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா?
என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து 4 மாதங்கள் ஆகிறது என்று. 4 வருடம் கல்லூரி படிப்பில், கிட்டத்தட்ட 2 வருடங்கள் என் அருகில் இருந்தவள், எனக்கு நிறைய பாடங்கள் சொல்லிக் கொடுத்தவள், அநேக நாட்கள் சாப்பாடு கொடுத்தவள்( நான் Hostel மாணவி என்பதால்). அவளுடைய Delivery காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டாள் என்றனர். எனக்கு இன்றுமே நம்ப முடியவில்லை.
ஏன் என்று நான் ஆண்டவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால், நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்பதை யோசிக்க முடிந்தது. அதே 4 வருடத்தில், எனக்கு low BP என்பதால், எவ்வளவோ முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். நான் எப்படி இரு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவத்தில் பெற்றேன் என்பதை யோசித்தேன், கிருபையின் அர்த்தம் புரிந்தது. அவள் மேல் கிருபை இல்லையா என்று நான் கேள்வி கேட்க முடியாது, ஆனால் இன்று உயிரோடு இருக்கும் நம் ஒவ்வொருவர் மேலும் கிருபை இருக்கிறது. நாம் ஜீவனோடு இருக்கிறோம். இதற்காகவே நன்றி சொல்லலாமே!
மேற்படிப்பு படித்த கல்லூரியில், எனக்கு எடுத்த professor, நன்றாக இருப்பார், மிகவும் active ஆக இருப்பார். சிறு வயது தான். கொரோனா காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், வேலூரில் 5 பேர் சாவு என்ற செய்தியை, வெறும் செய்தியாக செய்தி செயலியில் படித்தேன். ஆனால், அந்த 5 பேரில் ஒருவர், எங்கள் professor என்பதைக் கேள்விபடும்போது, அதிர்ச்சியாக இருந்தது. கணவரின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் சிலர் அந்த கொரொனா அலையில் மரித்தனர். கணவருடன் கல்லூரியில் படித்த ஒருவர் இறந்து விட்டார். இப்போது அனேக இளவயது மரணங்கள். ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் இறந்து விடுகிறார்கள். பள்ளியில் சிறுவனுக்கு மாரடைப்பு. ஷவர்மா சாப்பிட்டவர்கள், சிக்கன் சாப்பிட்டவர்கள் மரணம். இன்னும் எவ்வளவோ மரண செய்திகள் கேட்கிறோம். நாம் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.
ஒருவேளை கஷ்டத்தில் இருக்கலாம், கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம், நெருக்கமானவர்களை இழக்க கொடுத்திருக்கலாம், வறுமையில் இருக்கலாம், பிரிவினையில் இருக்கலாம், சாபத்தில் இருக்கலாம், பாவத்தில் கூட இருக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கிறோமே! அதற்கு என்ன காரணம்? ஒருவேளை இந்த நாளில் நாம் உயிரோடு இல்லை என்றால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் பிள்ளைக்காக யார் திறப்பில் நிற்பார்கள்?
நாம் இருப்பது நம் பெலன் அல்ல. கர்த்தருடைய கிருபை மட்டுமே.. நன்றி சொல்வோம். ஏன் இவ்வளவு யோசித்து நன்றி சொல்ல வேண்டும்? அனேக நேரங்களில் எனக்கு ஜீவனைத் தந்ததற்காக நன்றி என்று தினமும் சொல்லும்போது, அது வெறும் slogan ஆக மாறி விடுகிறது. எனவே தான் யோசித்து நன்றி சொல்வோம். நமக்கு தெரிந்தவர்கள் மரித்து இருக்கலாம், அவர்கள் கெட்டவர்கள், நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல. நாம் எப்படிப் பட்டவர்கள் என்பது, நம்மை விட யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. எவ்வளவோ நாட்கள் கடையில் சாப்பிட்டோம், எவ்வளவோ நாட்கள் பைக்கிலும், காரிலும், பேருந்திலும், ட்ரெயினிலும் சென்றோம். ஆனாலும் இன்று ஜீவனோடு இருக்கிறோம். இது கர்த்தருடைய கிருபை மாத்திரமே. மனதார நன்றி சொல்வோம்.
Leave a Reply