Day – 14 (14- டிசம்பர், 2023)
புதிய ஆரம்பங்களுக்காக நன்றி
இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம்.
தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த காரியத்தினால், நமக்கு கசப்பு இருந்திருக்கும், ஆனால் ஒருகட்டத்தில், “அவர்களைப் பற்றி நினைத்து என்ன ஆகப்போகிறது” என்று, அதை நினைக்காமல், அல்லது நம் கசப்பை மறந்து வாழ்கிறோம் அல்லவா! அப்போது, கசப்பான இருதயம் போய், நமக்கு புதிய இருதயம் தேவன் கொடுத்து இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.
சில நேரங்களில், நமக்கு பணத்தேவைகள் இருந்திருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சூழ்நிலையில், அற்புதமாக நடத்தினார் அல்லவா! இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ஏதோ ஒரு சூழலில் இதை அனுபவித்திருப்போம். என்ன செய்வது என்று பயந்த வேளைகளில், புதிய ஆரம்பத்தைக் கொடுத்து வழி நடத்தினார் அல்லவா! அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.
அவருடைய கிருபைகள் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது என்று வேதத்தில் படிக்கிறோம். அப்படியானால், இந்த வருடம் முழுவதிலும், நமக்கு எத்தனை கிருபைகள் கொடுத்திருப்பார்! ஒரு நாள் தயவு என்ற கிருபையை கொடுத்திருப்பார், ஒரு நாள் ஆசீர்வாதம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் பாதுகாப்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார், ஒரு நாள் சந்தோஷம் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் ஆறுதல் என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். ஒரு நாள் அன்பு என்ற கிருபையைக் கொடுத்திருப்பார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வருடம் முழுவதிலும், அவர் கொடுத்த புது கிருபைக்காக நன்றி சொல்லலாம்.
தேவன் நமக்கு புதிய ஆவியைக் கொடுத்தார், நன்றி சொல்லலாம். நமது சூழலால், நம் ஆத்துமா சோர்ந்து போய்க் காணப்பட்டிருக்கும், ஆனால் நாம் வேதத்தை எடுத்து படிக்கும்போது, அல்லது அவருடைய வார்த்தையை ஊழியர் மூலமாகக் கேட்கும்போது, நம் விசுவாசம் தட்டி எழுப்பப்பட்டது அல்லவா! சோர்ந்து இருந்து ஆவி, உற்சாகமாக மாறியது அல்லவா! அந்த புதிய தொடக்கத்துக்காக நன்றி சொல்லலாம்.
நாம் பழைய மனுஷனைக் களைந்து போட்டு, புது சிருஷ்டி ஆகியிருக்கிறோம் அல்லவா! என்றைக்கு நாம் இரட்சிக்கப்பட்டோமோ, அன்றே புது சிருஷ்டி ஆகி விட்டோம். ஆதாமின் DNA நம்மிலிருந்து விலகி, கிறிஸ்துவின் DNA நமக்குள் வந்து விட்டது. இயேசுவின் சொந்த பிள்ளைகளாகி விட்டோம். நமக்குள் வந்த அந்த புதிய ஆரம்பத்துக்காக நன்றி சொல்லலாமே!
புதிய வருடம் 2023ஐ காணச் செய்தார் அல்லவா! 2023ல் ஒவ்வொரு புதிய மாதத்தையும் காணச்செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். அனேக மரணங்கள் நடந்தாலும், நாம் 2024ஐ காணப்போகிறோம் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.
இது போக, நம் பிள்ளைகள் படிப்பில் புதிய ஆரம்பங்கள், நம் வேலையில் புதிய ஆரம்பங்கள், புதிய சேமிப்பு திட்டங்கள், புதிய பொருட்கள் வாங்கி இருப்போம், இன்னும் பல நன்மைகள் செய்தாரே. இந்த புதிய ஆரம்பங்களை நினைவு கூர்ந்து தேவனுக்கு நன்றி சொல்வோம்.
Leave a Reply