Day – 17 (17- டிசம்பர், 2023)
சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி
1 கொரிந்தியர் 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.Tamil Easy Reading Version
எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.நமக்கு அது தவறு என்பது தெரியும். ஆனால் அதை நோக்கி இழுக்கப்படுவோம். நாம் கஷ்டப்படலாம், அல்லது இன்னொருவரை கஷ்டப்படுத்தலாம், அல்லது இருவருமே கஷ்டப்படலாம். ஆனால் நம்மால், No சொல்ல முடியவில்லை. அதுதான் சோதனை. தவறு என்பது தெரிந்தாலும், நாம் செய்வது தான் சோதனையில் தோற்றுப்போவது.
இந்த வசனத்தில், சோதனையில் இருந்து விடுபடும் வழியை தேவன் காட்டுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே நமக்கு சோதனை வருகிறது என்றால், அதில் தப்பும் வழி அதற்கு முன்பாகவே நமக்கு அருகில் இருக்கும். அதை உணர்வதற்கு பரிசுத்த ஆவியானவர் தேவை.
கெட்ட குணம் என்பதை விட சோதனை என்பது அதிகமாக நம்மை ஆட்கொள்ளும். ஒரு மனிதனை எதிரில் பார்க்கிறோம், அவனை பார்த்து வெளியே சிரித்தாலும், மனதினுள் கோபம், வெறுப்பு, கசப்பு, பழி வாங்கும் வெறி, பொறாமை எல்லாம் இருக்கிறது அல்லவா! இதுதான் நமக்கு வந்த சோதனை. இந்த சோதனையில் நாம் வெற்றி பெற்றோமா? ஒரு குறிப்பிட்ட காலம் கடந்ததும் எல்லாம் மறந்து போய்விடும் என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல, நம் இருதயத்தில் வேத வசனம் உள்ளே போக போக, நாம் கசப்பை மறந்து வெளியே வந்துவிட்டோம். நமக்குள் ஆவியானவர் கிரியை செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.
சிலர் எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். நம் குணம் அப்படி அல்லவே. நாம் பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம் அல்லவா! இது தான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.
ஒரு ஆண் அல்லது பெண், தவறான நோக்கத்தில் நம்மிடம் பழகினால், நம் இருதயத்தில் மணி அடிக்கிறது அல்லவா! நாம் சீக்கிரமாக, அவரை விட்டு வெளியே வருகிறோம் அல்லவா! ஏனெனில் அந்த நேரத்தில் சோதனைக்கு தப்பும் வழி செயல்பட்டிருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.
நாம் எல்லாருமே சமூக வளைதளங்கள் உபயோகிப்பவர்கள். திடீரென, இச்சையை தூண்டும்விதமான படம் வந்தால், உடனே பதறி வெளியே வந்து விடுகிறோம் அல்லவா! உள்ளே சென்று பார்க்கவில்லையே. அதுதான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.
ஒருவேளை ஏதோ ஒரு அடிமைத்தனத்தில் இருந்தால் கூட, கர்த்தர் அப்படியே நம்மை கைவிடவில்லையே. அடுத்த தருணம் கொடுத்து வெளியே கொண்டு வந்தார் அல்லவா! ஒரு பாவம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து, அனேகம் தரம் நாம் விழுந்தாலும், ஆண்டவர் சோர்ந்து போகாமல் நம் மேல் நம்பிக்கை வைத்து தூக்கி விடுகிறார் அல்லவா! நன்றி சொல்வோம்.
ஒரே ஒரு காரியம் தான். வேதம் வாசிப்பவராக நாம் இருந்தால், சோதனையைப் பார்த்து நாம் பயப்படவே வேண்டாம். சோதனைக்கு தப்பும் வழியே தேவனுடைய வார்த்தை தான். நாம் வேதம் வாசிக்கிறோம் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.
Leave a Reply