Day – 21 (21- டிசம்பர், 2023)
கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி
கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே இதெல்லாம் நடைபெறுகிறதே!
சாதாரணமாக, ஓரிடத்தில் கொள்ளை நோய் வந்தால், அந்த மாநிலம் மட்டும் தான் இருக்கும். ஆனால், கொரொனா வரும்போது, உலக அளவில், எல்லா நாடுகளுக்கும் பரவியது அல்லவா! இது போல தான், கடைசி கால எழுப்புதலும் இருக்கும். இது வரை, ஒரே ஒரு மனிதன் ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, அந்த தேசம் முழுவதுக்கும் எழுப்புதல் நடந்தது. ஆனால், இனி வரப்போகிற கடைசி கால எழுப்புதலில், உலகம் முழுவதும் எழுப்புதல் பரம்பும்.
எங்கள் வீட்டில் சகோதரர்.சாம் ஜெபத்துரை அவர்களின் புத்தகங்கள் நிறைய இருக்கும். சிறு வயதிலிருந்தே, அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை மட்டும் படிப்பது வழக்கம். கொரொனா காலத்தில், ஜெபிக்கலாம் வாங்க பார்க்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அப்போது சகோதரர். மோகன் சி லாசரஸ் அவர்கள், எழுப்புதல், தமிழ் நாட்டிலிருந்து பரவி, உலகம் முழுவதும் செல்லும் என்று கூறினார். எனக்கு எங்கோ படித்த ஞாபகம். எனவே எங்கள் வீட்டில் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். இந்தியாவிலிருந்து எழுப்புதல் பரவி, உலகம் முழுவதும் செல்லும் என்று அவருடைய புத்தகத்திலும் படித்த ஞாபகம். அதை விட, இன்னொரு தகவல் கிடைத்தது. இந்திய எழுப்புதலுக்காக, இப்போது உள்ள ஊழியர்கள் மட்டும் ஜெபிக்கிறார்கள் அல்ல. 1965க்கு முன்பே, இந்த எழுப்புதலுக்காக ஜெபித்து ஜெயிலிலே ஜீவனை விட்ட, ரிச்சர்ட் உம்பிராண்ட் உடன் இருந்தவர் பற்றி படித்தேன். நீங்களும் படிப்பதற்காக அதை பதிவிட்டு இருக்கிறேன்.
![]()
ஒரு ரஷ்ய வாலிபன், தன் தேசத்துக்காக கூட ஜெபிக்காமல், இந்தியாவின் வரைபடத்தை வைத்து ஜெபித்து, அப்படியே உயிரை விட்டு இருக்கிறார். இன்று நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? பிற தேசத்தை கூட விட்டு விடலாம், நாம் நம்முடைய தேசத்துக்காக ஜெபிக்கிறோமா? நம் தமிழ் நாட்டுக்காக ஜெபிக்கிறோமா? Atleast உடன் விசுவாசிகளாக இருக்கிற சபையினருக்காக ஜெபிக்கிறோமா? நம் ஜெப ஆவி எப்படி இருக்கிறது? சிந்திப்போம்.
இயேசுவே, நீர் எங்களுக்கு தந்த ஜெப ஆவிக்காக நன்றி. மற்றவர்களுக்காக ஊக்கத்தோடு ஜெபிக்க, நீர் எங்களை தெரிந்து கொண்டதற்காக நன்றி. எழுப்புதலுக்காக, எங்கள் தேசத்தை தெரிந்து கொண்டதற்காக நன்றி. யாரோ ஒருவர் ஜெபிப்பதால், எழுப்புதல் வரும் என்ற எண்ணத்தில் நாங்கள் இல்லை. நான் ஜெபிக்கும்போது எழுப்புதல் வருகிறது. என் தேசம் அசைகிறது. அந்த அலை உலகம் முழுவதும் பரவப் போகிறது. அதற்காக நன்றி. நான் ஒருவர் ஜெபிப்பதால், தேசம் அசையப்போகிறது, அந்த அதிகாரம் எனக்குள் இருக்கிறது. அதற்காக நன்றி.
எங்களுடைய சொந்தங்கள், நண்பர்கள் கூட இன்னும் உம்மை அறியாமல், அறியாமையில் இருக்கிறார்களே. அவர்களை எங்களை நம்பி நீர் கொடுத்திருக்கிறீர். அவர்களுக்காக ஜெபிப்பது எங்கள் கடமை அல்லவா! அதை நாங்கள் செய்து கொண்டிருப்பதால் நன்றி இயேசுவே. இன்னும் அதிகமாக ஜெபிக்க வரும் ஆண்டிலும் நீர் பெலன் தருவீர் என்று விசுவாசிக்கிறோம். அதற்காக நன்றி ஆண்டவரே. எங்கள் பிள்ளைகள், வருங்கால சந்ததிகள், கடைசி நாட்களில் உமக்கு சாட்சியாக இருக்க நீர் தெரிந்து கொண்டதற்காக நன்றி இயேசுவே. வருகிற 2024ல் இன்னும் ஆழமாக உமக்குள் நாங்களும் எங்கள் பிள்ளைகளும் வளரப்போகிறோம். அதற்காக நன்றி தேவனே! நன்றி

Leave a Reply