Joanna/ Johannah – யோவன்னாள்

வேத பகுதி: இரண்டே வசனங்களில் வருபவர் இந்த யோவன்னாள். ஆனால், இவருடைய பங்கு மிக முக்கியமானது.

கதை பின்புலம்: இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த பெண்களின் பெயரில் இந்த யோவன்னாளின் பெயரும் வருகிறது. எனவே, இயேசுவை கண்குளிர பார்த்து, அவருடன் பேசும் அனுபவம் பெற்றவர் இவர். “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்தவர்கள்” என்ற listல் இவர் பெயரும் உள்ளதால், மனமுவந்து கொடுத்து, ஊழியத்தை தாங்கிய ஒரு பெண் என்பதை அறியலாம்.

யார் இந்த யோவன்னாள்?

Joanna Name Meaning: Hebrewல் அவரது பெயரான Yohannah வுக்கு, Yahweh is Gracious or Graced by Yahweh என்று அர்த்தம்.

லூக்கா8:3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

லூக்கா 24:10 இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

ஏரோதின் காரியக்காரன் என்பதற்கு ஆங்கில வார்த்தை Joanna the wife of Chuza, the manager of Herod’s household. ஏரோதின் வீட்டு மேலாளர், அதாவது ஏரோதின் மேனஜர். இயேசு வாழ்ந்த நாட்களில், ரோம சாம்ராஜ்யம் உலகெங்கும் ஆட்சியில் இருந்தது. ஒவ்வொரு நாட்டையும் ஒருவரின் கையில் கொடுத்து, ரோமர்கள் ஆட்சி செய்தனர். அதன்படி, இஸ்ரேலை ஏரோதின் கைகளில் கொடுத்திருந்தனர். இதை நாம் ஏற்கனவே, ரோம சாம்ராஜ்யம் என்ற பதிவில் பார்த்தோம்.

ரோமர்கள் ஏற்படுத்திய இந்த ஏரோது மிகவும் கொடுமைக்காரன். இயேசு பிறந்த செய்தி அறிந்ததும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொன்றவன் ஏரோது. மத்தேயு 2 மற்றும் லூக்கா 1ல் குறிப்பிட்ட ஏரோது, Herod the great. அதன்பின்னர் புதிய ஏற்பாட்டில் வரும் ஏரோது என்பவர், ஏரோதின் மகன் அந்திப்பா ஏரோது(Herod Antippas). யோவான் ஸ்நானனின் தலையை வெட்டியவர் கூட அந்திப்பா ஏரோது தான். ஆக ஏரோது என்பது, இஸ்ரேலை ஆளும் ஒரு வம்சத்தின் குடும்ப பெயர். இந்த ஏரோதுக்கள், ரோமருக்கு பிரியமானவர்களாகவும், இஸ்ரேலுக்கு எதிரானவர்களாகவும் இருப்பார்கள்.

இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்ததில் இருந்தே, ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவை பிடிக்க வகை தேடிக்கொண்டு இருந்தனர். இப்படி உள்ள ஏரோதுவின் வீட்டில் மேனஜராக இருப்பவர் கூசா. இந்த கூசா மேனஜராக இருப்பதால், ரோமர்களுடன் ஒரு நெருங்கிய பழக்கம் இருக்கும். எனவே அவரது மனைவியாகிய யோவன்னாளுக்கும் ரோமர்களுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட மேன்மைகளை உதறித் தள்ளிவிட்டு, இயேசுவின் பின்னே சென்றவர் யோவன்னாள்.

யோவன்னாள் பணத்தை, தன் சுகபோக வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தான் இயேசுவுக்கு பின்னே செல்கிறார். ஒருவேளை தன் குடும்பத்தாரை எதிர்த்துக் கூட, அவர் இயேசுவுக்கு பின் சென்றிருக்கலாம். ஏன் அப்படி சென்றிருப்பார்?

 லூக்கா8:2,3 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

முதன்முதலாக யோவன்னாள் வருகிற இடம் இது. பொல்லாத ஆவிகளையும், வியாதிகளையும் நீக்கி குணமாக்கிய சில ஸ்தீரிகள் என போடப்பட்டுள்ளது. ஒருவேளை யோவன்னாள் வியாதியிலிருந்து சுகம் பெற்றிருக்கலாம், அல்லது பேயிலிருந்து சுகம் பெற்றிருக்கலாம். ஆனால் விடுதலை பெற்றதிலிருந்து இயேசுவை பின் தொடர்கிறவளாய் இருந்திருக்கிறார். அதோடு, இயேசுவுக்கும் அவரது 12 சீஷர்களுக்கும் தன்னுடைய பணத்தால் உதவி செய்து இருக்கிறார். இரண்டாவதாக இந்த யோவன்னாள் வேதத்தில் எந்த இடத்தில் வருகிறார்?

  1. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
    10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

 இரண்டாவதாக யோவன்னாள் வரும் இடம், இன்னும் அற்புதமானது. இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், அவருடைய காலியான கல்லறையை கண்ட பெண்களில் இவரும் ஒருவர். இயேசு உயிர்த்தெழுந்த நற்செய்தியை அவருடைய சீஷர்களுக்கு சொன்னவர்களில், யோவன்னாளும் ஒருவர். எத்தனை அற்புதமான பாக்கியம் அல்லவா! இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் பேசி, சில உதவிகள் செய்தார். இயேசு மரிக்கும்போது அருகில் இருந்தார். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை கேட்கும் பாக்கியம் பெற்றார். எவ்வளவு உன்னதமான அனுபவம்!

யோவன்னாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

ஒரு மதிப்பான இடத்தில் இருந்தவர் யோவன்னாள். அநேக முறை, வேதத்தை படிக்கும்போது, வேதத்திலுள்ள நபர்களை பாவப்பட்ட ஏழைகளாக கற்பனை செய்து நாம் படிக்கிறோம். ஆனால், உண்மை அப்படி அல்ல. பெபேயாளைப் பற்றி படித்தோம். அவரும் தன் ஆஸ்தியை விற்று ஊழியம் செய்தார். இங்கே யோவன்னாளும் ஆஸ்தியை விற்று ஊழியம் செய்கிறார். கணவரின் தொழில் மூலம் நல்ல மரியாதையான இடத்தில் இருந்தவர், இயேசுவுடன் ஊழியத்துக்கு பின் செல்கிறார். தன் status பார்க்காமல், இயேசுவின் போதனையைக் கேட்டு பின் சென்றார். இயேசு உயிரோடு இருக்கும்போது அவருடன் சென்றார் என்பது பரவாயில்லை. இயேசுவை கடுமையான தண்டனை கொடுத்து சிலுவையில் அறைந்தபிறகும், அவரது கல்லறைக்கு செல்கிறார் யோவன்னாள். அதுதான் தேவன் மீதுள்ள உண்மையான அன்பு.

இயேசு மரித்தது இயற்கையான மரணம் அல்ல. ரோமர்களின் கொடுமையான தண்டனை சிலுவை மரணம். இப்போது இயேசுவின் கல்லறைக்கு அந்த பெண்கள் செல்கிறார்கள் என்றால், ரோமருக்கு தெரிந்தால் அது ஆபத்து என்பதை உணர்ந்தும் செல்கிறார்கள். அப்படிப்பட்ட தைரியம் யோவன்னாளுக்கு இருந்ததால், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அந்த நற்செய்தியை தூதன் மூலம் கேட்கும் பாக்கியம் பெற்றார் யோவன்னாள்.

தேவனிடம் ஒருவரை நெருங்கி சேர்க்க, தேவன் யாரை வேண்டுமானாலும், use செய்வார். நமக்கு அதற்கான படிப்பு தேவை(Bible College) இல்லை, அறிவு (Intelligence) தேவை இல்லை, பணம் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதரையும்(பெண்களையும்) தேவன் தனித்துவமாக படைத்து இருக்கிறார். நமக்கென்று ஒரு அழைப்பு இருக்கிறது. தேவனால், ஒரு பாவியையும், தவறு செய்தவனையும் கூட உபயோகப்படுத்த முடியும்.

யோவன்னாள் கற்றுக்கொடுப்பது என்ன என்றால், நமக்கான அழைப்பு ஒன்று இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்பதற்கான தைரியம் நமக்குள் தான் இருக்கிறது. ஏரோதின் நம்பிக்கைக்கு எதிராக யோவன்னாள் இயேசுவை பின் பற்றினார். இன்று நம்மை தடுப்பது எதுவாக இருந்தாலும், அதை உதறி தள்ளி விட்டு, இயேசுவை பின்பற்றுவோம். யோவன்னாள் தொடர்ச்சியாக இயேசுவை பின்பற்றினார். ‘பரிசேயர் சதுசேயர் இயேசுவை எதிர்த்தார்கள். ரோம போர்ச்சேவகர் இயேசுவை எதிர்த்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.’ அவர் மரணத்துக்கு பிறகு கூட, அவரைப் பின் தொடர்ந்தார் யோவன்னாள். இன்று நாமும், நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், இயேசுவை தொடர்வதில் பின்வாங்காமல் இருப்போமானால், அதாவது நிலைத்தன்மையுடன் Consistency இருப்போமானால், ஆவிக்குரிய ஆழமான அனுபவங்களை நம்மால் அனுபவிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *