Phoebe – பெபேயாள்

வேத பகுதிஒரு இடத்தில் வெறும் இரண்டு வசனங்களில் மட்டுமே பெபேயாள் வருவார்.

                    ரோமர் 16: 1,2

கதை பின்புலம் – பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில், இரண்டு வசனங்களில் இப்பெண்ணைப் பற்றி பேசுகிறார். நிருபம் என்பது என்ன? நிருபம் என்றால் லெட்டர். பவுல், ரோம் நகரில் உள்ள, புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, தன்னுடைய விளக்கங்களை ஒரு கடிதம் மூலம் அனுப்புகிறார்.அந்தக் கடிதத்தில் இப்பெண்ணுடைய பெயர் இருக்கிறது. இந்த ரோமர் 16ம் அதிகாரத்தில், கிட்டத்தட்ட 26லிருந்து 30 பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. அதில், 10 பெயர் பெண்களுடையது. (மூன்றில் ஒருபங்கு பெண்கள் இருந்திருக்கிறார்கள்) ஆதி திருச்சபையில், பெண்களின் முக்கியத்துவத்தை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

யார் இந்த பெபேயாள்?

  1. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
  2. எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

ரோமர் 16

மூன்று கோணத்தில் பவுல் பெபேயாளை இங்கே அறிமுகப்படுத்துகிறார்.

  1. கெங்கிரேயா சபையின் ஊழியக்காரி
  2. நம்முடைய சகோதரி
  3. ஆதரவாயிருந்தவள்

பெபேயாள் என்ற பெயரின் அர்த்தம் நிலா(moon). கிரேக்க தெய்வமாகிய Artemis என்ற தெய்வத்தை மகிமைப்படுத்த, இந்த பெயரை வைத்திருக்கலாம். கொரிந்து, கெங்கிரேயா பகுதிகளில், அதிகமாக வணங்கப்பட்ட தெய்வம் தான் Artemis.

கெங்கிரேயா:

கெங்கிரேயா என்பது, கொரிந்து பட்டணத்துக்கு சில மைல் தொலைவில் உள்ள கடற்கரைப் பட்டணம் ஆகும். வேதத்தில் கெங்கிரேயா பட்டணம் இருமுறை தான் வருகிறது.

அப்போஸ்தலர் 18:18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
ரோமர் 16:1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

அப்போஸ்தலர் புத்தகத்தில், பவுல் கொரிந்து பட்டணத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் தங்கியிருந்து ஊழியம் செய்திருப்பார். அந்த நேரத்தில் அருகிலிருந்த பட்டணங்களுக்கும் சென்றிருப்பார். அந்த நேரத்தில், கெங்கிரேயா பகுதியில், பவுலின் பிரசங்கத்தை கேட்டு, இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண்தான் பெபேயாள் என இறையியலாளர்கள் கருதுகிறார்கள்.

 

  1. சபையின் ஊழியக்காரி

பெபேயாளை பவுல், கெங்கிரேயா சபையின் ஊழியக்காரி என்று கூறுகிறார். இதை வைத்து அநேகர், “பவுல் பெபேயாளை உதவி செய்பவள் என்று தான் கூறினார், அவள் சபையின் தலைவர் அல்ல” என கூறுவார்கள். அது தவறானது. இங்கு ஊழியக்காரி என்ற வார்த்தைக்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, “Diakonos”. இதன் அர்த்தம், Servant, Deacon, Minister. ‘ஒருவேளை பெண்களுக்கு மட்டும் லீடராக இருப்பாரோ’ என்றால், அதுவும் தவறு தான். ஏனெனில் Complete Jewish Version (CJV) என்ற பதிப்பில், “The Shamash of the Congregation at Cenchreae” என இருக்கிறது. இந்த Shamash என்பது directs and leads public worship என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எனவே முழு சபையையும் லீட் செய்த ஒரு பெண்ணாக பெபேயாள் இருந்திருக்கிறார் என புரிய முடிகிறது.

இந்த Shamash என்பதற்குள் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது letter carrier என்பது அதன் அர்த்தம். இந்த பெபேயாள் தான், ரோமர் நிருபத்தை ரோம் நகருக்குள் கொண்டு சென்றவர். அதனால்தான் அவரை ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கூறினார் என வேதவல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  1. நம் சகோதரி

நம்முடைய சகோதரியாகிய பெபேயாள் என பவுல் கூறுகிறார். “என் சகோதரியாகிய பெபேயாள்” என பவுல் கூறினாலே, அங்கு பெபேயாளை மரியாதையாக நடத்தி இருப்பார்கள். அவரோ “நம் சகோதரி” என கூறுகிறார். ‘கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள்’ என வெறும் வாய் பேச்சாக பவுல் கூறவில்லை. அதனால்தான், எனக்கு சகோதரி என்றால் உங்களுக்கும் சகோதரி என கூறுகிறார். “சபை என்பது ஒரு குடும்பம்” என்று எல்லாரையும் அதில் இணைக்கிறார் பவுல்.

  1. ஆதரவாயிருந்தவள்

அநேகருக்கும், எனக்கும் கூட ஆதரவாயிருந்தவள் என பவுல் கூறுகிறார். இங்கே பவுல், பெபேயாளின் வாழ்க்கை தரத்தைக் கூறுகிறார். இந்த ஆதரவாயிருந்தவள் என்பதன் அர்த்தம், மூலபாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டால், ‘தங்கள் ஆஸ்திகளால் பிறரை தாங்கியவள்’ என்பதாகும். அதாவது, தன் ஆஸ்தியை விற்று, மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்புள்ள பெண். ஒருவேளை இந்த பெண், நல்ல பணக்கார பெண்ணாக இருந்திருக்கலாம் எனவும், அதே வேளையில் ஒரு விதவைப் பெண்ணாக இருந்திருக்கலாம் எனவும், அறிஞர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், இவளை பவுல் லெட்டர் கொடுத்து விட அனுப்பி இருக்கலாம் என்கின்றனர். அதாவது அவள் ஒரு independent women ஆக இருந்திருக்கலாம். எது எப்படியோ, ‘உங்களிடம் வந்தவள் சாதாரண பெண் அல்ல, அவள் பலபேருக்கு தானதர்மம் செய்யும் பெண்’ என பவுல் கூறுகிறார்.

புரிந்து கொண்டவள்

பவுல் ஒரு பெண்ணிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் என்றால், அந்த கடிதத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு வசனங்களையும் கேட்டு ஏற்றுக்கொண்டவளாகத்தான் அவள் இருக்க வேண்டும். எனவே பெபேயாள் என்பவள், நிச்சயமாக மூல உபதேசங்களை பவுலின் அருகே அமர்ந்து, கேட்டு ஏற்றுக்கொண்டவளாகத்தான் இருந்திருப்பாள். வேதபுரிதல் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கும். கெங்கிரேயா சபையைப் பற்றி, தனது எந்த நிருபத்திலும் பவுல் கூறவில்லை. எப்படியும் அருகே இருக்கும் கொரிந்து பட்டணத்துக்கு இரு கடிதங்கள் வந்தபோது,(1,2 கொரிந்தியர்) அது நிச்சயமாக கெங்கிரேயா சபைக்கும் வந்திருக்கும். ஆனால், அந்த கடிதத்தில், கெங்கிரேயா பற்றி எதுவும் கூறாமல் இருப்பதால், “பெபேயாள் சபையை மிகவும் நல்ல முறையில் நடத்தி இருப்பார். அங்கே குற்றம் கண்டு பிடிக்க எதுவும் இல்லை. நல்ல தலைமையின் கீழ் இருந்ததால், பவுல் கெங்கிரேயா சபைக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என கூறுகின்றனர். “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்” என பவுல் கூறியிருக்கும் காரணம், பெண் என அவளை உதாசீனப்படுத்தி விடாதேயுங்கள். அவளை பரிசுத்தவானை ஏற்றுக்கொள்வதைப்போல ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

பெபேயாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

பெபேயாளின் தலைமை என்பது, நல்ல தலைமையாக இருந்தது. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணாக இருந்தாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்த பெபேயாள், தடைகளை உடைத்து, முன்னேறுபவளாகத்தான் இருந்திருப்பார். என்னதான், பிற தெய்வத்தின் பெயரை சுமந்தவளாக இருந்தாலும், தேவனால் எடுத்து பயன்படுத்தப்பட்ட சில பெண்களில் ஒருவராக இருப்பவள் பெபேயாள். தன்னிடமிருப்பதை கொடுத்து உதவினாள்.

இன்று பெண்களை ஒடுக்கும் கூட்டம் ஆணாக இருக்க அவசியமில்லை. ஒரு பெண்ணே பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் காலம் இது. எது என்ன நடந்தாலும், பெபேயாளைப் போல முடிந்தவரையில் ஏழைகளுக்கு உதவி செய்வோம். வேதத்தை படித்து, நன்றாக புரிந்து கொண்டு அதன்படி நடப்போம். நிச்சயமாக கர்த்தர் நம்மை நாம் இருக்குமிடத்தில் தலைமையாக மாற்றுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *