Yom Ha Kippurim (Yom Kippur)

Day of Atonement

பாவ நிவிர்த்தி நாள்

தேவ பக்தியுள்ள சந்ததி பெறும்படி தேவன் மனிதனைப் படைத்தார். இதற்காக ஆதாமைப் படைத்தார். நோவா வரையுள்ள முதல் உலகத்தில் அந்த சந்ததி வரவில்லை. இப்போது நாம் வெள்ளத்துக்கு பின் உள்ள இரண்டாம் உலகத்தில் இருக்கிறோம். ஆதாம் செய்த பாவம் என்ன? கனி சாப்பிட்டது அல்ல, சாப்பிடாதே என்ற வார்த்தைக்கு கீழ்ப்படியாதது. எனவே அதற்கு பரிகாரம் வேண்டுமல்லவா? அதற்கு தான் நியாயப்பிரமாணம். நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக ஒரு மனிதன் கீழ்ப்படிந்தால், ஆதாமின் பாவம் முடிவுக்கு வரும். நாம் பிறந்து குறிப்பிட்ட வயதுக்கு பின், பாவி ஆகவில்லை. நாம் பிறந்ததே பாவியாகத்தான். பிறக்கும்போதே எந்த ஒரு மனிதனும் பாவி தான். நாம் அனைவரும் ஆதாமினால் உண்டானவர்கள். ஆதாமின் வித்து(DNA) நமக்குள் இருக்கிறது. எனவே நாம் பாவியாகத்தான் பிறக்கிறோம். ஒரே ஒரு மனிதனால் பாவம் நமக்குள் வந்து விட்டது. அதேபோல ஒரே ஒரு மனிதன், பரிகாரமாகிய நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்தால், இந்த பாவம் மாற முடியும். அந்த கீழ்ப்படிந்த மனிதனுடைய இரத்தம் மற்ற எல்லாருடைய பாவத்தையும் நீக்க முடியும்.

பாவம் செய்ததினால் ஆதாம் இழந்தது என்ன? நீ சாகவே சாவாய் என்று தேவன் கூறினார். ஆனால் ஆதாம் உடனே சாகவில்லை, 930 வருடம் வாழ்ந்து தான் செத்துபோனார். அப்படியானால் ஆதாம் இழந்தது, நித்திய ஜீவன். இங்கே தேவன், எல்லா நியாயப்பிரமாணத்துக்கும் கீழ்ப்படிந்தால், பிழைப்பாய் என்று சொல்கிறார். எல்லாரும் தானே உயிர் வாழ்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? நித்திய ஜீவன். ஆதாம் இழந்த நித்திய ஜீவன், ஆதாமுடைய கீழ்ப்படியாமையினால் வந்தது. இனி நித்திய ஜீவன் மனிதனுக்கு வர வேண்டுமானால், அவன் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்.

ஒருவன் சிறு வயதிலிருந்தே நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தாலும், ஒரே ஒரு சின்ன பொய் சொல்லி விட்டால், அவ்வளவு தான். நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படியவில்லை. அவனுக்கு நித்திய ஜீவன் இல்லை. அப்படியானால் மனிதன் என்ன செய்ய முடியும்? யாரால் அவ்வளவு உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியும்? எனவே தான், ஆண்டவர் Yom Kippur நாளைக் கொடுக்கிறார். மனிதன் எவ்வளவு கீழ்ப்படிந்த வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் தவறுகிறான். அவனை தேவன் மன்னித்தால் தான், அவனால் மீண்டும் நியாயப்பிரமாண வாழ்க்கை வாழ முடியும். அந்த மன்னிப்பின் பெயர் தான் Yom kippur என்று வைத்துக் கொள்ளலாம். யாம் கிப்பூர் என்பதை பாவ நிவாரண நாள், ஒப்புரவாக்குதலின் நாள், மூடப்படுதலின் நாள், Day of Covering என்று கூறுவார்கள். அதாவது ஒருவருடைய பாவம் மூடப்படுகிறது.

பாவ நிவாரண நாளில் என்ன செய்யப்படுகிறது?

  1. வேறு வஸ்திரம் உடுத்த வேண்டும்

இந்த பாவ நிவிர்த்தி நாளில் பிரதான ஆசாரியன் வேறு வஸ்திரம் உடுத்த வேண்டும். பிரதான ஆசாரியன் மற்ற நாட்களில் அணிந்திருக்கும் ஆடை விலை உயர்ந்தது. ஆனால் இந்த பாவ நிவாரண நாளில் உடுக்கச் சொன்ன ஆடை, சணல் நூலால் ஆனது, விலை குறைந்தது. தங்களை தாழ்த்துவதற்கு அடையாளமாக இந்த வெள்ளை உடை அணிகின்றனர்.

  • ஆரோன்(பிரதான ஆசாரியன்) குடும்பத்துக்கான பாவமன்னிப்பு ( காளை பலி)

(லேவி 16- 11 முதல் 14) ஆரோன் முதலாவது தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் பாவ நிவாரண பலி செலுத்த வேண்டும். ஒரு காளையை பாவ நிவாரண பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை சர்வாங்க தகன பலியாகவும் செலுத்தி முடித்துவிட்டு தான் மக்களுக்கான பலி செலுத்த வேண்டும்.

முதலாவது அந்த இளங்காளையை பலியிட வேண்டும். அந்த ஆட்டுக்கடா மீதியாக அப்படியே இருக்க வேண்டும். தேவன் கொடுத்த இந்த நாளில் மட்டும்தான் நம் பாவத்துக்கான பலியை செலுத்த முடியும் என்று பார்த்தோம். பலி செலுத்தும் ஆசாரியன் பரிசுத்தமானவரா? எனவே முதலாவது, அவர் கொண்டு வருகிற இளங்காளையை, அதன் தலை மேல் கை வைத்து, அவருக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும் அதை பலியிட வேண்டும்.

இந்த பலியை செலுத்தி முடித்த பின்னர், ஆரோன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்ல வேண்டும். அதற்காக, பலிபீடத்தில் எரிகின்ற கரி அதாவது தணலை போட்டு, தூபவர்க்கத்தை இரண்டு கை நிறைய எடுத்துக் கொண்டு, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வந்து, பின்னர் அந்த தூபவர்க்கத்தை தணலின் மேல் போட வேண்டும். இப்போது இந்த சாம்பிராணி போன்ற வாசனையுள்ள புகை உடன்படிக்கை பெட்டியின் மூடியான, கிருபாசனத்தை மூடும்போது, கிழக்கு திசையில் ஆசாரியன் நின்றுகொண்டு, களையின் இரத்தத்தை ஏழு முறை தெளிக்க வேண்டும்.இப்படி செய்தால் தான் அவர்கள் பாவம் மன்னிக்கப்படும்.

  • இஸ்ரேல் மக்களுக்கான பாவ மன்னிப்பு

மக்கள் ஆரோனிடம் இரண்டு வெள்ளாட்டுக்கடா கொண்டு வர வேண்டும். அந்த ஆடுகளின் மீது சீட்டு போடுவார்கள், சீட்டில் வந்த ஒன்று கர்த்தருக்கு பலி கொடுக்க, மற்றொன்று ஜனங்களின் பாவத்தை சுமந்து போக்காடாக விடப்பட வேண்டும்.

கர்த்தருக்கென்று சீட்டு போடப்பட்ட அந்த வெள்ளாட்டுக்கடாவை பலியிட்டு, அதனுடைய இர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு, ஆரோன் இரண்டாம் முறையாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்ல வேண்டும். ஆரோன் தன் பாவத்துக்காக, தன் குடும்பத்தாரின் பாவத்துக்காக தெளித்தது போல, ஏழு முறை தெளிக்க கூடாது.

இரத்தத்தை கிருபாசனத்தின் மேலும், கிருபாசனத்துக்கு முன்பாகவும் இரத்தம் தெளிக்க வேண்டும்.

  • பலிபீடத்தில் செய்ய வேண்டியவை

இதுவரை மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருந்த ஆரோன், இப்போது வெளியே உள்ள பிரகாரத்துக்கு வருகிறார். பிரகாரத்தில், தண்ணீர் தொட்டியும், பலிபீடமும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்த பலிபீடத்தின் மேல் நான்கு மூலைகளிலும், 4 கொம்பு இருக்கும். பிரதான ஆசாரியன் தனக்காக பலியிட்ட காளையின் இரத்தத்தையும், மக்களுக்காக பலியிட்ட வெள்ளாட்டின் இரத்தத்தையும் கலந்து, அதை அந்த 4 கொம்புகளின் மேலே பூச வேண்டும். இந்த பலிபீடத்தின் மீதும், 7 முறை கலந்து வைத்த இரத்தத்தை தெளிக்க வேண்டும்.

  • போக்காட்டுக்கு செய்ய வேண்டியவை

இன்னுமே இஸ்ரவேலரின் பாவங்கள் நீக்கப்படவில்லை. எனவே, அடுத்ததாக, போக்காடாக விடும்படி தெரிந்து வைத்த ஆட்டின் மீது, பிரதான ஆசாரியன் கை வைத்து, இஸ்ரவேலர் செய்த எல்லா பாவங்கள், அக்கிரமங்களை அந்த ஆட்டின் மீது சொல்லி, ஒரு மனிதனிடம் கொடுத்து விடுவார். அந்த மனிதன், அந்த ஆட்டை கூட்டிக்கொண்டு, வெகுதூரமான வனாந்திரமான இடத்துக்கு கொண்டு போய் விட வேண்டும். அந்த ஆடு திரும்பி வந்துவிடக்கூடாது, வந்து விட்டால் இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்று அர்த்தம்.

  • ஆரோன்(பிரதான ஆசாரியன்) குளித்து வஸ்திரம் மாற்ற வேண்டும்

அந்த ஆட்டை அனுப்பி விட்ட பின்னர், ஆரோன் குளித்து, தன் சணல் நூல் வஸ்திரத்தை மாற்றி, பிரதான ஆசாரியன் வஸ்திரத்தை உடுத்திக்கொள்ள வேண்டும்.

  • பிரதான ஆசாரியன் மற்றும் ஜனங்களுக்கான சர்வாங்க தகனபலி

இன்னும் இந்த காரியங்கள் முடிவுபெறவில்லை. ஆரோன் தனக்காக பலியிட, ஒரு காளையை பாவ நிவாரண பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை சர்வாங்க தகனபலியாகவும் கொண்டு வந்தார். இஸ்ரவேல் மக்களுக்காக பலியிட, பாவ நிவாரண பலியாக இரண்டு ஆட்டுக்கடாவும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவும் கொண்டு வந்தார்கள். ஆரோன் காளையை பலியிட்டு விட்டார். மக்களுக்கான இரண்டு ஆட்டுக்கடாவும், ஒன்று பலியாகவும், மற்றொன்று போக்காடாகவும் போய்விட்டது. இந்த பலிகளின் இர்த்தம், கொழுப்பு இன்னும் எரிக்கப்படவில்லை. அதேபோல, சர்வாங்க தகன்பலிக்கான ஆரோனின் ஆடும், மக்களின் ஆடும் அப்படியே தான் இருக்கிறது.

முதலாவது ஆரோன், தனக்காக கொண்டு வந்த சர்வாங்க தகன பலியையும், மக்களுக்கான சர்வாங்க தகனபலியையும் எரிக்க வேண்டும்

பாவ நிவாரண பலியின் கொழுப்பை, பலிபீடத்தின் மீது வைத்து எரிக்க வேண்டும். மற்ற அவைகளின் பகுதியை ஆசரிப்புக்கூடாரத்துக்கு வெளியே கொண்டுபோய் எரிக்க வேண்டும். இது முடிந்தால்தான் தேவன் அவர்கள் பாவங்களை மன்னித்து விட்டார் என்று அர்த்தம். இத்ற்கு பிறகு அவர்கள் பாவம் செய்யக்கூடாது. நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும். ஆனால் அடுத்த வருடமும், அவர்கள் பலி செலுத்த வந்தார்கள் என்றால், அவர்களால் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியவில்லை என்று அர்த்தம்.

ஒரே ஒருவரால் மட்டும்தான் நியாயப்பிரமாணம் முழுவதுக்கும் கீழ்ப்படிய முடிந்தது. அதனால்தான் அவர் மரித்தாலும் உயிரோடு எழுந்தார். கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதால் உயிர்த்தெழுந்தார் என்பது சரி என்றாலும், அவர் மனிதனாக வாழ்ந்து, நியாயப்பிரமாணம் முழுமைக்கும் கீழ்ப்படிந்து, வெற்றி பெற்றதால் மட்டுமே ஜீவனைப் பெற்றுக் கொண்டார். ஆதாம் கீழ்ப்படியாமையால் இழந்தது ஜீவன், கிறிஸ்து கீழ்ப்படிந்ததால் பெற்றுக்கொண்டது ஜீவன்.  

பண்டிகையின் நிஜம்

யூதர்களின் ஆறாவது பண்டிகை Yom kippur, யாம் கிப்பூர், பாவ நிவிர்த்தி நாள், Day of Atonement, Day of Covering, Day of Ransom, மீட்பின் நாள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியே வரும்போது, பத்தாவது வாதையில், தலைச்சன்பிள்ளை சங்காரம் நடந்தது. யாரெல்லாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக்கால்களில் பூசியிருந்தார்களோ, அவர்கள் வீட்டில் சாவு இல்லை. அதேபோல இங்கேயும் இஸ்ரவேலரின் பாவத்திலிருந்து மீட்பதற்காக, ஒரு ஆட்டுக்குட்டி தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்து எப்படி இதனோடு தொடர்பு படுத்தப்படுகிறார் என்கிற நிஜத்தை இப்பதிவில் காணலாம்.

  1. வஸ்திரம்

எபிரேயர் 4-14ல் பவுல் இயேசுதான் நமக்கு பிரதான ஆசாரியர் என்று சொல்லிவிட்டார். பாவ நிவிர்த்தி நாளில், பிரதான ஆசாரியன், தன் மகிமையான வஸ்திரத்தை கழற்றி வைத்துவிட்டு, குளித்து, சணல் நூல் வஸ்திரம் போட வேண்டும்.  இயேசுவும் தம் பிரகாசமான, மகா மேன்மையான வஸ்திரத்தை கழட்டி வைத்து விட்டு, இந்த உலகிற்கு வந்தார், குளிப்பதற்கு ஞானஸ்நானம் எடுத்தார். சணல் நூல் வஸ்திரம் என்பது அவரின் தாழ்மை, அவர் அடிமையின் ரூபமெடுத்து, சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார் என்பதன்படி, அவர் தாழ்மையாகி, சீஷர்களின் கால்களைக் கழுவினார்.

  • காளை பலியிட வேண்டும்

பிரதான ஆசாரியன், தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் முதலில் காளை பலியிட வேண்டும்.  கிறிஸ்துவுக்கு ‘தனக்காக’ என்பது, அவரது சரீரம் என்று வைத்துக்கொண்டால், நாம் தான் அவர் சரீரம், அதேபோல அவரது குடும்பம் என்றாலும் சபையாகிய நாம்தான் அவர் குடும்பம். எனவே இயேசு தன் ஜீவனைக் கொடுத்தது முதலாவதாக சபைக்கு தான். அதன்பின்னர் தான் மற்றவர்களுக்கு. அப்படித்தான் நாமும் ஆசாரியர்கள் ஆகிவிட்டோம்.

ஆரோன் பிரதான ஆசாரியன், கிறிஸ்து பிரதான ஆசாரியர். ஆரோன் காளை பலியிட்டார். கிறிஸ்து எதை பலியிட்டார்? ஆரோன் புது சிருஷ்டி என்றால், காளை என்பது மாம்சம். கிறிஸ்து புது சிருஷ்டியாகி, தன் சரீரத்தை சிலுவையில் பலியிட்டார்.

காளையின் இரத்தத்தை எடுத்து, பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்று இரத்தத்தை தெளிக்க வேண்டும். கிறிஸ்துவும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு சென்றாரா?

கிறிஸ்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு தன் சொந்த இரத்தத்தை எடுத்துக் கொண்டு போனார். இந்த மகா பரிசுத்த ஸ்தலம் என்பது பரலோகத்தில் உள்ளது. தூபம் போன்ற சாம்பிராணி போட, தம்மையே சுகந்த வாசனையான காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாராம்.

பிரதான ஆசாரியன் கிழக்கு திசையில் இருந்து இரத்தத்தை தெளிக்க வேண்டும். வேதத்தில் கிழக்கு என்பது, தேவனை விட்டு தூரமானவர்களைக் குறிக்கும். காயீன் கிழக்கே ஒரு தேசத்துக்கு செல்வான். கிழக்கில் சோதோமைப் பார்த்து லோத்து அங்கே செல்வார். தூரமான ஜனங்களுக்காக தெளிக்கப்படும் இர்த்தம் என்பதைக் காட்ட, கிழக்கிலிருந்து தெளிக்க வேண்டும்.

பிரதான ஆசாரியன், தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் இரத்தத்தை தெளித்தார். அப்படியானால், கிறிஸ்து சபைக்காக இரத்தம் தெளித்தார். பிரதான ஆசாரியன் தன் குடும்பத்துக்கான பலி செலுத்தும்போது, 7 முறை தெளிப்பார். இயேசு 7 முறை என்பது, 7 சபையின் காலத்துக்கு தெளித்து விட்டார். அதனால்தான் 7வது சபையில் வாழ்ந்தாலும், நாம் இன்றும் அவர் இரத்தத்தால் நாம் கழுவப்படுகிறோம்.

  • மக்களுக்காக 2 ஆட்டுக்குட்டி பலி

மக்களுக்காக பலியாகப்போகிற அந்த ஆட்டுக்குட்டி இயேசு தான். இந்த ஆட்டுக்குட்டி இஸ்ரேல் மக்களின் பாவ மன்னிப்பிற்காக. காளையும் இயேசு தான், ஆட்டுக்குட்டியும் இயேசு தான், பிரதான ஆசாரியனும் இயேசு தான். காளை என்பது தன் குடும்பத்துக்காக ஆசாரியன் செலுத்தும் பலி. அதாவது இயேசுவின் குடும்பமாகிய சபைக்காக முதலாவது பலி செலுத்தப்பட்டது. ஆட்டுக்குட்டி என்பது இஸ்ரவேல் மக்களுக்காக. சபைக்கு பின்னர் தான் இஸ்ரவேலர்.

  • பிரகாரத்தில் கொம்பில் இரத்தம்

ஆட்டின் இரத்தத்தையும், காளையின் இரத்தத்தையும், கலந்து, பலிபீடத்தின் மேலே, 4 கொம்புகளிலும் தடவ வேண்டும். உட்பிரகாரத்தை விட்டு, வெளிப்பிரகாரத்தில் வந்து இரத்தம் தடவ வேண்டும். இயேசுவும், நகர வாசலுக்கு புறம்பே வந்து பாடுபட்டார். (எபிரேயர் 13-12) சிலுவையில் அறையும்போது, 4 இடத்திலிருந்து தான், கிறிஸ்துவுக்கு இரத்தம் வரும், இரு கைகள், கால்கள், தலையில் முள்முடி. இறந்த பிறகு தான் விலாவில் குத்தி பார்ப்பர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *