ஆசரிப்பு கூடாரம்

எபிரேய காலண்டரில், ஏழாம் மாதம் முதல் தேதி எக்காள பண்டிகை கொண்டாடப்படுகிறது. பத்தாம் தேதி, பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடப்படும். பதினைந்தாம் தேதியிலிருந்து, எட்டு நாட்கள், கூடாரப் பண்டிகை கொண்டாடப்படும் என்பது நாம் அறிந்ததே. ஏழு வேத பண்டிகைகளில் ஐந்து பண்டிகைகள் பார்த்து விட்டோம். இப்போது பாவ நிவிர்த்தி நாள் என்பது ஆறாம் பண்டிகை.

பாவ நிவிர்த்தி நாளைப் பற்றி தெரிந்து கொள்ள, ஆசரிப்பு கூடாரத்தை பற்றி அறிந்திருப்பது அவசியம். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வரும்போது, மோசேயை சீனாய் மலையில் ஏறி வரச் சொன்னார். அப்போது, இஸ்ரவேலருக்கு நடுவிலே கர்த்தர் தங்கும்படி, தனக்கு ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் செய்யச் சொன்னார். அதுவும், பரலோகத்திலுள்ள மாதிரியைக் காண்பித்து, இதன்படி மாத்திரம் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆக தேவன் காண்பித்த மாதிரிதான் ஆசரிப்பு கூடாரம் (Tabernacle).

இந்த ஆசரிப்பு கூடாரத்தில் மூன்று முக்கிய இடங்கள் காணப்படுகிறது. அவை, வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். வெளிப்பிரகாரத்தில் யார் வேண்டுமானாலும் பலி செலுத்த உள்ளே வரலாம். பரிசுத்த ஸ்தலத்தில், ஆசாரியர்கள் வரலாம். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உள்ளே வர முடியும். அந்த ஒரு நாள் தான் இந்த பாவ நிவிர்த்தி நாள்.

ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பிரிவுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறம், உள்ளே பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்.

வெளிப்புறத்தில் இரண்டு காரியங்கள் உள்ளன. அவை பலிபீடம் மற்றும் தண்ணீர் தொட்டி. இந்த பலிபீடத்தில் தான் பலி செலுத்தப்படும், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் ஆசாரியர் தன் கைகளை கழுவுவார்.

உட்பிரகாரத்தில் இரு பகுதிகள் உள்ளன. பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். இந்த இரு பகுதிகளுக்கும் இடையே திரைச்சீலை இருக்கும்.

பரிசுத்த ஸ்தலத்தில், சமூகத்து அப்ப மேஜையும், குத்து விளக்கும், தூப பீடமும் இருக்கும். இந்த மேஜையில், தினமும் அப்பங்களை மாற்றி வைப்பர், முந்தின நாளின் அந்த அப்பங்களை ஆசாரியன் மட்டும் தான் சாப்பிடலாம். தாவீது ஒருமுறை சமூகத்து அப்பங்களை சாப்பிட்டார் என்று வேதத்தில் படிப்போம் அல்லவா! அது இந்த அப்பங்களைத தான். குத்து விளக்கில் எப்போதும் அணையாமல் தீ எரிந்து கொண்டிருக்க வேண்டும். திரி கருப்பாகி மேலே இருப்பதை வெட்டுவதற்கு கூட பொன்னினால் செய்த கத்தரிக்கோல் செய்யச் சொல்லி இருப்பார் தேவன். தூப பீடத்தில் தூபம் போட வேண்டும். அதாவது சாம்பிராணி புகை போல ஒன்று போட வேண்டும்.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டி இருக்கும். இந்த பெட்டியின் மூடி தான் கிருபாசனம் (Mercy Seat). கிருபாசனத்தின் மீது இரண்டு கேரூபீங்கள் இருக்கும், அதன் நடுவில் இருந்து தான் கர்த்தர் பேசுவார்.

பொதுவாக பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்கள் எல்லாம் பொன்னால்(Gold) செய்யப்பட்டவை. இந்த ஆசரிப்பு கூடாரத்தை, வனாந்திரத்தில் பிரயாணம் செய்யும்போது,  பிரித்து தூக்கி செல்வார்கள். எங்கு தங்குவார்களோ, அங்கு மீண்டும் ஆசரிப்பு கூடாரம் கட்டப்படும். உள்ளே உள்ள பரிசுத்த ஸ்தலத்தின், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்களை, கையால் தூக்கி செல்லக் கூடாது. எடுத்துக்காட்டாக, உடன்படிக்கை பெட்டி எடுத்துக்கொண்டால், இரு பக்கங்களில் சேர்த்து மொத்தம் நான்கு வளையங்கள் இருக்கும். பொன்னால் செய்த கம்புகளை, இந்த வளையத்திற்குள் விட்டு, அந்த தண்டுகளைப்பிடித்து தான் தூக்க வேண்டும். இதுதான் ஆசரிப்பு கூடாரத்தின் Basic. ஆசரிப்புக் கூடாரத்தை பற்றி ஆழமாக வரும் காலங்களில் பார்க்கலாம். நீங்கள் அறிந்த காரியமாக இருந்தாலும் உங்களுக்கு நினைவு படுத்துதலுக்காக இங்கே பதிவிடப் பட்டுள்ளது.

ஒரு ஆசரிப்பு கூடாரத்துக்குள் மனிதன் செல்ல வேண்டுமானால், கையில் பலி இல்லாமல் செல்ல முடியாது. அந்த வாசலைக் கடக்கவேண்டுமானால் பலி அவசியம். ஆசாரியன், பலியைக் கொண்டு வந்த மனிதன் என்ன பாவம் செய்தான் என்று பார்க்க மாட்டார். கையில் உள்ள பலியில் குறை உள்ளதா என்று மட்டும்தான் பார்ப்பார். பலியில் குறை இருக்க கூடாது. நான் எவ்வளவு பாவி என்பதை ஆசாரியர் பார்க்க மாட்டார்.

பலியிட்டு முடித்ததும், அந்த கரியை(எரிந்த பலியின் எரிகல்) கொண்டு, ஆசாரியன் மட்டும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்று, தூபபீடத்தில் தூபம் காட்டுவார். இந்த தூபம் காட்டுவதற்கு ஆசாரியர்கள் தங்கள் முறைமையின் படி வர வேண்டும்.

யோவான்ஸ்நானகனின் அப்பா சகரியாவுக்கு தூபம் காட்டும் முறை வந்தது என்று வேதத்தில் படிப்போம் அல்லவா! இந்த பரிசுத்த ஸ்தலத்துக்குள் தூபம் காட்ட தான் அவர் வந்திருப்பார். தேவதூதர் சகரியாவை சந்தித்து, அவர் வாய் பேச முடியாமல் போனது கூட பரிசுத்த ஸ்தலத்தில்தான். 

வருடத்தில் ஒரேஒரு நாள், தேவன் நியமித்த நாளான பாவ நிவிர்த்தி நாளில் மட்டும் தான், பிரதான ஆசாரியரால் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்ல முடியும். அதுவும் பலியிட்ட பலியின் இரத்தத்தை உடன்படிக்கை பெட்டியின் மீது தெளிப்பார். பாவம் மன்னிக்கப்படும். 

இது நினைவுகூறலுக்காக மட்டுமே இந்த பதிவு. அடுத்த பதிவில், பாவ நிவிர்த்தி நாளைப் பற்றி பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *