Day – 3 (03- டிசம்பர், 2023)

அனுதின உணவுக்காக நன்றி

இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால் அது விருந்து தான். ஏனெனில், மட்டன் சாப்பிட்டால் கொல்ஸ்ட்ரால் என்று, 30 வயதிலே மட்டன் சாப்பிட முடியாமல் ஏங்குபவர்கள் அதிகம். ஏதோ ஒரு நாள், கடையில் பரோட்டா சாப்பிட்டால், அது கூட விருந்து தான். ஏனெனில், பரோட்டா சாப்பிட ஆசை இருந்தும், சாப்பிட முடியாமல் இளவயதினர் இருக்கின்றனர். இதேபோல நிறைய சொல்லலாம். பழைய கஞ்சி சாப்பிட்டால் சளி பிடிப்பவர் அனேகர். தண்ணீர் அதிகமாக குடித்தால் வாந்தி எடுப்பவர் அனேகர். ஒரு சகோதரன், 25 வயதில் டையலிசிஸ் செய்யும் ஒரு பையனால், இவ்வளவு மில்லிலிட்டர் தண்ணீர் தான் உடலில் சேர்க்க வேண்டும் என்று, குழம்பு கூட ஊற்றாமல், அளவு சாப்பாடு தான் சாப்பிட முடியும்.  நினைத்தவுடன் தண்ணீர் குடிக்க முடியாது. இப்பொழுது யோசித்தால், நாம் எவ்வளவு அருமையாக விருந்து சாப்பிடுகிறோம் என்பது புரியும். டெய்லி சாப்பாடு தர்றீங்க, நன்றி என்ற வார்த்தை அல்ல, ஆ… இவ்வளவு பேர் கஷ்டப்படும்போது, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என்று மனதார உணர்ந்து சொல்வதே உண்மையான நன்றி.

ஒரு ஊழியர், ஊழியத்துக்கு போகும்போது, காரில் ஏறியவுடன், இன்றைய நாளின் கூட்டத்தில் அனேக ஆத்துமாக்களை அறுவடை செய்ய வேண்டும் என்று கண்களை மூடி ஜெபித்துக்கொண்டே போவாராம். திரும்பி வரும்போதும், காரில் ஏறியவுடன், கண்களை மூடி ஆண்டவரே நன்றி என்று ஜெபித்துக்கொண்டே வருவாராம். ஒரு நாள் அந்த ஊழியரோடு ஆண்டவர் இடைபட்டாராம். “நீ சொல்லுகின்ற நன்றி எனக்கு பிரியமானது தான். அதை விட பிரியமானது ஒன்று உண்டு தெரியுமா?” என்று கேட்டாராம்.  “நான் உனக்காக பார்த்து பார்த்து படைத்த, இந்த படைப்புகளைப் பார். அழகிய மலர்களைப் பார். மரங்களைப் பார். உனக்காக நான் படைத்த படைப்புகளைப் பார்த்து, நீ அப்படியே சந்தோஷப்பட்டு, எனக்காக இதைப் படைத்தீரே நன்றி என்று சொன்னால், என் இருதயம் களிகூறும்” என்று ஆண்டவர் கூறினாராம்.

ஒரு சூரியனைப் பார்க்கும்போது, நமக்கு தேவையான் அளவு மட்டும் வெளிச்சம் தருகிறது, தேவையான அளவு மட்டும் வெப்பம் தருகிறது. அதன் வெப்பம் கொஞ்சம் அதிகமானால் கூட, நம்மால் வாழ முடியாது. அதற்கு ஏற்றாற்போல சரியான இடத்தில் சூரியனை வைத்திருக்கிறார். உம் படைப்பான சூரியனுக்காக நன்றி என்று சொல்லலாம். கடலைப் பார்த்தால், இந்த அலைகளுக்கு ஒரு லிமிட் வைத்து இம்மட்டும் வா, மிஞ்சி வராதே என்று வைத்திருக்கிறாரே என்று நன்றி சொல்ல வேண்டும். இப்படி பார்க்கிற ஒவ்வொரு படைப்பும் நமக்காக படைக்கப்பட்டது என்பதை உணர்ந்து நன்றி சொல்வது ஆண்டவருக்கு பிரியமான நன்றி பலி.

ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், இதை சாப்பிட முடியாதவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள், நான் இன்று சாப்பிடுகிறேன் நன்றி என்று நாம் சொல்லி இருக்க மாட்டோம். இன்றாவது, இந்த வருடம் முழுவதும் நாம் நன்றாக சாப்பிட்டோம். எத்தனை நாட்கள் ஹோட்டலில் சாப்பிட்டோம். என்பதை எல்லாம் நினைத்து பார்த்து, நன்றி சொல்லலாமா?

உணவே மருந்து என்பது மாறி, உணவே விஷமாகி விட்டது. சாப்பிட்டு கூல்டிரிங்க்ஸ் குடித்தவர் சாவு. ஹோட்டலில் சென்று நண்டு சாப்பிட்டவர், சிக்கன் சாப்பிட்டவர், ஷவர்மா சாப்பிட்டவர் சாவு என்றெல்லாம் அறிகிறோம். அவர்களைப் பார்க்கிலும் நாம் நல்லவர் என்பதினால் அல்ல, கர்த்தருடைய கிருபையால் இம்மட்டும் இருக்கிறோம். நினைத்துப் பார்த்து நன்றி சொல்வோம். சில காரியங்கள் நாமும் சாப்பிட கூடாது என்று இருந்தாலும், ஏதோ சில உணவுகள் சாப்பிடுகிறோமே… உணவே சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவோர் ஏராளம். மனதுருகி நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *