போராடும் சிங்கம்

நான் பார்த்த சில செய்திகளின் தொகுப்பை முதலில் உங்களிடம் பகிர விரும்புகிறேன். கடந்த 3 மாதங்களில் வந்த சில செய்திகள் தான் இவை. இன்னும் அநேக செய்திகள் உள்ளன. சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அவை உங்கள் பார்வைக்கு:

13 வயது சிறுவன் மத்திய பிரதேசத்தில், தன் சொந்த தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்கிறான். ஆந்திராவில் 13 வயது சிறுவர்கள் இப்பொழுதே  கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். மகாராஷ்டிராவில் 13 வயது சிறுவன், தன் சொந்த அக்காவை கர்ப்பமாக்குகிறான். எங்கே சென்று கொண்டு இருக்கிறது இந்த தலைமுறை? எல்லா வீடுகளிலும், மகன் தவறு செய்து விட்டு வந்ததும், பெற்றோர்கள், அந்த தவறை மறைக்க பார்க்கின்றனர். நமது காலத்தில் ஏன் எல்லாம் தவறாகவே நடக்கிறது? 13 வயது என்பது 7 அல்லது 8ஆம் வகுப்பு படிக்கும் வயது. இந்த வயதுக்குள் பிள்ளைகளுக்கு எல்லா விவரங்களும் எப்படி தெரிகின்றது?அதற்கு ஒரே காரணம் ஆபாச படங்கள் மட்டுமே.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை… இதுதான் தற்போதைய செய்தி. நம் அனைவருக்கும் அது செய்தி மட்டுமே. அந்த பெண்ணின் வீட்டாருக்கு அது எவ்வளவு கொடுமையானது. கைது செய்திருக்கிற அந்த நபரின் போனை ஆய்வு செய்தால், உள்ளே ஆபாச படங்கள் இருந்திருக்கிறது. மது குடித்து விட்டு, ஆபாச படம் பார்த்து விட்டு, பார்த்ததை செயல்படுத்த துணிந்து விட்டார். இந்நிகழ்வுக்கு முக்கிய காரணம், ஆபாச படம்.

ஒரு காலத்தில் ATM pin நம்பர் சொல்ல சொல்லி ஏமாற்று வேலைகள் நடந்தது. ஆதார் நம்பரை வைத்தே ஒரு OTP மூலம், அவ்வளவு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்தார்கள். பல வழிகளில் ஆன்லைன் மோசடி நடந்தது. இப்போது புதிய மோசடி என்னவென்றால், ஆபாச படம் பார்ப்பவரை குறிவைத்து, பணம் பறித்தல்.  எங்கே கொண்டு செல்கிறது ஆபாசபட மோகம்? எலான்மஸ்க், அமேசான் பகுதி பழங்குடி மக்களுக்கு, அவர்களும் டெக்னாலஜியில் வளர வேண்டும் என்பதற்காக, போன் வசதி, இணைய வசதி கொடுத்தாராம். இப்போது, அங்கிருக்கும் வாலிபர்கள், முழு நேரமும் வேலைக்கு செல்லாமல், ஆபாச படத்தில் மூழ்கி கிடக்கிறார்களாம். ஏன் ஆபாச படத்தில் சிக்கியவர்களால் வெளிவர முடியவில்லை. குழந்தை இல்லை என் மருத்துவமனைக்கு சென்றால், முதலில் சில மருத்துவர்கள் கூறும் அறிவுரை, ஆபாச படத்தை பார்த்து மூட் வர வையுங்கள் என்பது தான். அப்படியானால், ஆபாச படம் தவறு இல்லையா?

தமிழ்நாட்டில், 50 வயது முதியவருக்கு 5 வயது குழந்தை தேவைப்படுகிறது. கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்தான் ஒழுக்கங்களையும் கற்றுக் கொடுக்கிறவர். ஆனால் இங்கோ, ஆசிரியர் மாணவியை ஆபாச படம் அனுப்பி பார்க்க வைக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். எங்கே செல்கிறது நம் சமுதாயம்? இவன் தான் நம் எதிர்காலம் என நம்பி வரும் காதலியை, நண்பர்களுக்கு விருந்து ஆக்குகிறான். ஒரே நேரத்தில் பல ஆண்களோடு தவறான உறவில் பழகுகிறார்கள் கல்லூரி மாணவிகள், பெண்கள். எங்கே தான் செல்கிறோம் நாம்? உட்சகட்டமாக, மனைவிகள் கணவரை swap (மாற்றிக் கொள்ளும்) செய்யும் புதிய கலாச்சாரம்! நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? பரிசுத்தமான தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தம் எங்கே போனது? இத்ற்கெல்லாம் காரணம் உண்மையில் ஆபாச படமா? அதன் பின்னிருந்து செயல்படும் அசுத்த ஆவிகளா?

நாம் பார்க்கப் போகிற ஒரு புது தலைப்பு “விடுதலை”. இன்று நம்மில் அனேகருக்கு விடுதலை தேவைப்படுகிறது. நாம் நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு பாவத்தில் சிக்குண்டு இருப்போம். அது ஒருவேளை, அதிக கோபமாக இருக்கலாம், மது பழக்கமாக இருக்கலாம், ஆபாசப்படமாக இருக்கலாம், சோசியல் மீடியாவாக இருக்கலாம்… இப்படி ஏதோ ஒன்றில் நாம் அடிமையாக இருக்கலாம்.அதிலிருந்து நமக்கு விடுதலை தேவை.

எடுத்துக்காட்டாக, ஆபாச படங்களை எடுத்துக் கொள்வோம். அது பலருக்கு கண்ணியாக இருக்கிறது. இன்று நம் கையில் இருக்கும் மொபைலின் மூலமாக, ஆண் பெண் பேதம் இல்லாமல், யார் வேண்டுமானாலும் ஆபாச படங்கள் பார்க்கலாம். சிறியவர், பெரியவர் வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்.

அமெரிக்காவில், 9 வயது சிறுவன் ஆபாச படத்துக்கு அடிமையாகி, சில தவறுகள் செய்தான் என செய்தியில் படித்தேன். எவ்வளவு மோசமான நிலைக்கு உலகம் போய்விட்டது  அல்லவா!

வேதத்தில், சிம்சோன் ஒரு போராட்டத்துக்குள் வந்தார். அது என்ன போராட்டம்? “சிங்கம்”. அவரை கொல்ல ஒரு சிங்கம் வருகிறது, ஆனால் அவரே அந்த சிங்கத்தை கொன்று போட்டார். தாவீது, தன் மந்தையை மேய்க்கும்போது, சிங்கம் வருகிறது. தாவீது சிங்கத்தை கொன்று போட்டார். இயேசு கிறிஸ்து, வனாந்திரத்தில் 40 நாட்கள் உபவாசம் முடிக்கும்போது, சோதனைக்காரனாக கெர்ச்சிக்கிற சிங்கம் வருகிறது. இயேசு அவனை ஜெயித்தார்.

இந்த மூன்று சம்பவத்திலும், சிங்கம் எப்போது வந்தது? சிம்சோன் தனியாக இருக்கும்போது, தாவீது தனியாக இருக்கும்போது, இயேசு தனியாக இருக்கும்போது. எனவே, தனியாக இருக்கும்போது போராட வருகிற ஆவியை “சிங்கம்”, அல்லது “ஆபாச படத்தின் பின்னால் இருக்கும் ஆவி” (The Demon of Pornography) என்று கூறலாம். ஏன்? யாரும், மற்றவர்கள் உடன் இருக்கும்போது, ஆபாச படத்தை பார்த்து இரசிப்பது இல்லை. தனியாக இருக்குபோது தான் போராடுகிறார்கள். இந்த சிங்கம், தனியாக வந்து, நம்முடைய பரிசுத்தத்தை திருடுகிறது. அதனால் தனியாக நம்மை மேற்கொள்ள வருவதை, சிங்கத்துக்கு ஒப்பிடலாம்.

ஒருவர் ஆபாச படத்துக்குள் சிக்கி விட்டார். அதன் தொடர்ச்சியாக என்ன நடக்கும்?

  • அவரைப் பற்றி அவரே பயங்கரமாக (So horrible) உணர்வார்.
  • தன்னை மதிப்பற்றவராக (worthless) உணர்வார்.
  • தான் தோற்றுப் போனவராக (Defeated) உணர்வார்.
  • ஆவி ஒடுங்கிப் போகும்
  • ஒழுக்கம் இல்லாதவராக அவரை அவரே நினைத்துக் கொள்வார்.
  • அவமானம் (Shame), குற்ற உணர்வு (Guilt), குற்ற உணர்ச்சி (Condemnation) அவர் மனதை ஆட்கொள்ளும்.
  • அதீத குற்ற உணர்வு (Extreme Guilt)
  • பொறுமையின்மை (Impatience)
  • தனிமைப்படுத்துதல் (Isolation)
  • பிடிவாதம் (Stubbornness)
  • ஆத்திரம் (Rage)

ஆபாச படம் என்னும், ஒரு பாவத்தின் (One sin) கதவை திறக்கும்போது, அதனோடு சேர்ந்து இன்னும் சில ஆவிகள் நமக்குள் வருகிறது. நாம் அறியாமலேயே, நமக்குள் இருந்து அவை செயல்படும். நாம் நம்முடைய அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம். ஆபாச ஆவிகள் (Demon of Pornography), நமக்கு தெரியாமல் உள்ளே வந்து, நம் பரிசுத்தத்தை திருடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நாமோ, “நான் இன்னும் வல்லமையாக ஜெபிக்கிறேன். என் வாழ்க்கை நன்றாக போகிறது” என்று நினைத்துக் கொண்டிருப்போம்.

இச்சையின் ஆவிகள், ஆபாச படம் பார்க்க தூண்டும் ஆவிகள், விபச்சார ஆவிகள், ஒரு மனிதனுக்குள் வந்து விட்டால், அவனுக்கு தேவை “விடுதலை”. அந்த ஆவிகள் நம்மை விட்டு நிச்சயமாக வெளியேற வேண்டும். சிலர், ஒரு மூன்று மாதம் pornography பார்க்காமல் இருந்து, மீண்டும் அந்த பாவத்துக்குள் சிக்குவர். ஏனென்றால், அவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாரே தவிர, அதற்கு மையமாக இருக்கும் ஆவியை அவர் துரத்தி விடவில்லை.

Pastor. Vladimir Savchuk என்னும் வல்லமையான இளம் ஊழியர் வாஷிங்டனில் இருக்கிறார். நல்ல வல்லமையான போதகராக இருக்கும் அவர், இந்த Pornography பற்றி அனேக வீடியோக்கள் பேசி இருப்பார். அதிலிருந்து எப்படி வெளிவருவது என்றும் பேசி இருப்பார். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, அந்த பாவத்தில் சிக்குண்டு, உழன்று, அதிலிருந்து வெளிவர போராடி, பின்னர் அவர் வெளி வந்த தன்னுடைய அனுபவத்தை அனேக வீடியோக்களில் தைரியமாக பேசி இருப்பார். இந்த தலைமுறையின் பிள்ளைகளை ஆண்டவரிடம் கூட்டிச் சேர்க்கும் வல்லமையான குரல் அவருடையது. அவருடைய பிரசங்கங்களில் நான் கற்றுக் கொண்டு இருப்பதும், இன்னும் சிலருடைய பிரசங்கங்களில் நான் கற்றுக் கொண்டு இருப்பதும், இப்போது பதிவிட விரும்புகிறேன். என் உள்ளத்தில் ஏவப்பட்ட படியினால், இந்த பதிவுகளை பதிவிட விரும்புகிறேன்.

தாவீது தனிமையாக இருக்கும்போது சிங்கம் வந்தது என்று வேதத்தில் வாசித்த Pastor.Vladக்கு அதுவே, விடுதலையின் ஆரம்பமாக இருந்துள்ளது. “தாவீதின் தனிமையில் சிங்கம் என்பதைப் போல, என்னுடைய தனிமையில் pornography” என்று எண்ணிக் கொண்டார். தாவீது தன் தந்தையிடம் போய், “நான் ஒரு ஆட்டை இழந்து விட்டேன்” என்று கண்ணீர் வடிக்கவில்லை. தாவீது எழுந்து, தைரியமாக போராடி, சிங்கத்தை கிழித்து, ஆட்டை மீட்டார். அப்படியானால், “நான் என் பரிசுத்தத்தை இழந்து விட்டேன்” என்று நான் கண்ணீர் வடிக்கக்கூடாது. நான் எழுந்து, அந்த ஆபாசபடத்துக்கு விரோதமாக போராட வேண்டும் என முடிவெடுத்து, அவருடைய விடுதலையின் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். 1 சாமுவேல் 17: 34-37 பகுதியில் இந்த சம்பவம் உள்ளது.

தாவீது தன் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தார். சிங்கம் வந்து திருடி சென்றதற்காக, அவர் தன்னை குற்றவாளியாக எண்ணவில்லை. ஒருவேளை அவர் இப்படி சொல்லியிருக்கலாம், “நான் போதுமான கவனத்தில் இல்லை. என் கவனக் குறைவால் சிங்கம் வந்து விட்டது. நான் என் மந்தையை இன்னும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். நான் அதைப் பற்றி கவனமாக (Cautious) இல்லை. சிங்கம் வந்தால், அதற்கென முன் கூட்டியே கண்ணி செய்து வைத்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை” இப்படி தாவீது தன் மீது எவ்வளவோ குற்றப் பத்திரிக்கை வாசித்திருக்கலாம். தாவீது தன்னைக் குற்றப்படுத்தவில்லை.

தாவீது ஒரு சிங்கத்தை வைத்திருந்தான், அது அவன் ஆட்டை தாக்கியது என்று வேதம் சொல்லவில்லை. சிங்கம் வந்து ஆட்டை எடுத்துக் கொண்டது என்று தான் வேதம் சொல்கிறது. அதாவது போராட வரும் சிங்கம், தாவீதுக்குள் இல்லை. வெளியிலிருந்து வந்து சிங்கம் ஆட்டை எடுக்கும்போது, டேவிட் எழுந்து, சிங்கத்துக்கு எதிராக போய், சிங்கத்தை கிழித்து போட்டார்.

“ஆண்டவரே, என்னை விடுவியும். நான் ஒரு ஆட்டை இழந்ததை பார்த்தீரே. நீர் அந்த ஆட்டை திரும்பி வரப் பண்ணும். அந்த சிங்கத்திடமிருந்து என் ஆட்டை விடுவியும். தயவுசெய்து ஆண்டவரே! நான் தவறு செய்யவில்லை என்பது உமக்கே தெரியும். அதனால் என் ஆட்டை திரும்பி தாரும். எழுந்து எனக்காக யுத்தம் செய்யும்” தாவீது இப்படி ஜெபிக்கவில்லை. நானும் நீங்களும், விடுதலை என்பதை இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா! நம்மைப் பொறுத்தவரையில், நாம் சும்மா அமர்ந்து, ஆண்டவரே விடுவியும் என்று ஜெபிக்க வேண்டும். ஆண்டவர், அவராகவே, ஏதாவது அற்புதம் செய்து விடுவிக்க வேண்டும். இப்படித்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தாவீது அப்படி சும்மா அமரவில்லை.

ஆண்டவரே, நான் மீண்டும் மீண்டும் அதே பாவத்தில் விழுவதை நீர் பார்க்கிறீர் அல்லவா! நான் பலவீனமானவன். எல்லா மனிதரும் போராடுவது போல, நானும் போராடுகிறேன். எனக்கு உதவி செய்யும். என்னை விடுவியும். இப்படி நாம் ஜெபிக்கிறோம். ஜெபம் செய்வது உண்மையில் நல்லது. ஆனால் அதோடு நின்று விடக் கூடாது. நாம் எழுந்து போராட வேண்டும்.

  • நாம் இப்போது deliveranceக்காக wait செய்கிறோம்.
  • ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா? தேவன், நாம் எழுந்து, அந்த பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் நேரத்துக்காக, wait செய்கிறார்.

நாம் எழும்ப வேண்டும். நம் குற்ற உணர்வில் இருந்து வெளி வர வேண்டும். நம்மைக் குறித்து உள்ள தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும். நான் ரொம்ப அற்பமானவன், நான் தோற்றுப் போனவன், நான் வக்கிரமானவன், நான் குழப்பவாதி, நான் பாவி, நான் குற்றவாளி இப்படி என்ன மன நிலையில் நாம் இருந்தாலும், அதிலிருந்து வெளிவந்து, தைரியமாக போராட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அதாவது, சிங்கம் தனிமையில் ஆட்டை தூக்கிச் செல்லும்போது, தாவீது தேவனிடம் முறையிடவில்லை. தாவீது எழுந்து, சிங்கத்துக்கு எதிர்த்து நின்று, ஆட்டை மீட்டார். சிம்சோனுக்கு எதிராக சிங்கம் வரும்போது, தேவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்காமல், சிம்சோன் எழுந்து, சிங்கத்தை கொன்று போட்டார். இயேசுவை, கெர்ச்சிக்கிற சிங்கமாகிய பிசாசு, தனிமையில் வனாந்திரத்தில் சோதிக்கும்போது, இயேசு தேவனிடம் வேண்டவில்லை. மாறாக, தான் படித்த வசனத்திலிருந்து பதில் கொடுத்து, பிசாசை மேற்கொண்டார். சில காரியங்களை, நாம் தான் எழுந்து மேற்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். எல்லா காரியத்துக்கும் தேவனிடம் வேண்டுவது உண்மையில் சரியானது தான். ஆனால் சில காரியங்களில், ஜெபத்துடன், நாம் எழுந்து செயல்படவும் வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக அதைப் பார்க்கலாம்.

நாம் தொடர்ச்சியாக இதைப் பற்றி, ஒரு 10 பதிவுகள் பார்க்க போகிறோம். சிலரது அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொள்ளப் போகிறோம். கர்த்தர் வெளிப்படுத்திய சில காரியங்களை கற்றுக்கொண்டு, விடுதலை பெறப்போகிறோம். சில அற்புதங்கள் உடனே நடக்கிறது. சில அற்புதங்கள் நடக்க சில வருடங்கள் கூட ஆகலாம். தேவனுடைய வேளை (Gods Timing) எப்போது என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் கற்றுக்கொள்கிற காரியங்களை தொடர்ச்சியாக செய்யும்போது, ஒருநாள் நிச்சயமாக விடுதலை அடைவோம்.  நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

ஒருவேளை “நான் சும்மா நேரப்போக்குக்காக மட்டுமே இப்படிப்பட்ட பாடங்கள் பார்க்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான் அதற்கு அடிமை அல்ல” என்று நீங்கள் நினைத்தாலும், உண்மை இதுதான். அநேக ஆவிக்குரிய காரியங்கள் மறைந்து இருக்கிறது. ஆபாச படம் என்னும் ஒரு கதவை, நாம் நம் வாழ்வில் திறக்கும்போது, அதனுடன் இணைந்து பல கதவுகள் திறக்கப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக, ஆழமான சத்தியத்துக்குள் தேவன் நம்மை நடத்துவாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *