சவுல் முதல் ராஜா

முதல் ராஜா சவுல் பற்றி பார்க்க இருக்கிறோம். கர்த்தர் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு கொடுப்பதற்கு முன்பே, பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று மோசேயிடம் கூறி இருப்பார். ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும் என்று, கர்த்தர் ஏற்கனவே மோசே மூலமாக வழிகாட்டியிருப்பார்.

ஈசாயை ராஜாவாக்காமல் சவுலை ஏன் ராஜாவாக்கினார் என்று முந்தின பதிவில் பார்த்தோம். சவுலைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

உடல் அளவில், தாவீதைக் காட்டிலும், ராஜாவாகுவதற்கு தகுதியான ஆள் சவுல் தான். 1 சாமுவேல் 10:23
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
சவுல், தன் ஆசையை தேவன் மீது காட்டவில்லை, தாவீது தேவனையே ஆசையாக வைத்திருந்தார். சவுலும் பாவம் செய்தார், தாவீதும் பாவம் செய்தார். உடனே தன் பாவத்தை  அறிக்கையிட்டு மனந்திரும்பியவர் தாவீது. கடின இருதயத்தோடு இருந்தவர் சவுல்.

தாவீது தான், இஸ்ரேலின் ராஜாவாக்குவதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றால், ஏன் பென்யமீன் கோத்திர சவுல் ராஜாவாக வேண்டும்? தாவீதின் கோத்திரமான யூதாவிலேயே ஒருவரை தேவன் ராஜாவாக்கி இருக்கலாமே! என்ற கேள்விக்கு, ‘பத்து தலைமுறை உள்ளே வரக்கூடாது’ என்ற ஒரு நியாயப்பிரமாணத்தை ஒரு காரணமாக முந்தைய பதிவில் பார்த்தோம். மேலும் சில காரணங்களாக வேதவல்லுனர்கள் கூறுகிறதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. ரெபேக்காள் தன் கர்ப்பத்தை பற்றி தேவனிடம் விசாரிக்கும்போது, ஏசா மற்றும் யாக்கோபை, மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று கூறினார். அது யாக்கோபின் வம்சத்திலும் வந்ததாகவும், அதனால் 12வது பையனான பென்யமீனை(சவுல்) அரசராக்கியதாகவும் கூறுகிறார்கள்.
  2. யாக்கோபின் 12 மகன்களில், கடைசியாக பிறந்த பென்யமீன் மட்டுமே கானான் தேசத்தில் பிறந்தவர். அவர் பிறந்த இடத்தின் கனம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
  3. ராகேல் வரும் வழியிலே மரிப்பதற்கு முன்பாக குழந்தையை பெற்று,  அந்த குழந்தைக்கு பென்-ஓனி என்று பேரிட்டாள், அதற்கு துக்கத்தின் மகன் என்று அர்த்தம். ஆனால் யாக்கோபோ அந்த குழந்தைக்கு பென்யமீன் என்று பேரிட்டார். அதற்கு வலது கையின் மகன் என்று அர்த்தம். வலது கை என்றால், அதிகாரத்தைக் குறிக்கிறது. இந்த பெயர் காரணம் கூட பென்யமீன் கோத்திரத்தில் இருந்து முதல் ராஜா வரக் காரணம் என்று கூறுகிறார்கள்.
  4. அடுத்ததாக பென்யமீனுக்கு யாக்கோபு கொடுத்த ஆசீர்வாதம் மற்றும் மோசே கொடுத்த ஆசீர்வாதம். ஆதியாகமம் 49:27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். உபாகமம் 33:12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான். யாக்கோபு ஓநாய் என்றுதான் கூறினாரே தவிர, சிங்கம் என்று கூறவில்லை. காலையில் இரையை பட்சிப்பான், மாலையில் பகிருவான் என்பதன் அர்த்தம், பென்யமீன் முதலில் அரசர் ஆனாலும், தன் ராஜ்யத்தை யூத கோத்திரத்துக்கு கொடுக்க நேர்ந்தது.  அடுத்ததாக மோசே. அவனைக் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே தேவன் வாசமாயிருப்பார் என்று கூறியிருக்கிறார். மற்ற 10 கோத்திரங்கள் சிதறடிக்கப்பட்டு போனாலும், யூதாவும் பென்யமீன் கோத்திரமும் மட்டும் இணைந்து யூதேயா தேசமாகி, யூதர்கள் என்று முழு இஸ்ரவேலரையும் கூற காரணமாயிற்று. அந்த யூதேயா தேசத்தில்தான் கிறிஸ்து பிறந்தார்.

சவுலின் பாவம்

சவுல் பாவம் செய்தார், கடின இருதயமுள்ள மனிதர் என்று எதை வைத்துக் கூறுகிறோம்? பலியிட 7 நாள் காத்திருந்தார், சாமுவேல் வராததால் சவுலே பலியிட்டார்.

சவுல் சாமுவேலிடம், மூன்று காரியங்களைக் கூறுகிறார், முதலாவது, ஏழு நாட்களாக நாங்கள் காத்திருந்தும், நீர் வராததால், ஜனங்கள் திரும்பி போனார்கள், அவர்களை தக்க வைக்க வேண்டுமானால் நான் ஏதாவது செய்ய வேண்டும், பலியிட்டேன். இரண்டாவது, நீர் சொன்ன நேரத்தில் சரியாக வரவில்லை என்று சாமுவேல் மேல் பழி போட்டார். மூன்றாவது, பெலிஸ்தர் மிக்மாஸ் வரை வந்துவிட்டனர், கில்காலுக்கு வந்து என்னை தாக்க கொஞ்ச நேரம் தான் உள்ளது, நான் இன்னும் விண்ணப்பம் செய்யவில்லை. எனவே தான் பலியிட்டு விண்ணப்பம் செய்தேன் என்று கூறினார். இதே சூழலில் நாம் இருந்தால் கூட, இப்படித்தான் பதறுவோம். ஆசாரியர் மட்டுமே பலியிட வேண்டும், ஆனால் சவுல் பலியிட்டதால் அது தவறாகிவிட்டது. நம் காலத்தில், நாம்தான் ஆசாரியர், நாம் தான் ராஜாக்கள். ஆனாலும், அவருடைய ஊழியத்தை செய்யும் ஊழியர்களை நாம் குறை சொல்லக்கூடாது. சாமுவேலின் இடத்தை, தான் எடுத்துக்கொண்ட சவுல் போல இல்லாமல், தேவ ஊழியர்களுக்குரிய மரியாதையை, அவர்களுக்கு கொடுக்க, நாம்  அதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. 

சவுலின் மற்றொரு முக்கிய தவறு

இதைத்தவிர ஒரு முக்கியமான காரியம் சவுல் செய்தார். அது ஒரு வரலாற்று முக்கியமானதாக உள்ளது. 1 சாமுவேல் 15ம் அதிகாரத்தில் அமலேக்கியருடன் ஒரு யுத்தம் நடந்தது. அதில், தேவன் ஒரு வித்தியாசமான காரியத்தை சொல்வார்.

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள நம் தேவன், மனசாட்சியே இல்லாமல், விலங்குகளைக் கூட கொல்லச் சொல்கிறார். நம் தேவன் அப்படிப்பட்டவரா? இல்லையே. பின் ஏன் இப்படி எல்லாரையும் கொலை செய்ய சொல்கிறார்? இதற்கு இரண்டு வகையான விளக்கங்கள் இருக்கிறது.

கர்த்தர் ஏன் கொல்ல சொன்னார்? முதல் விளக்கம்

முதலாவதாக, அகழ்வாராய்ச்சி செய்யும் வேத வல்லுனர்கள் ஒரு கருத்தை கூறுகிறார்கள். எண்ணாகமம் 21: 1 முதல் 3ல் காதேசுக்கும் ஏதோமுக்கும் இடையே, ஆராத் ராஜாவின் பட்டணத்தை பிடிக்கிறார்கள். ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு பட்டணங்களுக்கும் இடையே ஏதேனும் பட்டணம் இருக்கிறதா என்று தேடினால், பாலைவனம் தான் இருந்துள்ளது, எனவே வேதமே பொய் என்று கூட கூறியிருக்கிறார்கள். ஆனால், 2015ல் பாலைவனத்தில், புதையுண்டு இருந்த அந்த பட்டணம் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு பெரிய பட்டணம் பூமியில் புதையுண்டு இருக்கிறது, அதில் இஸ்ரவேலர் கொன்று போட்ட மண்டை ஓடுகள், கூட்டமாக கிடைத்ததாம். அதில் நிறைய கானானிய ஏடுகள் காணப்பட்டுள்ளது. அதை வாசித்தவர்கள் திகைத்துப் போனார்களாம்.

ஒரு விக்கிரக கோவிலின் அடியில், மண்பானையில் எழுதப்பட்ட நிறைய ஏடுகள் கிடைத்தது. அந்த ஏடுகளில் கிடைத்த குறிப்பு, “அவர்கள் மிருகங்களை வணங்கினார்கள். வருடத்துக்கு இரண்டு முறை, மிருகங்களுக்கு பண்டிகை கொண்டாடுபவர்கள், மிருகத்தின் சக்தியை பெற்றுக்கொள்ள, ஆண்கள் பெண் மிருகங்களிடமும்(கழுதை, ஒட்டகம், மாடு, ஆடு), பெண்கள் ஆண் மிருகங்களிடமும் புணர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். மிருகத்தோடு புணரும்போது, Liquid வரும்போது, ஆண்கள் தங்கள் சொந்த மகள்களிடமும், பெண்கள் சொந்த மகன்களிடமும் உடலுறவு கொள்ள வேண்டும். அது கைப்பிள்ளையாக இருந்தாலும், அவர்கள் செய்ய வேண்டும்.” இதை வாசித்தவர்கள் திடுக்கிட்டார்கள். கானானியர்கள் எவ்வளவு மோசமானவர்கள். அதனால்தான், யாக்கோபின் பிள்ளைகளை தேவன் எகிப்துக்கு கூட்டிக்கொண்டு போய், அடிமை என்ற பெயரில், அவர்களை ஒரு இனமாக, பரிசுத்த ஜாதியாக பாதுகாத்து, பெரிய தேச மக்களாக திருப்பிக்கொண்டு வந்து, கானானியரை அழித்து, அவ்விடத்தில் ஜனங்களை வாழவைத்தார்.

வேறு ஒரு குறிப்பில், நோய்களுக்கான அறிகுறி மற்றும், வைத்தியக்குறிப்புகள் கிடைத்துள்ளது. அதில், நோயின் அறிகுறிகளைப் பார்த்த மருத்துவர்கள், இவையெல்லாம் Sexual Diseases என்றும், AIDSன் அறிகுறிகள் என்றும் கூறினார்கள். லோத்தின் மகள்கள் அப்பாவுடன் உடலுறவு கொள்ள தயங்காத காரணம், இந்த பழக்கம் கானானிய பகுதியில் ஏற்கனவே இருந்துள்ளது.

அதனால் தான் தேவன் சவுலிடம், எல்லாரையும் கொல்ல சொல்கிறார். மிருகங்களைக் கூட அழிக்க சொல்லி இருக்கிறார். தேவன் சொல்கிற சில காரியங்கள் நமக்கு புரியவில்லை என்றாலும், நம் வாழ்வின் நன்மைக்காக அவர் செய்கிறார் என்ற விசுவாசத்தை மட்டும் விடவே கூடாது.

கர்த்தர் ஏன் கொல்ல சொன்னார்? இரண்டாவது விளக்கம்

வேதத்தில் 1சாமுவேல் 15ம் அதிகாரத்தில், இந்த காரியங்கள் நடைபெறுகிறது. சாமுவேல் சவுலிடம், அமலேக்கியரை முழுவதும் சங்கரிக்க சொன்னார்.

இது, சாமுவேல் மூலமாக சவுலுக்கு வந்த கட்டளை மட்டும் அல்ல, முன்னரே மோசே மூலமாக தேவன் கூறியிருந்த கட்டளை.

மோசேயுடன் யோசுவா இருக்கும்போது, ஒரு யுத்தத்தில், மோசே கைகளை மேலே தூக்கி இருந்தால் இஸ்ரவேலர் வெற்றி, மோசேயின் கைகள் தளர்ந்து விட்டால் யோசுவாவுக்கு வெற்றி என்ற சம்பவம் தெரியும் அல்லவா! அது அமலேக்கியரோடு நடந்த யுத்தம் தான். அந்த யுத்தம் முடிந்த பிறகு தேவன் சொல்லிய வார்த்தை தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்று.

அடுத்து மோசேயின் கடைசி காலத்திலும் தேவன் சொன்னது, அமலேக்கின் பேரை வானத்தின் கீழெங்கும் இருக்க விடக் கூடாது என்று.

தேவன் ஏற்கனவே அமலேக்கியரை அழித்துவிடு என்று கூறியிருக்கிறார். ஆனால் யோசுவா காலத்தில் அதை நிறைவேற்றவில்லை. ஜனங்கள் அதை பெரிதாக எடுக்கவில்லை. அப்படியே நியாயாதிபதிகள் காலம் முடிந்து, இப்போது முதல் ராஜாவின் காலம் வந்து விட்டது. தேவன் இப்பொழுதும் தன் ஜனங்களுக்கு நியாபகப்படுத்துகிறார், அமலேக்கியரை முழுவதுமாக அழித்துவிடு என்று.

சவுலும், சாமுவேல் சொன்னதுபோல யுத்தத்துக்கு செல்கிறார். ஆனால் நல்ல முதல் தரத்திலிருக்கும் விலங்குகளை கொல்லாமல் விட்டுவிட்டார், அதேபோல ஆகாகையும் உயிரோடு வைத்திருந்தான்.

யூதர்களின் கருத்துப்படி, சவுல் உயிரோடு வைத்திருந்த அந்த ஒரு நாளில், ஆகாக் தன் மனைவியுடன் இருந்ததாகவும், பின்னர் சாமுவேல் அடுத்த நாளில் வந்து ஆகாகை கொலை செய்த பின்னர், அவனுடைய மனைவி கர்ப்பமாகி ஒரு குழந்தையை பெற்றதாகவும் நம்புகிறார்கள். அதனால் என்ன என்று நினைக்கிறீர்களா? ஆகாக் சவுலுடன் முடிய வேண்டிய யுத்தம், முடியாமல், 1000 வருடம் கடந்து அவர்கள் பிள்ளைகளில் வந்து நின்றது.

அடுத்த நாள் காலையில் சாமுவேல் சவுலிடம் வந்து, நீ ஆண்டவருக்கு கீழ்ப்படியவில்லை, உனக்கு பதிலாக இனி ராஜ்யம் வேறே ஒருவனுக்கு போகும் என்று சொன்னார், அதோடு ஆகாகையும் வெட்டிப்போட்டார். அப்போது சாமுவேல் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தை, “உன் தாயும் பிள்ளையற்றவள் ஆவாள்”. எனவே ஆகாகின் தாய், அவன் மனைவி எல்லோரும் உயிருடன் பிழைத்து வேறே ஊருக்கு சென்று வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம்.

இந்த யுத்தம் அதோடு முடியவில்லை. ஆயிரம் வருடங்கள் கடந்து, ஆமான் வடிவில், எஸ்தர் மொர்தெகாய் காலத்தில், மொத்த யூத குலத்துக்கும் எதிராக வந்தது.

ஆகாகியன் என்பது ஏதோ ஒரு நாடு அல்ல. ஆகான் என்பவனது வம்சமும், தழைத்து வளர்ந்து கொண்டே வந்தது. ‘மொர்தெகாய் மதிக்கவில்லை என்றால், அவனை மட்டும் அழிக்கலாமே! ஏன் மொத்த யூத குலத்தையும் அழிக்க திட்டமிட வேண்டும்?’ இது ஒரு வருட பகை அல்ல, ஒரு தலைமுறை பகை அல்ல. இந்த பகை, 1000 வருடங்கள் கடந்து வந்து கொண்டே இருக்கிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எஸ்தர் மொர்தெகாய் என்பவர்கள், சவுல் ராஜாவின் கோத்திரமான பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். ஆகாக் ராஜாவுக்கு பதிலாக, அவர் சந்ததியில் ஆமான் வந்தான். மோசே செய்ய முடியாத காரியத்தை, யோசுவா செய்யாத காரியத்தை, சவுல் செய்யாத காரியத்தை, எஸ்தர் ராஜாத்தி செய்து முடித்தாள். ஆம், அகாஸ்வேரு ராஜா அரசாண்ட 127 நாடுகளிலும், யூதர்கள் தங்கள் சத்துருக்களை கொன்று போட்டார்கள். சூசான் அரமணையிலும் 500 பேரைக் கொன்றனர். ஆமானுடைய குமாரர்களாகிய 10 பேரையும் கொன்று போட்டனர். மொத்தமாக இருந்த இடமே தெரியாமல் ஆகாகின் சந்ததியை அழித்துவிட்டனர்.

தேவன் மோசே மூலமாக, சாமுவேல் மூலமாக, அமலேக்கியரை கொல்லச் சொன்னது, பிற்காலத்தில் முழு யூத குலத்தையும் அழிக்க வருவார்கள் என்பதற்காக. அவர்கள் அழிக்கத் தவறினர். சவுலிடமும் கூறினார், சவுலும் தவறினார். 1000 வருடம் கடந்து மொத்த யூதர்களை, அப்படியே அழிக்க  ஆகாகின் சந்ததி வந்தாலும், கர்த்தருடைய கரம் கூட இருந்து, ஆகாகின் மொத்த இனத்தையும் அழிக்க உதவியது. ஆனாலும், சவுல் கடைசி வரையிலும்,  நான் பாவம் செய்து விட்டேன் என்று கர்த்தரிடம் திரும்பவேயில்லை. அவர் மரித்து, அவருடைய இடத்துக்கு தாவீது அடுத்த ராஜாவாக, கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவனாக வந்து சேர்ந்தார். அடுத்த பதிவில் காணலாம்.

2 responses to “இஸ்ரேல்-15 (சவுல் முதல் ராஜா)”

  1. shalekraj518@gmail.com Avatar
    shalekraj518@gmail.com

    Excellent Explanation

    1. RhemaTamil Avatar

      Praise God. Thank you so much for your encouraging Words…

Leave a Reply to shalekraj518@gmail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan