தாவீதின் பாவம்

தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது.

தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது?

முதல் காரணம்

இச்சம்வத்தில் தாவீது என்ன பாவம் செய்தார்? நான் அனேக நாட்கள் யோசித்ததுண்டு. ‘எல்லாருமே தன்னிடம் எவ்வளவு போர்ச்சேவகர் இருக்கிறார்கள் என்று அறிந்து, அதன்படி யுத்தத்துக்கான திட்டம் வகுப்பார்கள். தாவீதும் அதையே தான் செய்தார், தேவனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’

அந்த இடத்தில் உண்மையாகவே தாவீது அறிய நினைத்தது, “யூதா கோத்திரத்தில் படைவீரர்கள் எவ்வளவு பேர்? மற்ற கோத்திரங்களை கணக்கிட்டால் எவ்வளவு பேர்?” ஏன் இந்த கணக்கெடுப்பு எடுக்க நினைத்தார் தாவீது?

நம் காலத்தைப் போல தான் அப்போதும் தாவீது செய்தார். தாவீது, யூதா கோத்திரத்தை சேர்ந்தவர். அவரை முதலில் ராஜாவாக்கியதும் யூதா கோத்திரத்தார் தான். சவுலின் மரணத்துக்கு பிறகு தான், முழு 12 கோத்திரத்தையும் தனதாக்கி, இஸ்ரவேல் என்று முழு தேசத்தையும் ஆட்சி செய்தார். ஆனாலும், நம் ஜாதியில்(யூதா கோத்திரத்தில்) எத்தனை பேர், பிற ஜாதி வீரர்கள் எத்தனை பேர் என்று தாவீது அறிய நினைத்தார். அதனால்தான் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

மொத்தம் 13 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இஸ்ரவேலில் 8லட்சம், யூதாவில் 5 லட்சம் என்று தான் சொல்கிறார்கள். தேவன் முழு தேசமாக தாவீதின் கையில் கொடுத்திருக்க, தாவீதோ பிரித்து விட்டார். அதனால் தேவ கோபம் வந்தது.

இரண்டாம் காரணம்

தேவன் ஏற்கனவே அவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருக்கிறார், கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காணிக்கை செலுத்தவேண்டும் என்று. ஏன் அப்படி சொன்னார்? தெரியாது. ஆனால் நிச்சயமாக அதற்கு பின்னால் ஆவிக்குரிய காரணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் தாவீது நியாயப்பிரமாணத்தை மீறி விட்டதால் வாதை வந்தது.

 ஏன் கொள்ளை நோயை தேர்ந்தெடுத்தார்?

தாவீதுக்கு தேவன் 3 ஆப்சன் கொடுத்தார். முதலாவது, பஞ்சம். இரண்டாவது யுத்தம். மூன்றாவது கொள்ளை நோய். பஞ்சம் என்றால், ராஜா தன் ஜனங்களுக்காக, பிற தேசத்தில் உணவு கேட்க வேண்டும். யுத்தம் என்றால், பிற தேசத்தோடு யுத்தம் செய்ய வேண்டும், அதற்கு தன் போர் வீரர்களின் தயவு வேண்டும். மனிதன் முன்பாக போக்ககூடாது என்று, சுய நலமாக யோசித்து தாவீது கொள்ளை நோய் பக்கம் சென்றாரா? இல்லை.

தாவீது சுய நலமாக கொள்ளை நோய்க்கு செல்லவில்லை. தாவீது நன்றாக அறிந்திருந்தார், அவர் பஞ்சம் என்றாலும் சரி, யுத்தம் என்றாலும் சரி, அவர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார், மனிதர்களின் உதவியால். ஆனால் கொள்ளை நோய் என்றால், தேவன் தான் மனமிறங்க வேண்டும். தேவன் மன்னித்தாரா இல்லையா என்பதையும் கொள்ளை நோய் சரியாவதன் மூலமாக தாவீது அறிய முடியும். அதோடு, தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அந்த தண்டனையை செலெக்ட் செய்தார்.

பலி செலுத்திய இடம்

இந்த தண்டனையை நிறுத்துவதற்கு தேவன் பலி செலுத்த சொன்னார். எந்த இடத்திலும் தாவீது பலி செலுத்தலாம். ஆனால் தேவனே ஒரு இடத்தை சொல்லி, அங்கே பலி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார் ஒரு இடத்தை தேவனே செலெக்ட் செய்தால், அது எவ்வளவு முக்கியமானது அல்லவா. ஆம், அங்கே தான் சாலமோனை ஆலயம் கட்ட சொன்னார். தேவாலயம் கட்டப்பட்ட இடம் அது. இஸ்ரவேலர் இன்றும் மூன்றாவது ஆலயம் கட்ட போராடிக் கொண்டிருப்பது அதே இடத்தில்தான்.

எது எப்படியோ? அந்த தண்டனையின் மூலம் தான், தேவன் தங்குமிடம் இஸ்ரவேலருக்கு வெளிப்பட்டது.  அதுவும் நன்மைக்கே. இனி சாலமோனைப் பற்றி பார்த்துவிட்டு, ஒவ்வொரு சாம்ராஜ்யங்களைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *