Paul Intro
பவுல் – ஒரு அறிமுகம்
கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து. அவருக்குப் பிறகு கிறிஸ்தவத்தின் வளர்ச்சியிலும், அதன் இறையியலிலும், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்போஸ்தலனாகிய பவுல்.
அநேகருக்கு பவுலைப் மிகவும் பிடிக்கும். அவருடைய வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்து நிறைய செய்திகள் கேட்டிருப்போம். ஆனால் ஒரு காலத்தில், எனக்கு வேதாகமம் ஆழமாகப் புரியாதபோது, எனக்குப் பிடிக்காத ஒருவர் என்றால் அது பவுல்தான்.
அவருடைய நிருபங்கள் பெரும்பாலும் ஆழமான போதனைகளால் நிறைந்திருப்பதால், அவற்றை வாசிப்பதே எனக்கு சலிப்பாகத் தோன்றும். அதோடு, “ஸ்திரீகள் சபையில் பேசக்கூடாது” என்று அவர் எழுதிய வசனத்தை மட்டும் பார்த்து, பவுல் ஒரு ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர் என்ற எண்ணம் என் மனதில் பதிந்துவிட்டது. அந்த ஒரு காரணமே அவரை முழுமையாக வெறுக்கச் செய்தது.
ஆனால் இன்று, கர்த்தருடைய கிருபையால், பவுலை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இன்னும் அவரை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்துள்ளேன்.
ஏன் பவுலைப் பற்றி படிக்க வேண்டும்?
பவுல் ஒரு ராஜாவா?
Alexander the Great போன்ற பேரரசனா?
யூதர்களின் பிரதான ஆசாரியரா?
இல்லை. இல்லவே இல்லை.
அப்படியிருக்க, ஏன் நாம் பவுலைப் பற்றி படிக்க வேண்டும்?
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை மட்டும் வைத்து பவுலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவரது யூதப் பின்னணி, பரிசேயக் கல்வி, ரோமக் குடியுரிமை, கிரேக்க கலாச்சாரத்தின் தாக்கம், அவர் வாழ்ந்த அரசியல் மற்றும் சமூகச் சூழல் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால்தான் அவரது நிருபங்களையும் ஊழியத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
அதற்காக முதலில் அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒரு சிறிய மீள்பார்வை
இஸ்ரேல் குறித்த கட்டுரையில் சில விஷயங்களை ஏற்கனவே பார்த்தோம். அவற்றை இங்கே சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.
தாவீதின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் முழுவதும் ஒரே ராஜ்யமாக இருந்தது. ஆனால் சாலொமோனின் மகன் ரெகொபெயாமின் காலத்தில் அந்த ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது.
வடக்கு ராஜ்யம் – 10 கோத்திரங்களைக் கொண்டது. இதற்கு இஸ்ரேல் என்று பெயர். இதன் தலைநகரம் சமாரியா.
தெற்கு ராஜ்யம் – யூதா மற்றும் பென்யமீன் ஆகிய இரண்டு கோத்திரங்களைக் கொண்டது. இதற்கு யூதேயா என்று பெயர். இதன் தலைநகரம் எருசலேம்.
இந்த இரண்டு ராஜ்யங்களும் பின்னர் உலகின் வல்லரசுகளின் ஆட்சிக்குள் சென்றன.
உலகை ஆண்ட ஐந்து சாம்ராஜ்யங்கள்
- அசீரிய சாம்ராஜ்யம்
- பாபிலோனிய சாம்ராஜ்யம்
- மேதிய–பெர்சிய சாம்ராஜ்யம்
- கிரேக்க சாம்ராஜ்யம்
- ரோம சாம்ராஜ்யம்
முதலில், கி.மு. 722-ல் அசீரியர்கள் வடக்கு ராஜ்யமான இஸ்ரேலை கைப்பற்றி, அங்கிருந்த பத்து கோத்திர மக்களையும் சிறைபிடித்து பல நாடுகளுக்குச் சிதறடித்தனர். அவர்கள் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பவில்லை. காலப்போக்கில் மற்ற இன மக்களுடன் கலந்துவிட்டனர்.
கி.பி. 1900-களுக்குப் பிறகுதான், அவர்களில் சிலர் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பத் தொடங்கினர். இருப்பினும், இன்னும் பலர் தாங்கள் இஸ்ரவேல் வம்சாவளியினர் என்பதையே அறியாமல் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
அடுத்ததாக, பாபிலோனியர்கள் தெற்கு ராஜ்யமான யூதேயாவைக் கைப்பற்றி, யூதா மற்றும் பென்யமீன் கோத்திர மக்களைப் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் சென்றனர். அந்தச் சிறைவாசிகளுள் தானியேலும் ஒருவர். எரேமியா வாழ்ந்த காலத்தில், பாபிலோனியர் யூதர்களை சிறைபிடித்தனர். ஆனால் எரேமியா எருசலேமில் இருந்தார். 2இராஜாக்கள் 25ஆம் அதிகாரத்தில், யூதரில் சிலர் கல்தேயரை (பாபிலோனியரை) வெட்டிப்போட்டதால், பயந்து எகிப்துக்கு ஓடிப்போய் விட்டார்கள்.
அதன்பிறகு மேதிய–பெர்சிய சாம்ராஜ்யம் பாபிலோனை வென்றது. அதனால் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியில் வாழ்ந்த தானியேல், பின்னர் மேதிய ராஜாவாகிய தரியுவின் ஆட்சியிலும் உயர்ந்த பதவியில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பாபிலோனிலிருந்த யூதர்கள் தங்கள் தேசத்துக்கு திரும்பினர். ஆனால் எகிப்திலிருந்த யூதர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.
(வரலாற்று உண்மை அல்ல, ஒரு ஊகம் தான். அதாவது ஊகம் என்னவென்றால், யூதேயா பாபிலோனுக்கு சிறைபிடிக்கும்போது, ஒருவேளை பாபிலோனிலிருந்து நேரடியாக பவுலின் முன்னோர்கள் எகிப்துக்கு போயிருக்கலாம். அல்லது, எருசலேமில் தங்க வைக்கப்பட்ட யூதர்களில், பவுலின் முன்னோர்களும் இருந்து, யூதர்கள் பாபிளொனிய அதிகாரியை கொன்றதால், பாபிலோனிய அரசனுக்கு பயந்து எகிப்துக்கு ஓடிய கூட்டத்தில் பவுலின் முன்னோர்களும் இருந்திருக்கலாம். பின்னர், கிரேக்க சாம்ராஜ்யம் வந்து, எகிப்தை பிடிக்கும்போது, அங்கிருந்து தப்பி சிலிசியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பவுலின் முன்னோர்கள் குடியேறி இருக்கலாம். பவுல் ஒரு பென்யமீன் கோத்திரம் என்பதால் இப்படி சிந்திக்கிறார்கள்)
அதற்குப் பிறகு உலக வரலாற்றில் மிக வேகமாக எழுந்த பேரரசு கிரேக்க சாம்ராஜ்யம். அதற்கு தலைமை வகித்தவர் Alexander the Great.
கிரேக்கர்கள் பல நாடுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், தங்கள் மொழியான கிரேக்கத்தையும் உலகம் முழுவதும் பரவச் செய்தனர். பல பகுதிகளில் கிரேக்க மொழி நிர்வாக மொழியாகவும், பொதுவான தொடர்பு மொழியாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த பலருக்கு கிரேக்க மொழி பரிச்சயமாக இருந்தது.
இறுதியாக ரோம சாம்ராஜ்யம் உலக வல்லரசாக உருவெடுத்தது.
“All roads lead to Rome” என்ற பழமொழி உருவாகும் அளவிற்கு, ரோமர்கள் தங்கள் பேரரசு முழுவதையும் சாலைகள் மூலம் இணைத்தனர். இந்தச் சாலை அமைப்பே பின்னர் சுவிசேஷம் மிக வேகமாகப் பரவுவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ரோம ஆட்சிக் காலத்தில்தான் இயேசு கிறிஸ்து பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார். பெரும்பாலான அப்போஸ்தலர்களும் இதே காலத்தில் இரத்தசாட்சிகளாக மரித்தனர்.
நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகும் அப்போஸ்தலனாகிய பவுலும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் காலத்தில்தான் பிறந்து, வளர்ந்து, தனது ஊழியத்தை நிறைவேற்றி, இறுதியில் இரத்தசாட்சியாக மரித்தார்.
இனி, பவுலின் வாழ்க்கையையும், பின்னணியையும், ஊழியத்தையும் விரிவாகப் பார்ப்போம்.
