கூடாரப் பண்டிகை

Feast of Tabernacle (Sukkot)

பண்டிகைகள் பற்றிய வேதத்தின் இரகசியங்களை கொஞ்சம் தெளிவாக பார்த்தோம். இது கடைசி பதிவு. இஸ்ரவேலரை தேவன் ஏழு பண்டிகைகள் கொண்டாடும்படி, வேதத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்போது இஸ்ரவேலர், அந்த ஏழு பண்டிகைகளுடன் இன்னும் இரண்டு பண்டிகைகள் சேர்த்து, மொத்தம் ஒன்பது பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள். எஸ்தர் புத்தகத்தில், ஆமான் யூதர்களை மொத்தமாக கொல்ல நினைப்பான், அப்போது ஒரு மாபெறும் வெற்றி யூதர்களுக்கு கிடைத்தது, அதை பூரிம் என்ற பண்டிகையாக கொண்டாடினார்கள் என்று படிப்போம் அல்லவா! அந்த பூரிம் பண்டிகை எட்டாவது பண்டிகை. அதேபோல, கிரேக்கர்கள் ஆட்சி செய்யும் காலத்தில், ஒருமுறை தேவாலயத்தில் பன்றியை பலியிட்டு, தேவாலயத்தை தீட்டுப்படுத்தி, அதை பூட்டி வைத்தான் அந்தியோகஸ் எஃபிபானஸ் என்பவன். அப்போது, யூதா என்பவரின் மகன் மக்கபே, இளைஞர்களை கூப்பிட்டு, காடு, மலைகளில் ஒளிந்திருந்து, பயிற்சி பெற்று, தேவாலயத்தை மீட்டான். அந்த 8 நாட்களும், யாரும் எண்ணெய் ஊற்றாமல், குத்துவிளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருந்ததாம். கத்தோலிக்க வேதத்தில் தள்ளுபடி ஆகமத்தில், 1 மக்கபேயர், 2 மக்கபேயர் என்று இரண்டு புத்தகங்கள் உள்ளன.  மக்கபே தலைமையில் தேவாலயம் மீட்கப்பட்டு, முழுவதும் சுத்திகரிக்கப்பட்டது. அதை தேவாலய பிரதிஷ்டை பண்டிகை என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். ஹனுக்கா என்னும் பெயரில், அந்த பண்டிகையில் விளக்குகள் ஏற்றி அலங்கரித்து கொண்டாடுகிறார்கள். கூடுதல் ஒளி வந்தது என்று சொல்லி, 7 குத்து விளக்குக்கு பதிலாக, 9 கிளை கொண்ட குத்துவிளக்கு செய்து கொண்டாடினார்கள். இந்த ஹனுக்கா தான், ஒன்பதாவது பண்டிகை.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஹனுக்கா பண்டிகையின் போது, தற்செயலாக எருசலேமுக்கு வந்த ரோம சக்ரவர்த்தி, எங்கும் ஒளி மயமாயிருப்பதைக்கண்டு ஈர்க்கப்பட்டு,  அதேபோல ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும் என்று சொல்லி, ரோமர்களுக்கு, சூரிய தெய்வத்தின் பண்டிகையாக, டிசம்பர் மாதம் 25ம் நாளை கொண்டு வந்தார். பிற்காலத்தில் இயேசு பிறப்பின் பண்டிகையாக அதே நாளை ரோமர்கள் நியமித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹனுக்கா பண்டிகை, வேதத்தில் யோவான் புத்தகம் 10ம் அதிகாரத்தில், இயேசு தேவாலய பிரதிஷ்டை பண்டிகைக்கு போனார் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

பூரிம், ஹனுக்கா தவிர உள்ள மற்ற ஏழு பண்டிகைகள், தேவன் கொண்டாடச்சொல்லிய பண்டிகைகள். பஸ்கா, புளிப்பில்லா அப்ப பண்டிகை, முதற்கனி பண்டிகை ஆகிய மூன்று பண்டிகைகளும், எபிரேய முதல் மாதத்தில் 14,15,16 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் மாதம் 6ம் தேதி, ஐம்பதாவது நாள் பண்டிகை, அல்லது வாரங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும், பெந்தெகோஸ்தே பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஏழாம் மாதம் முதல் தேதி, எக்காள பண்டிகையும், புதுவருட பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆறாம் மாதம் பிறந்த உடனே, ஆறாம் மாதத்திலிருந்து ஏழாம் மாதம் 10ம் தேதி வரை, Teshuvah என்ற மனந்திரும்புதலின் நாட்கள் அனுசரிக்கிறார்கள். ஏழாம் மாதம் 10ம்தேதி, பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு நாள், பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லும் நாள் அது. அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.      

வேதத்தில் 7 நாட்கள் கொண்டாடச்சொல்லிய பண்டிகை. இஸ்ரவேலில், எட்டு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பிற தேசத்தில் உள்ள யூதர்கள், ஒன்பது நாட்களாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். எட்டாவது நாளை, Shemini Atzeret என்றும், ஒன்பதாவது நாளை, Simchat Torah என்றும் கொண்டாடுகிறார்கள். Shemini Atzeret என்ற நாளில், தண்ணீர் ஊற்றி விடும் சடங்கு நடைபெறும். மழைக்காக விசேஷ ஜெபம் நடக்கும். Simchat Torah என்பது, புதிய வேத வாசிப்பு தொடங்கும் நாள். இஸ்ரவேலில், இரண்டு பண்டிகைகளும் எட்டாவது நாளில் கொண்டாடுவார்கள்.

எபிரேயத்தில், சுக்கா என்றால், கூடாரம். சுக்கோத் என்றால், பன்மை Plural. கூடாரங்களின் பண்டிகை. இந்த பண்டிகையில் இஸ்ரவேலர்கள், ஏழு நாட்கள் கூடாரங்களில் குடியிருந்து, சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது, நம் முன்னோர்கள், வனாந்திரத்தில் கூடாரத்தில்தான் குடியிருந்தார்கள். தேவன் மன்னாவைக் கொண்டு போஷித்தார் என்று, தேவனுடைய மகத்துவங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் இந்த பண்டிகையைக் குறித்து தேவன் சொல்லியது.

முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிறவிருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள் .- லேவியராகமம் 23:40

இஸ்ரவேலர், தங்கள் கூடாரங்களை, இந்த 4 வகையான செடிகளைக் கொண்டு அலங்காரம் பண்ணுவார்கள்.

இங்கு குறிக்கப்பட்டுள்ள நான்கு வகை  இனங்களின் சரியான ஆங்கிலம் / தமிழ் இணைச் சொற்கள் இதுவே.

1. எத்ரோக் / Etrog – Citrus / எலுமிச்சை இனம்

2. லுலாவ் / Lulav – Date Palm / பேரீச்சம் இனம்

3. ஹடஸ்/ Hadas – Myrtle / நறுமண மலர்ச்செடிஇனம்

4. அராவா /Aravah – Willow / அலரி இனம்

இவற்றை மொத்தமாக “லுலாவ் – எத்ரோக்” என்பர். இதில் எத்ரோக் மட்டும் பழமாக இடக்கையில் வைத்துக்கொண்டு மீதி மூன்றின் ஓலைகளை வலது கையில் பிடித்துக்கொண்டு “ஓசன்னா!” என்று சொல்லி பலிபீடத்தின் முன்பு ஆர்ப்பரிப்பார்கள்.

   இஸ்ரவேலர் சபை கூடும் இடத்தில்,  இந்த 4 வகை விருட்சங்களையும் கைகளில் வைத்துக்கொண்டு சத்தமாய், ஓசன்னா என்று ஆர்ப்பரிப்பார்கள். இதே செய்கையைத் தான், இயேசு கழுதையில் பவனி செல்லும்போது, அன்றைய இஸ்ரவேலரும் செய்தார்கள்.

அநேக ஆவிக்குரிய காரியங்கள் சுக்கோத் பண்டிகையில் மறைந்திருக்கிறது. சுக்கோத் என்பது மூன்றாம் பெந்தெகோஸ்தே அனுபவம், அது முற்றிலும் மாறுபட்ட அபிஷேகமாக இருக்கும். கர்த்தர் அதை நமக்கு தந்தருளுவாராக. சுக்கோத் என்றால், கூடாரத்தில் வசிப்பது. நாம் நமது நித்திய கூடாரத்துக்கு போவதன் அடையாளமாக சுக்கோத் உள்ளது. கூடாரத்தில் இருந்து சாப்பிட்டு, கர்த்தர் நடத்தி வந்த பாதைகளைப்பற்றி பேச வேண்டும். இன்று நாமும் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டு, தேவனின் வழி நடத்திய விதத்தை பற்றி பேசினால், நாமும் சுக்கோத் கொண்டாடுகிறோம். பண்டிகையில் சிம்ஹாட் தோரா என்ற கடைசி பண்டிகை. அது தோரா வாசிப்பு முடிவடைதலைக் குறிக்கும். நாமும் வருடத்துக்கு ஒருமுறை, வேதம் முழுவதும் வாசித்து முடித்தால், நாமும் அந்த பண்டிகையை கொண்டாடுகிறோம். ஷெமினி அட்செரட் என்ற பண்டிகை நிறைவு நாளில், ஆசாரியன் தண்ணீரை ஊற்றி விட்டு, பண்டிகை முடிந்து விட்டது என்று சொல்வார்.

இந்த தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது. அந்த தண்ணீரைக் குடித்தால், ஆரோக்கியம் வரும். ஒரு சாபமும் இராது. இயேசு, அவர் வாழ்ந்த நாட்களில், பிரதான ஆசாரியன் தண்ணீர் ஊற்றிவிடும்போது, இப்படி கூறுகிறார்.

இயேசு, அதே ஜீவ நதி, அவரை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஓடும் என்கிறார். இன்று நாமும் அவரின் விசுவாசிகள் தான். நம்முடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டு விட்டார். நமக்குள்தான் அந்த ஜீவ நதி உள்ளது. இன்னும், நான் பாவி நான் பாவி என்று புலம்பிக்கொண்டோ, அல்லது அவன் பாவி, இவன் பாவி என்று குற்றப்படுத்திக்கொண்டோ இல்லாமல், நம்முடன் இருக்கும் தேவனோடு, சந்தோஷமாக உறவாடலாம். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *