Day – 15 (15- டிசம்பர், 2023)
ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி
பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள், நம் குடும்பத்துக்குள் கிளர்ச்சி வரும்… வாழவே பயமாக இருக்கும் சூழல் இருக்கும்… இதெல்லாம் ஒரு வகையான ஆவிக்குரிய யுத்தம்தான்.
இத்தனை காரியங்கள் கொண்டுவந்து, நம்மை தோற்கடிக்க சாத்தான் வகை தேடினாலும், இன்னும் நாம் விசுவாசத்தில் இருந்து விழுந்து விடாமல், “இயேசுவே” என்று அவரிடமே செல்கிறோம் அல்லவா! இந்த ஒரு வெற்றிக்காகவே நாம் அவருக்கு நன்றி சொல்லலாம். ஆம், நாம் எந்த பிரச்சனை வந்தாலும், நம் விசுவாசத்தை தளர விடவில்லை. அவரை மாத்திரமே நோக்கி பார்க்கிறோம். இதற்காக நன்றி சொல்வோம்.
நாம் ஜெபித்து அனேக காரியங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். தானியேல் ஜெபிக்கும்போது, உடனே தூதனுக்கு, தானியேலுக்கு பதில் கொடுக்கும்படி, கட்டளை வெளிப்பட்டது. ஆனால், பதிலைக் கொண்டு வர விடாமல், பெர்சிய தேசத்தின் அதிபதி (பெர்சிய தேசத்தின் மீது ஆளுகை கொண்ட சாத்தான்) தடுக்கிறான். 21 நாட்கள் கழித்து தான், தானியேலுக்கு பதில் கிடைக்கிறது. தானியேலுக்கே 21 நாட்கள் தேவைப்பட்டது, தானியேல் எப்படிப்பட்டவர்? ராஜா ஜெபிக்க கூடாது என்று கட்டளையிட்டாலும் ஜெபிக்கிறவர், சிங்க கெபிக்குள் போட்டாலும் ஜெபிக்கிறவர். அப்படிப்பட்ட அவருக்கே அவ்வளவு நாட்கள் என்றால் நமக்கு??? ஆனால் நம்மை தேவன் கைவிடவில்லையே. நாம் ஜெபிக்கிற காரியங்களைப் பெற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். ஒருவேளை இன்று தாமதமாக தெரிந்தாலும், தேவன் நமக்காக செய்வார் என்ற விசுவாசம் இருக்கிறதல்லவா! தேவன் நமக்கு பதில் கொடுத்த எல்லா கரியங்களுக்காகவும் நன்றி சொல்வோம். அது எல்லாமே ஒரு ஆவிக்குரிய யுத்தத்தை முடித்து தான் நம் கைகளில் வந்திருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம். இன்றும் நமக்கான யுத்தம் நடந்துகொண்டு தான் இருக்கிறது, அதை எண்ணி நன்றி சொல்வோம்.
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, அவருடைய ஆவியினாலே ஆகும் என்று வேதம் சொல்கிறது. அவருடைய ஆவி எங்கு இருக்கிறது? நமக்குள் இருக்கிறது. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர், இன்று நமக்குள்ளும் இருக்கிறார். அவர் மரணத்தை ஜெயித்தார், சாத்தானை தோற்கடித்தார், அவர் தங்கும் ஆலயம் நாம். இவ்வளவு பெரிய பாக்கியம் தேவன் நமக்குக் கொடுத்ததற்காக நன்றி சொல்வோம். அந்த ஆவியானவரே நமக்குள் இருக்கும்போது, நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் தோற்றுப் போவோமா?
- நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.எபேசியர் 6
இந்த வசனங்களை விவரிக்க தேவை இல்லை. அனைத்தும் நாம் அறிந்ததே. நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயிப்பதற்கு வேத வசனத்தை பட்டயமாக நம் கைகளில் கொடுத்திருக்கிறார். ஒருவேளை மார்ட்டின் லூத்தர் காலத்துக்கு முன் நாம் பிறந்திருந்தால், வேத புத்தகம் கிடைத்திருக்கவே செய்யாது. இன்று வேதம் நம் கைகளில் தவழ்கிறது. விசுவாச வார்த்தைகளைப் பேச நமக்கு தடை கிடையாது. இயேசு சிலுவையில் வெற்றியை பெற்றதால், நாமும் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறோம். இதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Leave a Reply