Day – 2 (02- டிசம்பர், 2023)
நல்ல குடும்பத்துக்காக நன்றி
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே என்று கவலைப்படுவோம். ஆனால் இதுவரை உடனிருந்த பெற்றோர் நல்ல பெற்றோராக இருந்திருப்பார்கள். நல்ல நண்பர்கள் இருந்திருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருந்திருக்கும், அதையெல்லாம் மறந்து விடுவோம். நம் குடும்பத்துக்காக நன்றி சொல்வது அவசியம். கர்த்தர் நம்மை கிருபையாக நடத்திக் கொண்டு வருகிறார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதை யோசித்து நன்றி சொல்லி இருக்கிறோமா?
இரண்டு மாதங்களுக்கு முன், உடன் படித்த இரு கல்லூரி தோழிகளிடம் பேசினேன். இருவருமே, கல்லூரி விடுதியில் படித்தவர்கள், மிகவும் நல்ல பிள்ளைகள், தங்கள் வாலிப நாட்களை கறைபடாமல் காத்தவர்கள். அவர்களிடம் பேசும்போது, திருமண வாழ்வில் அடி, உதை என்று கஷ்டப்படுகிறார்கள். நீ சந்தோஷமாக இல்லையா என்று வருத்தத்துடன் கேட்கும்போது, “கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கிறேன்” என்கிற பதில் கிடைத்தது. நான் உண்மையில் உடைந்து தான் போனேன். அதேபோல, என் மேற்படிப்பில் என்னுடன் படித்த தோழியும் அதே சூழலில் இருக்கிறாள். இதைக் கேள்விப்படும்போது தான், கர்த்தர் எனக்கு கொடுத்த கிருபையையே உணர முடிந்தது என்னால்.
ஒருவரை எவ்வளவு சோதிக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும் என்று கூறுவார்கள். அது ஒருவேளை உண்மைதான் போல. “அவர்கள் சோதனையிலும் கர்த்தரை விட்டு பின்வாங்காதவர்கள்” என்று தேவன் அறிந்ததினால்தான், அவர்களுக்கு இவ்வளவு பாடுகள் என்று எண்ணிக்கொண்டேன். தங்கள் சோதனைக்காக நன்றி சொல்கிற தோழிகள். அவர்களிடம் பேசிய பின்னர் தான், என் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்திருக்கிற கிருபையை உணர முடிந்தது. “என் விசுவாசம், நான் கர்த்தரை நேசிப்பது எல்லாவற்றையும் விட, அவர்கள் இருக்கும் சூழலில், அவர்கள் கர்த்தரை நேசிப்பது பெரிய காரியம்” என்பதை கற்றுக்கொண்டேன்.
இன்று நம் வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அந்த ஒரு பிரச்சனையை எண்ணி மற்ற காரியங்களில் தேவன் கொடுத்த கிருபையை மறந்து விடக் கூடாது. இன்றைய பிரச்சனைகள், இதுவரை தேவன் கொடுத்த நன்மையை மறக்க வைப்பதாக இருக்கக் கூடாது. இன்று ஒருவேளை உங்களுக்கு 50 வயதாகிறது என்றால், தேவன் கொடுத்த பெற்றோர், தேவன் கொடுத்த உடன்பிறப்புகள், தேவன் கொடுத்த வாழ்க்கைத்துணை, தேவன் கொடுத்த பிள்ளைகள், தேவன் கொடுத்த மருமக்கள் எல்லாம் எண்ணிப்பார்த்து நன்றி சொல்லவேண்டும். நம் வாழ்வில் பிரிவினை இருந்தால் கூட, கர்த்தருக்கு தெரியாமல் எதுவும் என் வாழ்வில் நடக்காது என்ற உறுதியுடன் துதிக்கலாமே.
பலர், பெற்றோர் இல்லாமல், இல்லங்களில் வளர்ந்தார்கள், பலர் வாழ்க்கைத்துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள், பல குடும்பங்கள் பிரிந்து தான் இருக்கிறது, ஆனால் கர்த்தர் நடத்துகிறார் அல்லவா? யாரையுமே கைவிடவில்லையே! சில தாமதங்கள் இன்று இருந்தாலும், ஒரு நாள் ஒன்று வரும், அது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் நாள், அன்று எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக உயர்த்துவார் தேவன். இன்று, இப்போது, நாம் எவ்வளவு கோபப்பட்டாலும், நம்முடன் இருக்கிற ஏதோ ஒரு உறவு, நமக்கு இருக்கிறதல்லவா! இல்லாத உறவை எண்ணி வருத்தப்படுவதை விட, கூட இருக்கும் உறவுகளுக்காக இன்றைக்கு தேவனுக்கு நன்றி சொல்வோமே.
Leave a Reply