Day – 20 (20- டிசம்பர், 2023)
அபிஷேகத்துக்காக நன்றி
அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன், சிலரிடம் பெருமையாக நடந்தேன், அகந்தையுடன் இருந்தேன், பிறரை மதிக்க மறந்தேன், ஊர் பெருமை, இன பெருமை பேசினேன். இன்னும் அதிக காரியங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் நான் இப்போது உங்களிடம் சொல்லும்போது, அடுத்த வினாடியே, உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் பதில், “நான் மன்னித்து விட்டேன் மகளே” என்பதே. இந்த உம் அன்புக்காக நன்றி இயேசப்பா.
எந்த நிலையிலும் என் மீதுள்ள உம் அபிஷேகம் என்னை விட்டு போகவில்லை. சத்துரு, சில காரியங்கள் மூலம் என்னை விழவைக்க நினைத்தது உண்மைதான். ஆனால் என் மீதுள்ள உம் அபிஷேகம், அவன் என்னை தொட விடாமல் என்னை பாதுகாத்தது அல்லவா! அதற்காக நன்றி.
நான் ஊழியம் செய்யாமல் இருக்கலாம். தினமும் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். ஆனால், என் மீதும் உம் அபிஷேகம் இருக்கிறதல்லவா! நான் இன்று வரை பாதுகாக்கப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு என் மீதுள்ள அபிஷேகம் தான் காரணம். அதற்காக நன்றி இயேசப்பா
அப்பா, என் மீது இருக்கும் உம் அபிஷேகத்துக்காக, உம் பிரசன்னத்துக்காக, உம் வல்லமைக்காக நன்றி இயேசப்பா. என் ஆவி புதுப்பிக்கப்பட்டு, உம்மோடு இணைந்து இருக்கிறது. நான் வேறு, நீர் வேறு அல்ல தகப்பனே. எனக்குள் நீர் இருக்கிறீர், உமக்குள் நான் இருக்கிறேன். இது ஒரு அற்புதமான உறவு. வரையறுக்கப்பட முடியாத உறவு. உம்மைத் தவிர யாரிடமும் கிடைக்காத உறவு. இந்த உறவில் வாழும்படி, என்னை அபிஷேகம் செய்து இருக்கிறீர் அல்லவா! நன்றி இயேசப்பா!
என்னோடு எப்போதும் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறீர். நான் சோர்ந்து போகும்போது, பெலன் தருபவராக, குழப்பத்தில் இருக்கும்போது, தெளிவின் ஆவியானவராக, பலவீன நேரத்தில் பெலன் தருபவராக என்னோடு இருக்கிறீரே. நன்றி இயேசப்பா. நீர் வருகிற 2024ல் இன்னும் ஆழமாக என்னோடு உறவாடப்போகிறீர் என்று விசுவாசிக்கிறேன். 2024ல் மட்டுமல்ல, என் ஜீவன் உள்ளவரை, என் மீதுள்ள அபிஷேகம் குறையாது என்று விசுவாசிக்கிறேன். அதற்காக நன்றி தகப்பனே. ஆமென்
Leave a Reply