Day – 7 (07- டிசம்பர், 2023)

நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி

இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?

ஒருவேளை இயேசுவை அறியாத குடும்பத்தில் நாம் பிறந்து இருந்தால், இப்போது என்ன செய்து கொண்டிருப்போம்? இயேசுவை மறுதலிக்கிற வைராக்கியமுள்ள வீட்டில் பிறந்திருந்தால் நம் நிலை என்ன? நம்மை நேசித்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக பரிசுத்த ஆவியானவரை கொடுத்து, நமக்காக இன்றும் அற்புதங்களைச் செய்து வருகிற நம் தேவனை நாம் அறியாது இருந்தால், எவ்வளவு பரிதபிக்கப்பட்டவர்கள் நாம்!

தேவனை அறியாத குடும்பத்தில் பிறந்து, தேவனை ஏற்றுக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, தேவனைப் பற்றி வைராக்கியமாய் பிரசங்கிக்க நாம் ஒன்றும் சாது சுந்தர் சிங் அல்ல. அப்படிப்பட்ட கிருபை சிலர் மேல் இருக்கிறது, அதற்காக நன்றி சொல்வோம். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களாய் இருந்திருப்போமா என்பது கேள்விக்குறி தான். இன்று நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. நம் குடும்பத்தாரும் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காகவே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஒருவேளை, இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து, கர்த்தருக்காய் வைராக்கியமுள்ளவராய் நீங்கள் இருந்தால், உங்களை தேவன் எவ்வளவு நேசிக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

நம் ஒவ்வொருவர் மேலும் தேவன் எவ்வளவு கிருபையாயிருக்கிறார் என்பதற்கு, நாம் அவரை ஏற்றுக் கொண்டதே சாட்சி. ஒருவேளை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நரகத்தை நோக்கி செல்லும் கூட்டத்தில் நாமும் ஒருவர். ஒருவர் கிறிஸ்தவனாக பிறப்பதால் மட்டும் பரலோகம் செல்ல முடியாது. கர்த்தரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே செல்ல முடியும். இன்று நாம் கர்த்தரை ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழல் தேவன் உருவாக்கி தந்ததற்காக நன்றி சொல்வோம்.

பெயர் கிறிஸ்தவராக பிறந்து, இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் மரித்தவர்கள் அனேகர். கிறிஸ்தவம் என்பதை மதமாக்கி, அதில் வைராக்கியமாய் இருந்து மரித்தவர்கள் அனேகர். நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளோம், தேவனோடு உறவாடுகிறோம். அவரது பிள்ளையாய் வாழ்கிறோம். இந்த கிருபைக்காக நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *