Day – 8 (08- டிசம்பர், 2023)

 நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி

இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த நண்பர் குடும்பத்தில், உறவினராக அல்லது உடன் பிறந்தவராக, அல்லது பெற்றோராக, பிள்ளைகளாக இருப்பர். ஜெபிக்க சொல்லும்படி, நம் சபையில் யாரோ ஒருவர் இருப்பார்கள், அல்லது குடும்பத்தில் யாரோ ஒருவர் இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுக்காக நன்றி சொல்ல வேண்டும்.

யார் ஒருவராலும், யாரிடமும் 100 சதவீதம் முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளுமளவு, சில நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதாவது, குடும்பத்தில் உள்ளவர் நெருக்கடி கொடுத்தால், ஜெபத்தேவைக்காக பகிர வெளியே ஒரு நண்பர், வேலை செய்யுமிடத்தில் நெருக்கடி என்றால் பகிர ஒரு குடும்பத்தினர், இப்படி நமக்கு அனேகர் இருக்கிறார்கள். இன்று அனேக குழந்தைகள் தற்கொலைக்கு காரணமே, பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத சூழ்நிலை தான். நமக்கு தேவன் கிருபை பாராட்டி இருக்கிறாரே. அதற்காக நன்றி சொல்வோம்.

பண உதவி செய்தால்தான் நண்பர்கள் என்றால், யாருக்கும் நண்பர்களே இருக்க முடியாது. நாம் பேசுவதைக் கேட்க யார் இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. இந்த பிசியான உலகில், நம் பேச்சையும் கேட்க ஒருவர் இருக்கிறாரே. நன்றி சொல்லலாமே! நம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு யாரெல்லாம் உதவியாக இருக்கிறார்களோ, அவர்கள் தேவன் தந்த பரிசு.

என் அனுபவத்தில், எனக்கு சில நண்பர்கள் தேவன் கொடுத்தார். நாங்கள் மதிய நேரத்தில் இணைந்து ஜெபித்தோம், பல காரியங்கள் புதிதாக கற்றுக் கொண்டோம். நான் சென்னை, ஒருவர் நாகர்கோவில், மற்றொருவர் துபாய். எங்கெங்கோ இருந்து இணைந்து ஜெபித்தோம். நல்ல நண்பர்கள் மூலமாக தேவன் என்னை வழி நடத்தினார். சபையில் நல்ல ஐக்கியத்தை தந்தார். நல்ல போதகர்கள் வழியாக நல்ல ஆவிக்குரிய வளர்ச்சி கொடுத்தார். கணவருடைய ஜெபக்குழுவில் நல்ல ஐக்கியத்தை தந்தார். கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர், தினமும் தவறாமல் என் பதிவை வாசித்து, இப்படி எழுது, இது நன்றாக இருந்தது என்று, அவருடைய பிஸி வாழ்க்கையிலும் ஊக்குவிக்கிறார், ஒவ்வொரு பதிவுக்கும், குடும்பத்தினர் சிலர் வாசித்து Thumbs up கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். நல்ல குடும்ப உறவுகளைத் தந்திருக்கிறார். ஜெபிக்கும் பெற்றோரை தந்திருக்கிறார். ஒவ்வொரு உறவுக்காகவும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

நம் வாழ்க்கையில் ஒருவேளை நாம் சிலரை முக்கியமானவராக நினைக்காமல் இருப்போம், ஆனால் அவர்கள் நமக்கு நிறைய நேரங்களில் ஆலோசனை தந்திருப்பார்கள். நம்முடன் இருந்திருப்பார்கள். நமக்காக ஜெபித்திருப்பார்கள். அப்படிப்பட்ட யாரை எல்லாம் தேவன் இப்போது, நினைவு படுத்துகிறாரோ, அவர்களுக்காக இன்று நன்றி சொல்லலாமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *