Huldah – உல்தாள்

வேதபகுதி : உல்தாள் வேதத்தில் இரண்டு இடங்களில், ஆனால் ஒரே சம்பவத்தில் மட்டுமே வருவார்.  2இராஜாக்கள் 22:14, 2 நாளாகமம் 34:22

கதை பின்புலம்:

யூதாவை ஆண்ட எசேக்கியா ராஜாவிடம், ஏசாயா தீர்க்கதரிசி வந்து, “உம் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும். நீர் மரிக்க போகிறீர்” என தீர்க்கதரிசனம் உரைக்கிறார். எசேக்கியா ராஜா ஜெபம் செய்தார்.

2 இராஜாக்கள் 20:3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

மேற்கண்ட ஜெபத்தின்படி பார்த்தால், எசேக்கியா ராஜா மிகவும் நல்லவர். ஆண்டவருக்கு முன்பாக உண்மையும் உத்தமுமாய் வாழ்ந்தவர். எனவே, அதே ஏசாயா தீர்க்கதரிசி மூலம் பேசி, எசேக்கியாவின் வாழ்நாளை 15வருடம் கூட்டிக் கொடுத்தார் தேவன். எசேக்கியா ராஜா மரித்து பிறகு, அவருடைய மகன் மனாசே ஆட்சிக்கு வருகிறார்.

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

2 இராஜாக்கள் 21

மனாசே ராஜாவாகும்போது 12 வயதுதான். அதாவது தேவன் கூட்டிக்கொடுத்த 15 வருத்டதில்தான், எசேக்கியாவுக்கு மனாசே பிறந்திருக்கிறார். ஆனால் மனாசே நல்ல ராஜாவாக இருக்கவில்லை. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்கிறார். பாகாலுக்கு பலி கொடுக்கிறார், ஆலயத்துக்குள் பிற வழிபாட்டைக் கொண்டு வந்தார், தன் சொந்த மகனை தீ மிதிக்கப் பண்ணினார், குறி சொல்கிறவர்களை நியமித்தார்… இப்படி பல காரியங்களில் தேவனுக்கு கோபமூட்டினார். அடுத்து மனாசேக்கு பிறகு, அவருடைய மகன் ஆமோன் ஆட்சிக்கு வந்தார்.

19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.
20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

2 இராஜாக்கள் 21

ஆமோனும் தன் பங்குக்கு கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார். அடுத்ததாக ஆமோனுடைய மகன் யோசியா ராஜாவாகிறார். (ஆமோன் மரிக்கும்போது 24 வயது, அப்போது அவருடைய மகனுக்கு 8 வயது. ஆமோனுடைய 16 வயதில் அவர் மகன் யோசியா பிறந்துள்ளார்??)

1 யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

2 இராஜாக்கள் 22

எசேக்கியா நல்லவர்தான். அவருக்கு பிறகு, மனாசே மற்றும் ஆமோன் பொல்லாதவர்கள். அடுத்து யோசியா வருகிறார். ஆனால் யோசியா நல்லவராக இருந்தார். இந்த யோசியாவின் காலத்தில், யாரெல்லாம் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள் என வேதத்தில் பார்க்கலாம்.

  1. எரேமியா

எரேமியா 1:2 ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

  1. செப்பனியா

செப்பனியா 1:1 ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

இந்த யோசியா ராஜாவாக இருந்த நாட்களில்தான், எரேமியா மற்றும் செப்பனியா என்ற இரண்டு பெரும் தலைகள் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தனர் என இதன்மூலம் அறியலாம். இந்த யோசியா ராஜா நல்லவர் என்று ஏற்கனவே பார்த்தோம். இவர் ஆட்சி செய்ய ஆரம்பித்து 13ம் வருஷத்திலிருந்து எரேமியா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். மனாசே ஆட்சி செய்த 55 வருடம், ஆமோன் ஆட்சி செய்த 2 வருடம் என, கிட்டத்தட்ட 57வருடங்கள் கர்த்தருடைய ஆலயம் உபயோகமில்லாமல் பாழாய்க்கிடந்தது. எனவே யோசியா ஆலயத்தை பழுது பார்க்க ஆட்களை நியமித்தார்.

2 இராஜாக்கள் 22:3 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

 யோசியா ஆட்சி செய்ய ஆரம்பித்து 18வது வருடம், கர்த்தருடைய ஆலயத்தை பழுது பார்க்க ஆள் அனுப்புகிறார் யோசியா. அங்கே தேவாலயத்தில் அவர்கள் நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டுபிடித்து, அதை இராஜாவிடம் கொடுக்கிறார்கள்.

11 ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
12 ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:
13 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

அந்த நியாயப்பிரமாண வார்த்தை உபாகமம் புத்தகத்திலுள்ள வார்த்தைகள் என்றும், நீ இதை செய்தால் உனக்கு ஆசீர்வாதம், இதை செய்யாவிட்டால் இந்த சாபங்கள் வரும் என்ற வார்த்தைகள் அதில் இருந்திருக்கும் என்றும், அதாவது உபாகமம் 28ம் அதிகாரத்தை வாசித்திருப்பார்கள் என்று வேதவல்லுநர்கள் கருதுகிறார்கள். இப்போது இராஜா இதைப்பற்றி கர்த்தரிடம் விசாரிக்க, அரசவையின் முக்கிய நபர்களை ஒரு தீர்க்கதரிசியிடம் அனுப்புகிறார். ஏன் உடனே இதைப்பற்றி விசாரிக்க நினைக்கிறார்?

நாம் ஏற்கனவே இஸ்ரேலை ஆட்சி செய்த ஒவ்வொரு சாம்ராஜ்யங்களையும் பார்த்துள்ளோம். அதிலும், கிமு 722ல் அசீரியர்கள் வடதேசமான இஸ்ரேலை சிறைப்பிடித்துக் கொண்டுபோய், அந்த ஜனங்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்று பார்த்தோம். அதன்பின், யூதேயாவை, கிமு 586ல் பாபிலோனியர் சிறைபிடித்தனர். இந்த யோசியா ராஜாவின் காலம், இரண்டுக்கும் இடைபட்ட காலம். இஸ்ரவேலரை எப்படியெல்லாம் கொடுமைபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று யோசியாவுக்கு நன்றாகத் தெரியும். தன் ஜனமாகிய யூதேயாவிலுள்ளவர்களும், (தன் தகப்பன் மற்றும், தாத்தா மூலமாக அன்னிய தெய்வத்தை வணங்கி, கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து விட்டதால்), தங்களுக்கும் அந்த தண்டனை வரும், யூதேயாவும் சிறைபிடிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்டார் யோசியா. எனவேதான் அதைப்பற்றி அறிய விரும்பினார். அதோடு தன் வஸ்திரத்தைக் கிழித்தார். அந்த காலத்தில் வஸ்திரத்தைக் கிழிப்பது என்பது, தன்னை தாழ்த்துவதைக் குறிக்கிறது.

முக்கியமான ஐந்து பேரிடம், இதைப்பற்றி ஒரு தீர்க்கதரிசியிடம் விசாரிக்கும்படி கூறுகிறார். அந்த காலத்தில் இருந்த முக்கியமான இரண்டு தீர்க்கதரிசிகள், எரேமியாவும் செப்பனியாவும். எரேமியா தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தது, யோசியா ஆட்சிக்கு வந்த 13ம் வருடத்திலிருந்து ஆரம்பித்தார். யோசியா ராஜா இந்த சுருளை கண்டெடுத்தது, அவர் ஆட்சிக்கு வந்த 18ம் வருடத்தில். எனவே அந்த கால கட்டத்தில், எரேமியா எல்லாராலும் அறியப்பட்ட தீர்க்கதரிசி. எரேமியா கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? பாபிலோனின் ராஜா யூதேயாவில் உள்ளவர்களை சிறைப்பிடித்துக் கொண்டு போவார் என்று தான் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தார். அப்படியானால் யாரிடம் போய் இந்த ஐவர் கூட்டம் விசாரிக்க வேண்டும்? எரேமியா தீர்க்கதரிசியைத் தான் தேடிப் போக வேண்டும். ஆனால் அவர்கள் தேடிச் சென்றது ஒரு பெண்ணை. ஆம், பெண் தீர்க்கதரிசியாகிய உல்தாளை தேடிச் சென்றனர்.

யார் இந்த உல்தாள்?

  1. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

ராஜாவுடைய முக்கியமான ஐந்து பேர் தேடிச் சென்று தீர்க்கதரிசனம் கேட்கிறார்கள் என்றால், உல்தாள் அந்த அளவு முக்கியமானவராக இருந்திருக்க வேண்டும். சல்லூமின் மனைவி என அறியப்படுகிறார். யார் இந்த சல்லூம்? வஸ்திரசாலை விசாரிப்புக்காரன், அதாவது incharge of keeping the Royal Clothing Safe. அரமனை துணிகளை பத்திரப்படுத்தும் ஒரு அதிகாரி. அதாவது, சல்லூம் அரமனையில் வேலை பார்ப்பதால், palaceக்கு அருகில் உல்தாள் வீடு இருந்திருக்கும். எருசலேமின் இரண்டாம் வகுப்பில் குடியிருந்தாள் என்பதால், தேவாலயத்தின் அருகில் குடியிருந்திருப்பாள் என்கிறார்கள். எனவே உல்தாள், அரமனைக்கும் தேவாலயத்துக்கும் அருகில் குடியிருந்த முக்கியமான பெண்.

சில இறையியலாளர் கூறும் கருத்து என்ன என்றால், யோசியா ஆட்சிக்கு வரும்போது எட்டு வயது என்பதால், அவனை வழிநடத்தியது அவருடைய அம்மா. தன் கணவர் பொல்லாப்பை செய்தவராக இருந்தாலும், நல்ல ராஜாவாக தன் மகன் வர வேண்டும் என்று அந்த தாய், மகனை நல்ல முறையில் வழிநடத்தியதால், ஆண்களை விட பெண்களின் மீது ராஜாவுக்கு நல்ல நம்பிக்கை இருந்திருக்க கூடும் என்கிறார்கள்.

பிரதான ஆசாரியரே தேடி வந்து கர்த்தருடைய வார்த்தையைக் கேட்குமளவுக்கு, கர்த்தருடைய வார்த்தையை அப்படியே சொல்பவராக இருந்திருக்கிறார் உல்தாள். பொதுவாக பெண்கள் தங்கள் மனதிலுள்ளதை அப்படியே வெளிப்படுத்துவார்கள். உல்தாளும் அப்படித்தான். யாராக இருந்தாலும் அவருக்கு பரவாயில்லை. பூசி மெழுக அவசியமும் இல்லை. இதுதான் கர்த்தருடைய வார்த்தை என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறிவிடுவார் உல்தாள். அதனால்தான், உல்தாளை தேடி பிரதான ஆசாரியர், ராஜாவின் முக்கிய அதிகாரிகள் வந்தனர்.

  1. அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

She said to them, “This is what the Lord, the God of Israel, says: Tell the man who sent you to me,

ராஜாவின் ஆட்கள் வந்திருப்பதால், நீங்கள் ராஜாவிடம் சொல்லுங்கள் என கூறவில்லை. உங்களை அனுப்பினவரிடத்தில் சொல்லுங்கள், என உல்தாள் கூறுகிறார். வந்திருப்பது ராஜாவின் ஆளாகவே இருக்கட்டும், நான் தேவன் சொல்வதை மாத்திரமே சொல்வேன் என்பதில் தெளிவாக இருந்தவர் உல்தாள்.

நமது பதிவுகளில் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம், யூத மத நூல்கள் என்று வேதம் தவிர, பல நூல்கள் உள்ளன. அதேபோல வாய்மொழிக் கதைகளும் உள்ளன. அதில் இந்த உல்தாள் குடும்பம் பற்றி சுவாரசியமான கதை உண்டு. (இதை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை, தெரிந்து வைப்பதற்காக மட்டுமே) அதாவது உல்தாளின் புருஷனாகிய சல்லூம் என்பவர், மிகவும் நல்லவராம். அவர் எப்போதுமே நகரின் நுழைவாயிலுக்கு அருகிலிருந்து, புதிதாக வருகிறவர்களை ஏதேனும் குடிக்க கொடுத்து வரவேற்பது வழக்கமாம். இப்படியிருக்க ஒரு நாள், சல்லூம் இறந்து போனாராம். சல்லூமின் அன்பான குணத்துக்காகவே, எல்லா யூதர்களும் இணைந்து, அடக்கம் பண்ண கொண்டு சென்றார்களாம். அப்போது திடீரென மோவாபியர் படையெடுக்க வந்ததும், அருகிலிருந்த எலிசாவின் கல்லறையில் சல்லூமை போட்டுவிட்டு ஓடினார்களாம். ஆனால் எலிசாவின் எலும்புகளின் மீது பட்டபோது, சல்லூம் உயிரடைந்ததாக நம்புகிறார்கள்.

20 எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.

21 அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

2 இராஜாக்கள் 13

அதன்பிறகு, உல்தாளுக்கும் சல்லூமுக்கும் ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தைக்கு அனாமெயேல் என்று பேரிட்டதாகவும் நம்புகிறார்கள். இந்த சல்லூம் எரேமியாவுக்கு பெரியப்பா முறை என்று கீழ்க்கண்ட வேதவசனத்தை வைத்து கூறுகிறார்கள். அப்படி பார்த்தால், உல்தாள் எரேமியா தீர்க்கதரிசிக்கு பெரியம்மா முறை.

எரேமியா 32:7 இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்று உரைத்தார்.

உல்தாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நம் தகுதி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். (It doesn’t matter, who the person is, or their status) ஆனால் கர்த்தர் ஒரு வார்த்தையைக் கூறினால், அதை அப்படியே உள்ளபடி தேவன் கூறச்சொன்னவரிடம் கூற வேண்டும். ராஜாவே வந்தாலும், தேவன் சொல்வதை மட்டுமே கூறிய உல்தாளைப் போல, நாமும் இருக்க வேண்டும். ஏற்ற காலத்தில் நிச்சயமாக தேவன் நம்மை உயர்த்துவார். இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் வாழ்ந்தாலும், ராஜா தேடிச் சென்றது உல்தாளை. நாமும் கர்த்தருடைய வழியில் சரியாக நடக்கும்போது, ஏற்ற காலத்தில் அவர் நம்மை ராஜாக்களுக்கு முன்பாக கொண்டு போய் நிறுத்துவார் என்பது உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *