கடந்து வந்த பாதைகள்:

(வேதாகமம் தொடங்கி இப்போது வரை)

பரிசுத்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டால், ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் மட்டுமே உலக வரலாற்றைக் கொண்டிருக்கும். அதன் பின்னர், ஆதியாகமம் 12 முதல் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரம் வரை, அது இஸ்ரவேலர்களின் வரலாற்றைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறுகிறது. எனவே வேதாகமத்தை இஸ்ரவேலரின் வரலாறு என்று கூறலாம்.

வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு, மனுஷன் வஞ்சிக்கப்படுதல், காயின் வரலாறு என்று ஆதாமின் வம்ச வரலாறு ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரம் வரை உள்ளது. தேவன் சகலத்தையும் ஆண்டுகொள்ளும்படி மனிதனை படைத்தார். ஆனால் சத்துருவினால் மனிதன் பாவம் செய்துவிட்டான். என்ன பாவம் செய்தான்? கீழ்ப்படியாமல் போய் விட்டான். என்ன தண்டனை? ஜீவனை இழந்தான். அப்போதும் கர்த்தர் மனிதனைக் கைவிடாமல், அவனை மீட்கும்படி புதிய மீட்பின் திட்டத்தோடு வந்தார். சாத்தான் தவறு செய்யும்போது மன்னிக்காத தேவன், மனிதன் தவறும் போது, அவனை மன்னித்து, அவனுக்கான மீட்பின் திட்டத்தைக் கொடுக்கிறார். ஆதியாகமம் 3:15 தான் வேதத்தின் அடிப்படை வசனம்.

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை என்று தேவன் கூறியதால், சாத்தானுக்கு தெரியும், ஸ்திரீயின் வித்து தலையை நசுக்குவார். அதாவது, ஏதோ ஒரு பிள்ளை பிறந்து, தன்னைக் கொல்லும் என்பது தெரியும். காயீன் ஆபேலை பார்த்தவனுக்கு, அந்த வித்து ஆபேலிடம் தான் இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. ஆபேலை கொலை செய்து விட்டான். அதன் பின்னர், ஆதாமுக்கு அனேக பிள்ளைகள் பிறந்தார்கள். இந்த பரிசுத்த வித்து யாரிடம் இருக்கிறது என்பதை தேவன் மறைத்து விட்டார். அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த பரிசுத்த வித்து யார்யாரிடம் பயணித்து வந்தது என்பதற்காகத்தான் ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் ஆதாம் முதல் நோவா வரையுள்ள பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

சாத்தானுக்கும் இப்பொழுது குழப்பம் அதிகமாகி விட்டது. அந்த பரிசுத்த வித்து யாரிடம் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தான். ஆனால், அந்த பரிசுத்த வித்தை குலைத்து போட சாத்தான் ஒரு திட்டம் தீட்டினான்.

இந்த வசனத்துக்கு இரண்டு வகையான விளக்கங்கள் கூறுகிறார்கள். பொதுவாக யூதர்களைப் பொருத்தவரை, ஒரு வசனத்துக்கு 12 வகையான விளக்கம் இருக்கும். அது அனைத்துமே சரியாகவும் இருக்கும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் ஞானம் மனித மூளைக்கு அப்பாற்பட்டது.  அதேபோல இந்த வசனத்துக்கும் அனேக விளக்கங்கள் உண்டு. எனக்கு இதுவரை கிடைத்த விளக்கம் இரண்டு தான்.

முதல் விளக்கம்

முதலாவது விளக்கம், இங்கே தேவகுமாரர் என்பது ஏதேன் தோட்டத்தில் வாழும் ஆதாமின் மகன் மற்றும் பேரன்கள். மனுஷ குமாரத்திகள் என்பது, காயீனுடைய சந்ததி என்று கூறுகிறார்கள்.

தமிழில் மொழிபெயர்ப்பு பிழை தான் ஏதேன் என்னும் தோட்டம். உண்மையான மொழிபெயர்ப்பு, ஏதேன் என்னும் இடத்தில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார். முதலாவது கர்த்தர் பூமியில் தண்ணீரை தனியாக பிரித்து, தண்ணீர் தனியாகவும், வெட்டாந்தரை தனியாகவும் பிரித்தார். அதாவது பூமியில் இப்பொழுது இருப்பதைப் போல ஆங்காங்கே கடல் இருக்காது. ஒரே கண்டம், ஒரே கடல். அந்த வெட்டாந்தரையில், ஏதேன் என்னும் ஒரு இடம். அந்த ஏதேனில் கிழக்காக ஒரு ஏதேன் தோட்டம். ஒருவேளை இந்த ஏதேன் என்னும் இடத்தில் நாட்டு மிருகங்களும், ஏதேனுக்கு வெளியே காட்டு மிருகங்களும் இருந்திருக்கலாம். தேவன் ஆதாம் ஏவாளை, ஏதேன் தோட்டத்தில் வைத்தார். கீழ்ப்படியாமையில் வந்த போது, ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தினார், ஆனால் ஏதேன் என்னும் இடத்தை விட்டு துரத்தவில்லை. எனவே ஆதாம் ஏவாள் ஏதேன் என்னும் தேசத்தில் வாழ்ந்தார்கள்.

இந்த ஏதேன் என்னும் இடத்தில் வாழும்போது தான், ஆபேலை காயீன் கொன்று விடுகிறான். கர்த்தர் காயீனை அந்த தேசத்திலிருந்து துரத்தி விடுகிறார்.

மேற்கண்ட படத்தின் மூலமாக இந்த காரியங்களை புரிந்து கொள்ள முடியும். காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டு நோத் என்னும் தேசத்தில் போய் குடியிருந்தான் என்பதின் மூலம், ஏதேன் என்னும் இடம், கர்த்தருடைய சந்நிதி என்று தெரிகிறது. ஏதேனை விட்டு வெளியே சென்றால் காட்டு மிருகங்கள் இருக்கும். அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பட்டணம் கட்டுவது அவசியமாகி விட்டது. ஏதேனில் யாரும் பட்டணம் கட்டவில்லை, ஆனால் வெளியே சென்ற காயீன், நோத் தேசம், அதில் ஏனோக்கு பட்டணம் கட்டினார். உள்ளே ஏதேனில் இருப்பவர்கள் ஒரு lifestyle வாழும்போது, வெளியே வந்த இந்த கூட்டத்தார், பித்தளை, இரும்பு கண்டு பிடித்தனர். Music Instruments தயாரித்தனர். வெளியே சந்தோஷமாக வாழ ஆரம்பித்தனர்.

இந்த ஏதேனில் வாழ்பவர்கள், தேவகுமாரர்கள் என்றும், வெளியே சென்று பட்டணம் கட்டி வாழ்பவர்கள் மனுஷர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஏதேனுக்கு வெளியே இருந்த மனுஷ குமாரத்திகள் அழகாக இருந்ததால், ஏதேனுக்கு உள்ளே இருந்த தேவ குமாரர்கள் அவர்களை திருமணம் செய்தனர். பரிசுத்த வித்தை கெடுக்கும்படி வெளியே இருக்கிற மனுஷர்களிடம் சம்பந்தம் கலக்க வைத்தான் சாத்தான். இது ஒரு விளக்கம்.

இரண்டாவது விளக்கம்

Book of Enoch என்ற ஒரு புத்தகத்திலிருந்து இந்த விளக்கம் கூறப்படுகிறது. இந்த புத்தகத்தில், Demons and Nephilim எப்படி உருவானார்கள் என்று எழுதப்பட்டிருக்கும். நோவா காலத்தில் வெள்ளம் வர அவசியம் என்ன என்று எழுதப்பட்டிருக்கும். நம் தேவனுடைய 1000 வருட அரசாட்சி பற்றி எழுதப்பட்டிருக்கும். வேதத்தில் யூதா புத்தகத்தில் ஏனோக்கு புத்தகத்தின் வசனம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஆனாலும் இந்த புத்தகம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதுதான் உண்மை என்று யார்மீதும் திணிக்க முடியாது. இப்படியும் இருக்கலாம் என்று வேத அறிஞர்கள் கருதுகிறார்கள் என்பதற்காகவே இப்பதிவு.

The Hebrew word Nephilim is sometimes translated as “giants”, and sometimes taken to mean “the fallen ones”. Nephilim என்பதற்கு இராட்சதர் என்று அர்த்தம். நாம் இப்பொழுது தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள் என்கிற வசனத்தின் இரண்டாம் விளக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.   சம்யாசா என்கிற விழுந்து போன தூதன், தனக்கு கீழே 120 தூதர்களை சேர்த்துக்கொண்டு, பூமியை அசுத்தப்படுத்த வந்தனர். மகா உன்னதமானவருக்கு விரோதமாக பாவம் செய்யப் போகிறோம் என்பது தெரிந்தே, தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு, பூமியை கறைப்படுத்த, பரிசுத்த வித்தை கெடுத்துப்போட வந்தனர். 120 பேரும் 120 பெண்களை மனைவியாக்கிக் கொண்டு, பரலோகத்தில் மறைந்திருக்கிற காரியங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்தனர். அந்த பெண்களுக்கு பிறந்த பிள்ளைகள் இராட்சதர் ஆக பிறந்தனர். அதன்பின்னர் தேவதூதர்கள் மகாஉன்னதமானவரிடம், இதை எடுத்துக்கொண்டு போகும்போது, சம்யாசாவை ஒரு இடத்தில் அடைத்துப் போட்டு, இனி எப்போதும் அவன் வெளியே வருவது இல்லை என்ற தண்டனையை கொடுத்து, மற்ற அனைத்து தூதர்களுக்கும் 70 தலைமுறை கடந்த பின்னர் நியாயத்தீர்ப்பு என்று தண்டனை கொடுத்தார். அதன்பின்னர் தான் தேவ தூதர்கள், விழுந்து போன தூதர்களால், தேவ அனுமதி இல்லாமல் மனித உருவம் எடுக்க முடியாமல் போனது. இப்படி தூதர்கள் மனுஷ குமாரத்திகளிடம் இணைந்து பிள்ளை பெற்றதை தான் இவ்வசனம் கூறுகிறது என்றும் ஒரு விளக்கம் உள்ளது. இந்த இராட்சதரை கடைசியாக பூமியிலிருந்து அழித்தது தாவீது தான். கானான் தேசத்தை சுதந்தரிக்க போகும்போது, அவர்கள் பார்வைக்கு நாங்கள் வெட்டுக்கிளி போல இருந்தோம் என்று இஸ்ரவேலர் கூறியதன் காரணம், அவர்கள் இராட்சதராய் இருந்ததால் தான்.

பரிசுத்த வித்து மூலம் ஒரு பிள்ளை பிறந்து, சாத்தானை அழித்து போடும் என்பது தீர்க்கதரிசனம். ஆபேலைக் கொன்று போட்டதால், தேவன் வித்தை மறைத்து வைத்தார். எனவே பூமியிலுள்ள அத்தனை பேரையும் கெடுத்துப்போட சாத்தானின் திட்டம் மனுஷ குமாரத்திகளிடம் கலந்தது. ஆனாலும் ஒரு குடும்பத்தை தேவன் இராட்சதர்களோடு கலக்காமல் பாதுகாத்து வந்தார். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

Book of Enoch – Source From http://www.goldwynsudhakar.com/blog/

 

2 responses to “இஸ்ரேல்-6 (இஸ்ரேல் – கடந்து வந்த பாதை)”

  1. K.N.Ramdass Avatar
    K.N.Ramdass

    மிகவும் பிரியோஜனமாயிருந்தது

    1. RhemaTamil Avatar

      Praise God… Thank you so much

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *