Jael – யாகேல்

வேதபகுதி: நியாயாதிபதிகள் 4 மற்றும் 5ம் அதிகாரத்தில் வருகிறது.

கதை பின்புலம்:

இஸ்ரவேலருக்கும் கானானியருக்கும் ஒரு யுத்தம் நடக்கிறது. நாம் அறிந்தபடி, இஸ்ரவேலர் கானானியரின் தேசத்தை சுதந்தரித்து, இஸ்ரேல் என்னும் தேசமாக உருவாகினார்கள். ஆனால் அவர்களுக்கு ராஜா இல்லை. ஒவ்வொரு கோத்திரம் கோத்திரமாக, அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள். பிற தேசத்திலிருந்தும் அவர்கள் மீது போருக்கு வருவார்கள். அப்போது எவரேனும் ஒருவர் இரட்சகனாக எழும்பி, தேசத்தை வெற்றி பெற வைப்பார்கள். அதன்பின் அந்த இரட்சகன் நியாயாதிபதியாக இருப்பார்கள். இப்படித்தான் இருந்தது அந்த நாட்கள்.

இப்போது போருக்கு வந்திருக்கும் ராஜாவின் பெயர் யாபீன். இவர் ஒரு கானானிய ராஜா. ஆத்சோரை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் சேனையின் சேனாதிபதி (Commander of Canaanite Army) சிசெரா. இந்த யாபீன் போருக்கு வந்திருக்கிறார் என்பதை விட, 20 வருடமாக இந்த மக்களை அவர்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பதே சரியானது. நியாயாதிபதிகள் 4ம் அதிகாரத்தில்,  “கர்த்தர் அவர்களை கானானியருடைய கையில் விற்றுப்போட்டார்” (4:2) என வாசிக்கிறோம். அதேபோல, 20 வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான் (4:3) என்றும் வாசிக்கலாம். எனவே, 20 வருடமாக சிசெரா என்பவன் கீழ், இஸ்ரவேலர்கள் கடுமையாய் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

6அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

7நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

இங்கே தெபோராள், பாராக்கை வரவழைத்து, அவனுக்கு பொறுப்பைக் கொடுக்கிறார். பாராக் தெபோராளிடம் ஆலோசனை கேட்க வரவில்லை. தெபோராள் தான் பாராக்கை அழைத்து, அவனை யுத்தத்துக்கு போகச் சொல்லுகிறார். இந்த யுத்தம் முடிவுக்கு வரும் என்பது தீர்க்கதரிசனம் அல்ல. சிசெராவின் முடிவு தான் அவர்களுக்கு கிடைத்த தரிசனம். யுத்த முடிவு வருவதற்கான ஆரம்பம் மட்டுமே.

ஆனால் இப்போது, பாராக் மறுமொழி கொடுக்கிறான். “நான் யுத்தத்துக்கு போக மாட்டேன்” என்றெல்லாம் அவன் சொல்லவில்லை. 8அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். பாராக், சிறுபிள்ளையை போல, நீங்கள் வந்தால், நிச்சயமாக நானும் வருவேன் என்கிறார். கர்த்தருடைய அழைப்புக்கு சரியாக உடன்படாவிட்டால், அந்த மகிமை நமக்கு இருக்காது. இங்கு, கர்த்தருடைய அழைப்பை நிராகரித்து, தெபோராளை தேடியதால், “சிசெராவை வீழ்த்தும் பெருமை, உன்னைச் சேராது, அது ஒரு பெண்ணை சேரும்” என சொல்கிறார் தெபோராள். 9அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

கர்த்தர் சொன்னபடியே, போரில் சிசெராவின் படை முழுவதும் அழிந்தது. சிசெரா 900 ரதங்கள் வைத்திருந்தார். ஆனால் 10000 பேரோடு யுத்தத்துக்கு போன பாராக் வெற்றி பெற்றார். அப்போது சிசெரா அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்.

15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான்.

16பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

17சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

யார் இந்த யாகேல்?

நாம் இன்று பார்க்க இருக்கும் கதாநாயகி யாகேல். முந்தைய பதிவில் பார்த்த பெபேயாள், யூத பெண் அல்ல என்பது போல, இங்கு யாகேலும் இஸ்ரேலிய பெண் அல்ல. இந்த யாகேல் கேனியனான ஏபேர் என்பவருடைய மனைவி. இஸ்ரேலிய பெண் அல்ல என்றாலும் பரவாயில்லை. எந்த அரசன் இஸ்ரேலுக்கு விரோதமாக வந்திருக்கிறானோ, அந்த அரசனுக்கு நெருக்கமானவர்கள். யாபீன் என்னும் ராஜா, யாகேலின் புருஷனாகிய ஏபேரோடு சமாதானமாக இருந்தான். எனவேதான் சிசெராவும் நம்பி யாகேலுடைய கூடாரத்துக்குள் நுழைந்தான்.

சிசெரா போய்க் கொண்டிருந்தவனை, யாகேல் தான் தன் கூடாரத்திற்கு அழைக்கிறாள். அவனை ஒரு சமுக்காளத்தால் மூடுகிறாள். தண்ணீர் கேட்டவனுக்கு பால் கொடுக்கிறாள். இது ஒரு அன்னையின் அன்பு. சிசெரா யாகேலை நம்பி தூங்கி விட்டான். போர்க்களத்திலிருந்து வந்த சோர்வு அவனை ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு சென்றது. சில மொழி பெயர்ப்பாளர்கள், யாகேல் என் ஆண்டவனே இங்கே வாரும் என்று அழைத்தது, உடலுறவுக்கு அழைப்பதை குறிக்கிறது என விளக்கம் கொடுக்கின்றனர். (நமக்கு அது தேவையில்லை) யாகேல், ராஜாவுடன் நல்ல உறவு முறையில் இருப்பவள், ராஜாவின் சேனாதிபதியை நம்ப வைத்துக் கொன்று விட்டாள்.

18யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

19அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

20அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

21பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

 இஸ்ரேலிய பெண் அல்லாத ஒருத்தி இப்படி செய்தது ஆச்சரியம் அல்லவா! இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? நிச்சயமாக தெபோராளின் தீர்க்கதரிசன நிறைவேறுதல் ஒரு காரணம் தான். ஆனால், அதற்கு ஏதோ ஒரு இஸ்ரேலிய பெண்ணையே தேவன் பயன்படுத்தி இருக்கலாமே. யாகேல் சிசெராவைக் கொல்ல என்ன காரணம்?

28சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணி வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.

29அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவு சொன்னதுமின்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக:

30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.

இங்கே சிசெராவின் தாய், தன் மகன் இறந்தது தெரியாமல், தேடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு மறுமொழியாக ஒருத்தி சொன்னது என்ன? ஆளுக்கு இரண்டொரு பெண் வேண்டாமா? என கேட்கிறாள்.  இதுதான் இங்கே பெரிய விஷயம். 20 வருடமாக சேனாதிபதியாக இருந்த சிசெரா, இஸ்ரேலை ஒடுக்கினான் அல்லவா? ஒடுக்குகிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டான். அதனால்தான் தேவனே, அவனுக்கு நல்ல நியாயத்தீர்ப்பாக, “அவன் ஒரு பெண்ணால் கொல்லப்படுவான்” எனக் கூறுகிறார். இஸ்ரேலிய பெண்கள் படும் உபத்திரவத்தைக் கண்ட யாகேல், அதற்கு பழி வாங்குவதற்காகத்தான் சிசெராவைக் கொன்றிருப்பாள் என வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். சிசெரா பெண்களை அவ்வளவு கேவலமாக நடத்தி இருப்பான்.

யாகேலிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

  1. கர்த்தர் இஸ்ரேலை இரட்சிக்க, இஸ்ரேல் அல்லாத பெண்ணை தேர்ந்தெடுத்தார். (God Chose Jael, a non-Israeli Lady, to deliver Israel) ஒருவேளை நாம் இருக்குமிடத்தில், முக்கியமற்ற நபராக நாம் இருக்கலாம். ஆனால் கர்த்தர் பயன்படுத்த இருக்கும் முக்கியமான பாத்திரம் நாம் என்பதை மறக்க கூடாது.

  2. யாகேல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். நமக்கு முன்பாக வரும் வாய்ப்பை பயன்படுத்த துணிய வேண்டும். யாகேல் கொன்றது ஒரு சாதாரண மனுஷன் அல்ல. அவர்தான் சேனாதிபதி. கொஞ்சம் மிஸ் ஆனாலும், சிசெரா யாகேலைக் கொன்று விடுவான். ஆனாலும் யாகேல் துணிச்சலாக வாய்ப்பை பயன்படுத்தினாள்.

  3. நாம் செய்யும் வேலையை குறைவாக மதிப்பிடக் கூடாது. யாகேல் ஒரு house wife தான். வீட்டிலிருந்து கூடாரம் செய்வது அவள் வேலை. ஆனால் தேவன் அவளை உருவாக்கிக் கொண்டு இருந்தார். யாகேலுக்கு தெரியாது, இந்த கூடார ஆணி, ஒரு நாள், ஒரு இராட்சசனின் உயிரை எடுக்கும் என்று. ஆனால் சரியாக அவன் சாகுமளவு அடிக்க, தேவன் அவளை உருவாக்கி இருந்தார். இன்று நாம் செய்யும் வேலையில் களைப்பாக இருக்கலாம். அல்லது செய்யும் வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கலாம். திறமை இருந்தும் நாம் சும்மா இருக்கலாம். ஆனால் தேவனுடைய வேளை (God’s Timing) என ஒன்று இருக்கிறது. அந்த நாளில், அனைவருக்கு முன்பாகவும் கர்த்தர் நம்மை உயர்த்துவார். இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ, அது தேவன் நம்மை பழக்குவித்துக் கொண்டிருக்கிறார். நம்மைக் குறித்து தேவனின் திட்டம் பெரியது என்பதை ஒருபோதும் மறக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *